வியாழன், 12 ஜனவரி, 2023

சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

 சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

உடல் உயிர், கண் அருக்கண்; அறிவு ஒளி போல் பிறிவரும் அத்துவிதம் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை.இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது எனில் இறைவன் உயிர்களுடன் எப்போதும் 1) ஒன்றாயும், 2) வேறாயும், 3) உடனாயும் நிற்கும் சம்பந்தமாகும்.
இம்மூன்றினுள் ஒன்றாதல் என்பதை பற்றி சைவ சித்தாந்தம் உணர்த்துவது, இறைவனும் உயிர்களம் வேறு வேறு பொருள்கள்; ஆனால் இறைவன் உயிர்களோடு கலப்பினால் எப்போதும் ஒன்றாக இருக்கிறான்; எதுபோல எனில் உடலும் உயிரும் போல என்பதாகும். இறைவனும் உயிர்களும் வெவ்வேறு பாெருள்களாக உள்ளன, அப்படி இருந்தும் அவை கலப்பினால் ஒன்று பாேலத் தோன்றுவது போல. அது பற்றி அவை ஒன்று எனக் கூறப்படுவதன்றி அவை இரண்டும்ஒரே பாெருள் அல்ல.
வேறாதல் என்பது உடலும் உயிரும் போலக் கலப்பினால் ஒன்ற என்று கூறப்படும் இறைவனும், உயிரும் பாெருளால் வேறு வேறு தாம் அதாவது இறைவன் உயிர் அல்ல; உயிர் இறைவன் அல்ல, இதற்க சைவ சித்தந்தாம் கூறும் உவமை கண்ணும் சூரியனும் போல என்பதாகும்.
கண் ஒளி உடையது; சூரியனும் ஒளி உடையது, சூரியன் ஒளி கண் ஒளியோடு சேர்ந்தால் மட்டுமே கண் காணும். இல்லையென்றால்காண முடியாது, கண் ஒளி காண்பதற்கு சூரியன் ஒளி அதனுடன் சேர்ந்திருக்க வேண்டும், பொருளைக் காணும் பொழுது கண்ஒளியும், சூரிிய ஒளியும் பிரித்தறிய முடியாதபடி கலந்திருக்கின்றன, ஆனாலும்
கண் ஒளி காண்பது;
சூரியன் ஒளி காட்டுவது; எனவே கலப்பினால் இவை ஒன்றாக இருந்தாலும், பாெருளால் இவை வேறு வேறு தானே.
அதுபோல உயிர் அறிவுடையது, இறைவனும் அறிவுடையவன், ஆனால் இறைவன் அறிவு அறிவித்தால் அன்றி உயிர் அறிவு தானாக எதையும்அறிய முடியாது, இறைவனும் உயிரும் கலப்பினால் ஒன்றாக இருந்தாலும்,
இறைவன் அறிவிப்பவன் ( சூரியன் ஒளி காட்டுவது போல)
உயிர் (இறைவன்) அறிவிப்பதை அறிவது ( சூரியன் காட்டியதை கண் பார்ப்பது போல)
எனவே கலப்பினால் உயிரும் இறைவனும்ஒன்றாக இருந்தாலும் பாெருளால் இறைவன் உயிரிலிருந்து வேறானவன் தானே,
உடனாதல் என்பது இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாகவும் விளங்கும் அதே வேளையில் உயிர்களோடு உடனாயும் உள்ளான். அது எவ்வாறு எனில்;
கண் ஒரு பொருளைக் காணும் போது உயிரின அறிவும் அக்கண் ஒளியோடு உடனாக சென்று அறிந்தால்தான் உயிர்கள் அப்பொருளை அறியவும், அநுபவிக்கவம் முடியும், பொருள் கண்ணில் படுகின்றபோது , உயிரறிவு கண் ஒளியை செலுத்தி அறியாவிடில் உயிர் அப்பொருளை அறியாது. நம் அறிவு வேறாரு சிந்தனையில் ஆழந்திருக்கும் போது, எதிிரில் வருபவரை நாம் கவனிக்காமல் போவது நம்அன்றாட வாழ்வில் நிகழும்அநுபவம் தானே,
அது போல உயிர் ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால், உயிர் அறிவோடு இறைவன் அறிவும் (திருவருளும்) உடனாக இருந்து இயக்கினால் மட்டுமேஉயிர் அப்பொருளை அறிய முடியும், இறைவன் உயிரின் வேறாக இருந்து அறிவிப்பது மட்டுமன்றி, உயிருடன் உடனாக இருந்து இயக்கி அது பொருள்களை அறியும்படி செய்கிறான்,
ஆக இறைவன் உயிர்களுடன் 1) கலப்பினால் உடலும், உயிரும் பாேல ஒன்றாயும்,
2), பொருளால் கண்ணும், சூரியனும் போல வேறாயும்,
3), உயிர்க்கு உயிராதல் தன்மையால் கண் ஒளியும், உயிர் அறிவும் போல் உடனாயும் பிரிப்பின்றி நிற்கும் உறவே சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் ஆகும். அத்துவிதம் என்ற சொல்லுக்கு வேறின்மை என்று சைவ சித்தாந்தம் பொருள் கொள்ளும். இதனை இருமையின் ஒருமை என்றும் கூறுவர். இரண்டு பாெருள்களாயிருப்பதால் ஒன்று என்று சொல்லமுடியாமல் கலப்பினால் ஒன்றாக தோன்றுவதால் இரண்டு என்று சொல்ல முடியாத நிலையாகும்.
நன்றி ° சிவப்பிரகாசம்
திருச்சிற்றம்பலம்

திருக்குறளில் சைவ சித்தாந்தம் - கடவுளும் வீடு பேறும்

 திருக்குறளில் சைவ சித்தாந்தம்

கடவுளும் வீடு பேறும்


திருக்குறளில் " கடவுள்" என்னும் சொல்லும் " முத்தி" என்னும் பொருளைத்தரும் வீடு என்னும் சொல்லும் ஆட்சி பெறவில்லை. ஆதலின் திருவள்ளுவர் சமயக் கொள்கைகளை பேசவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞான போத சூத்திரம், கருத்துரை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு வெண்பா ஆகியவற்றில் கூட கடவுள் என்ற செொல்லாட்சி இடம் பெறவில்லை, ஆதலின் மெய்கண்டார் கடவுள் கொள்கையை ஆதரிக்கவில்லை என கூறு முடியுமா? அப்படி கூறினால் அதைவிட பேதமை வேறெதுவும் இல்லை அல்லவா?, அவ்வாறே வள்ளுவரும் கடவுள் கொள்கையை ஆதரிக்க வில்லை என்று கூறுவதும் பேதமையுள் பேதமையே ஆகும். அதாவது தனக்கு பயன்படாத ஒழுக்க நெறியில் பற்று வைத்துக் கேடு விளைவிப்பவைகளை கைக்கொண்டு நன்மை விளைவிப்பவைகளைக் கைவிடுவதையே தொழிலாக உடையவர்கள் தாம் இவ்வாறு கூறுவர்.
கடவுளுக்கு உரிய இலக்கணம் மாறுபடாத சொற்கள் பலவற்றை மெய்கண்ட தேவ நாயனார் சிவஞான போதத்தில் அருளிச் செய்திருப்பது போலவே திருவள்ளுவ நாயனாரும் இறைவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான் தனக்குவமை இல்லாதான், எண் குணத்தான் முதலிய சொற்களில் வைத்து தமது கடவுள் கொள்கையினை உறைப்பை உணர்த்தியருள் கின்றார். அவ்வாறே வீடு பேற்றினை திருவள்ளுவர் சிறப்பு என்னும சொல்லாட்சியில் வைத்து பேசுகிறார், எடுத்துக்காட்டாக
" பிறப்பு என்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு " குறள் 356
இங்கு பேதமை என்ற சொற்கு ஆணவம் என்று பொருளாகும். பிறப்பிற்னுக் காரணம் ஆகிய ஆணவமல மறைப்பு உயிரை விட்டு நீங்குவதற்கு வீடு பேற்றிக்கு நிமித்த காரணம் ஆகிய செவ்விய பொருள் எனப்படும் பரம் பொருளைக் காண்பதே ஒருவருக்கு மெய்யுணர்வு ஆகும். என்பதே இந்த குறட்பாவிற் குரிய செம்பொருள் ஆகும். இதி்ல் வரும் சிறப்பு என்னும் சாெற்கு பொருள் கூறுகையில் எல்லா பொருளினும் சிறந்தது ஆதலின் வீடு சிறப்பு எனப்பட்டது என்று பரிமேலழகலர் கூறி யிருப்பது இங்கு கருத்தில் காெள்ளத்தக்கது. வீடு பேற்றை சிறப்பு எனவும் சிறந்தது எனவும் தொல்காப்பியரும் வழங்கியுள்ளதை நாம் நினைவில் காெள்ளத்தககது.
திருக்குறளில் இடம் பெறும் சிறப்பு என்னும் சொல் குறள் 31லும், 358லும் வீடு பேறு என்னும் பொருளையே குறிக்கிறது என்பது பெறப்படும். படவே திருவள்ளுவர் தமது நூலில் சமயக் கருத்தை குறித்து கூறியிருப்பது திருக்குறளும் சைய நூலே என்ற கருத்து நமக்கு தெளிவு படும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி திருக்குறளில் சைவ சித்தாந்தம் என்ற நூல்

திங்கள், 26 டிசம்பர், 2022

உழவாரப்பணி

 https://www.facebook.com/groups/666661527155103/permalink/1132746097213308/









இன்று 25,12,22 ஞாயிறு திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம் இராஜபாளையம் உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்புடன் சேர்ந்து மதுரை மாணிக்கவாசகரரின் பூர்வீகமான திருவாதவூர் என்னும் சிவத்தலத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக பெருமானின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது கோயிலை சுற்றியுள்ள இடம் மற்றும் தீர்த்த கிணறு அமைந்த பகுதியில் முட்புதர் மற்றும் வேண்டாத கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது, பின் அங்கு பக்கத்திலுள்ள அமைந்துள்ள அருள்மிகு வேதவல்லி சமயோத திருமறை நாதர் ஆலயம் சென்று வழிபாடும், அதன் பின் மதுரை சொக்கநாதர் திருக்கோயில் சென்று அருள்மிகு மீனாடசி சுந்தரேரசர் திருக்கோயில் தரிசனமும் செய்து இன்றைய உழவாரப்பணி சிறப்புடன் முடிக்கப்பட்டது

நன்றி,  சிவ, அய்யனார் அவர்கள் விருதுநகர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பு, மற்றும் மதுரை மாவட்ட உலக சிவனடியார் திருக்கூட்டம்

வியாழன், 24 நவம்பர், 2022

ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை

 

ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை

ஒரு ஆன்மாவானது தன் உலக வாழ்வை முடித்து வீடு பேறு அடைய தவம் அதாவது சரியை, கிரியை, யோகம் ெசய்து பின் அதன் ஞானம் அடைந்து வீடுபேறு அடைய புறபூசை செய்வதும், அதனால் குருவே ஞானாசிிரியராக வந்து முத்தி பேறு அருள்வதும் உண்டு, இத்துடன் அவ்வான்மா  அகப்பூசையும் செய்து நிட்டைகூடி சிவப்பேறு பெறுவதும் உண்டு. புறப்பூசையால் இறைவனை அடைய சாதா வண்டியில் சென்றால் அகப்பூசையும் செய்தால் விரைவு வண்டியில் செல்வதுபோல் நிச்சிய முத்தி பேறு கிடைக்கும்.அகப்பூசை செ்ய்து முத்தியடைந்த நாயனார் பூசலார்

அகப்பூசை என்பது உள் முகமாய் செய்யும் வழிபாடு, அந்தரியாகம் என்றும் வழங்கப்படும்.

 அகப்பூசையின் போது அபிசேகம், அலங்காரம், தூபம், தீபம் நைவேத்திியம் திருவமுது முதலிய பூசா திரவியங்களை மனத்தால் செய்து, ஆன்மாவின் இடத்ததில் சிவபெருமானை ஞானத்தால்அர்ச்சித்தல், ஓமித்தல், தியானித்தல் ஆகியவற்றை செய்தல், அவ்வாறு செய்யும் போது கண்ணாடிக்கு பொடியிட்டு துலக்கும் போது மாசு நீங்கி ஒளி மேலிடுவது போல அச்சிவம் உள்ளத்தில் மேலிட்டு விளங்கித் தோன்றி மலப்பற்று கழியும். அவ்வாறு கழிவது ஆன்ம சுத்திக்கு ஏதுவாகும். மலம் கழிவது ஆகிய ஆன்ம சுத்திக்கு அந்த அந்தரியாக பூசை அவசியம் இந்த பூசையை முத்திக்கு சிறந்த சாதனம் என அநுபவம் உடைய அருளாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளார்கள்.

  இதனேயே திருமூல நாயனாரும்

 காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக

 வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறையநீரமையவாட்டிப்

பூசனைஈசனார்க்கு போற்றிவிக் காட்டினோமே.   திருமந்திரப்பாடல்

   இவ்வுடம்பை கோயலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு  வாய்மையை தூய்மையாகவும், வைத்து மனத்திறகுள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாக பாவித்து அன்பை நெய்யும் பாலுமாக நிறைய வைத்து பூசித்து இறைவனை போற்றினேன். என்கிறார் அகப்பூசையை பற்றி.

  இதில் கோயில் மனம், விளக்கு மெய்ஞானம் சிவதான் என்ற உணர்வு, திருமஞ்சன நீராட்டு மாறிலா இன்பம், திருஅமுது அன்பு, அர்ச்சனை ஐந்தெழுத்து,

  அகப்பூசை செய்யவது மூன்று திறத்தது, 

1, நாபி ( உந்தி) இதுவே வேள்வி செய்யும் இடம்,

    நாேக்கம்; ஈசனாடு பிரிப்பின்றி ஒன்றாய் இருத்தி, சிவஞானத்தீயினை உணர்வால் எழுப்புதல்

 2, இதயம் 

  உணர்வார் பூவும் நீரும் கொண்டு அர்ச்சனை செய்யும் இடம் 

  நோக்கம் ;ஈசனை ஆண்டானாவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வேண்டுதல்

  இதயத்தில் தில்லை கூத்தரை காண முயலுதல்

3, நெற்றி நடு, தியானம் செய்யும் இடம் திருவருளோடு உடனாய்  இருப்பதன் பாவனை

நாேக்கம் ; ஞானபரம ஆச்சாரியார் திருஉரு காணும் உண்மை பாவனை குரு கருடன் உருவம் கருதும் பாவனை கொண்டு திரிமலம் தீர்ந்தது என செய்தல்

  இதன் பொருட்டு பூசை பொருட்கள்

 மறாவாத நினைப்பு, பிறழாத செய்கை, இறவாத இன்ப அன்பு

 பூசா மந்திரம் -  திருவைந்தெழுத்து

பூசா பலன்  ஆன்மபோதம் அற்று உயிர் சிவமாதல்

  அகபூசையால் உயிராகிய தன்னை சிவமாகவே காண முற்படும் சாதனமே மலமாகி நின்ற உயிரைச் சிவமாக்கி, பிறப்பிலிருந்து விடுபட செய்யும்் முயற்சி

  சிவனாருக்குரிய எட்டு குணங்களும் உயிரின மாட்டு வந்து படிவதால் பசுத்துவத்தோடு கூடி பசுவாய் நின்ற உயிர் சிவத்தோடு கூடி சிவம் என நிற்கும்.

திருச்சிற்றம்பலம்


ஞாயிறு, 6 நவம்பர், 2022

திரு ஐந்தெழுத்தின் மகிமை

 திரு ஐந்தெழுத்தின் மகிமை



" வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர்


அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர்.

கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார்.

மந்திரத்தினை செபித்து (மனதில் உருவேற்றி) இறைவனை அடைவதற்குரிய சாதனமே மந்திரயோகமாகும். யோக சாதனையால் சாதகர் இறைவனை அகண்டமாகத் தியானித்துக் கண்டநிலை நீங்கி அகண்டமாய்த்த திகழ்வர். மந்திர செபத்தால் புறத்தே அமைந்த உருவத்தில் இறைவனை வழிபாடு செய்து தேவதா(இறைவடிவம்) வடிவம் பெறுவர். உருவ வழிபாட்டில் ஆசிரியர் சதாசிவ மூர்த்தியின் வழிபாட்டைச் சிறப்பித்துப் பேசுகிறார். இறைவனை அடசரவடிமாகச்(எழுத்து வடிமாக) சக்கரத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி அங்கு வழிபடுவதும் புறவழிபாட்டைச் சேர்ந்த ஒன்றாகும். திருமூலர் திருவம்பலச் சக்கரம், சாம்பவிமண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாக்கா¢சக்கரம் முதலியவற்றைச் சிறப்பாகக் கூறுகிறார்.

மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்பது பொருளாகும். மந்திர யோகம் என்றால் நினைப்பவனைக் காத்து இறைவனோடு சேர்க்கும் நெறி என்று பொருள். இதற்கு உதாரணமாக அமைவதே

பஞ்சாட்சரமந்திரம். அதில் தூல பஞ்சாட்சரம், சூக்சும பஞ்சாட்சரம், அதி சூட்சும பஞ்சாட்சரம் என்ற பிரிவுகள் உள்ளடங்கும், அவற்றுள் நமசிவாய எ்னும் தூல பஞ்சாட்சரமும் சிவாய நம எனும சூட்சும பஞ்சாட்சரமும், சிவசிவ எனும் அதிசூட்சும பஞ்சாட்சரமும் அதன் அதன் தன்மைக்கேற்ற சிறப்பு ெபற்றது, இதில் எதனை ஓதினாலும் அதன் தன்மைக்கு எற்ப சிறப்புண்டு

  உலகியில் வாழ்வில் பெருவாழ்வு விரும்புவோர் நமச்சிவாய மந்திரத்தையும், முத்தி பேறு விரும்புவோர் சிவாய நம, அல்லது சிவசிவ என்ற மந்திரத்தையும் ஓதுவது மிக சிறப்பு.

                 மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக.

திருச்சிற்றம்பலம்

நன்றி; தமிழ் வேதம்


சனி, 5 நவம்பர், 2022

பிறவியினை அறுக்க வழி

 பிறவியினை அறுக்க வழி



பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், 

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், 

இறைவன் அடி சேராதார்”   ///         என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

    விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

    பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி, 

    தலையார கூம்பிட்டு கூத்துமாடி 

    சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,,  என்கிறார்


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். 

திருச்சிற்றம்பலம்


வியாழன், 3 நவம்பர், 2022

அன்னாபிசேக பூசை

 சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 22ம் நாள்




( 08.11.2022 ) செவ்வாய்க் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு  மன்றம்  மற்றும் சக்திபீட வழிபாட்டு மன்றம் மற்றும் சுந்தரபாண்டியம் ஸ்ரீலிங்கா பில்டர்ஸ் (ப.பசும்பொன் இன்சினியர்) ஆகியோரின் ஆன்மீகப் பணியின் தொடர்ச்சியாக  ஐப்பசி மாத பௌர்ணமி பூசையுடன்   அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு கைலாய நாதருக்கு அன்னாபிசேக பூசையும்,  சக்திபீடத்தில் அமைந்துள்ள அம்மனுக்கும், அருள்மிகு இராஜகணபதிக்கும், பௌர்ணமி பூசையுடன்,  ஐப்பசி மாத மகா அன்னாபிசேக பூசை வெகு சிறப்பாக இவ்வாண்டு தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையாக,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.

அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி கூறப்படுகிறது.

அன்னபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.அன்னபிஷேக பிரசாதம் உண்டால் மங்காத தோற்றப்பொழிவு கிடைக்கும்

அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.


தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக – தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.

இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.


தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.

சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம். ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது.

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.


அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னப்பிரசாதமாக  அளிக்கப்படும்


      இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்,

திருச்சிற்றம்பலம்

இந்த சிறப்பு பூசையில் அடியார்கள் யாவரும் கலந்து சிவபுண்ணியம் பெற்று உய்ய அன்புடன் அழைக்கிறோம்

திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

சக்திபீடம் வழிபாட்டு உபாசகர்கள்

ஸ்ரீலிங்கா பில்டர்ஸ் சுந்தரபாண்டியம்