வியாழன், 14 ஆகஸ்ட், 2014

சிவபெருமானாருடைய எளிவந்த தன்மை


சிவபெருமானாருடைய எளிவந்த தன்மை சிவபெருமானாரின் அருட் செயல்களை யெல்லாம் இயம்பி கொண்டே இருந்தால் அவனுடைய பெருமைகள் சொல்லில் அடங்கா. அவர் புகழை கூற நாம் இருக்கும் நாட்களும் போதா. அவனுடைய அரிய பெரிய செயல்களில் அவருக்கென்ற எளிவந்த தன்மையினை இங்கே காணலாம் தற்காலத்தில் ஒருவரிடம் உள்ள தங்கத்தை , தங்க நகைகளை வைத்தே அவருடைய உயர்வை நிர்ணயிக்கின்றனர், தங்கக் கட்டிகளை வைத்திருப்பவர்களுக்கு ஊரில் செல்வாக்கும், பெருமதிப்பும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த பொன்னை வைத்திருப்பவரால் பொன்னுக்கு ( தங்கத்துக்கு ) எந்தப் பயனும் இல்லை. இது உலக மக்கள் யாவருக்கும் தெரிந்ததே ஆகும். இந்த அரிய கருத்தை கூறும் அருமையிலும் அருமையான பாடலைக் காண்போம். பொன்னால் பிரயோசனம் பொன் படைத் தாற்குண்டு பொன் படைத்தோன் தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏதுண்டு அத்தன்மையைப் போல் உன்னால் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டு உனைப் பணியும் உன்னால் பிரயோசனம் ஏதுண்டு காளத்தி ஈச்சரனே, பட்டினத்தார் பாடல் இறைவர் தங்கக் கட்டி போன்றவர் , அவரால் அவரை வணங்கும் நமக்கு - பக்தர்களுக்கு முக்தி ( பிறவா நெறி) கிடைக்கும், நம்மால் இறைவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை. இந்த கருத்தை திருவாசக் பாடல் ஒன்றிலும் காணலாம், தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றது ஒன்று என்பால் சிந்தையே கோவில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை யுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே , தமிழ் வேதம் திருமுறை 8 சிவத்திடமிருந்து நாம் பெறுவது பேரானந்தம் பெருவாழ்வு, நம்மிடமிருந்து சிவம் பெறுவது ஏதுமில்லை, பக்தரால் பரமனுக்கு ஆவது ஏதுமில்லை, திருமாலும், நான்முகனும் தேடியும் காணமுடியாத அருமைப்பாடு உடையவர் சிவபரம் பெருமானாவர், அவ்வளவு பெரியவரான அவர், மிகச் சிறியவனாகிய என்மனம் புகுந்தீர், இத்தகைய தங்களின் எளிவந்த தன்மையை என்றும் நான் மறவேன், கங்கை கொண்ட சோளேச்சரத்தானே, என்று கண்ணீர் மல்க பாடியுள்ளார் கருவூர் தேவர், ஒன்பதாவது பன்னிரு திருமறையில் இப்பாடலை பலகாலம் படித்து நலம் பெறலாம், அன்னமாய் விசும்பு பறந்து அயன்தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும் மறக்கேன் முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடம்தோள் கன்னலே தேனே அமுதே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே, - கருவூர் தேவர் திருஇசைப்பா சிவபெருமானருடைய எளிவந்த தன்மையை மற்றும்ஓர் செயலின் வழியிலும் காணலாம். "ஐயாறு அதனில் சைவனாகியும் " தமிழ் வேதம் - 8 திருவையாற்றில் ஐயாறப்பருக்கு நாளும் பூஜை செய்கின்ற ஆதிசைவக் குடும்பங்கள் இருபத்து நான்கு இருந்தன. அவர்களுக்குள் ஒருவர் மனைவியையும் சிறுவனான மகனையும் கோவில் பூசை முறைக்கும், அதன் வருவாய்க்கும் உரியவர்களாக்கி வைத்துவிட்டு காசியாத்திரை போனார் ஒரு சைவர், சில மாதங்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனை கண்ட மற்றவர்கள் அவர் உரிமையையும் அதற்குரிய வருவாயையும் பங்கிட்டுக் கொண்டனர், இதனால் வாடிய காசி சென்ற ஆதிசைவருடைய மனைவியும் மகனும் ஐயாறப்பரிடம் விண்ணப்பித்து அழுது புலம்பினர். மறுநாள் காசி சென்ற அந்த ஆதி சைவர் கங்கைக் குடத்துடன் திரும்பி வந்தார். தம்முடைய உரிமையை பெற்று ஆலய பூசை முறையை செய்து வந்தார், வருவாயை வீட்டிற்கு அனுப்பி விட்டு தனியே மடத்தில் தங்கியிருந்தார், சில நாட்கள் கழித்து இவரைப் போன்ற ஒருவர் வந்தார், வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்தார், மனைவியும் மகனும் சுற்றத்தாரும் யாதும் யறியாது திகைத்தனர். " நீங்கள் முன்பே வநள்து, ஆலய பூசையை செய்து பொருளை எங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு மடத்தில் தங்கியிருந்தீரே, இன்றுதான் வந்தவர் போல் பேசுகின்றீரே என்றனர், ஆலயத்திற்க மூவரும் சென்று பார்த்த பொழுது முன் பூசை செய்தவர் அங்கு இல்லை. இப்போதுதான் இவர்கட்கு புரிந்தது, இறைவரே ஆதிசைவராக வந்து தம்மை தாமே அருச்சித்துள்ளார் என்பது. அன்புடன் விண்ணப்பம் செய்த ஆதிசைவருடைய மனைவி மகன் பொருட்டு இறைவர் ஆதிசைவராக வந்த எளிமையை என்னென்று சொல்வது, கருணையே வடிவானவர் அல்லவா இறைவர், இன்றும் இந்த நிகழ்வு திருவையாற்றில் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று " ஆத்ம பூசை " தன்னைத்தானே அருச்சிப்பது என்று நடைபெறுவதைக் காணலாம், தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!! திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக