"தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்"
தங்களைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டும் திருநாவுக்கரசர் சுவாமிகள்
" புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே." அப்பர் த,வே,4
செழுமையான கங்கை நீரைச்செஞ்சடையில் வைத்திருக்கும் தீ நிறவண்ணரே!
திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள அண்ணலே! எளியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணிய வடிவினரான தங்களின் திருவடிகள் என் மனத்தை விட்டு நீங்காதிருக்க அருள் செய்யுங்கள். இதைப்போலவே தங்களைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களுக்கும் அருள் புரியுங்கள்.
இறைவர் தேவர்கள் மூவர்கள் முதலியவர்களால் அறிய முடியாத அருமைப்பாடு உடையவர், அவர் கற்பகமாய் அடியவர்கட்கு அருள் செய்பவர். அவரிடம் நாம் இந்த உலக போகங்களுக்காக வேண்டுவது நமது அறிவின் குறைபாடே ஆகும். பொன் கலப்பையைக் கொண்டு கொள்ளுக்கு உழுவது போலவாகும், அப்பெருமானரிடம் அரியனவற்றைக் கேட்க வேண்டும். இப்பிறவியில் நமக்கு வேண்டியவற்றைக் கால நேரம் அறிந்து அவரே அளிப்பார்.
இக்கருத்தினையே மாணிக்கவாசகரும்
" வேண்டத்தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன் மாய்கரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாதருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும்உன்றன் விருப்பன்றே."
எனபொருட்டு நீ எது தருவதானலும் , அது உந்தன் விருப்பம் அன்றே, எனக்கு என்ன வேண்டும் எப்போது வேண்டும் என்பதை அறிந்தவனும் நீயே, அதை தருவது உன்னுடைய விருப்பமல்லவோ என்கிறார் மணிவாசகர்
திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக