திருவண்ணாமலை அண்ணாமலையாரின் இன்னருள் பெற்ற ஞானியர் பலர். பற்பல சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் இத்தலம் சேர்ந்து மகிமை பெற்றுள்ளனர் அவர்களுள் சிலர்:
திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.
“திருவண்ணாலைக்கு வந்து ஞான குருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.
திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.
உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர் தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.
திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.
திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.
தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியத்தால் அண்ணாமலையானையே நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.
யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர். பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.
ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர். காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணாமலையானின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.
வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.
Image result for திருவண்ணாமலை
கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.
தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர். இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.
கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இபுறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.
திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.
பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.
பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், பாதிக் கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.
திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)
திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர். திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.
கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)
“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். ண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.
“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும் தருமபுரிப்பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும் மேற்கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.
உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.
திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 1008 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.
1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.
திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று,
திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)
விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக் கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்
thiruchirambalam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக