செவ்வாய், 23 மே, 2017

நாயன்மார்கள் வரலாறு - கழற்சிங்க நாயனார்

      
நாயன்மார்கள் வரலாறு 


கழற்சிங்க நாயனார் 
குருபூசை நாள்  மே, 24 புதன்கிழமை
   திருக்கோயில் நியமங்களில் விதிக்கப்பட்டவை அநுசரணையில் வழுவாதிருக்கச் செய்தலும் விலக்கப்பட்டவை நிகழ்ந்துவிடாதிருக்குமாறு கண்காணித்தலும் தற்செயலாக அவற்றிலேதும் நிகழ்ந்தவிடத்துத் தக்க பிரகாரம் பரிகாரஞ் செய்து தீர்த்தலும் விரும்பத்தகுஞ் சிவதொண்டுகளாம். 

சிவ மகிமை யொன்றையே யன்றி மற்றொரு மகிமையையும் மதிக்கும் பாங்கற்ற உள்ளப்பெருமை பெற்ற சிவனடியார்களில் இச்சிவதொண்டில் அதிமுனைப் புற்றிருந்தோரையுங் கொண்டுள்ளது 

காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.
இப்படி யொழுகுநாளிலே மாதேவியோடு சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமிதரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்வாராகி, திருவாரூரை அடைந்து திருக்கோயிலிலே பிரவேசித்துச் சுவாமியை வணங்கினார். அப்பொழுது அவருடைய மாதேவி திருக்கோயிலை வலஞ்செய்து, அங்குள்ள சிறப்புக்களெல்லாவற்றையுந் தனித்தனியே பார்த்துக்கொண்டு வந்து, திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள். உடனே செருத்துணைநாயனார் இதனைப் புஷ்பமண்டபத்துள் எடுத்து மோந்தாள் என்று நினைத்து, விரைந்து ஓடி வந்து, அவளைக் கூந்தலிலே பிடித்து இழுத்து வீழ்த்தி, அவளுடைய மூக்கைப் பிடித்துக் கத்தியினாலே அரிந்தார். அவள் சோர்ந்து புலம்பினாள். அப்பொழுது கழற்சிங்கநாயனாரும் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, அவளுக்குச் சமீபத்தில் வந்து, அவளைப் பார்த்து, மிகக்கோபித்து, 'சிறிதும் அஞ்சாமல் இந்தக் கொடுஞ்செய்கையைச் செய்தவர்யாவர்" என்று வினாவ, செருத்துணை நாயனார் "இவள் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய புஷ்பத்தை எடுத்து மோந்தமையால் நானே இப்படிச் செய்தேன்" என்றார். அப்பொழுது கழற்சிங்கநாயனார் அவரை நோக்கி, "புஷ்பத்தை எடுத்த கையையன்றோ முன் துணிக்கவேண்டும்" என்று சொல்லி, கட்டிய உடைவாளை உருவித் தம்முடைய மாதேவியினது புஷ்பமெடுத்த கையைத் துணிந்தார். அது கண்டு, தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். இவ்வரிய திருத்தொண்டைச் செய்த கழற்சிங்கநாயனார் நெடுங்காலஞ் சைவநெறி தழைத்தோங்க அரசியற்றிக் கொண்டிருந்து பரமசிவனுடைய திருவடிநீழலை அடைந்தார்.

அவள் தன் காதலுக்குரிய பட்டத்துத் தேவியென்பதும் ஏலவே மோசமாகத் தண்டிக்கப் பட்டு இரங்கத்தகும் இழிநிலையி லிருந்துள்ளா ளென்பதும் பற்றிய கண்ணோட்டத்தின் சாயல் கிஞ்சித்து மின்றிச் சிவாலய நியதி பேணும் நோக்கொன்றே நோக்காக இக்குரூரம் விளைக்குமளவுக்கு இந்த நாயனார்க்கிருந்த தீரமானது அவர் செய்வதெதுவுஞ் சிவப்பிரீதியாய் விடுமளவுக்கு அவர்பால் உரம்பெற்றிருந்த ஆண்டானடிமைத் தொண்டுரிமைக் கண்ணான உறைப்புநிலை விசேடத்தைத் தெரிவிப்பதாகும். அவர் செயல் சிவப் பிரீதியாகவே இருந்தமை அந்நிகழ்ச்சி தெய்விக அரங்கிற் பெற்றுள்ள குதூகல வரவேற்பினைச் சேக்கிழார் விளக்குமாற்றாற் புலப்படும். அது, "ஒரு தனித்தேவி செங்கை உடைவாளால் துணித்த போது பெருகிய தொண்ட ரார்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க இருவிசும் படைய ஓங்கு மிமையவ ரார்ப்பும் விம்மி மருவிய தெய்வவாச மலர்மழை பொழிந்த தன்றே" என வரும்.
திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக