திங்கள், 19 ஜூன், 2017

சிவஞானபோதம் சிந்தனைகள் சில…


சிவஞானபோதம் இன்று நம் கைகளில் இருப்பது எப்படி ? சிவஆகமங்கள் எங்கிருந்து நமக்கு வந்தது ?
சைவ சமயம் அரிய பெரும் அளவிலா ஞானமுடைத்து என்பதை நாம் அறிவோம். காலச் சுழலில், இன்றைய நாளில் ஓர் எறும்பாய் உயிர்பெற்று அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அரிய பெரும் பரிசாக சிவஞானம் பற்றிய உண்மைகள் கிடைத்துள்ளது. இவற்றை நமக்கு அருளியது யார் ? எப்படி நமக்கு கிட்டியது ?

பிறப்பு இறப்பும் முதலும் முடிவும் இல்லாத பரமசிவனார் உயிர்கள் மீது பெரும் கருணை கொண்டு சிவஞானத்தை போதித்தார். சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவரது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம். சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.
திருநந்திதேவர் சிவாகமங்களின் உண்மையை சனற்குமார முனிவருக்கு உபதேசித்தார். அவர் அவற்றை சத்தியஞானதரிசினிகளுக்கும், அவர் தம் மாணவர் பரஞ்சோதி முனிவருக்கும் உபதேசித்தனர். திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் தேவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அகச்சந்தானக்குரவர் எனப்படுவர்.

பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண வரும் போது 2 வயது குழந்தையாகிய மெய்கண்டாருக்கு திருவருளின் படி உபதேசித்தார். மெய்கண்டாரின் சீடரானவர் சகலஆகம பண்டிதரான அருணந்திசிவம். அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். அவரின் சீடர் உமாபதிசிவம். இவர்கள் நால்வரும் பூதபரம்பரையை சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் புறச்சந்தானக்குரவர் எனப்படுவர். 

உமாபதிசிவத்தின் சீடர் அருள்நமச்சிவாயர். அவரது சீடர் சித்தர் சிவப்பிரகாசர். அவரது சீடர் நமச்சிவாய மூர்த்திகள். இவரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவி, இன்றும் குருபரம்பரையாக சைவ சமயத்தை உய்வித்து வருகின்றனர். மறைஞான சம்பந்தரின் சீடரான மச்சுச்செட்டியார் என்பவரின் 8 ஆவது வழி சீடரான குருஞானசம்பந்தர் என்பவர் தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். இவர்களும் சைவ சமயத்திற்கு தலைமுறை தலைமுறையாக அரும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர்.
அகச்சந்தான குரவர்களும் அவர்களின் சீடர்களும் நமக்கு அருளிச் செய்ததே 14 சாத்திர நூல்களாகும். கிடைத்தற்கரிய ஞான புதையல்களை நாம் அறிந்து படித்து பயன்பெறுவோம்.

சிவஞானபோதம் நூலின் நோக்கம்
வரும் சில மாதங்களில் உலகிலேயே தத்துவ துறையில் தலைசிறந்த அறிவு நூலாகிய, சைவ சித்தாந்தத்தின் கருத்துக்களை முழுமையாக நமக்கு உணர்த்தக்கூடிய சிவஞான போதம் என்னும் நூலில் இருந்து பல கருத்துக்களை சிந்திக்க இருக்கிறோம். சைவ சமயத்தில் 14 சாத்திர நூல்களுள்ளும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தலையாய நூலாகும். இந்நூலை தொட்டு அறிவதற்கே மிகப் பெரும் புண்ணியம் செய்திருந்து சிவனருள் பெற்றிருக்க வேண்டும் என்பர் சான்றோர். அவ்வாறாயின் இந்நூலின் பெருமையை நம்மால் ஒருவாறு யூகிக்க இயலும். இந்நூல் அளவில் மிகவும் சிறியது. சொல் சுருக்கமும், பொருள் பெருக்கமும் உடையது.
இந்த நூலைச் செய்தவர் மெய்கண்டார். ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.
உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.
அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

சித்தமெலாம் சிவமயம்: சிவ சின்னம் - திருநீறு

சித்தமெலாம் சிவமயம்: சிவ சின்னம் - திருநீறு:                       பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து                    கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை                    ...

இயற்பகையார்,

குறுக்கும், நெடுக்குமாக, கைகளைப் பின்புறம் கட்டியவாறு, ஏதோ ஒரு தவிப்பிற்கு ஆட்பட்டவராய் நடந்துகொண்டிருந்தார் இயற்பகை.கொஞ்சம் விவகாரமான ஆள்தான், பெயருக்கு ஏற்றாற்போலவே தான் செய்கைகளும்! ‘எல்லோரும் சொல்கிறார்கள்’ என்றோ ‘உலக வழக்கம்’ என்றோ எதையாவது சொல்லி, அவரை எதையும் செய்ய வைக்க முடியாது.‘அந்தப் பக்கம் போகாதே’ என்று யாராவது எழுதி வைத்திருந்தால், ‘ஏன்? அந்தப் பக்கம் போனால் என்ன?’ என்று யாரையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்; போகக்கூடாது என்று சொன்ன திசையில் போவார். போனால் என்ன நடக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, எழுதி வைத்தவனை அழைத்துத் தட்டிக்கொடுப்பார்.

‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற திருக்குறள் வாக்கிற்கேற்ப நடந்துகொள்வார். அப்பேர்ப்பட்டவர்க்கு இன்றைக்கு நடப்பது பெரும் புதிராக இருந்தது.அதிகாலையில் எழும் இயற்பகையார், இறைவனைத் தொழுது, பிறகு காலைக் கடன்கள் முடித்துக் குளித்து, நீறு பூசி, உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனை பூஜை செய்யத் தொடங்குவார். ஒரு தேர்ந்த, கிரமமான பூஜையாக இருக்காது அது. அவரின் கண்ணீரால் அபிஷேகம், ததும்புகிற அன்பால், ‘ஐயா, என் அரனே, தேசனே, தேனார் அமுதே, மகாதேவரே...’ என்பதான அரற்றலாக மந்திரங்கள்...

வெறும் அன்பு மட்டுமே பேரன்பிற்காக பூஜை செய்வதை இயற்பகையாரின் பூஜையிலே, வழிபாட்டிலே மட்டும்தான் காண முடியும். அடியார்க்கும், ஆண்டவர்க்கும் அன்பு செய்வதிலே பெரும் போட்டி இருக்கும் - இதுநாள்வரை யாரும், யாரையும் ஜெயிக்கவே முடியாமல்! ஆனந்தம், அவரின் வீடெங்கும் பரவியிருக்கும். அவரின் துணைவியாருக்கும், பூஜை முடிவதற்குள் ஆனந்தத்தில் கண்ணீர் கரைபுரண்டோடுவதும் நிச்சயமே.

வாழ்வதே சிதம்பர தேவரின் உமையொரு பாகனின் பூஜைக்காகத்தான் என்பதான வாழ்க்கை அவர்களுடையது. இதிலே பூஜை முடித்ததும், அவ்வூரில் தென்படுகிற சிவனடியாரை இல்லத்திற்கு அழைத்து வந்து பாதபூஜை, அதாவது மகேஸ்வர பூஜை செய்வது. அவருக்கு தெண்டனிட்டு வணங்குவது. அவருக்கு அமுது படைத்து, வேண்டுவன நல்கி, இறைவனே இதுகாணும் எங்களோடு இருந்தார் என்பதாக அவர்கள் காட்டும் ஞானத்தால் உண்டான பக்தி கேள்விப்படுகையிலேயே இத்தனை ஆனந்தம் என்றால், அனுபவிப்பவர்கள் எத்தனை பேறு பெற்றவர்கள்!
ஆக, இயற்பகையார் தினமும் முதல் வேலையாக, ஒரு சிவனடியாரைத் தேடிப் பிடிப்பார். 

அவருக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து, அவருக்கு அமுதிட்டு, அவருக்கு மிகவும் வேண்டிய ஏதேனும் ஒன்றைத் தானமாக ஈதல்என்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.மற்றபடி எல்லோரையும்போல உழைப்பது, வாழ்வது எல்லாம் சிவனடியாருக்கு அன்னமிட்ட பின்பே. அது மட்டும் நடக்கவில்லையென்றால் ஒரு வாய்ச்சோறு இறங்காது அவருக்கு. அவருக்கு 
மட்டுமல்ல; அவர்தம் துணைவியாருக்கும் கூடத்தான்.மொத்தத்தில் சிவனடியாருக்குச் சேவை செய்யாத நாள் அவருக்குப் பெருந் துக்கம், வேதனைப் பெருக்கம்! வாழ்வே கேள்விக்குறி ஆகிப்போகிற துயரம்! ஆனால், இதுகாறும் அதுமாதிரி நடந்ததில்லை, யாரையாவது, எங்காவது காட்டி விடுவார் எம்பெருமான்.

ஆனால், இன்றைக்குச் சோதனையாய் எவரும் காணோம். அயர்ச்சி மேலிட்டது. லேசாக அச்சம் பிறந்தது. இன்றைக்கு எவருமே வராமல் போய்விடுவார்களோ என்ற கிலேசத்தில் உடல் வியர்த்தது. மனைவியைப் பார்த்தார். அவரும் இவரைப் பார்க்க, இருவர் கண்களிலும் நீர். கணவரின் வேதனை பொறுக்க மாட்டாமல் அவர் தம் மனைவி கண்ணீர் வடிக்க, சோதனை பொறுக்க மாட்டாமல் அவர் கண்ணீர் வடிக்க...வெளியில் குரல் கேட்டது. மெல்லிய குரல்தான். ஆனால், தீர்க்கமான அழுத்தமான குரல். ‘தில்லை அம்பலவா போற்றி! திருச்சிற்றம்பலமே போற்றி’  என்பதான, சொல்வதற்கு மகா மதுரமாகிய சிவநாமத்தை யாரோ சொல்லிக்கொண்டு வீதியோடு செல்ல...

பாய்ந்தார் இயற்பகை. விழிகள் வெறிகொண்டு தேடின. குரல் வந்த திக்கில் குவிந்தன. கண்களில் மழையாய் கண்ணீர் கொட்டியது. ‘சம்போ, சங்கரா! சாம்பசிவா’ என அரற்றிக்கொண்டே அங்கு நடந்துசென்றுகொண்டிருந்தார் ஒரு சிவனடியார்.வாலிபப் பிரயம் முடிகிற தருணம் நல்ல சிவப்பு. ஓங்கு, தாங்கான தேகமெங்கும் வெண்ணீறு! சாந்தமான முகம்! உலகத்துக் கருணையை எல்லாம் ஒன்று தேக்கிய விழிகள். எப்போதும் புன்னகை, கண்டத்தில் உருத்திராக்கம், ஒற்றையாய், மேலாடையாய் ஒரு வெள்ளுடை கணுக்கால் தெரிகிறார்போல் ஒற்றைச் சுற்றாய்க் கட்டிய வேட்டி.

இயற்பகை எட்டிக் கைபிடித்து, நிறுத்தினார் அந்தச் சிவனடியாரை. அவர் கால்களில் வேரற்ற மரமாய் விழுந்தார். நட்ட நடுத்தெருவில் போவார், வருவோரெல்லாம் பார்க்க, ஒரு நாய் திடுக்கிட்டு ‘வவ்‘வென்று குரல் கொடுத்து, ஒடுங்கி ஓரமாய் ஓடிப்போய் நின்றது.“ஐயா, என்ன இது’’ பதறிப் போனார் அச்சிவனடியார். “யாது செய்கிறீர்... யார் நீவிர்?’’ சிறிதாய் விகசித்த அதிர்ச்சியோடு அவர் குனிந்து இவரைத் தூக்கி நிறுத்த முயற்சித்தார். இயற்பகை முழந்தாளிட்டார். “தங்களைப் பார்த்தது பெரும்பாக்கியம். எந்தையும், நுந்தையுமாகிய ஏகன் அருள்! அடியேன் பெற்ற பாக்கியம் முழுமையாக வேண்டுமானால்...’’ என்று முச்சிரைக்க நிறுத்தினார்.

அடியார் புன்னகையோடு ஏறிட்டார். ‘எதுவாயினும் கேளப்பா‘ என்று அனுமதி தருகிற புன்னகை. “தேவரீர், எனது இல்லம் எழுந்தருளி, திருவமுது செய்தருள வேண்டும்.’’ “ஓ உனது வீட்டில் அடியேன் அன்னம் ஏற்க வேண்டுமா?’’ சிறிதே யோசித்து, இரு நிமிடங்கழித்து சம்மதமாய்த் தலையாட்டினார் அவர்.உடம்பெங்கும் பூரிப்பு, அவரைத் தலைகுனிந்து தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்று, இருப்பதிலேயே உயர்ந்ததோர் ஆசனத்தைத் தேர்வு செய்து அதில் அவரை அமர வைத்ததும், வளைக்கரம் நீண்டது, குடிநீர்க் குவளையோடு. வேய்ங்குழல் ஒலியாய் இயற்பகையாரின் மனைவியும் “சிவனடிச் சீர்பரவும் பெருந்தகையீர் வருக’’ என்றழைத்து, காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்று சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய புகுந்தார்.

ஆயிற்று, சிவனடியார் மிகுந்த திருப்தியோடு, அன்னம் ஏற்று, முடிக்க, அவர் கை, வாய் கழுவப் பாத்திரமும், நீர்க்குவளையும் தந்தார் அம்மையார். அவர் படுக்கப் பாயும், தலையணையும், விசிறியும், நீர்ச் செம்பும் வைத்தபிறகே, இவர்கள் சாப்பிட்டனர்.“ஐயா, அமுதமென இனிக்க, மணக்க உணவு படைத்தீர். தில்லை அம்பலவாணர் எப்போதும் உமைக் காப்பார்’’ என்று அந்தச் சிவனடியார் கிளம்ப எத்தனிக்கையில், “பெரியீர்! சற்றே பொறுமையாய் இரும்’’ என்ற இயற்பகை மனைவியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினார்.பிறகு “அடியார் பெருமகனே! அன்னம் ஏற்றது மட்டும் போதாது. ஏதேனும் தாங்கள் அடியவனைக் கேட்க வேண்டும் நான் சர்வ நிச்சயமாக தருவேன்’’ என்று இயற்பகை திடமாக உரைத்தார். மனைவியும் கைக்கூப்பி ஆமோதித்தார். 

புருவம் சுருங்கிற்று வந்தவருக்கு, “யாம் 
கேட்பதையெல்லாம் உம்மால் தரமுடியாது 
இயற்பகையாரே.’’

“அப்படி இல்லை ஐயா, எப்பாடு பட்டேனும் தருவோம்.’’
“முடியாது, இயற்பகை, வீணாக அவஸ்தைப்
படாதே.’’ சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவர், இயற்
பகையின் மனைவியையும் பார்த்து சிரித்தார், 
கண்கள் மின்னி அடங்கின.

“இல்லை அய்யா. அப்படிச் சொல்லக் கூடாது, நீங்கள் கண்டிப்பாக...’’ துடிப்போடு இயற்பகை சொல்ல... “உன் மனைவியை எனக்குத் தானமாக கொடு,’’ சிவனடியார் குரலில் நெருப்பு. அவர் அமர்ந்திருந்த வீட்டுக் கூடமெங்கும் நெருப்பை அள்ளிக்கொட்டினாற்போல இருந்தது.இயற்பகையின் மனைவியின் முகம் நிறம் மாறிற்று. அவரின் பேச்சு கேட்ட மாத்திரத்திலேயே ‘இடி’யென முழங்கினார் இயற்பகை. “எம்பெருமானின் பெயரால் எமது மனைவியாகிய இவரை இப்போதே தத்தம் செய்கிறோம்.’’ 

சிவனடியாரின் உள்ளங்கைகளில் நீர் வார்த்து, மனைவியை அவருடைமை ஆக்கினார் இயற்பகை. ஒரு சலனமும் இல்லாமல், சொல்லப்போனால் ஆனந்தம் வழிகிற முகத்தோடு, அம்மையார் 
இயற்பகையை ஏறிட்டு நோக்க, அவர் கைக்கூப்பி வணங்கி, “சிவனடியாரொடு செல்வீராக’’ என்றவாரே வழியனுப்பினார். கணவன் பேச்சுக்கு 
மறுபேச்சு ஏது?

அந்த அம்மாள் சிவனடியாரின் பக்கத்தில் சென்று நின்றார். சிவனடியார் திகைத்துப் போனார்? என்ன இது அநியாயம்? இது என்ன மாதிரியான பக்தி? பக்தியா அல்லது பைத்தியக்காரத்தனமா? அடக் கடவுளே! இவன் என்ன செய்கிறான் என்பதை அறிந்துதான் செய்கிறானா? எத்தனையோ பித்தர்களை பார்த்தாகி விட்டது. இது சித்தத்தை சிவன் பால் வைத்த பித்தம் போலும்...
சிவனடியார் “ஐ...யா...நீங்கள் செய்வது என்னவென்று...’’ என்று தயங்கியபடியே கேட்டார்.

 “அறிந்து தான் செய்கிறோம்’’ இயற்பகை சிறிதும் சலனமில்லாமல் திடமாகத் தெரிவித்தார்! தெரிந்து செய்வது என்பது மனதின் பதிவுகளின் எல்லைக்கு உட்பட்டது. புத்தியோடு சம்பந்தப்பட்டது. அறிந்து செய்வது அனுபவத்தினால் உண்டாவது. ஒரு காரியத்தை பலகோணங்களிலும் அனுபவித்து உணர்வது.“அறிந்து செய்ததா..?’’ சிவனடியாரின் வியப்பு இன்னமும் குறையவில்லை, இருப்பினும், சுதாரித்த வராய்க் கேட்டார் அவர். “எல்லாம் சரி, ஆனால், இந்த வீட்டை விட்டு நான் உன் மனைவியோடு போனால் உன் ஊர்க்காரர்களும், சுற்றத்தாரும் என்னை வெட்டிப்போட்டு விடுவார்கள் தெரியுமா?’’ இயற்பகையின் புருவம் உயர்ந்தது. 

“இந்த இயற்பகை இருக்கும் வரை அது நடவாது. அச்சம் வேண்டாம் அடியவரே. உருவிய வாளுடன் இயற்பகை ஊரெல்லை வரை உம்முடன் வருவான்.’’பயணம் துவங்கியது. வானம் இருட்டியது. இனம் புரியாத இறுக்கம் சூழலில் படர்ந்தது. விஷயம் அறிந்து வந்த ஊர்க்காரர்கள், சுற்றத்தார்கள் வாள், வேல், ஈட்டியுடன் சிவனடியார் மீது பாய, இயற்
பகையின் வாள் சீற்றம் கொண்டது. பெரும்புயலெனச் சீறியது. எதிர்த்தோரின் தலைகள் உருண்டன. கை, கால்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. குருதி வெள்ளம் எங்கும் சிதறிற்று. சாலையின் ஓரங்களில் நின்ற ஊர் மக்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கதறலும், கண்ணீருமாய் அலறினர்.

“என்ன காரியமடா செய்கிறாய் இயற்பகை, பெயருக்கேற்றாற்போல, இயல்புக்கே பகையானாயே பாதகா’’ - எனும் கூக்குரல்கள், வீறிடல்கள். “எங்கே நடக்குமடா இந்த அநியாயம்? 
உன் வளர்ப்பில் எங்கே தவறு நடந்தது’’ என்பதாய் சுற்றத்தார் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தனர்.சண்டமாருதமாய், வெறி கொண்ட வேங்கையாய் நிற்காமல் போரிட்டு... ஊரின் எல்லை வந்தது. மயான அமைதி. சிவனடியார் மெல்லத் திரும்பினார். இயற்பகையைப் பார்த்தார்.

உடலெங்கும் குருதிக் கோலங்கள், வியர்வை ஆறுகள், புழுதிப்படலம்... கூற்றுவன் போன்ற கோலம்... சொன்ன சொல் காப்பாற்ற எதுவரினும் அஞ்சாத நெஞ்சம்.திடுமென சிவனடியார் இரண்டடிப் பின் நகர்ந்தார். நின்ற நிலையில் அவரின் பிரகாசம் கூடிற்று. பேரொளியில் பிழம்பாகி நின்றார் அந்தச் சிவனடியார். ஒன்றாய் இருந்த ஒளிப்பிழம்பிற்குள் மகாதேவரும், உமையம்மையும், இடப 
வாகனத்தில்...

எல்லாம் மலர்ந்தன. மலைத்தன. கருணை மழை வெள்ளம்போல் பொழிந்தது. அனுபவித்தறியாத ஒரு பேரன்பு எல்லோரையும் தாக்கிற்று. “இயற்பகை உமது பக்தியின் தீவிரத்தை உலகறியச் செய்யவே யாம் வந்தோம். உன் அன்பின் தன்மை ஈடில்லாதது. எப்போதும் எம்மோடு நீயும், நின் மனைவியும் இருக்கவே வருக.’’என்றழைத்தது சிவம், எங்கும் சிவமயம், 
எல்லாம் சிவமயம்... அருள்மழை... இயற்பகை தயங்கினார். “ஐயனே! பிழை பொறுப்பீர். 

யான் வெட்டியெறிந்த சுற்றங்கள், ஊரார்கள் இவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதானால் சரி... இல்லையெனில் உம் புகழ்பாடித் துதித்து இங்கேயே வாழ்கிறேன்,’’ என்றார்.
“நீ பிடிவாதக்காரனாயிற்றே, சரி ஆகட்டும்’’ என்று பிடிவாதத்தை இயற்பகைக்குள்ளே விதைத்த பெருந்தகை திருவாய் மலர்ந்து அருளினார். ஜோதிப்பிழம்பு பிரமாண்டமாய் மாற, இயற்பகையால் வெட்டி எறியப்பட்ட ஊரார், உறவினர், இயற்பகை, அவரது அருமை மனைவி எல்லோரும் அப்பிழம்பினுள் கலக்க...

மேற்சொன்ன இயற்பகை என்பவர் சிவனையே எண்ணி, சகலமும் சிவமாய்ப் பார்க்கும் மகா ஞானி.அவர் தம் மனைவி என்பது அவரது  மனதைக் குறிக்கும். சிவனடியாராக வந்த கோலம் மெய்
ஞானியான, சத்குருவைக் குறிக்கும்.

ஆக, ஞான குருவாய் எழுந்தருளி, நம்மையும், இறைவனையும், பிரிக்கிற மனதை, துவைதத்தில் இருக்கிற மனதை தனக்கு தந்துவிடுமாறு கேட்கிறார். (குருநாதருக்கு உடல், பொருள், 
ஆவி இம்மூன்றையும் நற்சீடன் தத்தம் செய்தல் வேண்டும். இங்கே ‘பொருள்’ என்பது எல்லாவற்றையும் பொருளாகக் காட்டும் மனமே ஆகும்.)

ஆக ஒவ்வொருவருடைய மனமே அவருடைய மனைவி. அதை, மனதை, தம்மிடம் கொடுக்குமாறு இறைவன் கேட்க மெய்யடியாராகிய இயற்பகை, ‘தன் மனம்’ என்கிற மனைவியை இறைவன் வசம் அளிக்கிறார். அவ்வாறு அளிப்பதை ஏற்காத மனதின் விருத்திகளாகிய கோபம், லோபம், மத, மாச்சர்யம், குரோதம், பாசம், அகங்கார, மமகாரங்களே இயற்பகையாரின் ஊர் மக்களாகவும், சொந்தக்காரர்களாகவும் இங்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.

அவற்றை விவேகம், வைராக்கியம் எனும் வாளால் வெட்டி வீசுகிறார் இயற்பகை. எல்லாம் அறிந்த இறைவன், தன்னோடு சேர வருமாறு இயற்பகையும், அவரின் மனைவியையும் அழைக்க...

“இயற்பகை மனதின் விருத்திகளாகிய 96 தத்துவங்களுக்கும் அருள்செய்து அவற்றையும், உன்னோடு சேர்ப்பாய் ஆயின் வருவேன்’’ என்கிறார்.எல்லாம் சிவமயம் என்பதாகிறது இறைவனின் பெருங்கருணையால். இதுவே, ஞான அர்த்தம். இதை உணர்த்துவதே அடியார். நாயன்மார் வரலாறு. இதை ‘அத்யாத்ம பெரியபுராணம்’ என்பர்.

சிவனடியாருக்குச் சேவை 
செய்யாத நாள் அவருக்குப் பெருந்
 துக்கம், வேதனைப் பெருக்கம்! 
வாழ்வே கேள்விக்குறி ஆகிப்போகிற 
துயரம்! ஆனால், இதுகாறும் 
அதுமாதிரி நடந்ததில்லை, 
யாரையாவது, எங்காவது காட்டி 
விடுவார் எம்பெருமான்.

உலகம் சிவமயம், சிவன்தான் உலகத்தலைவன்,

உலகம் சிவமயம்,  சிவன்தான் உலகத்தலைவன்,

சிவன்தான் சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம்.
1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.
2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.
3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.
4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.
5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.
6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.
7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.
8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.
9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.
10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.
11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.
12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.
13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன,
“எல்லாம் சிவமயம்”
சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறி முடிப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்

செவ்வாய், 13 ஜூன், 2017

திருமகள் திருக்குறள்
திருமகள், செய்யாள், தாமரையினாள், திரு, கலைமகள் என்றெல்லாம் லட்சுமிதேவிக்குப் பல பெயர்கள் சூட்டிக் கொண்டாடுகிறது நம் இந்து மதம். அந்த லட்சுமி தேவியை வெவ்வேறு இடங்களில் நான்கு திருக்குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. வறுமையும் புலமையும் இணைந்தே இருப்பன என்ற கருத்தில் வள்ளுவருக்கு ஒருசிறிதும் உடன்பாடில்லை. அறநெறிப்படி வாழ்ந்தால் திருமகள் அவ்விதம் வாழ்பவனைத் தேடிவருவாள் என்பதே வள்ளுவரின் தீர்ந்த முடிவு. சரஸ்வதி கடாட்சம் உடையவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவது கடினம் என்ற மூடநம்பிக்கை நம் மக்களிடையே ஊடுருவியுள்ளது. அந்தப் பொய்யான கருத்தைத் தாக்கித் தகர்க்கிறது திருக்குறள். அறநெறிப்படி வாழ்பவனே நிரந்தர லட்சுமி கடாட்சம் பெற இயலும். இன்னும் சொல்லப் போனால் சரஸ்வதி கடாட்சம் உடையவனாலேயே, தான் பெற்ற லட்சுமி கடாட்சத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்!’ (குறள் எண் 84)

மலர்ந்த முகத்துடன் விருந்தினர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிப்பவன் எவனோ அவனது இல்லத்தில் லட்சுமிதேவி (செய்யாள்) அவன் உள்ளம் மகிழுமாறு வாசம் செய்வாள்.

'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் (செய்யவள்) வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள்.

'மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்!’ (குறள் எண்: 617)

சோம்பல் உள்ளவனிடம் மூதேவி குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் வாசம் செய்வாள் தாமரைச் செல்வியான திருமகள்.

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு!’ (குறள் எண்: 920)

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரிடம் கொள்ளும் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் ஆகிய இந்த மூன்று வகையான தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவரை விட்டு லட்சுமி தேவி (திரு) விலகிவிடுவாள். அவர்கள் செல்வ வளம் பெற இயலாது. ஆதிசங்கரர் சின்னஞ்சிறு பாலகனாக காலடி கிராமத்தில் அந்த எளிய வீட்டின்முன் பிட்சை வேண்டி நின்றார். அந்த வீடு அயாசகன் என்ற பரம எழை வேதியன் ஒருவனின் வீடு. மணி அரிசி கிடையாது வீட்டில். அயாசகன் வயல்வெளிப் பகுதியில் ஏதேனும் தானியம் இறைந்திருக்குமா என்று பார்க்க வெளியே சென்றிருந்தான். வீட்டுச் சாளரத்தின் வழியே தன் இல்லத்தின் வாயிலில் வந்து நின்ற அந்த தெய்வீகச் சிறுவனைப் பார்த்தாள் அயாசகனின் மனைவி. சங்கரச் சிறுவனின் ஒளிவீசும் திருமுகம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சிறுவன் எதன்பொருட்டோ குரல் கொடுக்கிறானே! வீணையின் நாதம் போல் அந்தக் குரல் மயக்குகிறதே! என்ன கேட்கிறான்?
shankara in early days க்கான பட முடிவு
'பவதி பிட்சாம் தேஹி!’எனக்குப் பிட்சை இடுங்கள் என்றல்லவா வேண்டுகிறான்! தெய்வமே! இந்த தெய்வீகச் சிறுவனை ஏன் என் வீட்டுக்கு அனுப்பினாய்! அவன் பிட்சா பத்திரத்தில் போட என் இல்லத்தில் மணி அரிசி கூட இல்லையே! பரம ஏழையான என்னிடம் நம்பிக்கை வைத்து என் வீட்டு வாசலில் நிற்கும் அவனை எப்படி வெறுங்கையோடு அனுப்புவேன்! அவள் மனம் பதறியது. பரபரத்தது. அங்குமிங்கும் தேடினாள். நேற்று ஏகாதசி. ஆனால் அவள் வீட்டில் என்றும் ஏகாதசி தான்! இன்று துவாதசி. ஏகாதசி பட்டினி விரதத்தை முறிக்க, ஏதேனும் உண்பது சம்பிரதாயம் ஆயிற்றே? அதை நிறைவேற்றுவதன் பொருட்டு ஒரே ஒரு வாடிய நெல்லிக் கனியை மாடத்தில் வைத்திருந்தாள். அந்த நெல்லிக் கனியைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

இவ்வளவு எளிய பொருளை பிட்சாபாத்திரத்தில் போடுகிறோமே என அவள் உள்ளம் கூசியது. கண்கலங்க மிகுந்த கூச்சத்தோடு அந்த நெல்லிக்கனியை சங்கரச் சிறுவனின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டுவிட்டு நாணம் தாங்காமல் விம்மியவாறு உள்ளே ஓடி மறைந்தாள் அவள். அவள் சேலையில் நெய்த நுலை விட தைத்த நூல் அதிகம் இருந்ததைப் பார்த்தார் சங்கரர். அவள் தனக்களித்த நெல்லிக் கனியையும் கனிவோடு உற்றுப் பார்த்தார். இந்தக் கொடும் வறுமையிலும் யாசகம் கேட்போருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என அவள் மனம் நினைத்ததே, அந்த மனம் பொன்மனம் அல்லவா? அத்தகைய பொன்மனம் கொண்டவளுக்கு லட்சுமிதேவி பொன்னாலான நெல்லிக்கனி களையல்லவா அருள வேண்டும்? சங்கரரின் அருள் வெள்ளம் அவர் இதயத்திலிருந்து பாடலாய்ப் பொங்கியது.

'அங்கம் ஹரே புளக பூஷணமாஸ்ரயந்தி
பிருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிர பாங்க லீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா!’

தாயே லட்சுமிதேவி! எந்த முன்வினை காரணமாக இவளுக்கு இந்தக் கொடிய வறுமைநிலை ஏற்பட்டிருந்தாலும் இனி நீ அவள் செய்த முன்வினையைக் கணக்கில் கொள்ளாதே! இதோ தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை எனக்குத் தானமளித்ததன் மூலம் அவளுடைய முன்வினைகள் அனைத்தும் தூள்தூள் ஆகிவிட்டன. அவள் வீட்டில் பொன்மாரி பொழிவாய் அம்மா! அடுத்தடுத்து சரசரவென சங்கரரின் உதடுகளிலிருந்து அருள் வெள்ளம் சம்ஸ்க்ருத சுலோகங்களாய்ப் பொங்கியது. கேட்ட லட்சுமிதேவி உள்ளம் குளிர்ந்தாள். சங்கரர் யார்? பாரத தேசத்தில் ஷண்மத ஸ்தாபனம் செய்யவென தோன்றிய சிவபெருமானின் அவதாரம்தான் அல்லவா? சிவனே பரிந்துரைத்த பிறகு லட்சுமிதேவி அருள் புரியாமல் சிவனே என்றிருக்கலாமா?

சங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் விளைவாக லட்சுமிதேவி அந்த ஏழைப் பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழியலானாள். உண்மையிலேயே கூரையை பிய்த்துக் கொண்டு செல்வம் கொட்டியது. இப்போதும் கேரளத்தில் காலடி கிராமத்திற்குச் சென்றால் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக் கனிகள் கொட்டிய அந்த இல்லத்தை நாம் பார்க்கலாம். இந்த அற்புதத்தை நிகழ்த்தியது எது? அந்த ஏழைப் பெண்மணியின் விருந்தோம்பல். வறுமையிலும் செம்மை காத்து பிட்சைப் பாத்திரத்தில் நெல்லிக்கனி இட்டு உபசரித்த அவளின் பண்பு நலன். முகனமர்ந்து நல் விருந்தை உபசரித்தால் அத்தகையோர் இல்லத்தில் அகனமர்ந்து லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்ற குறள் கருத்தின் விளக்கம் தானே இந்த வரலாறு?

திருச்சிற்றம்பலம்
சீதேவி(ஸ்ரீதேவி)யும் , மூதேவியும்

ஒருமுறை திருமகளுக்கும் அவள் அக்கா மூதேவிக்கும் சச்சரவு எழுந்தது. யார் அதிக அழகு என்பதே பிரச்னை. அதில் தீர்ப்பு வேண்டிப் பலரிடமும் சென்றார்கள் அவர்கள். யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. காரணம் திருமகள்தான் அழகு என்றால் 'உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என மூதேவி, தீர்ப்புச் சொன்னவர் இல்லத்தில் வந்து குடிபுகக் கூடும். இல்லை மூதேவி தான் அழகு என்றால் 'எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லையே’ என லட்சுமி தேவி கோபம் கொண்டு வீட்டை விட்டுப் போய்விட்டாலும் ஆபத்து. நமக்கெதற்கு வம்பு எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். யாரிடம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என எண்ணியபோது அந்த சகோதரிகளின் எதிரே எதிர்ப்பட்டார் நாரத மகரிஷி. அவரிடம் தங்களில் யார் அழகு என்று கேட்டார்கள் கலைவாணியும் அவள் தமக்கை மூதேவியும்.

நாரதர் சற்று நேரம் யோசித்தார். எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவர் சொல்லும் தீர்ப்பை அனைவரும் ஏற்கவும் வேண்டும். அவருக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவும் கூடாது. யோசித்த நாரதர் ஒரு முடிவு செய்தார். 'நீங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோல் தான் இருக்கிறீர்கள். எனவே தோற்றத்தை வைத்து இந்தப் பிரச்னையில் முடிவு காண இயலாது. இருவரும் சற்றுதூரம் நடந்துசென்று திரும்பி வாருங்கள். உங்களில் யார் அழகு என்பது அப்போது தெரிந்துவிடும்!’ என்றார். சொன்னபடியே இருவரும் சிறிதுதூரம் ஒயிலாக நடந்து திரும்பி வந்தார்கள். சிரித்தவாறே நாரதர் தன் தீர்ப்பைச் சொன்னார்: 'லட்சுமிதேவி வரும்போது அழகு.

மூதேவி போகும்போது போது அழகு!’லட்சுமிதேவி நம்மை நோக்கி வரவேண்டுமானால், மூதேவி நம்மை விட்டுப் போக வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் எனத் திருக்குறள் சொல்கிறது என்பதை இப்படிப் பட்டியலிடலாம்: விருந்தினர்களை நல்ல முறையில் உபசரித்து விருந்தோம்ப வேண்டும்.
பொறாமையில்லாமல் வாழ வேண்டும். சோம்பல் இல்லாது உழைக்க வேண்டும். பொது மகளிர் தொடர்பு, கள், சூதாட்டம் இவற்றைக் கண்டிப்பாய் விலக்க வேண்டும். வள்ளுவர் சொல்லும் வழியில் நடந்து லட்சுமி கடாட்சம் பெறலாமே?

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை,பூமாலை,சுந்தரபாண்டியம்

திங்கள், 12 ஜூன், 2017

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே


அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே 


மருந்து வேண்டில் மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும்புண்ணியங்கள் இவை
திருந்துதேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே .. த,வே, 3,25,01

திருவேண்ணீறு, உத்திராக்கம், துவர் ஆடை, சடைமுடி, முதலியன சிவச் சின்னங்களாகும். சிவனடிார்கள் இவற்றினை அணிவதும், அணிந்து கொண்டுள்ள அடியார்களை வணங்குவதும் வேண்டிய ஒன்றாகும் என்பது திருஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கும்.

பாடலின் திரண்ட கருத்து : திருத்து தேவன்குடியில் ( நண்டாங்கோயில்) எழுந்தருளியிருக்கும் தேவர்கட்கெல்லாம் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் அருந்தவத்தோர்களர் தொழப்படுவார்.
1, இப்பெருமானாருடைய திருவேடங்கள் ( திருவேண்ணீறு, உத்திராட்சம், சடைமுடி) மருந்து வேண்டுவோருக்குமருந்தாகும்.
2. மந்திரங்கள் வேண்டுபவர்க்கு மந்திரங்களாகும்.
3, சிவபுண்ணியங்கள் அளிப்பவனவாகவும் அமையும்,


மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே, 3-25-3

4, நமக்கு பெருமையை அளிப்பன
5. அறியாமையால் மனத்தில் ஏற்படும் தீய எண்ணங்களை அகற்றுவன
6. முக்திக்கு உரிய வழிகளை காட்டுவன
இதே கருத்தினை திருநாவுக்கரசர் சுவாமிகளும் கூறியுள்ளதைக் காணலாம்.
" வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும், 6-89-6

சிவ வேடங்களான திருநீறு, உத்திராட்சம், சடைமுடி துவர் ஆடை ஆகியவற்றை கண்ட பொழுதே சிவ பெருமானாரை நினைந்து வணங்கும் தொண்டர்கள் துன்பப்படாவண்ணம் காத்து நிற்பவர் சிவனார். என்பது நாவுக்கரசரின் அனுபவ வாக்கு,
மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதி நாத நாயனாரும் தம்மைக் கொல்ல வந்தவர் திருவெண்ணிறு அணிந்திருந்ததைக் கண்ட உடன் சிவபெருமானாரே வந்துள்ளார் என்று நினைந்தார்கள்.
புகழ்சோழர் தமது படைத்தலைவர் ஒரு சடைமுடியுடைய தலையைக் கொண்டு வந்ததைக் கண்டவுடன் தீயில் மூழ்கி இறைவரடி சேர்ந்தார்.


சலவைத் தொழிலாளியின் உடம்பு உவர் மண்ணால் வெண்மை நிறமாகத் தெரிந்தது, பேரரசராகிய சேரமான் பெருமான் நாயனார் இவரைக் கண்டவுடன் மண்ணில் வீழ்ந்து வணங்கினார், காரணம் திரவேடத்தைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமானாருடையநினைவு வந்தது.

வரகுண பாண்டிய மன்னர் திருடன் ெந்ற்றியில் திருநீறு கண்டவுடன் சிவபெருமானார் நினைவு பெற்றார். ஆதலால் அத்திருடனைத் த்ண்டிக்காமல் அனுப்பி வைத்தார்.
"எவரேனும் தாமாக இலாத்திட்ட திருநீறுஞ் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டடாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும்அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, த,வே, 6

திருநீறும், உத்திராட்சமும், அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெறுக்காமல் இவர்அவர் என்று வேறுபாடு கருதாமலும், அவர்களைக் கண்ட பொழுதே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அவர்களைச் சிவமாகவே எண்ணி மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அவ்வாறு தொழும் அடியார் நெஞ்சினுள்ளே சிவபெருமானார் எழுந்தருளுவார்.
சிவச்சின்னங்கள் அணிவதாலும், அணிந்தவர்களைக்காணும் பொழுதே வணங்குவதாலும் சிவபெருமானாருடைய மனங்களையே இறைவர் கோயிலாகக் கொள்வார்.பிறகு முத்தி நிச்சயமாகும்..
சிவ நினைவினால் மற்ற அவ நினைவுகள் மனதில் தோன்றுவதில்லை, அதனால் மனம் அலைவதில்லை,மனம் அலைய வில்லையானால் சக்திகள் பல உண்டாகும்.இதனால் நோயற்ற வாழ்வு, நீண்ட வாழ்நாள், முடிவில் பிறவா நெறி பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

கருவிலே திருவுடையவர்கள்

கருவிலே திருவுடையவர்கள்


கருவிலே திருவுடையவர்கள்’ என்று சொல்வார்கள். கருவிலே திருவுடையர்கள் என்றால் யார்? நம் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா? அல்லது வரவாவது வருமா? திருமூலரிடம் செல்லலாம்.
அவர் பதில் சொல்வார். கூடவே அப்பர் சுவாமிகளும் மாணிக்கவாசகரும்,
கை கோக்க வருவார்கள்.

கை விட்டிலேன் கருவாகிய காலத்தும்
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரி சடையான் அடி
நெய் விட்டிடாத இடிஞ்சிலும் ஆமே
(திருமந்திரம் - 495)

கருத்து: கருவில் இருந்தபோதுகூட, நான் சிவபெருமானின் திருவடியை மறக்கவில்லை. பிறந்து வாழ்கின்ற இப்போதும் அதனை நான் மெய்யன்போடு தேடுகிறேன். அதனால் அத்திருவடி, நெய்விட்டு ஏற்றாமல் இயல்பாகவே ஔிவிடும் விளக்காக இருக்கிறது எனக்கு. தாயின் வயிற்றிலிருந்தபோதும், சிவபெருமான் திருவடியைக் கைவிடவில்லையாம்; பிறந்த பிற்பாடும் அப்படியே இருந்தாராம்.

எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதா இந்தப் பேறு என்ற சந்தேகம் எழுந்தாலும், அதில் பாதி வாய்க்கப் பெற்றவர்கள் நாம். ஆமாம், பிறக்கும்வரை நாமும் இறை சிந்தனையுடன்தான் இருக்கிறோம். தாயின் வயிற்றில் குழந்தையிருக்கக்கூடிய சில படங்களை (மருத்துவ நூல்களில்) பார்க்கும்போதே தெரியும் - குழந்தை வளைந்து கும்பிட்ட நிலையில்தான் இருக்கும்!

ஏன் அப்படியிருக்க வேண்டும்? மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலைப் பார்த்தால் விவரம் புரியும். ஓர் அற்புதமான ‘ஸ்கேனிங்’ பாடல் இது!

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித்தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

(திருவாசகம்-கீர்த்தித் திருவகவல் - 13-26 வரிகள்)

தாயின் வயிற்றில் புழுக்களுடன் நிகழ்த்தும் கிருமிப் போரில் அழியாமல் தப்பிப் பிழைத்து, முதலாம் மாதம் தான்றிக்காயின் அளவிலே உருவான கரு தப்பிப் பிழைத்து, இரண்டாம் மாதம் மற்ற புழுக்களும் கருப்பையில் புகுந்து செய்யும் இடையூறுகளில் தப்பிப் பிழைத்து, மூன்றாம் மாதம் பெருகும் மதநீரினால் அழியாமல் தப்பிப் பிழைத்து, நான்காம் மாதம் கருப்பை அடைப்பு, வெடிப்பு முதலானவற்றால் அழியாமல் தப்பிப் பிழைத்து, ஐந்தாம் மாதம் மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்து, ஆறாம் மாதம் கருப்பையின் நெருக்குதலில் தப்பிப் பிழைத்து, ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில் கரு சிதையாமல் இடையூறுகளில் இருந்து தப்பிப் பிழைத்து...

‘யப்பாடா! பொறக்கறத்துக்குள்ள இவ்...வளவு இருக்கா?’ என்று அவசரப்பட்டு ஆச்சரியப்பட வேண்டாம்; இன்னும் பிறக்கவில்லை. அதைக் கடைசி இரு வரிகள் விவரிக்கின்றன: பத்தாவது மாதம் நாம் பிறக்கும்போது, தாயாருக்கும் பிரசவ வேதனை, நமக்கும் தாய் வயிற்றிலிருந்து வெளிப்படும் வேதனை! இவ்வளவுத் துயரங்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துப் பிறக்கிறோம்.

அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதைப் போலக் கைகளைக் கூப்பியபடி கருவறையில் கிடக்கிறோம், பிறக்கிறோம். இது எங்கே நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்று எண்ணியே, தாயின் வயிற்றிலிருந்த பரீட்சித்தை பகவான் காப்பாற்றினார் என பாகவதம் விவரிக்கிறது.

தாயின் வயிற்றில் இருக்கும்போது, ‘ஆண்டவா! செய்த வினைகளின் காரணமாக வந்துவிட்டேனே!’ என்று இறை சிந்தனை இருக்கும். ஆனால் பிறந்து வெளிப்பட்ட பிறகு, வெளிக் காற்றுத் தாக்கியவுடன்... போச்சு! இறை சிந்தனை இல்லாமல் போய்விடும். அப்புறம் என்ன? பிறந்தவுடன் பசியின் காரணமாகப் பாலுக்கு அழத் தொடங்கி, வளர வளர ஒவ்வொன்றுக்காகவும் அழுது, அடுத்தவர்களையும் அழவைத்து... இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

இவற்றின் நடுவில் தெய்வ சிந்தனைக்கு இடம் ஏது? ஆனால், திருமூலர் இப்படிக் கருதவில்லை. கருவிலே கங்காதரன் நினைவோடு இருந்தவர், பிறந்த பிறகு தானும் அழாமல் அடுத்தவரையும் அழவைக்காமல் இருந்தவர் அவர். இன்னும் சொல்லப்போனால், ஐந்தறிவு படைத்த மாடுகளின் துயர் தீர்ப்பதற்காக,  மூலனின் உடம்பில் கூடு விட்டுக்கூடு பாய்ந்தவர். அதன்பிறகும் கூட, சிவ சிந்தனையிலேயே இருந்து தவம் செய்து, நமக்காகத் தன் அனுபவங்களைத் திருமந்திரப் பாடல்களாகத் தந்தவர்.

‘நெய் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இயல்பாகவே ஒளி வீசக்கூடிய ஜோதிவடிவாக சிவபெருமான், என்னுள்ளே ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்,’ என்று கூறிப் பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர். பிறந்த பிறகும் இறை சிந்தனை மாறாமல் இருப்பவர்களே, கருவிலே திருவுடையவர்கள் என்பது திருமூலர் வாழ்விலிருந்தும், அவரது பாடல்களிலிருந்தும் புலனாகின்றது. இப்பாடலில் திருமூலர் சொன்ன இதே கருத்து, அப்பர் சுவாமிகளின் பாடலிலும் வெளிப்படுகிறது:

கருவாய்க் கிடந்து உன் கழலே
நினைக்கும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம்
பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலிய சிவாய நம
என்று திருநீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்
புலியூர் அரனே

திருமூலரின் வாக்கும் அப்பர் சுவாமிகளின் வாக்கும் ஒன்றுபோல் இருப்பதில் வியப்பில்லை. உத்தமர்களின் உள்ளம் ஒன்றேபோல்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களெல்லாம் எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் இந்நிலை வாய்ப்பதில்லை. அது கிடைக்க வேண்டுமென்றால், நல்ல குரு அமையவேண்டும்; நல்வழி காட்டும் அந்த சத்குரு வழியிலேயே நடக்கவேண்டும். சத்குரு கிடைப்பது அல்லது அமைவது குதிரைக் கொம்பாக இருக்கிறதே என்றால், அங்குதான் பிரச்னையே முளைக்கிறது. சரி, திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம்.

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
நெய்ப்பட்ட பால் இளநீர் தயிர் தான் நிற்கக் கைப்பட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே  (திருமந்திரம் - 526)

கருத்து: கையில் கிடைத்த மாணிக்கக் கல்லை வீசி எறிந்துவிட்டு, வெயிலில் கொதித்துக் கிடக்கும் பருக்கைக் கல்லைச் சுமப்பவன் போலும், நெய்யுள்ள பால், இளநீர், தயிர் ஆகியவையிருக்க, கசந்து வழிந்து தீங்கு விளைவிக்கும் எட்டிப் பழத்தை உண்பவன் போலும், ஞானகுரு இருக்கையில் அவரை விடுத்து அஞ்ஞானியைக் குருவாகக் கொள்பவனின் செயல் இருக்கிறது.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாதே - அழகுள்ள இடத்தில் ஆபத்து இருக்கும். Where beauty lies There danger lies என்றெல்லாம் நமது முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் பாடல் இது. மனித இயல்பை மிகவும் அழகாகச் சொல்லித் துவங்குகிறது பாடல். எவ்வளவுதான் உயர்ந்ததான ஒன்று நம்மிடம் இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தத்தான் செய்வோம். உயர்ந்ததான அதை அலட்சியப்படுத்துவதுடன், உதவாக்கரையைத் தேடியும் போவோம்; அதைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்.

அதைச் சொல்லும் திருமூலரின் இந்த வாக்கு, ‘மாணிக்கத்தை வீசிவிட்டு, மண்ணாங்கட்டியைத் தூக்கிச் சுமப்பதைப்போல’ என, முன்னோர்கள் சொல்வார்கள். சரி, வெளியில்தான் இப்படியிருக்கிறோம் என்றால், நம் உள்ளே போவது எப்படி இருக்கிறது? அதையும் சொல்கிறார் திருமூலர். தூய்மையான பால், இளநீர், தயிர் என ஆரோக்கியத்தைத் தரும் எவ்வளவோ நல்ல உணவுப் பொருட்கள் இருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டு எட்டிப் பழத்தை நாடி, உண்போம். காரணம்?

எட்டிப் பழம் பெரியதாகக்கூட இருக்காது; சுவையோ, கசந்து வழியும். இருந்தாலும், வண்ணம் நிறைந்த அதன் அழகு நம்மைக் கவர்கிறது; போய் விழுகிறோம். அந்தக் கவர்ச்சியில் மயங்கி, ஏமாந்து அதனை உட்கொள்ளும் போது அதன் கசப்பைத் தாங்காமல் தவிக்கிறோம். இதைச் சொல்லி, நம்மை வழி நடத்த முயற்சிக்கிறார் திருமூலர்.

அதாவது, பால், இளநீர், தயிர் என பல இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வண்ணக் கவர்ச்சியில் மயங்கி, எட்டிப் பழத்தின் கசப்பை அனுபவிப்பதுபோல, நல்லதை ஒதுக்கிவிட்டு கெட்டதை அனுபவிக்கிறார்களே என்கிறார் திருமூலர். அழுத்தமாகச் சொல்லவேண்டுமானால், உள்ளும் புறமும் நல்லவற்றை ஒதுக்கிவிட்டுக் கெட்டதைத்தான் ஏற்கிறோம். நல்வழி காட்டக்கூடியவர்கள் இருந்தாலும், அவர்களை ஒதுக்கிவிட்டு, தீயவழி காட்டுபவர்களை நம் குருநாதர்களாக, வழிகாட்டிகளாகக் கொள்கிறோம்.

இதை, ‘கன்மி ஞானிக்கு ஒப்பே’ எனும் சொற்கள்  விளக்கும். இவ்வாறு சொன்ன திருமூலர், விதி என்ற சொல்லையும் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். விதிக்கப்பட்டவற்றை விலக்கி, விதிக்கப்படாதவற்றை நாடி அல்லல் வலையில் அகப்படுகிறோம். உண்மை உணர்ந்து துயரங்களில் இருந்து விடுபட, நல்ல குருநாதரை அடைய வேண்டும் என்கிறார் திருமூலர். அவர் தம் அடுத்த பாடலில், தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயல்புகளை சற்று விரிவாகக் கூறுகிறார்.

தளியறிவாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறிவாளர் தம் சிந்தையுளானே
(திருமந்திரம் - 502)

கருத்து: தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிர்க்கும் அடியார்களுக்கு, குளிர்ச்சி உடையவராய் விளங்குவார். யோக நெறியில் மூச்சையடக்கித் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவேளை விளங்கலாம். ஆனால் ஞானம், அன்பு, யோகம் எனும் ஏதுமின்றித் தீர்த்தத்திலே மட்டும் நீராடுபவர்களுக்கு, அந்தச்சிவபெருமான் அடைதற்கு அரியவர்.

ஞானம் என்றாலே, தெளிவு என்பதுதான் பொருள். அப்படியிருக்கத் திருமூலர் ஏன் இவ்வாறு சொல்லவேண்டும்? ஞானிகள் பலர் தவம் செய்து தெளிவு பெற்ற பிறகும் மனங்கலங்கித் தவநிலையிலிருந்து தவறியிருக்கிறார்கள். தவறி விழுந்ததும் அதன்பின் எச்சரிக்கையாக இருப்போமல்லவா? அதுபோல, தவநிலையில் தவறிய ஞானிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்; தெளிவு அவர்களுக்குள் நிலை பெற்றுவிடும். அதன்பின் அவர்கள் மனம் கலங்கவே கலங்காது. அப்படித் தெளிவு பெற்ற ஞானியர் உள்ளத்தில் தெய்வம் வீற்றிருக்கும்.

அடுத்து, அன்பினால் ஊற்றெழும் கண்ணீர் ஆறாகப் பெருக வழிபடும் அடியார்க்கு, குளிர்ச்சியாய் இருக்கும் தெய்வம். அதாவது அன்புள்ளம் கொண்டவர்க்கு, தெய்வம் அருள் மழை பொழியும் என்பது கருத்து. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ எனத் திருஞானசம்பந்தரும்; ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என மாணி்க்கவாசகரும்; ‘மழுமான் கரத்தனை விழியால் புனல் சிந்தி விம்மிவிம்மி அழு நன்மைவேண்டும் என்றே’ எனப் பட்டினத்தாரும் கூறியது, இக்கருத்தைத்தான்.

மேற்கூறிய இரு வழிகளையும் விடுத்து, தீர்த்த யாத்திரை செய்வதில் பலனில்லை என்கிறார் திருமூலர். உள்ளத்தில் அன்போ, சீலமோ இல்லாமல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதில் பலனில்லை என்பது அவரது கருத்து. அனைவரிடமும் அன்பைச் செலுத்துவோம்! ஆண்டவன் அருளைப் பெறுவோம்!

சனி, 10 ஜூன், 2017

இறை வழி்பாட்டின் படிநிலைகள்

இறை வழி்பாட்டின் படிநிலைகள்- Stages in spiritual life


பொதுவாக இறைவனை அடைய நான்கு படிநிலைகளை கடக்க வேண்டும். இவற்றையே நான்கு படிநிலைகள் இருப்பதாக சித்தாந்தம் கூறுகிறது. அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்ப்படும்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ சைவ நாற்பாதங்கள் என்றும் இவற்றை கூறுவர்.

சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன அறியப்படுகின்றன. 

சரியை
கிரியை
யோகம்
ஞானம்

சரியை;

புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவலகிடுதல்,திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக்கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும். ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார்என்பது நன்கறியப்பட்டது.


நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா 
               நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப் 
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் 
               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் 
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் 
               சங்கரா சயபோற்றி போற்றி என்றும் 
அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும் 
               ஆரூரா என்றென்றே அலறா நில்லே.   
(தி. 6 ப. 31. பா. 3)
எவரேனும் தாமாக இலாடத் திட்ட 
               திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி 
உவராதே அவரவரைக் கண்ட போதே 
               உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி 
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி 
               இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் 
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே 
               கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
(தி. 6 ப. 61. பா. 3)
என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம். இவைகள்ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும் சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது. 
எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)
இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.

சரியைத் தொண்டுகள்
சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. 


கிரியை - Kriyai

இனி, புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டானும் சிவபிரானது அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, பூவும் நீரும் ஆனைந்தும் புகையும் ஒளியும் திரு வமுதும் முதலிய பொருள்களைச்சேர்த்துக் கொண்டு ஐவகைச் சுத்திகளைச் செய்து, இலிங்கத்தில் அகத்தும் புறத்தும் மந்திரங்களால் ஆசனம் முதலியவைகளைக் கண்டு, சிவபிரானை வருவித்தல் (ஆவாகனம்) முதலியவைகளைச் செய்து, நீராட்டுதல்,ஒற்றாடை சாத்துதல் முதலாகத் திருமேனியைத் தீண்டிச் செய்யும் பணிவிடைகளாகிய அணுக்கத் தொண்டாகும். இதனை,

"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்"    (தி. 4. ப. 3. பா. 1)
"போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்"
(தி.4 ப.3 பா.1)
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி 
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து 
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக் 
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே.       
(தி. 4. ப. 31. பா. 4)
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி 
முகமெலாங் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர் 
அகமலால்கோயிலில்லை ஐயன்ஐ யாற னார்க்கே           
(தி. 4. ப. 40. பா. 8)
நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த 
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா 
என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும் எல்லம் 
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே (தி. 4. ப. 92. பா. 10)

என்பன முதலிய திருப்பாடல்கள் விளக்கும்.

காயமே கோயி லாகக் கடிமனம் அடிமையாக 
வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக 
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப் 
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே.         
(தி. 4. ப. 76. பா. 4)

என்னும் திருப்பாடல், அகப் பூசையைச் சிறப்பாக விளக்குவது. அகப் பூசை புறப்பூசைகளில் அட்ட புட்பம் (எட்டுப் பூக்கள்) சாத்துதல் என்பது சிறப்பாகச் சொல்லப்படுவது. அதனை ஒரு திருப்பதிகம் முழுவதும் அப்பர்பெருமானார் அருளியுள்ளார்.

"எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி 
 மட்ட லரிடு வார்வினை மாயுமால்"                 (தி. 5 ப. 54 பா. 1)

எனத் தொடங்குவது அத்திருப்பதிகம். ஆனைந்து (பஞ்ச கௌவியம்) ஆடுவதில் சிவபிரான் மிக்க விருப்பம் உடையவன் என்பதை நாயனார் பல இடங்களில் எடுத்தோதி அருளுவார்.

"ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்" (தி. 4 ப. 11. பா. 2) 
"பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே"
   (தி. 4. ப. 63. பா. 9)
"பாவ மும்பழி பற்றற வேண்டுவீர் 
 ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல் 
 மேவ ராய்மிக வும்மகிழ்ந்துள்குமின்"
   (தி. 5 ப. 99. பா. 1)
"ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி"   (தி. 6 ப. 57. பா. 1) 
என்பவற்றை எடுத்துக்காட்டாகக் காணலாம்.  இன்னும்,
"நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்"    
(தி. 6 ப. 52. பா. 5)
"நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல 
               நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் 
 சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில் 
               திருமூலட் டானத்தெம் செல்வன் தானே"          
(தி. 6 ப. 30. பா. 5)

என்றற் றொடக்கத்துத் திருப்பாடல்கள், கிரியையாகிய வழிபாட்டினை நன்கு வலியுறுத்துவனவாம்.

இங்ஙனம் பூவும் நீரும் பிறவுங் கொண்டு சிவபெருமானைப் பூசிக்குங்கால், இன்றியமையாது வேண்டப்படுவது, உள்ளத்துள் இருக்கும் அன்பே என்பதையும், `அவ்வன்பு இல்லாது புறத்தோற்றத் திற்கு மாத்திரம்பூசிப்பவரது பூசையைச் சிவபிரான் எள்ளி நகையாடி, ஆங்கு வருவதற்கு அருவருப்புக் கொண்டு அப்பாலே ஒதுங்கி நிற்கின்றான்' என்பதையும் நாயனார் அருளிச் செய்திருத்தல் பெரிதும் போற்றி உணர்தற்குரியது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே 
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு 
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.        (தி. 5 ப. 90.பா. 9)
என்னும் திருக்குறுந்தொகைப் பாடலைக் காண்க.

`சரியையில் நின்று வழிபடுவோர்க்கச் சிவபெருமான் இலிங்கத் தில் மறைத்து நின்று அருள் செய்கின்றான்' எனவும், `கிரியையில் நின்று வழிபடுவார்க்கு, விறகில் மறைந்து நிற்கின்ற நெருப்பும், பாலில் மறைந்துநிற்கின்ற நெய்யும் அவைகளைக் கடையுங்காலத்து வெளிப்படுதல் போல, மந்திர நியாசங்களைச் செய்யுங்கால் அவற்றில் வெளிப்பட்டு நின்று அருளுவன்' எனவும் சாத்திரம் கூறும். அதனை,

விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.    (தி. 5 ப. 90. பா. 10)
என்னும் திருக்குறுந்தொகை பாடலே நமக்கு அருளுகின்றது.

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விசேட, நிர்வாண தீக்கைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)

ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம்.


Yogam - யோகம்:


"உயிரா வணம்இருந் துற்று நோக்கி 
               உள்ளக் கிழியின் உருவெழுதி 
 உயிர்ஆ வணம்செய்திட் டுன்கைத் தந்தால் 
               உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி"  
 (தி. 6 ப. 25. பா. 1)

என்னும் திருத்தாண்டகம், ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, மனத்தை ஓடாது நிறுத்தி, உள்ளமாகிய கிழியில் சிவபிரான் உருவத்தை எழுதி, அதிலே ஒன்றியிருக்கும் அகத்தொழிலாகிய யோகமுறையை அறி வுறுத்துகின்றது.

"ஞானி நாலினுக்கும் உரியன்" (சிவஞானசித்தி. சூ. 12.5) என்பதனால், சரியை முதலிய மூன்றும் சிவப்பேற்றை அடைய விரும்புவார்க்கு அதனை அடையும் சாதனமாய் மட்டும் இல்லாமல், ஞானத்தாற்சிவனைப்பெற்றார்க்கும், அதனை இழக்காதிருத்தற்கும் சாதனமாம். ஆகையால், மேற்காட்டியவை எல்லாம் ஒவ்வொரு சாரார்க்கு மட்டும் இன்றி, எல்லோருக்குமேயாம் என்க.

வழிபாடு

சரியை முதலியவற்றில் நிற்பவர்கள் சமய தீக்கை முதலியன பெற்றுக் காலை நண்பகல் மாலைகளில் வழிபாடு செய் யுங்கால், அவ்வவழிபாட்டை சிவபிரான் சந்தித்தெய்வமாய் நின்று ஏற்றுஅவர்களக்கு அருள்புரிதலை,

புரிகாலே நேசம் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும் 
எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும் 
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று 
திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே 
(தி. 4. ப. 29. பா. 7)
என்று, செல்வேந்தர் குறித்தருளுகின்றார்.

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.


Gnanam - ஞானம்:


இனி, சரியை முதலிய நான்குமே ஒருவகையில் ஞானமாயினும், சிவப்பேற்றை நேரே அடைவிப்பதாய், `ஞானம்' எனச் சிறந்தெடுத்துப் பேசப்படுவது, `பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருளின் இயல்புகளைஉள்ளவாறு உணர்தலேயாகும். இதுவே, `தத்துவஞானம்,' `ஆத்தும ஞானம்' என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுவது. இதனையே நாம் சாத்திரங்களில் விரிவாகக் காண்கின்றோம்.

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள். ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை 'சீவன் முத்தி்' எனப்படும். 'சீவன்முத்தர்' உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 9 ஜூன், 2017

சிவவாக்கியர் கூறிய ஆட்கொல்லியால் நேர்ந்த விபரீதம் என்ன?


சிவவாக்கியர் கூறிய ஆட்கொல்லியால் 

 நேர்ந்த விபரீதம் என்ன?


தினெண் சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியர்  சிவபெருமானின் மீது தீராத பக்தி கொண்டவர். சிவபெருமானைத் துதித்து ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். ஒருநாள் சிவவாக்கியர்  திருமணம் செய்துகொள்ளலாம் என்று  முடிவெடுத்தார். ஆனால் தன் தவத்துக்கு இடையூறு செய்யாத பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் நினைத்தார். அதற்காகத் தன் குருநாதரிடம் சென்று யோசனை கேட்டார். குருநாதரோ "பேய்ச்சுரைக்காயையும், மணலையும் எந்தப் பெண் எந்தவித மறுப்பும் இல்லாமல் நீ கொடுத்ததும் உனக்குச்  சமைத்துத் தருகிறாளோ அவளே உனக்கானவள். அவளையே நீ திருமணம் செய்து கொள் " என்று சொல்லி அனுப்பி வைத்தார். 
சிவவாக்கியர்
ஒருநாள் ஒரு கிராமத்தின் வழியாக சிவவாக்கியர் நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. போகும் வழியில் தென்பட்ட ஒரு வீட்டுக்குச் சென்றார்.  அங்கே ஒர் இளம் பெண்ணைத்தவிர வேறு எவரும் இல்லை.
அவளிடம் சென்ற சிவவாக்கியர் "வீட்டில் பெரியவர்கள் இல்லையா அம்மா", என்றார்
அந்தப்பெண்ணோ " இல்லை ஐயா, என் பெற்றோர்கள் கூடை முடைவதற்கு மூங்கில் வெட்டிவரச் சென்றிருக்கிறார்கள்" என்றாள்.
உடனே சிவவாக்கியரோ " சரி அம்மா எனக்கு மிகுந்த பசியாய் இருக்கிறது. என்னிடம் பேய்ச்சுரைக்காயும், மணலும் இருக்கின்றது. இதனைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா" என்று கேட்டார்.
உடனே அந்தப்பெண் எந்தவித தயக்கமும் இன்றி பேய்ச்சுரைக்காயையும், மணலையும் அழகாகச் சமைத்து உணவு பரிமாறினாள். 
சிவவாக்கியரோ, குருநாதர் அடையாளம் காட்டிய பெண் நமக்கு கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சி அடைந்தார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பினார்கள். சிவவாக்கியர் அவர்களிடம் " உங்கள் பெண் நான் கொடுத்த பொருளை வைத்து அருமையாக உணவு தயாரித்து பரிமாறினாள். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என் தவத்துக்கு இவளால் எந்த இடையூறும் இருக்காது என்று நான் நம்புகிறேன், எனவே  எனக்கு இவளைத் திருமணம் செய்துதர முடியுமா" என்று கேட்டார்.
அப்பெண்ணின் பெற்றோரும் “ உங்களைப் பார்த்தால் சித்தரைப் போன்று இருக்கிறது. உங்களுக்கு எங்கள் பெண்ணைத் திருமணம் செய்துதருவது நாங்கள் செய்த புண்ணியம் சாமி"  என்று  கூறித் திருமணத்துக்குச் சம்மதித்தனர். இருந்தபோதும் "எங்கள் குல வழக்கப்படி திருமணத்துக்குப் பின்னரும் எங்களுடனே  நீங்கள் தங்கியிருக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டனர். சிவவாக்கியர்  அதற்கு ஒப்புக்கொள்ளவே திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாலும் இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவராகத்தான் இருந்தார் சிவவாக்கியர்.  பாசி, பவளமணி சேகரிப்பது, மூங்கில் வெட்டி முறம் செய்வது போன்ற வேலைகளை அவர்களோடு இணைந்து செய்து வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல் மூங்கில் வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்றார் சிவவாக்கியர். அப்படி வெட்டிக் கொண்டிருக்கும்போது தங்கத் துகள்கள் பொடிப்பொடியாக உதிர்வதைக் கண்டார். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார் .
சிவபெருமான்
'ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ'
'கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே'.
'சிவபெருமானே  ஆட்டைக் காட்டி, புலியைப் புடிப்பது போல் இந்த ஆட்கொல்லியைக் காட்டி என்னை மதிமயக்கப் பார்க்கிறாயா. 
நான் உன்னிடம் வேண்டுவது முக்திதானே தவிர ஆட்கொல்லி இல்லை என்று சொல்லி மரத்தை விட்டுத் தூரமாகச் சென்றார்.
இதனை நான்கு இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்
"என்ன ஐயா எதைக்கண்டு இவ்வளவு பயத்துடன் ஓடி வருகிறீர்கள்?" என்று கேட்டனர்.
அதற்குச் சிவவாக்கியர் " நான் ஒரு மூங்கில் மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளிருந்து ஆட்கொல்லி வந்தது, அதனால்தான் பயந்து ஓடிவந்தேன்"  என்றார். தங்கம்தான் கொட்டியது என்பதையறிந்த நால்வரும் சிவவாக்கியரை பைத்தியம் என்றெண்ணி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். மேழும் சிவவாக்கியரிடம் "ஆமாம் ஐயா, இது ஆட்கொல்லிதான். நீங்கள் உடனடியாக வீட்டுக்குச் சென்றுவிடுங்கள்" என்று சொல்லி அனுப்பிவைத்தனர்.
சிவவாக்கியர் சென்றதும் நால்வரும் சேர்ந்து  தங்கத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். இப்போது ஊருக்குள் சென்றால் மாட்டிக் கொள்வோம். இருட்டியதும் செல்லலாம் என்றும் முடிவெடுத்தனர். நால்வரில் இருவர் பக்கத்து ஊருக்குச் சென்று உணவு வாங்கி வரவும், மீதமிருவர் தங்க மூட்டையை  பார்த்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
உணவு வாங்கச் சென்றவர்கள் இருவரும் வாங்கி வரும் உணவில் விஷத்தைக் கலந்து காட்டில் இருக்கும் இருவரையும் கொன்றுவிட்டு, தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். காட்டில் இருப்பவர்களோ உணவு வாங்கச் சென்றவர்கள்  இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டு தங்கத்தைத் தாங்கள் இருவரும் அபகரிக்க முடிவு செய்தனர். அதற்காக ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்தும் கொண்டனர்.
தங்கள் திட்டமிட்டபடியே அவர்கள் காட்டுக்குள் வந்ததும், இருவரையும் அடித்தே கொன்றனர். பின்பு அதிகமாக பசி எடுக்கவே அவர்கள் வாங்கி வந்த உணவை உட்கொண்டனர். விஷம் கலந்த உணவு ஆதலால் இவ்விருவரும் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.