செவ்வாய், 13 ஜூன், 2017

திருமகள் திருக்குறள்
திருமகள், செய்யாள், தாமரையினாள், திரு, கலைமகள் என்றெல்லாம் லட்சுமிதேவிக்குப் பல பெயர்கள் சூட்டிக் கொண்டாடுகிறது நம் இந்து மதம். அந்த லட்சுமி தேவியை வெவ்வேறு இடங்களில் நான்கு திருக்குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. வறுமையும் புலமையும் இணைந்தே இருப்பன என்ற கருத்தில் வள்ளுவருக்கு ஒருசிறிதும் உடன்பாடில்லை. அறநெறிப்படி வாழ்ந்தால் திருமகள் அவ்விதம் வாழ்பவனைத் தேடிவருவாள் என்பதே வள்ளுவரின் தீர்ந்த முடிவு. சரஸ்வதி கடாட்சம் உடையவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவது கடினம் என்ற மூடநம்பிக்கை நம் மக்களிடையே ஊடுருவியுள்ளது. அந்தப் பொய்யான கருத்தைத் தாக்கித் தகர்க்கிறது திருக்குறள். அறநெறிப்படி வாழ்பவனே நிரந்தர லட்சுமி கடாட்சம் பெற இயலும். இன்னும் சொல்லப் போனால் சரஸ்வதி கடாட்சம் உடையவனாலேயே, தான் பெற்ற லட்சுமி கடாட்சத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்!’ (குறள் எண் 84)

மலர்ந்த முகத்துடன் விருந்தினர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிப்பவன் எவனோ அவனது இல்லத்தில் லட்சுமிதேவி (செய்யாள்) அவன் உள்ளம் மகிழுமாறு வாசம் செய்வாள்.

'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் (செய்யவள்) வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள்.

'மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்!’ (குறள் எண்: 617)

சோம்பல் உள்ளவனிடம் மூதேவி குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் வாசம் செய்வாள் தாமரைச் செல்வியான திருமகள்.

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு!’ (குறள் எண்: 920)

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரிடம் கொள்ளும் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் ஆகிய இந்த மூன்று வகையான தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவரை விட்டு லட்சுமி தேவி (திரு) விலகிவிடுவாள். அவர்கள் செல்வ வளம் பெற இயலாது. ஆதிசங்கரர் சின்னஞ்சிறு பாலகனாக காலடி கிராமத்தில் அந்த எளிய வீட்டின்முன் பிட்சை வேண்டி நின்றார். அந்த வீடு அயாசகன் என்ற பரம எழை வேதியன் ஒருவனின் வீடு. மணி அரிசி கிடையாது வீட்டில். அயாசகன் வயல்வெளிப் பகுதியில் ஏதேனும் தானியம் இறைந்திருக்குமா என்று பார்க்க வெளியே சென்றிருந்தான். வீட்டுச் சாளரத்தின் வழியே தன் இல்லத்தின் வாயிலில் வந்து நின்ற அந்த தெய்வீகச் சிறுவனைப் பார்த்தாள் அயாசகனின் மனைவி. சங்கரச் சிறுவனின் ஒளிவீசும் திருமுகம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சிறுவன் எதன்பொருட்டோ குரல் கொடுக்கிறானே! வீணையின் நாதம் போல் அந்தக் குரல் மயக்குகிறதே! என்ன கேட்கிறான்?
shankara in early days க்கான பட முடிவு
'பவதி பிட்சாம் தேஹி!’எனக்குப் பிட்சை இடுங்கள் என்றல்லவா வேண்டுகிறான்! தெய்வமே! இந்த தெய்வீகச் சிறுவனை ஏன் என் வீட்டுக்கு அனுப்பினாய்! அவன் பிட்சா பத்திரத்தில் போட என் இல்லத்தில் மணி அரிசி கூட இல்லையே! பரம ஏழையான என்னிடம் நம்பிக்கை வைத்து என் வீட்டு வாசலில் நிற்கும் அவனை எப்படி வெறுங்கையோடு அனுப்புவேன்! அவள் மனம் பதறியது. பரபரத்தது. அங்குமிங்கும் தேடினாள். நேற்று ஏகாதசி. ஆனால் அவள் வீட்டில் என்றும் ஏகாதசி தான்! இன்று துவாதசி. ஏகாதசி பட்டினி விரதத்தை முறிக்க, ஏதேனும் உண்பது சம்பிரதாயம் ஆயிற்றே? அதை நிறைவேற்றுவதன் பொருட்டு ஒரே ஒரு வாடிய நெல்லிக் கனியை மாடத்தில் வைத்திருந்தாள். அந்த நெல்லிக் கனியைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

இவ்வளவு எளிய பொருளை பிட்சாபாத்திரத்தில் போடுகிறோமே என அவள் உள்ளம் கூசியது. கண்கலங்க மிகுந்த கூச்சத்தோடு அந்த நெல்லிக்கனியை சங்கரச் சிறுவனின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டுவிட்டு நாணம் தாங்காமல் விம்மியவாறு உள்ளே ஓடி மறைந்தாள் அவள். அவள் சேலையில் நெய்த நுலை விட தைத்த நூல் அதிகம் இருந்ததைப் பார்த்தார் சங்கரர். அவள் தனக்களித்த நெல்லிக் கனியையும் கனிவோடு உற்றுப் பார்த்தார். இந்தக் கொடும் வறுமையிலும் யாசகம் கேட்போருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என அவள் மனம் நினைத்ததே, அந்த மனம் பொன்மனம் அல்லவா? அத்தகைய பொன்மனம் கொண்டவளுக்கு லட்சுமிதேவி பொன்னாலான நெல்லிக்கனி களையல்லவா அருள வேண்டும்? சங்கரரின் அருள் வெள்ளம் அவர் இதயத்திலிருந்து பாடலாய்ப் பொங்கியது.

'அங்கம் ஹரே புளக பூஷணமாஸ்ரயந்தி
பிருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிர பாங்க லீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா!’

தாயே லட்சுமிதேவி! எந்த முன்வினை காரணமாக இவளுக்கு இந்தக் கொடிய வறுமைநிலை ஏற்பட்டிருந்தாலும் இனி நீ அவள் செய்த முன்வினையைக் கணக்கில் கொள்ளாதே! இதோ தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை எனக்குத் தானமளித்ததன் மூலம் அவளுடைய முன்வினைகள் அனைத்தும் தூள்தூள் ஆகிவிட்டன. அவள் வீட்டில் பொன்மாரி பொழிவாய் அம்மா! அடுத்தடுத்து சரசரவென சங்கரரின் உதடுகளிலிருந்து அருள் வெள்ளம் சம்ஸ்க்ருத சுலோகங்களாய்ப் பொங்கியது. கேட்ட லட்சுமிதேவி உள்ளம் குளிர்ந்தாள். சங்கரர் யார்? பாரத தேசத்தில் ஷண்மத ஸ்தாபனம் செய்யவென தோன்றிய சிவபெருமானின் அவதாரம்தான் அல்லவா? சிவனே பரிந்துரைத்த பிறகு லட்சுமிதேவி அருள் புரியாமல் சிவனே என்றிருக்கலாமா?

சங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் விளைவாக லட்சுமிதேவி அந்த ஏழைப் பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழியலானாள். உண்மையிலேயே கூரையை பிய்த்துக் கொண்டு செல்வம் கொட்டியது. இப்போதும் கேரளத்தில் காலடி கிராமத்திற்குச் சென்றால் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக் கனிகள் கொட்டிய அந்த இல்லத்தை நாம் பார்க்கலாம். இந்த அற்புதத்தை நிகழ்த்தியது எது? அந்த ஏழைப் பெண்மணியின் விருந்தோம்பல். வறுமையிலும் செம்மை காத்து பிட்சைப் பாத்திரத்தில் நெல்லிக்கனி இட்டு உபசரித்த அவளின் பண்பு நலன். முகனமர்ந்து நல் விருந்தை உபசரித்தால் அத்தகையோர் இல்லத்தில் அகனமர்ந்து லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்ற குறள் கருத்தின் விளக்கம் தானே இந்த வரலாறு?

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக