வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சாதனைக் கோர் பாதை


சாதனைக் கோர் பாதை


உங்களுக்குள் ஆத்மா என்ற மாபெரும் சக்தி இருக்கிறது என்பதை உணருங்கள்,
சுவாமி விவேகானந்தர் கூறுவதைக் கவனியுங்கள், " உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால் அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வர முடியுமானால் , நீயும் என்னைப் போல ஆக முடியும் "
" நீங்கள்செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள்அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள்,அழியாத திருவருளைப் பெற்றவரகள் "

விவேகானந்தரின் கூற்றுப்படி உங்கள் சக்தியை வெளிக் கொண்டு வர உங்கள் வாழ்வில் சிரித்து, மகிழ்ந்து வாழ்ந்திடுஙகள் உங்கள் ஆத்மா உங்களின் சக்தியை வெளிப்படுத்தும்.
நாம் ஒரு பழக்கடைக்கு செல்கிறோம், அங்கு நல்ல முதிர்ந்த பழங்களும் இருக்கும், சேதமடைந்த பழங்களும் இருக்கும், நமக்கு பிடித்த இனிமையான பழங்களைதான் வாங்குகிறோம், அழுகிய பழங்களை நாம் வாங்குவதில்லை, அதே போலத்தான் வாழ்க்கை என்னும் கடையில் பல பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். 
உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, நல்லெண்ணம், உண்மை, பரிவு உதவி என்று பல நல்ல பழங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதே கடையில் அழுகிய பழங்களை எடுத்து குறைந்த விலைக்கு தனியே வைத்திருக்கிறார், அந்த பழங்களுக்கு பெயரிடுவோமானால், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், ஏமாற்று, பொய், காமம், வஞ்சம்,என்றெல்லாம் அமையும், இந்த அழுகிய பழங்களை வகை வகையாக அந்தக் கடையில் பல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம், என்பது நம் கையில் தான் இருக்கிறது.நாம் உற்சாகமாக இருக்கலாம், பிறரையும் இந்த உலகையுமே உற்சாகமூட்டலாம். மாறாக நாம் பிறரையும் துயர எண்ணங்களில் மூழ்கடித்து நம் சோகத்தின் சுமைதாங்கியாக பிறரையும் மாற்றி அனுப்பி வைக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் தான் செயல்பட ஆசைப்படுகிறார்கள். வலிமையுடன்தான வாழத்தான் பிரியப்படுகிறார்கள். ஆனால்பல சமயம் சந்தேகமும் பயமும் அவரகளை அறியாமல் உள்ளே புக, அவர்களது சிந்தனையின் தடமே மாறிப் போய் விடுகிறது.

கோபமாக இருப்பதை கோபத்தில் இருப்பவன் உணர்வதில்லை.துக்கமாக இருப்பதை துக்கத்தில் இருப்பவன் அறிவதில்லை. காரணம் அவன் துக்கத்திலேயே மூழ்கி விடுகிறான்.
வஞ்சகமும் பொறாமையும் கொண்டவன் அந்த எண்ணங்கள் அந்தஉணர்வுகள் தன்னை ஆட்கொண்டிருப்பதாக உணர்வதில்லை. அதுவாகவே மாறி விடுகிறான்.
துக்கத்தில் இருக்கும் போது " நான் துக்கமாக இருக்கிறேன் " என்ற விசயத்தை புரிந்து கொண்டோ மானால் நாம் மாறுபட்ட மனிதனாக அடுத்த கணமே மாற இயலும்.
அடடா நான் துக்கத்தில் இருக்கிறேனா? அதுதான் என்னை முடக்கி இருக்கிறதா? அதனால் தான் மூஞ்சியை உர் என்று வைத்துக்கொண்டு சோகமாக நிற்கிறேனா? என்று யோசித்தோமானால், நமது துக்கத்தை ஒரு மூன்றாவது மனிதன்போல பார்த்து பரிசீலித்து அதிலிருந்து மீள முடியும்.

வாழ்க்கையின் லட்சியம்

வாழ்க்கை என்னும் கடையில உற்சாகத்தையும் நம்பிக்கையையும்தான் வாங்க வேண்டும், அதற்காகத்தான் வந்திருக்கிறோம், அதுதான் இந்த பிறவியின் தாத்பரியம், மாறாக உற்சாமிழந்து துயரத்தில் இருந்தோமானால், இந்த உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கும். 
உற்சாகத்தை வாங்குவது மேல், உற்சாகத்தை அனுபவிப்பது மேலானது, நம்பிக்கையை வாங்குவது நல்லது, நம்பிக்கையுடன் செயல்படுவது மேல், என்று வாழ்க்கையின் தாத்பரியத்தை - வாழ்வின் லட்சியத்தை நாம் தெளிவா புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம்ஒன்றை ஒன்று நம்பி சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவியாக மகிழ்வுடன் வாழத்தான் படைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி உதவியாக இருந்து மகிழ்வுடன் வாழ்ந்துவிடடு அல்லவா போகவேண்டும்? ஏன் உற்சாகத்தை தேர்ந்தெடுக்க மறுக்கிறோம்? சிறு சிறு விஷயங்களுக் கெல்லாம் கலங்கிறோம்.ஏன் நம்பிக்கையுடன் செயல்பட மறுக்கிறோம்? சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்படுகிறோம்? 
இதனை மறந்து பிராணிகளிடம் நட்புறவு கொண்டாடுவோம், மனிதர்களிடம் புன்னகையுடன் பேசுவேன், உதவுவேன், ஆகா என்ன அற்புத உலகம் என்று நீங்களே கொஞ்சம் சொல்லிப்பாருங்கள் . சொர்க்கம் வேறல்ல, நாம் உருவாக்குவது தான் சொர்க்கம், நமது மனநிலைதான் சொர்க்கத்தை உருவாக்கிறது. அல்லது நரகத்திற்கு கொண்டு வருகிறது. எது வேண்டும் என்று தீர்மானிப்பதில் என்ன கஷ்டம்?

நம்பிக்கை
அதேபோல் தான் இந்த நம்பிக்கை கொண்ட மனம். என்னால் எதுவும் முடியும். எனக்குள் ஒரு மாபெரும் சக்தி குடிகொண்டிருக்கிறது. ஆண்டவன் என் அருகில் இருக்கிறார்,நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்கிற எண்ணங்கள் உள்ளத்தில் ஆழமாக வேர்வடும்போது அது நம்பிக்கையாக வலிமை தருகிறது. வலிமை பெற்ற எண்ணம் நம்மை செயல் புரியத் தூண்டுகிறது. எண்ணம் நம் செயலால் சாதனை ஆக மாறுகிறது. நம்பிக்கைதான் வாழ்வின் ஆணி வேர். வாழ்வில் முக்கியமான இரண்டு விஷயங்கள் எவை எவை என்று ஆராய்ந்தார்கள் சில மனவியல் அறிஞர்கள். அது உற்சாகம் - நம்பிக்கை என்ற இரண்டு விஷயங்கள் தான் வாழ்வின் ஜீவாதாரம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். எனவே நல்ல வழிகாட்டி உற்சாகமும் நம்பிகையும் தான். 

நன்றி எஸ் உதயமூர்த்தியின் சாதனைக்கோர் பாதை
தொகுப்பு . வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

திருக்குறிப்புத் தொண்டர்

திருக்குறிப்புத் தொண்டர் - Thirukurippu thondar


குரு பூசை நாள் சித்திரை - சுவாதி 22/04/16 வெள்ளிக்கிழமை

சிவனடியார்களின் அழுக்கு ஆடைகளை துவைத்து கொடுக்கும் சிவப்பணி செய்து வந்தவர், திருக்குறிப்பு தொண்டர் என்ற சிவனடியார், தொண்டை நாட்டில் அன்னை உமாபதியார் 32 அறங்களையும் புரிந்து இறைவனை வழிபட்ட காஞ்சயம்பதி என்ற தலத்தில் வண்ணார் என்ற ஏகாலிய குலத்தில் தோன்றியவர் இத்திருத்தொண்டர், சிவனடியார்களின் குறிப்பு அறிந்து, அவர்களின் அழுக்கு ஆடைகளை துவைத்து சலவை செய்யும் திருப்பணிையை நேர்மையோடும், சிவபக்தியோடும்  செய்து வந்ததால், சிவனடியர்கள் இவரை திருக்குறிப்பு அறிந்த தொண்டர் என அழைத்தனர். அடியார்களின் ஆடைகளின் மாசு நீக்குவதால், தனது பிறப்பின் மாசு நீங்கும் என்ற எண்ணத்தில் அப்பணியே சிறந்த தெய்வீகப்பணி என்று சிரத்தையுடன் செய்து வந்தார்.இவரது சிவபணியை உலகறிய செய்யவேண்டும் என்ற நோக்கில் இறைவரே ஒரு நாள் இவரது இல்லம் நோக்கி சிவனடியார் உருவில் வந்தார், சிவனடியாரைக்கண்ட திருக்குறிப்பு தொண்டர், அவருடைய அழுக்கு ஆடைகளையும் வெண்ணீர் அணிந்த திருமேனியினையும் கண்டு அவருடைய அழுக்கு ஆடையினை துவைத்து தூய ஆடையாகத்தருகிறேன் என்று அவருடைய ஆடைகளை கேட்டார், அதற்கு சிவனடியார் உருவில் இருந்த இறைவர், எனக்கு இருப்பதோ ஒரே ஆடை இதனை சூரியன் மறைவதற்குள் துவைத்து கொடுக்க முடியுமா? என்று கேட்டதற்கு அதற்குள் எப்படியும் தந்துவிடுவேன் என்று உறுதியளித்து சிவனடியாரின் ஆடையை பெற்றுக்கொண்டு நீரோடைக்கு சென்று சலைவை செய்யும் பணியை துவங்கினார், உடனே இடியும் மின்னலமாக பெருமழை பெய்ய துவங்கியது,துவத்து வைத்த ஆடையை உலர வைக்க முடியாமல் நாயனார் மனம் கலங்கினார், பொழுது அடையும் நேரம் நெருங்க நெருங்க, நாயனார் மனம் நொந்து மனம் கலங்கி செய்வதறியாது, திகைத்தும் நான் சிவனடியாரிடம் பொய்யனாகி விட்டனே, அடியார் இந்நேரம் ஆடையின்றி குளிரில் நடுங்குவாரே என்செய்வது என பதறினார்,இறைவனிடம் வேண்டியும் பலன் இல்லை, மழையும் விடவில்லை, எனவே தன்உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பி, துணி துவைக்கும் கல்லில் தன் தலையை முட்டி மோதி தன் இன்னுயிரை விட எத்தனித்தார், இது கண்ட இறைவர் காலம் தாழ்த்தாது உடனே நாயனார் முன் உமாபதியோடு காட்சி தந்து, அடியாரே உமது சிவத்ெதாண்டின் பக்தி கண்டு மகிழ்ந்தோம், இனி எம்மோடு சிவலோகம் வருக என்று கூறி மறைந்தார், திருக்குறிப்பு தொண்டரும் இறைவரைக்கண்ட மகிழ்ச்சியில் தரையில் விழுந்து வணங்கி பெருமகிழ்ச்சி பெற்றார், சில காலம் இருந்து மேலும் சிவத்தொண்டு செய்து,  சித்திரை திங்கள் சுவாதி நட்சத்திரத்தில் சிவபதவி அடைந்தார். 

அவர்தம் தொண்டினை சிறப்பித்து அன்னாரின் சிவபதவி அடைந்த நன்னாளில் குருபூசை செய்து நாமும் சிவ அருள் பெறுவோம்,

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்

தொகுத்தவர் ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வியாழன், 21 ஏப்ரல், 2016

உமாபதி சிவாசாரியர்

உமாபதி சிவாசாரியர்     (குருபூசை ;20/4/16புதன்கிழமை)

சந்தனக்குரவர்கள் 
அகச்சந்தான குரவர்கள்
1. திருநந்திதேவர் - thirunandhi dhEvar 
2. சனற்குமாரர் - sanath kumArar
3. சத்தியஞான தரிசினிகள் - 
sathya nyAna dharshinigaL 
4. பரஞ்சோதியார் - paranychOdhi munivar

புறச்சந்தனக்குரவர்கள் நால்வர்
1. மெய்கண்டர் - meykaNDAr
2. அருள் நந்தி சிவாச்சாரியார் - aruNan^dhi shivam
3. மறைஞான சம்பந்தர் - maRainyAna chamban^dhar
4. உமாபதி சிவாச்சாரியார் - umApathi shivAchchAriyAr


இவர்களில் உமாபதி சிவம் என்ற சந்தனக்குரவரின் குருபூசை நாள் 20/4/16புதன்கிழமை. அன்றைய நாளில் அவர்தம் சிறப்பினை நினைவு கொள்வோம்.


உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

இளமைக் காலம்
13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.
நூல்கள்
மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. 

கொடிக்கவி பாடிய வரலாறு
சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு; வை .பூமாலை,சுந்தரபாண்டியம்.

புதன், 20 ஏப்ரல், 2016

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்


கீழ்க்கண்ட  அன்றாட வாழ்வில் வரும் தொல்லை நோய்களுக்கான எளிய வைத்திய முறைகள்
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

" தீவண்ணர் திறம் ஒருகாலும் பேசாராகில் "

 " தீவண்ணர் திறம் ஒருகாலும் பேசாராகில் "


நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
.............................
..............................
ஈசன் அடி போற்றி எந்தையடி போற்றி  .... மணிவாசக பெருமான்

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடிநூறாயிரம் 
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா.   .... பெரியாழ்வார் அருளிச்செய்த 
                                     திருப்பல்லாண்டு
,,,, இவ்வாறு இறைவனை துதி பாடுதல்,

பாரி பாரி’ என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.

பாடியவர்: கபிலர்.  பாடப்பட்டோன்: வேள் பாரி. 
இவ்வாறு மன்னனை புலவர்கள் துதி நாடினர்

இன்றைய பொழுதிலும் மந்திரியையும், அரசியல் தலைவர்களையும் துதி பாடுவதையும் நாம் காணலாம்
" காவேரி நீர் தந்த தலைவன் வாழ்க !"
" இலவச அரிசி கொடுத்த அம்மா வாழ்க "
"கல்வி கண் திறந்த தலைவர் வாழ்க !"
 என்று அரசியல் தலைவர்களையும்,  மன்னர்-மந்திரிகளையும் முகத்துதி பாடிவது நம் வழக்கத்தில் உள்ளதோ!  இவர்களைப்பாடினால்  அழியும் செல்வமான பொருளும், பதவியும், பணமும், இலவசங்களும் பெறாலாம், ஆனால் தீவண்ணா் திறம்பற்றி பாடி அவரது புகழை தினமும் கூறினால், இனி பிறப்பறுத்து அழியா செல்வமான வீடு பேறு அடையலாம், என்றதலால் திருநாவுக்கரசு பெருமான் 
" திரு நாமம் ஐந்தெழுத்து செப்பாராகில்
தீவண்ணர்திறம் ஒருகாலும் பேசாராகில் 
ஒருகாலும் திருக்கோவில் செல்லாராகில் ,,,,,,
இப்படிப்பட்டவர்கள் செத்தும் பிறந்தும் தொழிலாகி இறக்கின்றார்கள் என்கிறார்.
இவர்கள் மனித வாழ்வால் யாதொரு பயனும் இல்லை, மேன்மேலும் பிறந்து இறப்பதைத்தவிர வேறு ஒன்றும் கண்டிலர். கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பில் அனுதினமும் திருக்கோவில் சென்றும், அவர் திருநாமம் ஐந்தெழுத்தை கூறியும், அவருடைய வீர தீர செயல்களை எடுத்துக் கூறி பிறப்பின் பயனை அடைந்து அழியா செல்வமான வீடுபேறு அடைதல் வேண்டும். எ்ன்கிறார் அப்பர். 
 இதுபோன்றே மாணிக்கவாசகர் அவர்தம் பாடல் பதிகங்களில் இறைவரின் வீர தீர செயல்களை கூறியும், அதனை நாம் தெரிந்து கொண்டு நாமும் தீவண்ணர் புகழ் அனுதினமும் பேச வேண்டும் என்கிறார், மேலும் அவருடைய திருப்பெருந்துறை சிவபுராண பாடல்களில் தாமே இறைவரை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதையும் ,இவ்வாறு வாழ்த்துப்பாடினால் " சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப்பணிந்து " என்று முடிப்பார், இறைவரை வாயார வாழ்த்திப்பாடினால் எல்லோரும் புகழும் படியான சிவபதம் அடைவது உறுதி என்கிறார், மேலும் அவரது திருப்பள்ளி எழுச்சி, திருவுந்தியார், திருதெள்ளேணம் பதிகங்களில் இறைவரின் வீர தீர செயல்களை அவர்  தம்  பாடல் பதிகங்கள் வாயிலாக எடுத்துரைப்பார், அதில் திரபுரம் எரித்தது. தச்சன் யாகத்தை அழித்து தச்சனை தண்டித்தது. உபமுனிவருக்கு பால்கடல் தந்தது போன்ற தீவண்ணர் திறம் பற்றி கூறுகிறார்.
 இதுபோன்ற இராமலிங்க அடிகளார், தனது பாடல்களில் இறைவன் புகழை அனுதினமும் கூறவேண்டும் என்பதை,
" ஒருமையுடன் நின் திருவடி நினைக்கின்ற உத்தமர்தன் உறவு வேண்டும்
................ பெருமை மிகு நினது புகழ் பேசவே வேண்டும் " என்றும்
 அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேணடும்
.......... எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்ற 
எந்தை நினது அருட் புகழை இயம்பிடல் வேண்டும் "  என்கிறார். 

எனவே இறைவரின் புகழை நாம் அனுதினமும் செப்பதல் என்பது நமது குறிக்கோளாக கொள்ள வேண்டும்.  அவ்வாறு அவனது புகழை பேச வேண்டுமானால் அவனது வீர தீர செயல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? இதைத்தான் திருவிளையாடல்  புராணங்களும், திருமறைகளும், கல்லாடம் என்ற காப்பித்திலும் கூறப்பட்டுள்ளன. இவற்றை யாண்டு தெரிந்து கொண்டால் அவனது திறம் அனுதினமும் செப்பி பிறவா நிலை என்ற வீடுபேறு அடைவோம்.
கல்லாடத்துள் வரும் கதைக் குறிப்புக்கள்

1. அகத்தியர்: ஒரு முனிவர்; இவரைப் பற்றிப் பல கதைகள் நம் நாட்டின் பல பாகங்களிலும் வழங்குகின்றன. தேவர்களை வருத்திய விருத்திராசுரன் என்பவன், இந்திரனுடைய வைரப் படைக்குப் பயந்து கடலில் ஒளிந்திருந்த போது, அவனைப் பிடிப்பதற்காகக் கடல் நீரை வற்றச் செய்ய வெண்டுமெனத் தேவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இயைய, கடல் நீரைக் குடித்துக் கடலை வற்றச் செய்து, மீண்டும் நிறையச் செய்தவர். சிவபெருமானுக்கு உமையம்மையோடு திருமணம் நிகழ்ந்த காலத்தில், தேவர்கள் எல்லாரும் வட திசையில் ஒன்று சேர்ந்தமையால், அத் திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது; இந்த ஏற்றத் தாழ்வைச் சமன் செய்வதற்காகச் சிவபெருமான் அகத்தியரைத் தென் திசைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்; அக் கட்டளையை மேற்கொண்டு தென் திசைக்கு வரும் வழியில், வானளாவி வழி தடுத்து நின்ற விந்த மலையைத் தணியச் செய்தார். இவருடைய கரகத்திலிருந்த நீரை, மூத்த பிள்ளையார், காக்கை வடிவில் சென்று, கவிழ்த்துவிட, அது 'காவிரி' என்னும் ஆறாகப் பெருகியது. இவர் சிவபெருமானிடத்தும், முருகனிடத்தும், சூரியனிடத்தும், தமிழ் மொழியைக் கற்றார். பொதியமலையையும் பொருநையாற்றையும் தமக்கு உரிமையாகப் பெற்றவர்.

 2. அகப்பொருள் அருளியது: முன்பு ஒரு காலத்தில், தமிழ் நூற் பரப்பில், அகப்பொருள் இலக்கணம் அருகியது; பாண்டியனும் சங்கப்புலவரும் வருந்தினார்கள்; அப்பொழுது சிவபெருமான் ஒரு புலவராக வந்து, 'அன்பின் ஐந்திணை' என்று தொடங்கி, அறுபது சூத்திரங்களில் ஓர் அகப்பொருள் இலக்கண நூலை அமைத்துக் கொடுத்தார்; அந்த நூல், வேத வழக்கையும், உலக வழக்கையும், உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களையும், ஒரு வகையாகச் சேர்த்து, தமிழுக்கே உரிய ஐந்திணை இலக்கணத்துக்கு மாறுபடாமலும், வேண்டும் இடங்களில் வடமொழிப் புணர்ச்சி விதிகளை ஏற்றுக்கொண்டதாகவும் இருந்தது

 3. அயன் தலையைக் கொய்தது: திருமாலுடைய உந்திக் கமலத்தில் தோன்றிப் படைப்புத் தொழிலைச் செய்துவரும் அயனுக்கு, ஆதியில், சிவபெருமானைப் போல் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு காலத்தில், அவன் ஆணவம் கொண்டு சிவபெருமானை வணங்காது நின்றான். சிவபெருமானுடைய ஆணையால் வைரவக் கடவுள் அவனுடைய ஐந்தாவது தலையைத் தன் நகத்தால் கிள்ளிக் கொய்து, பலி கொள்ளும் திருவோடாகக் கையில் ஏந்தி, தேவர்களுடைய குருதியைப் பலியாகப் பெற்று, பிரமன் உள்ளிட்ட தேவர்களுடைய ஆணவத்தைப் போக்கினார்.
 4. அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியது: பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காகத் தெய்வப் படைக் கலங்களைப் பெற வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனன் முன்னிலையில் வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி, ஒரே சமயத்தில் ஒரு பன்றியைத் தாமும் அருச்சுனனுமாக எய்து வீழ்த்தி, அதனால் மாறுகொண்டு, இருவரும் ஒருவரோடொருவர் போர் செய்து, அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பினை ஏற்று, பின்னர், தம் தெய்வக் காட்சியோடு அவனுக்குப் பாசுபதக் கணையையும் அம்பறாத் தூணியையும் அருளினார்.
  5. இடைக்காடர்: இடைக்காடர் என்னும் சங்கப் புலவரின் இனிய செய்யுட்களைப் பாண்டியன் பாராட்டாது பராமுகமாக இருந்ததால், அப் புலவர் உள்ளம் உடைந்து, ஆலவாய் அண்ணலிடம் முறையிட்டுக் கொண்டு, மதுரையைவிட்டு அகன்று, வடபுறமாய் வைகையின் தென் கரையில் தங்கினார். ஆலவாய் அண்ணலும் ஏனைய சங்கப் புலவர்களும் இடைக்காடரிடம் பரிவு கொண்டு, மதுரையை விடுத்து இடைக் காடர் தங்கிய இடத்திற்கே சென்று தங்கி விட்டார்கள். இது கண்டு, தன் பிழைக்காக வருந்தி, பாண்டியன் ஆலவாய் அண்ணலையும் சங்கப் புலவர்களையும் வணங்கி, இடைக்காடருடன் எல்ரோரையும் மதுரைக்கு அழைத்து வந்து, சிறப்புச் செய்தான்.
    6. இந்திரன் பழி தீர்த்தது: இந்திரன் ஒரு காலத்தில், தான் இயற்றிய வேள்விக்குத் தொடர்புடையவனாக இருந்த விச்சுவவுருவனைக் கொன்றமையால், குரவனைக் கொன்ற பெரும் பழியால் பற்றப் பெற்றான். அப் பெரும் பழி எவ்வித முயற்சியாலும் அகலாது துன்புறுத்திக்கொண்டே வந்து, அவன் மதுரையை அடைந்த அளவிலேயே விலகுவதாயிற்று. இந்திரன் ஆலவாய் அண்ணலின் பேரருளை வியந்து, எட்டு யானைகளின் பிடரிகளின்மேல் அமையப் பெற்ற ஒரு பேரழகு வாய்ந்த விமானத்தைத் தேவருலகிலிருந்து கொணர்ந்து, சோமசுந்தரக் கடவுளுக்கு அமைத்து வழிபாடு செய்தான்.

     7. இந்திரன் மலைகளின் சிறகை அரிந்தது: ஒரு காலத்தில் மலைகள் எல்லாம், சிறகு உடையனவாக இருந்தது, மனம் போனபடி பறந்து சென்று, உலகுக்குப் பெரிய துன்பத்தை விளைவித்து வந்தன. அந்தத் துன்பத்தைப் போக்க வேண்டி, மலைகள் பறந்து நிலை பெயரா வண்ணம், அவற்றின் சிறகுகளை இந்திரன் அரிந்துவிட்டான். அப்போது இரத்தம் சிந்திய இடங்களில் பவளம் உண்டாயினவாம்.

     8. இராவணன் கயிலையை எடுத்தது: ஒரு காலத்தில் இராவணன் கயிலை மலைக்குச் சென்று, தன் தோள்வலிமையை எண்ணி இறுமாந்து, அம் மலையை எடுக்க முயன்ற போது, அதன் முடியில் வீற்றிருந்த சிவபெருமான், தன் திருவடி விரல் ஒன்றால் அழுத்த, அம் மலையின் அடியில் நெரிபட்டு, பல காலம் கதறி அரற்றி, பின்னர், சாம கானம் பாடி, சிவபெருமானை மகிழ்வித்து, விடுதலைப் பெற்றான். 

    9. உக்கிரபாண்டியன் கடலில் வேல் விட்டது: முருகப் பெருமான் தடாதகைப் பிராட்டியாரின் திருமகனாகத் தோன்றி, உக்கிரபாண்டியன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வரும் காலத்தில், இந்திரனுடைய சூழ்ச்சியால், கடல் பொங்கிக் கரை கடந்து, மதுரை மாநகரைச் சூழ்ந்து அழிக்க எழுந்தது; அப்போது சீற்றத்துடன் பொங்கிவந்த கடலின்மேல், உக்கிரன் வேலை எறியவே, வேல் நுனி படுவதற்கு முன்பேயே கடல் வற்றி வணங்கிப் பின் செல்வதாயிற்று.

     10. உமை சிவபெருமான் கண்ணை மூடியது: ஒரு காலத்தில், விளையாட்டாக, உமையம்மையார் சிவபெருமானுடைய திருக் கண்களைத் தம் வளையலணிந்த கைகளால் மூடியதால், எல்லா உலகிலும் உள்ள எல்லா ஒளிகளும் மறைய, எங்கணும் இருள் மூடிற்று. அப்போது, உலக இருளைப் போக்க வேண்டி, திருவருளால் சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணை நெற்றியில் தோற்றுவித்தார்.

    11. கண்ணன் ஆடை கவர்ந்தது: கண்ணன் இளமையில் ஆயர்பாடியில் வளர்ந்தபொழுது, ஆயர் சிறுமியருடன் விளையாடியும், அச் சிறுமியர் நீராடும்போது கரையில் வைத்துச் செல்லும் அவர்களுடைய ஆடைகளைக் கவர்ந்தோடியும் மகிழ்ந்து வந்தான்.

     12. கருங்குருவிக்கு அருள் செய்தது: முன்னைய தீவினையினால் காக்கைகளால் நலியப் பெற்று அஞ்சி வாழ்ந்த கருங்குருவி ஒன்று, மதுரையை அடைந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி, ஆலவாய் அண்ணலை வழிபட்டு, அவ் இறைவனால் மூன்று எழுத்தாலாய ஒரு மறை அறிவுறுத்தப் பெற்று, முறைப்படி ஓதி, தன் இனத்துடன் வலிமை பெற்றது.

     13. கருப்பைக்கு அருளியது: திருமறைக் காட்டில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில், இரவில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கு தூண்டுவார் இல்லாதபடியால் ஒளிகுன்றி நின்று விடக் கூடிய நிலைக்கு வந்தபோது, அவ் விளக்கில் உள்ள நெய்யை உண்ணுவதற்காக வந்த எலி ஒன்றால் விளக்கு தூண்டப்பெற்று ஒளி பெருகியதைக் கண்டு மகிழ்ந்த இறைவன், 'இந்த எலி பதினான்கு உலகமும் ஆளும் அரசனாகுக' என அருள, அந்த எலி 'மாவலிச் சக்கரவர்த்தி'யாகப் பிறந்து, பேரரசு புரிந்தது.

    14. கல்லானைக்குப் கரும்பு அருத்தியது: பாண்டியன் ஒருவன் இறைவன் திருக்கோயிலை வணங்கச் சென்ற போத ஒரு சித்தரைக் கண்டு, அவருடைய ஆற்றலைச் சோதிக்க எண்ணி, தன் முன்னிருந்த கரும்பை அங்கிருந்த கல்லால் செய்த யானையிடம் கொடுத்து உண்ணச் செய்ய இயலுமோ எனக் கேட்டான்; அந்தச் சித்தர் உடனே அந்தக் கரும்பை உண்ணச் செய்ததோடு அவன் அணிந்திருந்த முத்து மாலையையும் பறித்து விழுங்கவும், உமிழவும் செய்து மறைந்தார்: அவர் சிவபெருமானே என பாண்டியன் தெரிந்து, திருவருளை வணங்கி வாழ்த்தினான்.

     15. காமனை எரித்தது: தேவர்கள் விரும்பிய வண்ணம் சிவபெருமான் மோன நிலையைக் கலைப்பதற்காக, காமன் சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப் பெருமான் ஒருசிறிது தம் நெற்றிக் கண்ணை விழிக்கவும், அக் கண்ணிலிருந்து வந்த அனலால் அவன் எரிந்து சாம்பல் ஆயினன்.

     16. காரைக்கால் அம்மையார்: காரைக்கால் அம்மையாரின் செயற்கருஞ் செயலைக் கண்டு அஞ்சி, அவர் கணவன் புறக்கணிக்கவே, அம்மையார் கணவனுக்கென எடுத்த எழில் உடல் தனக்கு வேண்டுவதில்லை எனத் தம் எழில் எல்லாம் உகுத்துப் பேய் வடிவங் கொண்டு, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள்தோறும் சென்று வழிபட்டு, இறுதியாகத் திருவாலங்காட்டில் இறைவன் திருநடனத்தைக் கண்டு, பேரானந்தம் உற்று, என்றும் அத் திருநடனத்தையே காண வேண்டுமென்ற ஆராத காதலுடன் திருவருளில் கலந்தார்.

    17. காலனை உதைத்தது: பதினாறு ஆண்டுகளே தம் வாழ்நாளின் எல்லையாகப் பெற்ற மார்க்கண்டேயர், சிவபெருமானை வழிபட்டு, தாம் காலனுக்கு அஞ்சவேண்டுவதில்லை என்ற வரத்தைப் பெற்றார். இவ் வரத்தை நோக்காது, முன் விதித்த வாழ் நாள் முடிவில், மார்க்கண்டேயர்மேல் பாசத்தை வீசிய எமனை, சிவபெருமான் உதைத்துச் தள்ளித் தம் அடியவர்க்கு நிலையான வாழ்வை அருளினார்.

    18. கொக்கிறகு சூடியது: முன் ஒரு காலத்தில் ஓர் அசுரன் மிகுந்த ஆற்றலும் வலியும் உடையவனாகிக் கொக்குருவங் கொண்டு, வானவர்களுக்குப் பேரிடர் செய்து, இந்திரன், நான்முகன் முதலியோர் வசிக்கும் இடங்களை எல்லாம் அழித்து வந்தான். வானவர்கள் வேண்டச் சிவபெருமான் அக்கொக்கைக் கொன்று, அதன் இறகை வெற்றிக்கு அறிகுறியாக அணிந்து கொண்டார்.

   
19. கொடுமரக் கிராதன்: வில் தாங்கிய வேடன் என்னும் பொருள்படும் இச் சொல் கண்ணப்பரைக் குறிக்கும். கண்ணப்பர் வேடர் குலத்தினர்; காளத்தி மலைக்கு அருகில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றிருந்தார்; அப்பொழுது தற்செயலாகக் காளத்திநாதர் திருவுருவை மலை உச்சியில் கண்டு, அவரிடம் ஈடுபாடு கொண்டார்; மெய்யன்பினால் வழிபட்டார்; தமக்கு உவப்பான வற்றையே இறைவனுக்கும் உவப்பாக எண்ணிப் படைத்தார். சிவபெருமான் கண்ணிலிருந்து குருதி வரக்கண்டு, தம் கண்ணைப் பெயர்த்துச் சிவபெருமான் கண்ணில் வைத்து மகிழ்ந்தார்; ஆறு நாட்களில் திருவருளுக்கு இலக்கானார்; அன்பின் எல்லையாகப் போற்றப் பெறுபவர்; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.



20. சகரர்: காசியப முனிவர் வழித் தோன்றியவர்கள்; சகரனுடைய பிள்ளைகள்; அறுபதினாயிரவர்; தமது தந்தையின் யாகக் குதிரை இந்திரனால் ஒளிக்கப் பெற்றது; அதனைத் தேடிக் கொண்டு வரப் பூமியைக் கல்லினார்கள்; கல்லும்போது, அங்குள்ள கபில முனிவர் சாபத்துக்குள்ளாகிச் சாம்பராயினர்; இவர்கள் நற்கதி அடையும் பொருட்டே கங்கை பகீரதனால் கொண்டு வரப் பெற்றது; இவர்களும் நற்கதியுற்றனர்; இவர்கள் கல்லிய இடமே சாகரம் (கடல்) எனப் பெற்றது. 

    21. சாக்கிய நாயனார்: இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவராக இருந்தும் பேரின்பப் பேற்றை அருளவல்லது சிவலிங்க வழிபாடே எனத் தேர்ந்து, தன் சமயத்துப் புறத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளாமலேயே சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். கல்லையே மலராகக் கொண்டு, ஒரு நாளும் தவறாமல் வழிபட்டு, சிவபெருமான் திருவருளில் கலந்தார். சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவர்.

     22. சேரனுக்குத் திருமுகம் கொடுத்தது: மக்கள் முன்னிலையில் பாடி மகிழ்விக்காது, தன் இசை வன்மை அனைத்தையும் ஆலவாய் அண்ணலின் திருமுன்னரேயே பாடிக்காட்டுவது என்ற கொள்கையையுடைய பாணர் குல அடியார் ஒருவர், வறுமையினால் வருந்துவது கண்ட ஆலவாய் அண்ணல், அவ் அடியாருக்குப் பொருள் வழங்குமாறு "மதிமலிபுரிசை" எனத் தொடங்கும் திருமுகச் செய்யுள் ஒன்று எழுதிப் பாணரிடம் கொடுத்தனுப்ப, அத் திருமுகத்தைக் கண்ட சேர மன்னன் பேரானந்தம் உற்று, பாணருக்குப் பெருநிதி வழங்கி வர விடுத்தான். 

    23. சோழனை மடுவில் வீட்டியது: பாண்டியன் ஒருவன் தன் பொருளை எல்லாம் தெய்வத் திருப்பணிகளுக்கே செலவிட்டு, தன் நாட்டைக் காக்கும் படைகளைப் பெருக்காதிருந்தான். இவனது படைவலி இன்மையை உணர்ந்த சோழன் ஒருவன் பாண்டி நாட்டையும் தன் நாடாகச் செய்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால் மதுரை மாநகர்மீது படை எடுத்து வந்தான். அப் போரில் சோழனும் பாண்டியனும் குதிரை மீதேறி நேருக்கு நேர் போர் செய்யும்பொழுது, பாண்டியன் குதிரைக்கு முன் ஒரு வேடன் குதிரைமீதேறி வந்து, சோழனது குதிரை முகத்தில் ஒரு வேற்படையை எறிந்தான். சோழன் வெகுண்டு, வேடனைக் குதிரையோடும் பிடிப்பதற்குத் தன் குதிரையைச் செலுத்தவே, வேடன் அஞ்சி ஓடுவான் போலப் புறங்கொடுத்து ஓடி, ஒரு நீர்நிலையில் தன் குதிரையோடும் இறங்கினான். தொடர்ந்து வந்த சோழனும் அந் நீர்நிலையில் தன் குதிரையோடு இறங்கினான். இறங்கிய சோழன் குதிரையோடு தானும் அம் மடுவிலேயே மடிந்தான். வேடனாக வந்த சிவபெருமான் காட்டில் மறைந்தருளினார்.

     24. தக்கன் வேள்வி: சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்; அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்; அக்கினியின் கையை வெட்டினார்; நாமகளின் மூக்கை அரிந்தார்; பிரமன் விழுந்தான்; தக்கன், எச்சன்,முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்; மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத்தலையை வைத்து அவனை உயிர்ப்பித்தருளினார்.   
25. தடாதகைப் பிராட்டியார் திருமணம்: தென் நாடு செய்த தவத்தால் உமாதேவியார் பாண்டியர் குலத்தில் பிறந்து, தடாதகை என்னும் பெயர் தாங்கி, கன்னி நாட்டு அரசியாகத் திகழ்ந்து, தன் வீரத்தால் உலகம் எல்லாம் வென்று, கயிலைக்குச் சென்று, சிவகணங்களை எல்லாம் வென்று, சிவபெருமானோடு நேரில் போருக்கெழுந்த சமயத்தில், தன் நிலைமையும் தலைவன் நிலைமையும் உணர்ந்து, கன்னி நாடு திரும்பி வந்து, சிவபெருமானை மணந்து, தன் ஆட்சியை அவரிடம் ஒப்புவித்தார். உக்கிரப்பெருவழுதி என்னும் பெயருடன் கூடிய முருகப் பெருமானைப் பிள்ளையாகப் பெற்றார். பின்னர் பாண்டி நாட்டு அரசுரிமையை மகனிடம் ஒப்புவித்து, பெருமானும் பிராட்டியும் திருவாலவாய்த் திருக்கோயிலுள் மறைந்தனர்.     

26. தயரதன் மகன்: திருமால் தயரதன் மகனாகத் தோன்றி, விசுவாமித்திரன் வேள்வியை முற்றுவித்து, கௌதமர் சாபத்தால் கல்லான அகலிகைக்கு விடுதலை அளித்து, மிதிலையில் வில் முறித்து, அம் மிதிலை மன்னன் மகளை மணந்து, பரசுராமன் வலியை அடக்கி, சிற்றன்னை விருப்பால் தானும் சீதையும் தம்பியுமாகக் காடு சென்று, குகன் நதியைக் கடத்துவிக்க அப்பாற் சென்று, வனத்தில் எதிர்ந்த கரன், மாரீசன், முதலிய அரக்கர் உயிர்களைப் போக்கி, அங்கு மாயத்தால் இராவணன் தன் மனைவியைக் கவர்ந்து செல்ல, தம்பியும் தானும் தேடிச் செல்லும் வழியில், சடாயுவுக்கு உத்தரக் கிரியைகள் செய்து, சூரிய புத்திரனாகிய சுக்கிரீவனோடு நட்புக் கொண்டு, ஏழு மராமரத்திற்கும், வாலிக்கும், கடலுக்கும், ஒவ்வோர் அம்பு தொடுத்து, கடலை அடைந்து, இலங்கை சென்று, இராவணனை அடியோடு வீழ்த்தி, மனைவியை மீட்டு, அயோத்தி வந்து, அரசு புரிந்திருந்து, பின் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார்.     

27. தருமிக்குப் பொற்கிழி அளித்தது: பாண்டியன் ஒருவன், தன் உள்ளக் கருத்தினை விளக்கி எழுதும் கவிக்குப் பெரும் பரிசு அளிப்பதாகச் சங்கப் புலவரிடம் கூறி, ஒரு பொன் முடிப்பைப் பரிசுப் பொருளாகச் சங்க மண்டபத்தில் வைத்தான்; அவன் உள்ளக்கருத்து எது என்பது தெரியாது புலவர்கள் எல்லோரும் மயங்கினார்கள். அப்பொழுது வறுமையால் வாடிய தருமி என்பானுக்கு 'கொங்கு தேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் ஒரு செய்யுளைக் கொடுத்து, அதன் வழி அவன் பரிசு பெற்று வறுமை நீங்குமாறு இறைவன் அருள் செய்தார். புலவரெல்லாம் ஒப்ப மகிழ்ந்து அச் செய்யுளே ஏற்புடைத்தெனக் கூறினார்கள். ஆனால் நக்கீரன் அச் செய்யுள் பொருட் குற்றமுடையதெனக் கூறி, சிவபெருமான் நெற்றிக்கண்ணுக்கும் அஞ்சாது சாதித்தான்.     

28. தாருகாவன முனிவர்களின் வேள்வி: தாருகாவனத்திலிருந்த முனிவர்களும் அவர்களுடைய பெண்டிரும் தெய்வ உணர்ச்சி வேண்டுவதில்லை என்றும், சில நெறிகளையும் கடமைகளையும் மேற்கொண்டு வாழ்வதே போதுமானதென்றும், வாழ்ந்து வந்தார்கள். தெய்வ உணர்ச்சியில்லாத நெறிமுறைகள் நிலையற்றன என்பதை அவர்கட்கு அறிவுறுத்த வேண்டி, சிவபெருமான் பிச்சைத் தேவர் கோலங்கொண்டு, அழகிய வடிவில் அவ்விடம் சென்று ஐயம் ஏற்றார். அவருடைய வடிவழகைக்கண்ட முனிவரின் பெண்டிர் தங்கள் நிலையினின்றும் கலங்கினர். அதுகண்ட முனிவர்கள் சிவபெருமானை எதிர்த்து, ஒரு தீய வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வியினின்றும் தோன்றிய புலி, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் சிவபெருமானைக் கொல்லுமாறு ஏவினர். அவ்வாறே அவை சென்று ஆற்றல் இல்லாதனவாகிச் சிவபெருமானுக்கு ஆடையாய், அணியாய், கருவியாய், ஆளாய் அடைக்கலம் புகுந்தனஅவ் வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ ஒரு திருக் கையில் அமர்ந்தது. முனிவர்களும் நல்லறிவு பெற்று, சிவபெருமானை வணங்கினார்கள்
 29. திருப்பாற்கடல் கடைந்தது: தேவர்களும் அசுரர்களும் மந்தரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைத் தாம்பாகவும் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள், மந்தரமலை நிலையாமல் இருந்தபடியால், திருமால் ஆமை உருக்கொண்டு, அதைத் தாங்கியும், ஒரு கையால் அசையாமல் அழுத்தியும், நிலைபெறச் செய்தார். கடையும்போது தோன்றிய கொடிய விஷத்தைக் கண்டு, தேவரெல்லாம் அஞ்சினார்கள். சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு, கண்டத்தில் இருத்தி, நீலகண்டனாகித் தேவர்கள் எல்லாம் மடியாமல் காப்பாற்றினார். பின்னர், திருப்பாற்கடலிலிருந்து, திருமகள், இந்திராணி, சந்திரன், உச்சைச்சிரவம் என்னும் குதிரை, ஐராவதம், கௌத்துவமணி, ஐந்தருக்கள், காமதேனு, தன்வந்திரி, வாருணி, தேவமாதர், அமுதகலசம், பிறந்தன. திருமகளையும் கௌத்துவமணியையும் திருமாலும், காமதேனுவை முனிவர்களும், வாருணியை அசுரரும், மற்றவற்றை இந்திரனும் எடுத்துக் கொண்டார்கள். திருமால் மாயத்தால் அசுரர்களை ஏமாற்றி, தேவர்களுக்கே அமுதத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களை இறப்பில்லாத அமரர்களாக்கினார்.

30. திருமால் பாம்பின் வாயைக் கீண்டது: கண்ணன், கஞ்சன் ஏவலால், தன்னை விழுங்குவதற்காக மலைப்பாம்பு வடிவத்துடன் பிருந்தாவனத்துக்கு வந்த பகாசுரன் தம்பியாகிய அகாசுரனை வாயைக் கிழித்துக் கொன்றான்.

  31. திருமாலுக்கு ஆழி அருளியது: சலந்தரனைத் தடிந்த ஆழிப்படையைப் பெறுவதற்காக, திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கொண்டு வழிபட்டு வந்தார். ஒரு நாள் ஒரு மலர் குறையவே, குறைந்த மலருக்குத் தம் கண்ணையே ஈடு செய்து இடந்து சாத்தினார்; அவருடைய வழிபாட்டின் சிறப்பைக் கண்டு, சிவபெருமான் ஆழிப்படையை அருளினார்.   33. நக்கீரன் பனுவல் கேட்டது: சிவபெருமான் நெற்றிக் கண்ணின் வெப்பத்தைத் தாங்கவியலாது, நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் விழுந்து, தான் சிவபெருமானிடம் மாறுகொண்டு வாதாடியது தவறு என உணர்ந்து, சிவபெருமான்மீது பாடிய செய்யுட்களை, மற்றச் சங்கப் புலவர்களால் அறிந்து, சிவபெருமான் பொற்றாமரைக் குளத்தில் நக்கீரனுக்குக் காட்சி கொடுத்து, அவன் பாடிய திருமுறைச் செய்யுட்களையும் கேட்டு, தம் திருக்கைகளால், கீரனைக் கரையேற்றி அருள் செய்தார்.

   34. நரி பரியாக்கியது: சிவபெருமான் நரியைப் பரியாக்க வல்லவர் என்பதும், அவ்வாறே செய்கின்றார் என்பதும், இறைவனுடைய செயற்கருஞ் செயலை மக்களுக்குத் தெரிவிக்கும் கருத்துடன் வேதகாலம் முதல் நம் நாட்டில் வழங்கி வருகின்றன. இங்கு, அச் செய்தி மாணிக்கவாசகருக்காகச் சிவபெருமான் நரியைப் பரியாக்கினார் என்று உருவகச் சுவைபடக் கதையாக வழங்குவதாயிற்று.

  35. நால்வர்க்கு அருளியது: மெய்ப் பொருள் காண விரும்பிய சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும், சிவபெருமான் தென்முகக் கடவுளாகக் கல்லால நிழலில் அமர்ந்து, சரியை, கிரியை, யோகம், என்னும் முதல் மூன்று பகுதிகளையும் உபதேசம் செய்து, நான்காவதாகிய ஞானத்தை, இருந்தபடி இருந்து, மோனமுத்திரையினால் அருளிச் செய்தார்.

   36. பகீரதன்: கபில முனிவரின் சாபத்தால் நீறாகிக் கிடந்த சகரர்கள் நற்கதிபெற வேண்டி, வானுலகத்திலிருந்து கங்கையைத் தன்னுடைய சொல்லுதற்கரிய தவ முயற்சியால், நிலவுலகிற்குக் கொண்டு வந்து, மடிந்தார் சாம்பரைத் தூய்மை ஆக்கி, அவர்கள் வீடுபெறுமாறு செய்தவன். இவன் சகரர் மரபில் தோன்றியவன்.

  37. பசுக்காவலர்: அருக சமயத்தைச் சார்ந்தவரான கருநடரின் எழுச்சியால் மதுரை முற்றுகை செய்யப் பெற்றது; அதனால் இறைவன் வழிபாடுகள் தடையுற்றன; அக் காலத்தில் தாம் வழக்கமாகச் செய்து வந்த சந்தனக் காப்புப் பணியைத் தம் முழங்கையையே சந்தனக் கட்டையாக வைத்து, அரைத்துத் தம் தொண்டினைச் செய்து வந்தார். ஆருகதர் ஆதிக்கம் ஒழிந்தபின், ஆலவாய் அண்ணல் அருளால், மணிமுடி கொள்ளாது சடைமுடி கொண்டு, மணிக்கலன் அணியாது உருத்திராக்கம் அணிந்து, நறுங்கலவை பூசாது திருநீறு அணிந்து, பாண்டி நாட்டை ஆண்டு வந்தார்; இவரே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய 'மும்மையால் உலகாண்ட மூர்த்தி' என்னும் பெரியார்.

  38. பதஞ்சலி: மதுரையில் இறைவனது திருமணம் காணச் சென்ற பதஞ்சலி முனிவர், இறைவனது தில்லையம்பலத் திருக்கூத்தைக் கண்டு வணங்கியே உண்ணும் நியமம் உடையவராகையால், திருமண விருந்தில் உண்ணாது விடைபெற்றார். சிவபெருமான் அவருக்காக வேண்டித் தில்லையில் ஆடும் திருக்கூத்தை வெள்ளியம்பலத்தில் ஆடித் திருவருள் செய்தார். இறைவன் திருநடக் காட்சியில் என்றும் திளைத்து இன்புறும் இயல்பினராய வியாக்கிரபாதர் என்னும் முனிவரையும் இவருடன் இணைத்துப் பதஞ்சலி வியாக்கிரபாதர் என்று வழங்குவது மரபு.

  39. பன்றிக் குட்டியைப் படைத் தலைவராக்கியது: தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவனிடம் குறும்பு செய்த பன்னிரண்டு இளைஞர்கள் அம் முனிவனது சுடுமொழியால், காட்டில் பன்றிக் குட்டிகளாகப் பிறந்தார்கள். தாய்ப்பன்றி அம்பு பட்டு இறந்தது. இந்தக் குட்டிகள் தவித்தன. சிவபெருமான் அவைகளுக்கு இரங்கி, தாம் பன்றி உருவில் வந்து, பால் கொடுத்துக் காப்பாற்றினார். இறைவன் திருவருளுக்கு இலக்காகிய இந்த ஏனக் குருளைகள் நல்லுணர்வும், தொல்லறிவும் வரப்பெற்று, பிற்காலத்தில், பாண்டியன் படைத் தலைவராயின.

  40. பன்றியும் பறவையும்: ஒரு காலத்தில் நான்முகன் தானே பெரியவன் என்று செருக்கடைந்து, திருமாலிடம் கூற, திருமால் தானே பெரியவன் என்று கூற, இருவர்க்கும் போர் நிகழ்ந்தது. அப்பொழுது ஒளிவடிவமான பெரிய தோற்றம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது. இருவரும் தம் போரை நிறுத்திக்கொண்டு தம் முன் தோன்றிய ஒளிப்பிழம்பு இன்னதென ஆராய வேண்டி, திருமால் பன்றி உருவங்கொண்டு அடியின் முடிவாய எல்லை நோக்கியும், நான்முகன் அன்னத்தின் உருக்கொண்டு முடிநோக்கியும், புறப்பட்டார்கள். பல ஊழிகள் முயன்றும் காண முடியாதவர்களாய்க் களைத்து, முன் நின்ற தோற்றம் சிவபெருமானே என்பதை உணர்ந்து, திருஐந்தெழுத்தை முறையாகப் பல காலம் ஓதினர். இறைவன் அந்த அனற்பிழம்பினின்றும் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்து மறைந்தான்.

   41. பாண்டவர் தூது: பாண்டவர்கள், துரியோதனனால் மதிக்கப் பெற்ற சகுனியின் சூழ்ச்சியால் சூதாடி, வளப்பமுள்ள தங்கள் குருநாட்டைத் தோற்று, காட்டில் தங்கியிருந்து, பின்னர், அதனைப் பெற வேண்டிக் கண்ணனைத் துரியோதனன் பால் தூது விடுத்தனர். அதனால், திருமாலுடைய அவதாரமாகிய கண்ணனுக்குப் 'பாண்டவர் தூதன்' என்ற பெயராயிற்று.

 42. பாண்டியன் மேகங்களைச் சிறையிலிட்டது: இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட பகைமையினால், மேகங்கட்குத் தலைவனான இந்திரன் அவை பாண்டிய நாட்டில் மழை பொழியாவண்ணம் கட்டளையிட்டான். சேர, சோழ நாடுகள் மழை பெய்து செழிப்புற்றோங்க, பாண்டியநாடு மழையின்றி வற்கடம் (பஞ்சம்) மிகுவதாயிற்று. ஒரு நாள் பாண்டியன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது பொதிய மலையில், புட்கலாவர்த்தம், சங்கரித்தம், துரோணம், காளமுகி, ஆகிய மேகங்கள் நான்கையும் விலங்கிட்டு, மதுரைக்குக் கொண்டு வந்து சிறை செய்தான்.

   43. புலி முலை புல்வாய்க்கு அருளியது: ஒரு கடப்பங் காட்டில் தனித்து வாழ்ந்து வந்த பெண்மான் ஒன்று தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்து, நீர் பருகும் போது, வேடன் அம்பால் மாண்டது. தாயை இழந்த மான்கன்றுக்குச் சிவபெருமான் அருளால் அங்கிருந்த ஒரு பெண்புலி பால் கொடுத்து வளர்த்தது.

 44. பொற்கைப் பாண்டியன்: பாண்டிய மன்னன் ஒருவன் ஓரிரவு நகர் சோதனை செய்யும்பொழுது, ஓர் அந்தணப் பெண் தனியாக வாழும் இல்லில் ஆண் பிள்ளைக் குரல் கேட்பதறிந்து, ஐயுற்றுக் கதவைத் தட்டினான். கங்கைக்கு நீராடச் சென்றிருந்த அந்தணன், அப்பொழுதுதான் திரும்பி வந்து மனைவியோடு பேசிக் கொண்டிருந்தான். தட்டியது கேட்டு அந்தணன் ஐயுற, இவ்வாறு அந்தணனுக்கு ஐயுறவு நேர்ந்தது தன் அறியாமையே என்று, அக் குறைக்கு முறை செய்ய வேண்டி, கதவு தட்டிய தன் கையைத் தானே வெட்டி எறிந்தான். வெட்டுப்பட்ட அவனது கைக்கு மாறாக, அந்த இடத்தில், இறைவன் அருளால், பொன்னிறக் கையொன்று மீண்டும் வளர்ந்து தோன்றி, அவனது செங்கோலின் சிறப்பை வெளிப்படுத்தி நின்றது. அதுமுதலாக உலகம் அவனைப் பொற்கைப் பாண்டியன் எனப் புகழலாயிற்று.

  45. மண் சுமந்தது: வையை நதியில் வெள்ளம் பெருகி, மதுரையை அடுத்து வந்தது. அரசன் ஆணையால் குடிமக்கள் எல்லாரும் கரையைப் பங்கிட்டு, அணையிட்டார்கள், வந்தி என்னும் கிழவிக்கு ஆள் இல்லாமையால், அவள் கூலிக்கு ஆள் தேடினாள். அப்பொழுது அவள் விற்கும் பிட்டையே கூலியாக ஏற்றுக் கொண்டு, கரையிடுவதாக ஒரு கூலி ஆள் கிடைத்தான்; ஆனால் மற்றையார் பங்கெல்லாம் அடைபடவும், வந்தியின் பங்கு மட்டும் அடைபடாதிருந்தது. அவள் அனுப்பிய ஆள் ஆடுவதும் பாடுவதும் பிட்டு உண்பதும் ஆக இருக்கின்றானே அல்லாமல், வேலை செய்யவில்லை என்பதைக் கேட்ட பாண்டிய மன்னன், அந்தக் கூலி ஆளை வெகுண்டு, முதுகில் அடித்தான். அந்த அடி எல்லா உலகிலும் எல்லார் மேலும் பட்டது; வெள்ளமும் வடிந்தது; கூலிஆளும் மறைந்தான். இது இறைவன் திருவிளையாடல் என்பதை யாவரும் உணர்ந்தனர்.

   46. மத்தியந்தணன்: வியாக்கிரபாத முனிவரின் தந்தை. இவருடைய கட்டளையால் தில்லையில் வந்து தவம் புரிந்து, வியாக்கிரபாதர் நற்பேறு பெற்றார். இவரது வரலாற்றைக் கோயிற்புராணத்தில் வியாக்கிரபாதச் சருக்கத்திலே விரிவாகக் காணலாம்.

     47. மதுரை ஆலவாய் ஆனமை: பிரளயத்தின் பின்னர் மதுரை மாநகரை நிர்மாணிக்கக் கருதிய பாண்டியன் ஒருவன், புது நகரின் எல்லையை அளவிட்டுக் காட்டவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டான். இறைவன் ஒரு சித்தரது வடிவில் தோன்றி, தான் அணிந்திருந்த பாம்புகளில் ஒன்றை எல்லையைக் குறிக்கும்படி பணிந்தார். இவர் கட்டளைப்படி பாம்பும் நகரைச் சுற்றிலும் வளைந்து கிடந்து எல்லையைக் குறித்துக் காட்டியது. பாம்பு எல்லைக் குறித்தமையால் மதுரைக்கு ஆலவாய் என்று ஒரு பெயரும் பின்னர் வழங்குவதாயிற்று.

     48. மரக்கால் ஆடியது: உலகத்துக்குத் துன்பம் இழைக்க வேண்டிப் பாம்பு தேள் முதலிய நச்சுப் பூச்சிகளின் உருவெடுத்துப் பெருகிய அவுணர்களை இறைவி மரத்தாற் செய்த கால்களின் மேல் ஏறி நின்று கூத்தாடி உழக்கி அழித்தாள். இவ்வாறு ஆடிய கூத்திற்கு 'மரக்கால் கூத்து' என்பது பெயர்.

     49. மாணிக்கம் விற்றது: வீரபாண்டிய மன்னன் வேட்டைக்குச் சென்ற காலத்து, புலியால் தாக்குண்டு இறந்தான். அவன் மகனாகிய இளவரசனுக்கு உரிய முடி, கலன்கள், முதலியவற்றைத் தாயாதிகள் கவர்ந்து, வேறு தேசம் சென்றனர். இதனால் இளவரசனுக்கு முடி சூட்ட வேறு கிரீடம் செய்ய வேண்டியதாயிற்று. அமைச்சர்கள் பெருங் கவலையுடன் அரசிளங் குமரனையும் உடன்கொண்டு, ஆலவாய்ப் பெருமான் கோயிலுக்குச் செல்ல, கோபுர வாயிலில் இறைவனே வணிகனாய் வந்து, மன்னனுக்கு வேண்டும் மாணிக்கம் கொண்டு வந்து விற்று, 'இந்த மணிகளால் முடிசெய்து சூட்டி, இவ்வரசனை அபிடேக பாண்டியன் என வழங்குக' என்று அருளினார். வணிகனுக்கு உரிய பொருளைக் கொடுக்க முற்படும்பொழுது வணிகனாய் வந்த பெருமான் மறைந்தருளினார். அரசிளங்குமரனும் அமைச்சர் முதலியோரும் பெருமானுடைய கருணையை வியந்து போற்றினர்.

     50. மாமனாக வந்தது: ஒரு வணிகன் தன் மருமகனைப் பிள்ளையாகக் கொண்டு, தன் செல்வம் முழுவதையும் அவனுக்கே கொடுத்து, வடநாடு சென்று மறைந்தான். அப் பொருளைக் கவர வேண்டி அவன் தாயத்தார் வழக்குத் தொடுத்தனர். துணை ஒன்றும் இல்லாத அம் மருமகன் ஆலவாய் அண்ணலிடம் முறையிட, அப் பெருமானே அவனுடைய மாமனாக எழுந்தருளி, வழக்கைத் தீர்த்துப் பெற்ற பொருளை நிலைநிறுத்தினார்.

     51. மாமியாடக் கடல் அழைத்தது: தடாதகைப் பிராட்டியார், தன் தாய் காஞ்சனமாலை கடலாட விழைந்ததை நிறைவேற்ற எண்ணி, ஆலவாய் அண்ணல்பால் தெரிவித்தாள். இறைவனும் அம்மை விருப்பத்திற்கு இணங்கிக் கடலை மதுரையிலே வரவழைத்தருளினார்.

          53. மாறி ஆடியது: பல கலைகளிலும் வல்லவனாக இருந்த பாண்டியன் ஒருவன் நாட்டியக் கலையிலும் வல்லவனாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பயின்றபோது, பயிற்சியால் உடலுக்குளதாம் அயர்ச்சியைத் தானே நேரில் கண்டு, எப்பொழுதும் கால்கள் மாறாது ஒரே வண்ணமாக ஆடுகின்ற வெள்ளி அம்பலக்கூத்தன் மேல் பரிவு கொண்டு, கால்மாறி ஆட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, வெள்ளியம்பலக்கூத்தன் அவ்வாறே செய்தருளினான்.

     54. முப்புரம் எரித்தது: வானத்தில் பறக்கும் வலிமை பெற்ற பொன், வெள்ளி இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, மூன்று அரக்கர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். தேவர்கள் எல்லாம் தேராகவும் படைக்கலமாகவும் மாறி, சிவபெருமானைத் தேரில் ஏற்றிக்கொண்டு, அவ்வசுரர்களோடு போருக்குப் புறப்பட்டனர். சிவபெருமான், தேவர்களுடைய துணையை வேண்டாமலே, நகைத்து அம் முப்புரங்களையும் எரித்தார்.59. வலை வீசியது: சிவபெருமானது சுடு மொழியால், உமைஅம்மையார், பாண்டி நாட்டில் ஒரு வலைஞன் மகளாகவும், தென் கடலில் நந்திதேவர் ஒரு சுறா மீனாகவும் பிறந்தனர். வலைஞர் குலத்து இளைஞன் உருவில் சிவபெருமான் எழுந்தருளி, சுறாமீனாகத் திரிந்த நந்திதேவரைப் பிடித்தும், அவர் சுமந்திருந்த ஆகமங்களை வாங்கியும், வலைஞர் மகளாக வளர்ந்த உமையம்மையாரை மணந்தும், திருவருள் செய்தார்.

    60. வழுதியாகி முழுதுலகு அளித்தது: சிவபெருமான் தடாதகைப் பிராட்டியாரை மணந்து, பாண்டி நாட்டில் அரசு செலுத்தியதால், 'வழுதியாகி முழுதுலகளித்தது' என வழங்கப் பெறுகிறது. இவர் வழுதி ஆகி ஆட்சி செய்யும்பொழுது மக்களுக்கும் அரசர்களுக்கும் தெய்வ வழிபாட்டின் இன்றியமையாமையைத் தெளிவுறுத்த வேண்டித் தம் நகரமாகிய மதுரை மாநகரின் நடுவூரில் ஒரு திருக்கோயில் அமைத்துத் தெய்வ வழிபாடு செய்து வந்தார்.

    61. வள்ளுவமாலையின் முதற்கவி பாடியது: திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் அரிய நூலை மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் முதலில் புறக்கணித்து, பின்னர், தெய்வநிகழ்ச்சி ஒன்றால் அதன் பெருமையை உணர்ந்து பாராட்டினர் என்றும், அவ்வாறு பாராட்டும் பொழுது சிவபெருமானே புலவராக எழுந்தருளி முதற்கவி பாடினார் என்றும், அதுவே திருவள்ளுவமாலையின் முதற் செய்யுளாக அமைந்துளது என்றும் கூறுகிற செவி வழக்கான செய்தியைக் கொண்டு எழுந்தது இக் கதை.


  62. வளையல் விற்றது: தாருகாவன முனிவர்களுடைய பெண்டிர் பழவினையால் மதுரையில் வணிகர் புதல்வியர்களாகப் பிறந்தார்கள். அவர்களை ஆட்கொள்வதற்காக, சிவபெருமான் வளையல் விற்கும் வணிகனது கோலத்தில், மதுரைத் தெரு வீதிகளில் நடந்து, வளையல் விற்றார்.


   63. வாள் எடுத்தது: வாள் வீச்சில் வல்லவனான சித்தன் என்பான், தன் ஆசிரியர் மனைவிபால் தகாதது எண்ணித் தனித்துக் கூற, அவ்வம்மையார், மனம் நடுங்கி, ஆலவாய் அண்ணலை நினைந்தார்; அப் பெருமான் ஆசிரியர் வடிவில் வந்து, அத் தீயோனைப் பலவாறு வாளால் மலைந்து சிதைத்தார்.

   64. விறகு விற்றது: பாண்டியன் செய்த சிறப்பால் இறுமாப்புற்று, மதுரையில் தங்கியிருந்த ஒரு வடபுலப் பாணனோடு, ஆலவாய் அண்ணலின் அடியவனான பாணன் ஒருவன் இசைவாது செய்ய நாள் குறிப்பிட்டிருந்தபோது, வட புலப்பாணனின் தான் தாழ்ந்தவன் என எண்ணங் கொண்டிருந்த தன் பக்தனாகிய மதுரைப் பாணனுக்கு ஆலவாய் அண்ணல் இரங்கி, இசைபயிலத் தகுதியற்றவன் என மதுரைப் பாணனால் புறக்கணிக்கப்பட்டதால் விறகு விற்கும் தொழிலை மேற்கொண்டு ஒரு முதியவன் போல் வடபுலப் பாணனின் இருப்பிடம் வந்து சாதாரிப் பண்ணைப் பாட, அதன் இனிமை, உயர்வு இவற்றைக் கண்டு அஞ்சி, அந்த வடபுலப் பாணன் மதுரையை விட்டு அகன்றான்.

   65. வீரனை அருளியது: தக்கன் சிவபெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்ய முயன்றதற்காக உமையம்மை உள்ளம் வருந்திச் சினங்கொண்டு, அவ் வேள்வியை அழிக்க எண்ணியபோது, சிவபெருமானது நெற்றிக்கண்ணினின்றும் வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்வியை அழித்தார்.

    66. வையை நதியை அழைத்தது: தடாதகைப் பிராட்டியார் திருமணவிழாவிற்குச் சிவபெருமானொடு வந்த பூத கணங்களில் ஒருவனாகிய குண்டோதரன் மலை மலையாகக் குவிந்துள்ள சோற்றை ஒருங்கே உண்டு, மிக்க நீர் வேட்கைகொண்டு, மதுரையில் உள்ள நீரெல்லாவற்றையும் பருகிப் போதாது வருந்த, சிவபெருமான், அவன் நீர்வேட்கை தணியுமாறு ஒரு பேராற்றை மதுரைக்கு வரச் செய்தார். அங்ஙனம் வந்த ஆறே வையை எனப் பெயர்பெற்றது.
 இது போன்ற சிவனாரின் தீவண்ணரின் வீரதீரச்செயல்களை அறிந்து அனுதினமும் இவறை கூறி, பாடி புகழ்ந்து பேசி அன்னார் அருள் பெற்று பிறவாமை என்ற வீடுபேறு அடைவோம்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஒம்

தொகுப்பு வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; கல்லாடம் தமிழ் விருட்சுவல் நூலகம்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
சுவாமி சுகபோதானந்தா

அட, அதே பழைய பெண்!


"டென்ஷனை எப்படிக் குறைப்பது ?" என்ற உங்கள் பதைபதைப்பான கேள்விக்குப் பதில் சொல்லுமுன் டென்ஷன் எப்படி உண்டாகிறது என்று புரிந்துகொள்ள வேண்டாமா ?


இந்தக் காட்சியைப் பாருங்கள் -


அவனுக்கு ஆபீஸ் பத்து மணிக்கு. நன்கு தூங்கிவிட்டு அவன் கண்விழித்தபோது காலை மணி எட்டு  இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆபீஸில் இருக்க வேண்டும்.

அவசர அவசரமாக பாத்ரூமுக்கு ஓடுகிறான். கதவு சாத்தியிருக்கிறது. உள்ளே அவன் மகன்.  உள்ளே உட்கார்ந்துகிட்டே தூங்குறியா.. . வெளியே வாடா. .. நான் ஆபீஸ் போகணும்  என்று அதட்டி மகனை வெளியே வரச் சொல்லிவிட்டு இவன் பாத்ரூமுக்குள் போகிறான்.

அங்கே டூத் பிரஷ் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. டென்ஷன் சூடு பிடிக்கிறது. ஒரு வழியாகச் சமாளித்து பாத்ரூமிலிருந்து வெளியே வருகிறான்.

டிபன் சாப்பிடக்கூட நேரமில்லை. கையில் கிடைத்த சட்டை பாண்ட்டை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு அவன் ஆபீஸ் கிளம்பும் சமயம், போற வழியில் குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டுப் போயிடுங்க என்று மனைவி  பல்லைக் கடித்துக் கொள்கிறான்.

குழந்தைகளை கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு ஆபீஸுக்குப் போய் ஸீட்டில் உட்காருகிறான்.

நேற்று நீங்கள் தயார் செய்த ஃபைலை எடுத்துக்கொண்டு வாங்க என்று மானேஜர் சொல்ல, அவன் கைகள் பாண்ட் பாக்கெட்டுக்குப் போகிறது. ஆபீஸ் அலமாரி சாவியை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டது தெரிகிறது. உடல் உதற ஆரம்பிக்கிறது.

அலறியடித்துக் கொண்டு இவன் ஆபீஸ் வந்தும் என்ன புண்ணியம்? இப்போது சொல்லுங்கள், இவனுடைய டென்ஷனுக்கு என்ன காரணம் ? சோம்பேறித்தனம், நேரத்தைச் சரியாக திட்டமிடாதது ஆகியவைதானே?

டென்ஷனுக்கு அடுத்த மூல காரணம்.. . Presence of mind இல்லாதது.



நமக்கு ஆண்டவன் கண்களையும் காதுகளையும் கொடுத்திருந்து பல நேரங்களில் நாம் அதைப் பயன்படுத்தாமல் குருடர்களாகவும் செவிடர்களாகவும்தான் வாழ்க்கையைக் கழிக்கிறோம்.  இதற்கெல்லாம் மேலே 'அதுதான் எனக்குத் தெரியுமே' என்ற மனப்போக்கு வாழ்க்கையில் பல பொருளாதார வசதிகளைப் பெற்றுவிட்டவர்களுக்குக்கூட இந்தக் குறை உண்டு. உதாரணத்துக்கு...

அவன் ஒரு பெரிய கூடைப்பந்து சாம்பியன். பின்னாளில் வளர்ந்து ஒரு பெரிய அந்தஸ்துக்கு வருகிறான். அவன் படித்த கல்லூரியின் நிர்வாகிகள் அவனைக் கல்லூரிக்கு அழைத்துப் பாராட்டுவிழா நடத்துகிறார்கள். விழா முடிந்ததும்  அவன் படித்த வகுப்பறையையும் தங்கியிருந்த கல்லூரி விடுதியையும் இப்போது பார்க்க விரும்புகிறான். கல்லூரி நிர்வாகிகள் அவனைப் பழைய வகுப்பறைக்கு அழைத்து போகிறார்கள்.


வகுப்பறையைப் பார்த்த அவன், அதே பழைய வகுப்பறை என்கிறான். ஹாஸ்டலுக்கு அவனை அழைத்துப் போகிறார்கள். அதே பழைய ஹாஸ்டல் என்கிறான். அதில் அவன் தங்கியிருந்த அறைக்கு அழைத்துப் போகிறார்கள். ..

வழியில் சிகரெட் வாடை அடிக்கிறது. அவன் அதே சிகரெட் வாடை என்கிறான்.

கல்லூரி நிர்வாகிகளும் அவனும் அறையை நோக்கி வருவதைப் பார்த்துவிடும் மாணவன் ஒருவன், தலைதெறிக்க அந்த அறைக்கு ஓடுகிறான். அங்கே அந்த மாணவனின் ரூம்மேட் ஒரு சக மாணவியோடு குலாவிக் கொண்டிருக்கிறான்.

நிர்வாகிகள் வருவது பற்றி அந்த மாணவன் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க.. . அந்த மாணவியை அறையிலிருந்தஒரு அலமாரியின் உள்ளே ஒளித்து நிற்க வைக்கிறான்.

நிர்வாகிகளுடன் உள்ளே நுழையும் விளையாட்டு வீரன், அதே பழைய அறை என்கிறான். நிர்வாகிகள் அலமாரியைக் காட்டுகிறார்கள். அவன் அதே பழைய அலமாரி என்கிறான். நிர்வாகிகள் அலமாரியைத் திறக்கிறார்கள். உள்ளே ஒளிந்து கொண்டிருந்த பெண் வெளியே குதிக்கிறாள்.


விளையாட்டு வீரன், பழக்க தோஷத்தில் 'அதே பழைய பெண்' என்று சொல்ல ஒளித்துவைத்த மாணவன் அலறுகிறான்.



இந்தக் கதையில் இருக்கும் நகைச்சுவையை எடுத்துவிட்டு கருத்தை மட்டும் பாருங்கள்.. . பல சமயம் நம் கண் முன்னே தெரியும் காட்சிகளைக்கூட நாம் சரியாகப் பார்ப்பதில்லை என்பதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது.

ஒருவர் டென்ஷனாக இருக்கிறார் என்றால், டென்ஷனுக்குக் காரணம் - அந்தச் சூழ்நிலை என்பதைவிட டென்ஷனாகும் நபர்தான் என்று அடித்துச் சொல்லலாம்.

எல்லா வேலைகளையும் தனி ஒரு நபராலேயே செய்துவிட முடியாது. வேலைகளைப் பகிர்ந்தளித்தே தீரவேண்டும்.
யாருக்கும் எந்த வேலையும் செய்யத் தெரியாது. நானேதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வேன்  என்று ஆரம்பித்தால் டென்ஷன்தான். சரி, டென்ஷனே இல்லாமல் இருப்பதுதான் எப்படி ? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

டென்ஷன் என்பது சத்தத்தைப் போல.  சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் தட்டவேண்டும்.
டென்ஷன் இல்லாமல் இருப்பது என்பது அமைதியைப் போல.  நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது.

ஏனென்றால், அது ஏற்கெனவே இருக்கிறது அதாவது, டென்ஷனை உருவாக்கத்தான் நீங்கள் தேவை. டென்ஷன் இல்லாத நிலையை உருவாக்க.. . உங்கள் முயற்சி ஏதும் தேவையில்லை!


சுஃபி இலக்கியத்தில் உள்ள இந்தக் கதையைப் பாருங்கள் -


சுஃபி மதகுரு ஒருவரிடம் விவசாயி ஒருவன் வந்து, "என் மனைவி நாள் முழுவதும் ஆடு, மாடு, கோழி என்று வளர்க்கிறாள். அதனால் வீடு முழுவதும் மூச்சுத் திணறும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. இதிலிருந்து தப்பிக்கநீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்" என்று கேட்கிறான்.

மதகுரு, "உன் வீட்டில்தான் ஜன்னல் இருக்கிறதே.. . அதையாவது திறந்துவிடு.. . நாற்றம் வெளியே போகட்டும்"  என்று யோசனை சொன்னார்.

விவசாயி உடனே, "ஜன்னலைத் திறப்பதா ? சரிதான்.. . அப்புறம் என் புறாக்கள் பறந்துவிடுமே"  என்றானாம்.


டென்ஷனைப் பொறுத்தவரை நாமும்கூடப் பல சமயம் இந்த விவசாயியைப் போலத்தான்.  புறா என்கிற அதிக முக்கியத்துவம் அற்ற ஒரு விஷயத்தை எண்ணிக்கொண்டே அறிவு ஜன்னலைத் திறக்காமல் இருந்துவிடுகிறோம். அதன் விளைவு - டென்ஷன்.. . மூச்சுத் திணறுகிறது.

ஆகவே, நம் அறிவு ஜன்னலை உடனே அகலமாகத் திறந்து வைப்போம்.


மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

நவ கைலாயம் / சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர்

நவ கைலாயம் / சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர்



இதுவும் நவ கையால தலங்களில் ஒன்பதாவது தலமாகும், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கடைசி தலம்.

இதுவும் அகத்திய அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 9 வதாக ஒதுங்கிய இடமே ேசேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் ஆலயம்.


மூலவர் ; கைலாசநாதர்
அம்மாள் ;அழகிய பொன்னம்மை  
அமைவிடம் ; சேர்ந்தபூமங்கலம்  தூத்துக்குடி மாவட்டம்  தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
பிராத்தனையும் நேர்த்திக்கடனும் ;இது நவக்கிரங்களின் அமைப்பில்சுக்கிரன் தலமாகும். மூலவர் சுக்கிரன் அம்சத்துடன் காட்சி தருகிறார், எனவே சுக்கரன் பரிகாரம் , தோசம் உள்ளவர்களின் வழிபாடு செய்ய உகந்த தலம், சுக்கிரன் வழிபாட்டு முறையில் , வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சை பொடி, தயிர் சாதம், நெய்வேத்தியம் படைத்து தாமரை மலரால் அபிசேகம் செய்யப்படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஓரையில் வழிபாடு செய்தல் மிகவும் ஐஸ்வரியம் என நம்பப்படுகிறது.

சிறப்பு ; இவ்வாலயத்தில் இரண்டு வாசல்கள் உள்ளது. இங்கு பணத்திற்கு அதிபதியான குபேரன் தனது இரு தேவியருடன் கைலாச நாதரை வழிபட்டது முன் மண்டபத்தில் யானையின் மேல் அமர்ந்தவாறு  காணப்படுகிறது. குபேரனே இங்கு வழிபாடு செய்து பொன்னும் பொருளும் பெற்றதால், இங்கு வழிபடுவோர்
பொன் பொருள் வேண்டி வழிபாடு செய்ய, கடன் தொல்லை தீரும், இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் , 
முக்கிய சிறப்பு சுக்கிரன் கிரக வழிபாட்டிற்கு மிக உகந்த தலம்

நவக் கையால தலங்களும் நவக்கிரங்களின் தலங்களும்  உங்களின் தெளிவுக்காக 


திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய நம ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

நவக்கையால தலங்களின் வரிசை இத்துடன் முடிவுற்றது. நன்றி