செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
சுவாமி சுகபோதானந்தா

அட, அதே பழைய பெண்!


"டென்ஷனை எப்படிக் குறைப்பது ?" என்ற உங்கள் பதைபதைப்பான கேள்விக்குப் பதில் சொல்லுமுன் டென்ஷன் எப்படி உண்டாகிறது என்று புரிந்துகொள்ள வேண்டாமா ?


இந்தக் காட்சியைப் பாருங்கள் -


அவனுக்கு ஆபீஸ் பத்து மணிக்கு. நன்கு தூங்கிவிட்டு அவன் கண்விழித்தபோது காலை மணி எட்டு  இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆபீஸில் இருக்க வேண்டும்.

அவசர அவசரமாக பாத்ரூமுக்கு ஓடுகிறான். கதவு சாத்தியிருக்கிறது. உள்ளே அவன் மகன்.  உள்ளே உட்கார்ந்துகிட்டே தூங்குறியா.. . வெளியே வாடா. .. நான் ஆபீஸ் போகணும்  என்று அதட்டி மகனை வெளியே வரச் சொல்லிவிட்டு இவன் பாத்ரூமுக்குள் போகிறான்.

அங்கே டூத் பிரஷ் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. டென்ஷன் சூடு பிடிக்கிறது. ஒரு வழியாகச் சமாளித்து பாத்ரூமிலிருந்து வெளியே வருகிறான்.

டிபன் சாப்பிடக்கூட நேரமில்லை. கையில் கிடைத்த சட்டை பாண்ட்டை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு அவன் ஆபீஸ் கிளம்பும் சமயம், போற வழியில் குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டுப் போயிடுங்க என்று மனைவி  பல்லைக் கடித்துக் கொள்கிறான்.

குழந்தைகளை கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு ஆபீஸுக்குப் போய் ஸீட்டில் உட்காருகிறான்.

நேற்று நீங்கள் தயார் செய்த ஃபைலை எடுத்துக்கொண்டு வாங்க என்று மானேஜர் சொல்ல, அவன் கைகள் பாண்ட் பாக்கெட்டுக்குப் போகிறது. ஆபீஸ் அலமாரி சாவியை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டது தெரிகிறது. உடல் உதற ஆரம்பிக்கிறது.

அலறியடித்துக் கொண்டு இவன் ஆபீஸ் வந்தும் என்ன புண்ணியம்? இப்போது சொல்லுங்கள், இவனுடைய டென்ஷனுக்கு என்ன காரணம் ? சோம்பேறித்தனம், நேரத்தைச் சரியாக திட்டமிடாதது ஆகியவைதானே?

டென்ஷனுக்கு அடுத்த மூல காரணம்.. . Presence of mind இல்லாதது.



நமக்கு ஆண்டவன் கண்களையும் காதுகளையும் கொடுத்திருந்து பல நேரங்களில் நாம் அதைப் பயன்படுத்தாமல் குருடர்களாகவும் செவிடர்களாகவும்தான் வாழ்க்கையைக் கழிக்கிறோம்.  இதற்கெல்லாம் மேலே 'அதுதான் எனக்குத் தெரியுமே' என்ற மனப்போக்கு வாழ்க்கையில் பல பொருளாதார வசதிகளைப் பெற்றுவிட்டவர்களுக்குக்கூட இந்தக் குறை உண்டு. உதாரணத்துக்கு...

அவன் ஒரு பெரிய கூடைப்பந்து சாம்பியன். பின்னாளில் வளர்ந்து ஒரு பெரிய அந்தஸ்துக்கு வருகிறான். அவன் படித்த கல்லூரியின் நிர்வாகிகள் அவனைக் கல்லூரிக்கு அழைத்துப் பாராட்டுவிழா நடத்துகிறார்கள். விழா முடிந்ததும்  அவன் படித்த வகுப்பறையையும் தங்கியிருந்த கல்லூரி விடுதியையும் இப்போது பார்க்க விரும்புகிறான். கல்லூரி நிர்வாகிகள் அவனைப் பழைய வகுப்பறைக்கு அழைத்து போகிறார்கள்.


வகுப்பறையைப் பார்த்த அவன், அதே பழைய வகுப்பறை என்கிறான். ஹாஸ்டலுக்கு அவனை அழைத்துப் போகிறார்கள். அதே பழைய ஹாஸ்டல் என்கிறான். அதில் அவன் தங்கியிருந்த அறைக்கு அழைத்துப் போகிறார்கள். ..

வழியில் சிகரெட் வாடை அடிக்கிறது. அவன் அதே சிகரெட் வாடை என்கிறான்.

கல்லூரி நிர்வாகிகளும் அவனும் அறையை நோக்கி வருவதைப் பார்த்துவிடும் மாணவன் ஒருவன், தலைதெறிக்க அந்த அறைக்கு ஓடுகிறான். அங்கே அந்த மாணவனின் ரூம்மேட் ஒரு சக மாணவியோடு குலாவிக் கொண்டிருக்கிறான்.

நிர்வாகிகள் வருவது பற்றி அந்த மாணவன் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க.. . அந்த மாணவியை அறையிலிருந்தஒரு அலமாரியின் உள்ளே ஒளித்து நிற்க வைக்கிறான்.

நிர்வாகிகளுடன் உள்ளே நுழையும் விளையாட்டு வீரன், அதே பழைய அறை என்கிறான். நிர்வாகிகள் அலமாரியைக் காட்டுகிறார்கள். அவன் அதே பழைய அலமாரி என்கிறான். நிர்வாகிகள் அலமாரியைத் திறக்கிறார்கள். உள்ளே ஒளிந்து கொண்டிருந்த பெண் வெளியே குதிக்கிறாள்.


விளையாட்டு வீரன், பழக்க தோஷத்தில் 'அதே பழைய பெண்' என்று சொல்ல ஒளித்துவைத்த மாணவன் அலறுகிறான்.



இந்தக் கதையில் இருக்கும் நகைச்சுவையை எடுத்துவிட்டு கருத்தை மட்டும் பாருங்கள்.. . பல சமயம் நம் கண் முன்னே தெரியும் காட்சிகளைக்கூட நாம் சரியாகப் பார்ப்பதில்லை என்பதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது.

ஒருவர் டென்ஷனாக இருக்கிறார் என்றால், டென்ஷனுக்குக் காரணம் - அந்தச் சூழ்நிலை என்பதைவிட டென்ஷனாகும் நபர்தான் என்று அடித்துச் சொல்லலாம்.

எல்லா வேலைகளையும் தனி ஒரு நபராலேயே செய்துவிட முடியாது. வேலைகளைப் பகிர்ந்தளித்தே தீரவேண்டும்.
யாருக்கும் எந்த வேலையும் செய்யத் தெரியாது. நானேதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வேன்  என்று ஆரம்பித்தால் டென்ஷன்தான். சரி, டென்ஷனே இல்லாமல் இருப்பதுதான் எப்படி ? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

டென்ஷன் என்பது சத்தத்தைப் போல.  சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் தட்டவேண்டும்.
டென்ஷன் இல்லாமல் இருப்பது என்பது அமைதியைப் போல.  நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது.

ஏனென்றால், அது ஏற்கெனவே இருக்கிறது அதாவது, டென்ஷனை உருவாக்கத்தான் நீங்கள் தேவை. டென்ஷன் இல்லாத நிலையை உருவாக்க.. . உங்கள் முயற்சி ஏதும் தேவையில்லை!


சுஃபி இலக்கியத்தில் உள்ள இந்தக் கதையைப் பாருங்கள் -


சுஃபி மதகுரு ஒருவரிடம் விவசாயி ஒருவன் வந்து, "என் மனைவி நாள் முழுவதும் ஆடு, மாடு, கோழி என்று வளர்க்கிறாள். அதனால் வீடு முழுவதும் மூச்சுத் திணறும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. இதிலிருந்து தப்பிக்கநீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்" என்று கேட்கிறான்.

மதகுரு, "உன் வீட்டில்தான் ஜன்னல் இருக்கிறதே.. . அதையாவது திறந்துவிடு.. . நாற்றம் வெளியே போகட்டும்"  என்று யோசனை சொன்னார்.

விவசாயி உடனே, "ஜன்னலைத் திறப்பதா ? சரிதான்.. . அப்புறம் என் புறாக்கள் பறந்துவிடுமே"  என்றானாம்.


டென்ஷனைப் பொறுத்தவரை நாமும்கூடப் பல சமயம் இந்த விவசாயியைப் போலத்தான்.  புறா என்கிற அதிக முக்கியத்துவம் அற்ற ஒரு விஷயத்தை எண்ணிக்கொண்டே அறிவு ஜன்னலைத் திறக்காமல் இருந்துவிடுகிறோம். அதன் விளைவு - டென்ஷன்.. . மூச்சுத் திணறுகிறது.

ஆகவே, நம் அறிவு ஜன்னலை உடனே அகலமாகத் திறந்து வைப்போம்.


மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக