வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சாதனைக் கோர் பாதை


சாதனைக் கோர் பாதை


உங்களுக்குள் ஆத்மா என்ற மாபெரும் சக்தி இருக்கிறது என்பதை உணருங்கள்,
சுவாமி விவேகானந்தர் கூறுவதைக் கவனியுங்கள், " உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால் அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வர முடியுமானால் , நீயும் என்னைப் போல ஆக முடியும் "
" நீங்கள்செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள்அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள்,அழியாத திருவருளைப் பெற்றவரகள் "

விவேகானந்தரின் கூற்றுப்படி உங்கள் சக்தியை வெளிக் கொண்டு வர உங்கள் வாழ்வில் சிரித்து, மகிழ்ந்து வாழ்ந்திடுஙகள் உங்கள் ஆத்மா உங்களின் சக்தியை வெளிப்படுத்தும்.
நாம் ஒரு பழக்கடைக்கு செல்கிறோம், அங்கு நல்ல முதிர்ந்த பழங்களும் இருக்கும், சேதமடைந்த பழங்களும் இருக்கும், நமக்கு பிடித்த இனிமையான பழங்களைதான் வாங்குகிறோம், அழுகிய பழங்களை நாம் வாங்குவதில்லை, அதே போலத்தான் வாழ்க்கை என்னும் கடையில் பல பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். 
உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, நல்லெண்ணம், உண்மை, பரிவு உதவி என்று பல நல்ல பழங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதே கடையில் அழுகிய பழங்களை எடுத்து குறைந்த விலைக்கு தனியே வைத்திருக்கிறார், அந்த பழங்களுக்கு பெயரிடுவோமானால், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், ஏமாற்று, பொய், காமம், வஞ்சம்,என்றெல்லாம் அமையும், இந்த அழுகிய பழங்களை வகை வகையாக அந்தக் கடையில் பல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம், என்பது நம் கையில் தான் இருக்கிறது.நாம் உற்சாகமாக இருக்கலாம், பிறரையும் இந்த உலகையுமே உற்சாகமூட்டலாம். மாறாக நாம் பிறரையும் துயர எண்ணங்களில் மூழ்கடித்து நம் சோகத்தின் சுமைதாங்கியாக பிறரையும் மாற்றி அனுப்பி வைக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் தான் செயல்பட ஆசைப்படுகிறார்கள். வலிமையுடன்தான வாழத்தான் பிரியப்படுகிறார்கள். ஆனால்பல சமயம் சந்தேகமும் பயமும் அவரகளை அறியாமல் உள்ளே புக, அவர்களது சிந்தனையின் தடமே மாறிப் போய் விடுகிறது.

கோபமாக இருப்பதை கோபத்தில் இருப்பவன் உணர்வதில்லை.துக்கமாக இருப்பதை துக்கத்தில் இருப்பவன் அறிவதில்லை. காரணம் அவன் துக்கத்திலேயே மூழ்கி விடுகிறான்.
வஞ்சகமும் பொறாமையும் கொண்டவன் அந்த எண்ணங்கள் அந்தஉணர்வுகள் தன்னை ஆட்கொண்டிருப்பதாக உணர்வதில்லை. அதுவாகவே மாறி விடுகிறான்.
துக்கத்தில் இருக்கும் போது " நான் துக்கமாக இருக்கிறேன் " என்ற விசயத்தை புரிந்து கொண்டோ மானால் நாம் மாறுபட்ட மனிதனாக அடுத்த கணமே மாற இயலும்.
அடடா நான் துக்கத்தில் இருக்கிறேனா? அதுதான் என்னை முடக்கி இருக்கிறதா? அதனால் தான் மூஞ்சியை உர் என்று வைத்துக்கொண்டு சோகமாக நிற்கிறேனா? என்று யோசித்தோமானால், நமது துக்கத்தை ஒரு மூன்றாவது மனிதன்போல பார்த்து பரிசீலித்து அதிலிருந்து மீள முடியும்.

வாழ்க்கையின் லட்சியம்

வாழ்க்கை என்னும் கடையில உற்சாகத்தையும் நம்பிக்கையையும்தான் வாங்க வேண்டும், அதற்காகத்தான் வந்திருக்கிறோம், அதுதான் இந்த பிறவியின் தாத்பரியம், மாறாக உற்சாமிழந்து துயரத்தில் இருந்தோமானால், இந்த உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கும். 
உற்சாகத்தை வாங்குவது மேல், உற்சாகத்தை அனுபவிப்பது மேலானது, நம்பிக்கையை வாங்குவது நல்லது, நம்பிக்கையுடன் செயல்படுவது மேல், என்று வாழ்க்கையின் தாத்பரியத்தை - வாழ்வின் லட்சியத்தை நாம் தெளிவா புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம்ஒன்றை ஒன்று நம்பி சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவியாக மகிழ்வுடன் வாழத்தான் படைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி உதவியாக இருந்து மகிழ்வுடன் வாழ்ந்துவிடடு அல்லவா போகவேண்டும்? ஏன் உற்சாகத்தை தேர்ந்தெடுக்க மறுக்கிறோம்? சிறு சிறு விஷயங்களுக் கெல்லாம் கலங்கிறோம்.ஏன் நம்பிக்கையுடன் செயல்பட மறுக்கிறோம்? சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்படுகிறோம்? 
இதனை மறந்து பிராணிகளிடம் நட்புறவு கொண்டாடுவோம், மனிதர்களிடம் புன்னகையுடன் பேசுவேன், உதவுவேன், ஆகா என்ன அற்புத உலகம் என்று நீங்களே கொஞ்சம் சொல்லிப்பாருங்கள் . சொர்க்கம் வேறல்ல, நாம் உருவாக்குவது தான் சொர்க்கம், நமது மனநிலைதான் சொர்க்கத்தை உருவாக்கிறது. அல்லது நரகத்திற்கு கொண்டு வருகிறது. எது வேண்டும் என்று தீர்மானிப்பதில் என்ன கஷ்டம்?

நம்பிக்கை
அதேபோல் தான் இந்த நம்பிக்கை கொண்ட மனம். என்னால் எதுவும் முடியும். எனக்குள் ஒரு மாபெரும் சக்தி குடிகொண்டிருக்கிறது. ஆண்டவன் என் அருகில் இருக்கிறார்,நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்கிற எண்ணங்கள் உள்ளத்தில் ஆழமாக வேர்வடும்போது அது நம்பிக்கையாக வலிமை தருகிறது. வலிமை பெற்ற எண்ணம் நம்மை செயல் புரியத் தூண்டுகிறது. எண்ணம் நம் செயலால் சாதனை ஆக மாறுகிறது. நம்பிக்கைதான் வாழ்வின் ஆணி வேர். வாழ்வில் முக்கியமான இரண்டு விஷயங்கள் எவை எவை என்று ஆராய்ந்தார்கள் சில மனவியல் அறிஞர்கள். அது உற்சாகம் - நம்பிக்கை என்ற இரண்டு விஷயங்கள் தான் வாழ்வின் ஜீவாதாரம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். எனவே நல்ல வழிகாட்டி உற்சாகமும் நம்பிகையும் தான். 

நன்றி எஸ் உதயமூர்த்தியின் சாதனைக்கோர் பாதை
தொகுப்பு . வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக