செவ்வாய், 21 ஏப்ரல், 2015

சொற்றுணை வேதியன்


https://devarathirumurai.wordpress.com/2015/04/20/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ சொற்றுணை வேதியன் by devarathirumurai சொற்றுணை வேதியன் பதிக எண்: 4.11 கடலில் அருளியது பண்: காந்தாரபஞ்சமம் பின்னணி தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர். திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் விட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.. இதனை சேக்கிழார் குறிக்கும் பெரியபுராண பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து துதிப்பார் சொற்றுணை வேதியன் என்னும் தூமொழி நற்றமிழ் மாலையா நமச்சிவாய என்று அற்றமுன் காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார். இந்தப் பதிகத்தினை நமச்சிவாயப் பத்து என்று அப்பர் பெருமானே அழைப்பதை நாம் பதிகத்தின் கடைப் பாடலில் காணலாம். மூவர் பெருமானார்கள் நமச்சிவாய மந்திரத்தின் பெருமையை உணர்த்தும் விதமாக நமச்சிவாயப் பதிகங்கள் அருளியுள்ளனர். காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் ஞானசம்பந்தர் அருளிய பதிகமும், மற்று பற்று எனக்கின்றி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும், இந்த வரிசையில் அமைந்த பதிகங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான், தனது திருவாசகத்தின் முதல் பாடலான சிவபுராணத்தை, நமச்சிவாய வாழ்க என்ற வாழ்த்துடன் ஆரம்பிக்கின்றார். பாடல் 1 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே விளக்கம்:: புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். எனவே சொல் என்றால் வேதங்கள் என்றும் பொருள் கூறுவர். வேதங்களை முதலில் விரித்துக் கூறியவன் சிவபிரான் என்று பல தேவாரப் பதிகங்களில் கூறப்படுகின்றது. அவ்வாறு விரித்துக் கூறியதன் மூலம் வேதங்களுக்குத் துணையாக நின்ற வேதியன் என்ற பொருளில் சொற்றுணை வேதியன் என்று அழைத்ததாகவும் கருதலாம். . உலகத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படும் வேதங்களின் நடுவில் வருவது நமச்சிவாய என்ற திருமந்திரம். எண்ணிக்கையில் வேதங்கள் நான்கு என்று வகுக்கப்பட்டு இருந்தாலும், சாம வேதம் என்பது ரிக் வேதத்தின் மந்திரங்களை இசை வடிவில் கூறுவதாகும் என்பதால், மொத்த வேதங்கள் மூன்று என்று நாம் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் மூன்று வேதங்களில் நடுவாக வருவது யஜுர் வேதமாகும். ஏழு காண்டங்களைக் கொண்ட யஜுர் வேதத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. இதன் நடுப்பகுதியில் உள்ள ஆறாவது சூக்தத்தில் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தின் நடுவில் நமச்சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரம் வருகின்றது. வாழ்க்கை நெறிகளை நமக்கு சொல்லிக் கொடுத்து நமக்குத் துணையாக இருக்கும் வேதத்தின் நடுவில் சிவபிரானின் திருநாமம் வருவதால், சொற்றுணை வேதியன் என்று கூறுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். வேதங்களின் நடுவில் வைத்து போற்றப்படும் மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்பதால், சொற்றுணை வேதியன் என்று இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம் மாயை என்ற மும்மலங்களின் தன்மையால் இருளில் மூழ்கியிருக்கும் நமக்கு ஒளியாகத் தோன்றி வழிகாட்டும், வானவர்களுக்கும் தலைவனாக விளங்கும் சிவபிரானை சோதி வானவன் என்று அப்பர்பிரான் குறிக்கின்றார். பொழிப்புரை: புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும். பாடல் 2 பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே விளக்கம்: திருநாவுக்கரசர் சமண மதத்தை நிந்தனை செய்தார் என்று சமணகுருமார்கள் கொடுத்த புகார் மீது திருநாவுக்கரசரை அரசவைக்கு அழைத்த மன்னான் அவரை ஏதும் விசாரிக்காமல் அவருக்கு பல தண்டனைகள் அளித்தான். இதனால் நடுநிலையிலிருந்து தவறி ஒரு பட்சமாக தண்டனை அளித்த பல்லவ மன்னனின் புகழுக்கு களங்கம் ஏற்படுகின்றது. தான் பெற்ற தண்டனைக்கு காரணமாகிய அரசனின் இந்த தன்மையை நினைவு கூறும் அப்பர் பிரான், இந்தச் செய்தியை இங்கே குறிப்பிட்டாலும் அரசன் மீது கோபமாக ஏதும் சொல்லவில்லை. மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், சமணர்களையும், சிவபிரானை வழிபடாதவர்களையும் இழித்துப் பேசும் அப்பர் பிரான் இந்த நமச்சிவாயப் பதிகத்தில் எவரையும் இழித்துக் கூறாதது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பொதுவாக பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில் பிரமனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே. நடுநிலை தவறாமல் இருப்பது அரசரக்கு அழகு என்று பல இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது. செங்கோல் வளைந்தது என்றால் அரசன் நடுநிலை தவறிவிட்டான் என்று பொருள். கோணாத கோல் என்று வளையாத செங்கோலினை உணர்த்தும் அபிராமி பட்டர், அபிராமி பதிகத்தின் ஒரு பாடலில், அபிராமி அம்மையிடம் வேண்டும் பொருட்களில் ஒன்றாக, கோணாத கோலினை, குறிப்பிடுகின்றார். அபிராமி அம்மையின் பாதங்களைத் தொழும் தொண்டர்களுக்கு கிடைக்கும் பேறுகள் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளில் ஒன்றாக கோணாத கோல் என்று குறிப்பிடப்படுவதால் எவ்வளவு உயர்வாக நடுநிலை தவறாத அரசன் மதிக்கப்படுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கன்றாத வளமை என்றால் வற்றாத செழுமை என்று பொருள். துய்த்தல் என்றால் அனுபவித்தல் என்று பொருள். தான் தூங்கிக் கொண்டு இருந்தாலும் உலகில் நடப்பவை அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர் திருமால் என்பதால், அவரது தூக்கம் அறிதுயில் என்று கூறப்படுகின்றது. கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே பொழிப்புரை: பூக்களுக்கு அணிகலனாகத் திகழ்வது தாமரை மலர். பசுக்களுக்கு ஆபரணம் போல் திகழ்வது சிவபிரான் மகிழ்ந்து நீராடும் பொருட்களை அளிக்கும் தன்மை, அரசர்களுக்கு அணிகலனகத் திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்து கொள்ளும் தன்மை. நாக்குகளுக்கு அரிய ஆபரணம் போல் திகழ்வது நமச்சிவாய மந்திரமாகும். பாடல் 3 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே விளக்கம்: தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும் பயிலுதல் என்று கூறுவார்கள். உலகினில் பிறந்த நாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டு இருப்பதால் பயின்ற பாவம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தில் முளைத்துள்ள ஒரு செடியை பிடுங்கவேண்டும் என்றால், நாம் அதன் அருகில் சென்று அதன் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டால் தான் அதனை நம்மால் வேருடன் எடுக்கமுடியும். நமது பாவங்களையும் வேருடன் களைவதற்காக நமச்சிவாய மந்திரம், நமது அருகில் வந்து அந்த பாவங்களை களைகின்றது என்று இங்கே அப்பர் பிரான் கூறுகினார். பொழிப்புரை: ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம். பாடல் 4 இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம் அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே விளக்கம்: தருமசேனர் என்ற பெயருடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்கள் சார்பில் புத்த மதத்தவருடன் வாதங்கள் செய்து வெற்றி கொண்ட தருமசேனரின் இழப்பு சமணர்களை வெகுவாக பாதித்தது. பல கொடுமைகளை அவருக்கு இழைத்து பயமூட்டினால் அவர் மறுபடியும் தங்களது மதத்தில் இணைந்து விடுவார் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. ஆனால் சைவ மதத்தைச் சார்ந்த நிலையில் மிகவும் பிடிப்புடன் இருந்த நாவுக்கரசர், சிவபிரானைத் தவிர வேறு எவரையும் தான் பட்ட கஷ்டங்களுக்காக வேண்டுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். அந்த கொள்கைப் பிடிப்பு இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. . அடுக்கல்=மலை. அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடல்கள் பெரும்பாலும் இராவணின் கயிலை நிகழ்ச்சியும் அப்போது சிவபிரான் அரக்கனுக்கு அருளிய கருணைச் செயலும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் பதிகத்தின் கடைப்பாடல் அவ்வாறு அமையவில்லை. அந்த நேரத்தில் சிவபிரான் அருள் செய்யாதிருந்தால் கயிலை மலையின் கீழே நெருக்குண்ட இராவணின் உடல் கூழாக மாறியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த நிலையில் இராவணன் சிவபிரானின் நாமத்தை புகழ்ந்து கூறும் சாமவேதத்தினை இசைத்து பாடவே இறைவனின் கருணையைப் பெற்றுய்ந்தான். மலையின் கீழ் அமுக்குண்டு இருந்த இராவணின் நிலை அப்பர் பிரானுக்கு நினைவுக்கு வரவே, அத்தகைய இடறினின்று அவனை நமச்சிவாய மந்திரம் காத்தது போல் தனது நடுக்கத்தையும் கெடுத்து காப்பாற்றும் என்று இங்கே உணர்த்துகின்றார். பொழிப்புரை: எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும். பாடல் 5 வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம் அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே விளக்கம்: விரதிகள்=விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்கள். வெந்தநீறு=சாம்பல், இங்கே விபூதியினைக் குறிக்கும். நங்கள்=நாம் அனைவர் பொழிப்புரை: பல வகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்று இருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது நமச்சிவாய மந்திரம் ஆகும். பாடல் 6 சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம் குலமிலன் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே விளக்கம்: சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன். சிவபிரானின் நாமத்தைச் சொல்பவர் எத்தன்மையராக இருந்தாலும், கொடுந்தொழில் புரிபவராக இருப்பினும், ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பதிகங்கள் இங்கே நினைவு கூறத் தக்கவை. கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரை செய்வார் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சிவாயவே பொழிப்புரை: அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் . பாடல் 7 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே விளக்கம்: வீடினார்=உலகப் பற்றினை விட்டவர்கள்; விழுமிய=சிறந்த சமண சமயம் சார்ந்து இருந்த நேரத்தில் தானுற்ற சூலை நோயினைத் தீர்க்கும் வழி தெரியாமல் திகைத்த போது, சிவபிரானின் அடியாராகிய தனது தமக்கையாரைப் பற்றி, அவரைப் பின்தொடர்ந்து திருவதிகை திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு, சூலை நோய் தீர்ந்து நன்மை அடைந்த நிலை இங்கே குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. அவனது அருளால் சிவபிரானின் உருவத்தைத் தான் தெரிந்து கொண்ட பின்னர் அவனது திருநாமத்தை இடைவிடாது பயின்று, வாயார நமச்சிவாய என்ற நாமத்தைச் சொல்லி திருநீறு அணிந்துகொண்டதாக, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் அப்பர் பிரான் கூறுகின்றார். கருவாய்க் கிடந்தது உன் கழலே நினையும் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால் திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே பொழிப்புரை: வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது. பாடல் 8 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே விளக்கம்: இல்=இல்லம். நமது உடல் உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபிரான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது. பொழிப்புரை: நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும். பாடல் 9 முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன் தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன்னெறியாவது நமச்சிவாயவே விளக்கம்: இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் தனது துன்பங்களிலிருந்து விடுவிக்குமாறு வேறு எவரையும் வேண்டேன் என்று அப்பர் பிரான் கூறியதற்கு காரணம் இந்தப் பாடலில் சொல்லப் பட்டுள்ளது. அனைத்து தேவர்களுக்கும் முதல்வன் சிவபிரான் என்பது தான் அந்த காரணம். உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் நெறி வீடுபேறு ஒன்று தான். வீடுபேறு அடைந்த உயிர் உலகின் இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபிரானுடன் கலந்து என்றும் அழியாத இன்பத்தைப் பெறுகின்றது. பொழிப்புரை: முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும், பாடல் 10 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே விளக்கம்: மாப்பிணை=மான் கன்று. சிவபிரான் தனது இடது பாகத்தில் மான் கன்றினை ஏந்தி காட்சி அளிக்கின்றார். தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருக்கும் சிவபிரானைப் பற்றி குறிப்பிடும் போது அப்பர் பிரானுக்கு சிவபிரான் இடது கையில் ஏந்தி இருக்கும் மான்கன்று நினைவுக்கு வந்தது போலும். அழகான உமையம்மையை நினைக்கும் எவருக்கு இளமானின் அழகான தோற்றம் நினைவுக்கு வருவது இயல்பு தானே. சிவபிரானின் திருவடிகளை அனைவரும் பூக்கள் தூவித் தொழுவதால், அவரது திருவடிகள் எப்போதும் பூக்களுடன் இணைந்த தன்மையில் காணப்படுகின்றன. நாவுடன் பிணைந்து தழுவிய பதிகம் என்று குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகம் பிணைந்து, எப்போதும் பிரியாது, இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று இங்கே அறிவுறுத்துகின்றார். கடைக்காப்பு என்ற வகையில் தனது பதிகங்களுக்கு அப்பர் பிரான், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பலன்களை குறிப்பதில்லை. ஆனால் இந்த நமச்சிவாயப் பதிகத்தில், பலன் கூறப்பட்டுள்ளது. இதே போல், இராமேச்சுரம் மீது அருளிய பாசமும் கழிக்க கில்லா என்று தொடங்கும் பதிகத்திலும் அப்பர் பிரான் அந்த பதிகத்தை பாடுவதால் ஏற்படும் பலனை குறிப்பிட்டுள்ளார். அப்பர் பிரானுக்கு சமணர்கள் கொடுத்த துன்பம் நீங்கப்பெற்று அவர் திருப்பாதிரிப் புலியூர் அருகே கரை ஏறியதே, இந்த பதிகம் அளிக்கும் பலனுக்குச் சான்றாகத் திகழ்கின்றது. பொழிப்புரை: மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது. முடிவுரை துன்பங்கள் நம்மைத் தாக்கும் போது நம்முடன் இருந்து காக்கும் திருவைந்தெழுத்தினை நினைத்து நாவுக்கரசர் நிரம்பிய அன்புடன் இந்த பதிகத்தைப் பாடியவுடன், கடலில் நாவுக்கரசரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கல் மிதந்தது என்றும் அவரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்தன என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் நல்வினை தீவினை என்றும் இருவினைப் பாசங்கள் ஆணவமலம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால் பிறவிப் பெருங்கடலில் விழும் உயிர்களைக் கரையேற்றும் ஐந்தெழுத்து மந்திரம் நாவுக்கரசரை கடலில் ஆழாது மிதக்கச் செய்வது ஒரு வியப்பான செயல் அல்ல என்றும் சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் கூறுகின்றார். இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வரு பாவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ நமது உயிர் இருவினைப் பாசங்களால் (அறம், பாவம்) ஆணவ மலத்துடன் பிணைக்கப் பட்டு உடலுடன் கூடிய நிலையில் இருப்பது திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகரால் உணர்த்தப்படுகின்றது. மறைந்திட மூடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை தனது அலைக் கரங்களால் நாவுக்கரசுப் பெருமானை கரையில் கொண்டு சேர்ப்பதற்கு வருணன் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். நாவுக்கரசர் கரையேறிய இடம், கரையேறிய குப்பம் (கடலூருக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் நீலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் அப்பர் பிரான், சமணர்களின் வஞ்சனையால் தான் கல்லோடு கட்டப்பட்டு கடலில் தள்ளப்படும் நிலைக்கு ஆளானது என்று குறிப்பிடுகின்றார். கல்லினோடு என்னை பூட்டி அமண் கையர் ஒல்லை நீர் புக என் வாக்கினால் நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியினைக் கடந்து கொள்ளம்புதூர் சென்று இறைவனை தரிசிக்க ஞானசம்பந்தர் நினைத்தார். வெள்ளத்தை மீறி தன்னை கரை சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை இறைவன் முன் வைத்த போது அருளிய பதிகம் கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம். அதே போன்று வெள்ளம் பெருகியோடும் காவிரியின் எதிர்க் கரையில் உள்ள திருவையாற்று பெருமானை தரிசிக்க சுந்தரர் திருவுள்ளம் கொண்டார். வெள்ளம் வடிந்து தனக்கு வழிவிட வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பம் வைத்த பாடல் பரவும் பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் பதிகம். இந்த இரண்டு பதிகங்களும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகம் போல் காந்தார பஞ்சமம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். கடலைகளின் இரைச்சலையும், நதியில் காணப்பட்ட வெள்ளப்பெருக்கின் ஓசையையும் மீறி தங்களது பாடல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பாடப்படும் காந்தார பஞ்சமம் பண், மூவர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகின்றது. வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக