புதன், 29 ஏப்ரல், 2015

தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் - சிவ வாக்கியர்


தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் - சிவ வாக்கியர் இறைவனைப் பற்றி அறியும் ஞானமே பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது. பெளதீக, சூக்கும, மனோ தத்துவங்களை உருவாக்கியவர்கள் , பிரம்ம ஞானம் பெற்ற சித்தர்கள். உடலில் இருக்கும் ஞானேந்திரியங்களை சரியான முறையில் வசப்படுத்தினால் உயர்ந்தஜீவன்களாக ஆக முடியும். மனிதனின் அறிவுக்கு எட்டாத ரகசியம் எதுவும் இல்லை. காலச் சக்கரம் சுழலும் போது அந்த ரகசியங்கள் சில காலம் மறைந்து விடுகின்றன. மனிதர்களின் நிலையைப் புரிய வைப்பதற்காக சித்தர்கள் தோன்றினார்ககள். அந்த சித்தர்கள் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். உடலையும் மனதையும் வசப்படுத்தினால் உடலே கோவில் என்பதை உணர முடியும் என்று கூறய சித்தர்தான் சிவவாக்கியர், கருவில் இருக்கும் குழந்தை உலகம் என்ற பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைக்கும் போது எழுப்பும் முதல் ஒலி அம்மா என்ற குரலே. ஆனால் சிவ சிவா என்ற குரல் எழுப்பி குழந்தை பிறந்தது என்றால் ஆச்சரிய படுவோம் அல்லவா?. அப்படி பிறந்த குழந்தை க்கு சிவ நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் வகையில் சிவ வாக்கியர் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்த சிவ வாக்கியர் முக்திக்கு விடை தேடி தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு காசியில் ஒரு சித்தரை பார்த்தார். அந்த சித்தரை செருப்பு தைக்கும் தொழிலாளியாக மட்டுமே மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால் சிவவாக்கியர் அவர்களின் கண்களுக்கு உலகத்தை அறிந்த ஞானிபோல் தென்பட்டார். அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த சித்தரின் மனதில் உபதேசம் கற்க போகும் மாணவன் கிடைத்து விட்டான் என்று தோன்றியது. எவரிடமும் இல்லாத புரிந்து கொள்ளும் சக்தி சிவவாக்கியருக்கு இருப்பதாக அவரது உள் உணர்வு கூறியது. சிவ வாக்கியரிடம் அவர் பெயரை கேட்காமலேயே " சிவவாக்கியரே இந்த காசை, என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்துவிட்டு, இந்த சுரைக்காயின் கசப்புத் தன்மையை கழுவிட்டு வா" என்றார் சித்தர. சிவவாக்கியருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மறுப்பு சொல்லாமல் பேய் சுரக்காயையும் காசையும் வாங்கிக் கொண்டு கங்கை நதிக்கு சென்றார். காசை கங்கை நதியில் போடுவதற்காக தண்ணீர் அருகே கொண்டு சென்றார். நதியிலிருந்து ஒரு கை வெளியே வந்து காசை பெற்றுக் கொண்டுவிட்டது. வியப்பு மேலிட, பேய்ச் சுரக்காயை கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் வந்தார், மீண்டும் சிவவாக்கியரைச் சோதிக்க நினைத்த சித்தர், " சிவவாக்கியரே, இந்த தோல் பையில் உள்ள கங்கை தண்ணீரிடம் நீ கொடுத்த காசை கேட்டு வாங்கிக் கொடு" என்றார். குருவுக்கு அடிபணியும் சீடனைப்போல எந்த வித சலனமும் இல்லாமல் " கங்கை நீரே, என் ஆசான் கொடுத்த காசைக் கொடு" என்றார். அந்த தோல்பையிலிருந்து ஒரு கை நீண்டது. அந்த கையிலிருந்து காசை பெற்று சித்தரிடம் கொடுத்தார் சிவவாக்கியர். காசை பெற்றுக் கொண்ட சித்தர் " உன்னிடம் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது. இனி நான் உனக்கு உபதேசம் செய்கிறேன், என்று கூறி உபதேசம் செய்தார். சில காலம் அவரிடம் சீடராக இருந்தார் சிவவாக்கியர். ஐம்பத்தொரு வயதான நிலையில் சிவவாக்கியருக்கு இல்லற ஈடுபாடு மனத்துக்குள் தோன்றயது. இதையறிந்த சித்தர், " சிவவாக்கியரே சிறிது காலம் இல்லற சுகத்தில் ஈடுபட்டு அதன்பின் முக்தி நிலையை அடைவாய்" என்று கூறினார். மனதில் இருந்த எண்ணத்தை எப்படி அறிந்தார் என்ற கேள்விக் குறியோடு சித்தரை நோக்கினார் சிவவாக்கியர், சித்தர் அவரது கையில் மணலையும், பேய் சுரக்காயையும் கொடுத்து " இந்த இரண்டையும் எந்த பெண் சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை மணந்து கொள்" என்று கூறி விடையளித்தார் சித்தர். அவைகளை பெற்றுக் கொண்ட சிவவாக்கியர் உபதேசங்களை செய்து கொண்டே நடந்தார், கூட்டங்களில் புதிர்போடுவது போல் " இந்த மணலையும், பேய் சுரைக்காயையும் சமைத்து உணவாக பரிமாற முடியுமா? என்று கேப்பார், பெண்கள் திகைத்தனர், யாராலும் முடியும் என்று கூற முடியவில்லை, ஒரு கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது " மணலையும் பேய் சுரக்காயையும் சமைத்து தர முடியுமா? என்று நரிக்குறவர்கள் மத்தியில் இருந்த பெண்களிடம் கேட்டார், அப்போது யாரும் எதிர் பாராமல் ஒரு பெண் முன்னே வந்து " நான் சமைத்துத் தருகிறேன் என்று கூறி வாங்கிச் சென்றது. சிறிது நேரத்தில் மணலையும் பேய்ச் சுரைக்காயையும் சமைத்து கொண்டு வந்தாள். அதை சாப்பிட்ட சிவவாக்கயர் இவளே என் மனைவி என்பதை அறிந்து , அவளது பெற்றோர்களிடம் தங்களது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டு திருமணம் செய்து கொண்டார். நரிக்குறவர்களோடு சிவவாக்கியரும் வாழத் தொடங்கினார். மூங்கில் மரத்தை வெட்டி கூடை செய்யும் தொழிலை கற்றுக்கொண்டார், ஒருநாள் மூங்கில் மரத்தை வெட்டினார், அந்த மரத்தில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டத் தொடங்கியதைக் கண்டார். இதைப் பார்த்த சிவவாக்கியர் " சிவபெருமானே ! உன்னிடம் நான் முக்திக்கு வழி கேட்டுக் கொண்டு இருக்கும் போது செல்வத்தைக் காட்டி என்னை மயக்குகிறாய்? என்று தங்கத்தை பார்த்த அதிர்ச்சியில் தலை தெறிக்க ஒடினார், இதைக்கண்ட கிராமத்து மக்கள் அவரிடம் என்ன என்று கேட்க, அந்த மரத்தில் பூதம் வருகிறது என்று பொய் கூற மக்கள் அதன் பக்கத்தில் நெருங்கி பார்க்க தங்க துகள்கள் இருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தங்கத்துக்காக மாண்டார்கள், இதைப் பார்த்த சிவவாக்கியர் மனம் வெறுத்து அங்கிருந்து புண்ணியத் தலங்களுக்கு சென்று ஆசைகளை ஒழித்தால் சிவனைக் காணலாம் ஆசையை ஒழிக்காவிடில் எமனைத்தான் காண முடியும் என்ற தத்துவத்தை மக்களுக்கு போதித்தார். நாத்திக கருத்துக் கொண்டு ஆன்மீகத்தை நெறிபடுத்தி ஆன்மீகத்தை தத்துவப்பாடல் கள் கொண்டு நூல்கள் இயற்றி உள்ளார், அவர்தம் கருத்துக்கள் எதிர் மறை போல் தோன்றினாலும் அதன் உள்கருத்து பல தத்துவங்களை கொண்டது என்பது தெளிவர விளங்கும். இறுதியில் இவர் சமாதி ஆன இடம் கும்பகோணம், சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர் கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன் புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும் கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு. சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும் சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில் ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை. விக்கிரக ஆராதனை சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப் படுகின்றது. நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையே யாகும் என்கிறார். “ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே” நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல் மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து, அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக் கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம் இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்துஅழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம் படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது. அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது. இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர். இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய ஏழைகள் என்றும் சாடுகின்றார். உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின் பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன? திருச்சிற்றம்பலம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக