திங்கள், 2 மே, 2016

குருவருள் பெறுவோம்!

குருவருள் பெறுவோம்!

மே, 2 - திருநாவுக்கரசர் குருபூஜை

    இறந்தவரை உயிர் பெறச் செய்வது சாமான்யமான விஷயமா? அதையே செய்து சாதனை படைத்தவர் திருநாவுக்கரசர். அந்த மாபெரும் மகான் வாழ்ந்த பூமி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள, திருவாமூர். இங்கு, புகழனார் - மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் மருள்நீக்கியார். இவரின் சகோதரி திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர், பெற்றோர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்டார் கலிப்பகையார். இந்நிலையில், திலகவதியாரின் பெற்றோர் அடுத்தடுத்து இறந்தனர். அந்த சோகம் நீங்கும் முன் போரில் கொல்லப் பட்டார் கலிப்பகையார். இதனால், மனம் உடைந்த திலகவதியார், அருகில் உள்ள திருவதிகை என்ற தலத்திற்கு சென்று, சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.
மருள் நீக்கியாரோ, சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இதனால், தன் தம்பியை, சைவ சமயத்திற்கு மீட்டுத் தர வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார் திலகவதியார்.
இதனால், மருள்நீக்கியாருக்கு சூலை நோயைக் கொடுத்தார் சிவபெருமான். அதை, சமணர்களால் குணமாக்க முடியவில்லை. திருவதிகை சென்று,சிவனின் திருநீறை எடுத்து வயிற்றில் பூசியதும், அவரது வலி குணமானது. இதனால், மெய்சிலிர்த்த அவர், சிவன் மீது, 'திருப்பதிகம்' பாடி வழிபட்டார். அவரது பாடல்களின் இனிமை  காரணமாக, 'நாவுக்கரசு' என, பெயர் சூட்டினார் சிவபெருமான். அதன்பின், பல தலங்களுக்கு சென்று தேவாரம் பாடிய நாவுக்கரசர், திருவாரூர் அருகிலுள்ள, திருப்புகலூரில் சிவனுடன் கலந்தார்.
திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், நாவுக்கரசரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், அவர் அவதரித்த, பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரத் தன்றும், அவர் இறைவனடி கூடிய சித்திரை மாதம், சதய நட்சத்திரத் தன்றும், குருபூஜை நடத்துகின்றனர்.
இங்கு நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியார், தாய் மாதினியார், தந்தை புகழனார் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. இந்த குடும்பத்தினரை வணங்கினால் மனதிற்கு நிம்மதி, வாக்கு வன்மை, கல்வியில் சிறப்பான நிலை மற்றும் சிவன் அருள் கிடைக்கும்.
நாவுக்கரசர் அவதாரம் செய்த, களரி வாகை மரத்தடியில், சுவாமிக்கு அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மரத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர். இது செடியாகவோ, கொடியாகவோ, மரமாகவோ இல்லாமல், புதுவகை தாவரமாக உள்ளது. இதன் இலை அறுசுவைகளை உள்ளடக்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக இம்மரம் இங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.
இறைவன் அருள் வேண்டுமானால், குருவின் வழிகாட்டுதல் வேண்டும். நாமும், நாவுக்கரசரை மானசீக குருவாக ஏற்போம். அவரது குருபூஜை நன்னாளில், அவர் பாடிய எளிய தேவார பாடல்களை பாடி, சிவனை வணங்குவோம். குருவருளும், திருவருளும் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்.
நன்றி ; தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக