திருநாவுக்கரசர்
(குரு பூசை சித்திரை - சதயம் )சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர்.புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர்
திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புலழனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கின்ற புத்திரியார் பிறந்தார். அவர் பிறந்து சிலவருஷஞ் சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணீக்கியார் என்கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார் உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். மருணீக்கியார், தந்தையாருக்குப் பெருமகிழ்ச்சியுண்டாகும்படி, பலகலைகளையும் கிரமமாகக் கற்று வல்லவராயினார்
இங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்தகளத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம்பைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சமாசாரந் திலகவதியாருக்குச் செவிப்புலப்பட அவர் "என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்" என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணீக்கையார் வந்து, அத்திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது, "அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்தபின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்றோ உயிர்வைத்துக் கொண்டிருக்கின்றேன்; அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின், அடியேன் உமக்கு முன்னமே இறந்துவிடுவேன்" என்றார். திலகவதியார் அதைக் கேட்டு தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும், என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேறொருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.
மருணீக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அமைத்தார். சோலைகளை வைப்பித்தார்; குளங்களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புலவர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். பிரபஞ்சவாழ்வினது அநித்யத்துவத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். எல்லாச் சமயங்களுள்ளும் சற்சமயம் இது என்று அறியுமறிவு அவருக்குத் தலைப்படவில்லை. அவர் பாடலிபுத்திரம் என்னும் நகரத்திற் சென்று, சமணர்களுடைய பள்ளியையடைந்து, அங்குள்ள சமணர்களுடைய போதனா சத்தியினாலே அவர்கள் அநுட்டிக்கின்ற ஆருகதசமயமே முத்தியை அடைதற்குத் தகுந்த நெறியென்று அம்மருணீக்கியார் அந்தச் சமணசமய நூல்களெல்லாவற்றையும் கற்று, அவைகளிலே மகாபாண்டித்தியம் உடையராயினார். அதுகண்ட சமணர்கள் அவருக்குத் தருமசேனர் என்று பெயரிட்டு அவரைத் தங்கள் மதாசாரியராகக் கொண்டு வழிபட்டார்கள். அவர் தமது வித்தியாசாமர்த்தியத்தினாலே பௌத்தர்களை வாதிலே வென்று புகழ் பெற்று, ஆருகத சமயாசாரியர்களுக்குள்ளே சிரேஷ்டராய் இருந்தார். அது நிற்க.
திருவாமூரிலே இருந்த திலகவதியார் சிவபெருமானிடத்திலே பத்திமுகுந்து சிவபுண்ணியங்கள் செய்ய விரும்பி, கெடிலநதிக்கு வடகரையில் இருக்கின்ற திருவதிகை வீரட்டானம் என்னுந் திருப்பதியிற்சென்று பரமசிவனை வணங்கி, சிவ சின்னங்களைத் தரித்து, தினந்தோறும் சூரியோதயத்துக்கு முன்னே திருக்கோயிலின் உள்ளும் புறமும் திருவலகிடுதல், கோமயத்தினாலே மெழுகுதல், திருநந்தவனங்களிற் சென்று புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு வந்து திருமாலை தொடுத்துச் சுவாமிக்கு சாத்தக்கொடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்துவந்தார் பரமசிவன் திலகவதியார்க்குச் சொப்பனத்திலே தோன்றி "தபோதனியே! நீ உன் மனக்கவலையை ஒழி; உன்னுடைய தம்பி துறவியாகி நம்மை அடையும் பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ் செய்திருக்கின்றான். அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதினாலே அந்நியமதத்திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொள்வோம்" என்று சொல்லி மறைந்தருளினார்.
இறைவனின் கூற்றுப்படி அவ்வாறே சூலை நோயினால் வருந்தி, யாவராலும் தீர்க்கமுடியாத தன்னையை அடைந்தார் தருமசேனர்.
சூலைநோய் ஒன்று மாத்திரம் உடன்றொடர, திருவதிகையிற் சென்று, திலகவதியாருடைய திருமடத்தை அடைந்து, அவருடைய திருவடிகளை நமஸ்கரித்து, "நமது குலத்தார் செய்த தவப்பயனெல்லாம் திரண்டு ஒரு வடிவெடுத்தாற்போலும் அம்மே! அடியேன் கொடிய சூலை நோயைச் சகிக்கலாற்றா மையால், உம்மையே கதியென்று அடைந்தேன். இனித்தமியேன் உய்ந்து கரையேறும் வழியை அருளிச்செய்யும்" என்று விண்ணப்பஞ்செய்து, பாதத்திலே விழுந்து அயர்ந்தார். திலகவதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச் செய்தபடி முடித்ததை நினைந்து, மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலி செய்துகொண்டு "அறியாமையினாலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே! எழுந்திரும்" என்றார். தம்பியார் சூலைநோயுடன் நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலி செய்தார். திலகவதியார் "இது பரமசிவனுடைய திருவருளே; தம்முடைய திருவடிகளையடைந்த மெய்யன்பர்களுக்கு இன்னருள்புரியும் அக்கடவுளயே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்" என உபதேசித்தார். உடனே மருணீக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக்கொண்டு, வணங்கி நிற்க; திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொடுத்தார். மருணீக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி, அவ்விபூதியை வாங்கி, சரீரமுழுதிலும் அணிந்துகொண்டார்.
திலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்குத் தோண்டியும் எடுத்துக் கொண்டு, திருக்கோயிலுக்குத் தம்பியாரை அழைத்துக் கொண்டு போனார். மருணீக்கியார் வீரட்டானேசுரரைப் பிரதக்ஷிணஞ்செய்து சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அவருடைய திருவருளினாலே தமிழ்ச் செய்யுள் பாடுஞ்சத்தி உண்டாகப் பெற்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட்டும், பிற்காலத்திலே அன்போடு ஓதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும் பொருட்டும், சிவபெருமான் மேல் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கிற்று,
இந்தச் சமாசாரத்தைப் பாடலிபுத்திரத்தில் இருக்கின்ற சமணர்கள் கேள்வியுற்று, பொறாமை கொண்டு; "மாறுபட்ட பலசமயங்களையும் வாதில் வென்று நமது சமயத்தை ஸ்தாபித்த தருமசேனர் தமக்கு வந்த சூலைநோய் இங்கே ஒருவராலும் நீங்காமையால் உய்யும் நெறியை நாடித் திருவதிகையிற் சென்று, முன்போலச் சைவத்திலே பிரவேசித்து, அந்நோய் நீங்கி உய்ந்துவிட்டார். இனி நமது சமயம் அழிந்தது அழிந்தது" என்று துக்கித்து, தலையும் பீலியுந் தாழ ஓரிடத்திலே ஒருங்கு கூடினார்கள். கூடிய சமணர்கள் "தருமசேனருக்கு வந்த சூலை நோய் நம்மொருவராலும் நீங்காமல் சைவசமயப்பிரவேசத்தால் நீங்கி விட்ட உண்மையை நம்முடைய அரசன் அறிந்தானாகில், நம்மேற் கோபங்கொண்டு, தானுஞ் சைவனாகி, நம்முடைய விருத்தியையும் தவிர்ப்பான். இனி இதற்கு யாது செய்வோம்" என்று சொல்லித் தங்களுள்ளே ஆலோசித்து வஞ்சனையாகிய ஓருபாயத்தைத் தெரிந்து கொண்டு, பல்லவராஜனுடைய நகரத்திற் சென்று, அரண்மனை யினுள்ளே புகுந்து, அவ்வரசனை நோக்கி, "மகாராஜாவே! எங்களெல்லாருக்குந் தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய சகோதரியாராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற்கின்ற படியால், தாமும் அவர் போலாக விரும்பி, தமக்குச் சூலைநோய் வந்ததாகக் காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத்திற்சென்று, முன்போலச் சைவசமயத்திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை நிந்தை செய்தனர்" என்று சொன்னார்கள். உடனே பல்லவராஜன் கோபங்கொண்டு, "இதற்கு யாது செய்யலாம்" என்றான். அதுகேட்ட சமணர்கள் "உத்தமமாகிய நமது சமயமகிமையைக் கெடுத்து உம்முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண்டிக்க வேண்டும்" என்றார்கள். அப்பொழுது அரசன் மந்திரிமாரை நோக்கி, "இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான்.
உடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதிகையை அடைந்து திருநாவுக்கரசு நாயனாரிடத்திற் சென்று, "எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத்துக் கொண்டு வரும்படி எங்களை அனுப்பினான்; வாரும்" என்றார்கள். அதுகேட்ட திருநாவுக்கரசுநாயனார் "நாமார்க்குங் குடியல்லோம்" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, "நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்" என்றார்கள். அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங்கிப் பிரார்த்தித்து அழைக்க, "அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக்கெல்லாம் சிவபெருமான் இருக்கின்றார்" என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக் கொண்டு போய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்களை நோக்கி; "இனி இவனுக்கு யாது செய்வோம்" என்று கேட்க; சமணர்கள் "நீற்றறையில் இடல் வேண்டும்" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, "இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, "சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ" என்று அக்கடவுளைத் தியானித்து "மாசில் வீணையு மாலை மதியமும்" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது. இது போன்று பல கொடுமைகளை செய்தனர் சமணர்கள், யாதொன்றிலும் அஞ்ஞாது சைவ மதத்தில் வேருரின்றி நின்றார்,
அரசன் அதைக்கேட்டு, "இனி அவனைக்கொல்லுதற்கு; உபாயம் யாது" என்று கேட்க: சமணர்கள் "உம்முடைய யானையை அவனுக்கு எதிரேவிடுவதே உபாயம்" என்றார்கள். அரசனும் அப்படிச் செய்யும் பொருட்டு ஆஞ்ஞாபிக்க; துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனாருக்கு எதிரே யானையைக் கொண்டு வந்து விட்டார்கள். நாயனார் சிறிதும் பயமின்றி சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி தோறும் "கொடிலப் புனலு முடையாரொருவர் தமர்நா, மஞ்சுவதியாதொன்று மில்லையஞ்ச வருவது மில்லை" என்று பாடியருளினார். யானையானது அந்நாயனாரை வலஞ்செய்து, எதிராக நிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக; அதன் மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினாலே குத்தித்திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பை காட்டினார்கள். அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினால் அவர்களை எடுத்து வீசிக்கொன்றுவிட்டு, வெவ்வேறிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித்தேடி ஓடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந்நகரத்தில் உள்ளவர்களெல்லாரும் கலங்கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது. அடுத்தார்போல்
அவ்யானைக்குத் தப்பிய சமணர்களெல்லாரும் மானமழிந்து மயங்கி மனம் வருந்தி, அரசனையடைந்து, "தருமசேனன் நம்முடைய சமயநூல்களிலே கற்றுக்கொண்ட மந்திரத்தின் பலத்தினாலே நாங்கள் விட்ட யானையைக் கொண்டே எங்கள் வலிமையைச் சிதைத்தான்" என்று சொல்லிப் புலம்பினார்கள், அரசன் கோபங்கொண்டு, "இனி அவனுக்கு யாது செய்ய வேண்டும்" என்று கேட்க; சமணர்கள் "அவனைக் கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டிக் கடலிலே தள்ளவேண்டும்" என்றார்கள்
முத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசுநாயனார் "அடியேனுக்கு, யாது நிகழினும் நிகழுக; அடியேன் எம்பெருமானைத் தோத்திரம் பண்ணுவேன்" என்று நினைந்து, "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட; சமுத்திரத்திலே கல்லானது நாயனார்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட்டிய கயிறோ அறுந்து போயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனாரைத் தாங்கிக் கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான். நாயனார், அந்தத் திருப்பதியினின்றும் அரகரவென்னு மோசையுடன் தம்மை எதிர்கொண்ட சிவனடியார்களோடு ஆலயத்திற்சென்று, சுவாமியை வணங்கி, "ஈன்றாளுமாய்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அங்கே சிலநாள் எழுந்தருளியிருந்தார்.
திருநாவுக்கரசு நாயனார் அங்கே பாடற்றொண்டும் உழவாரத்தொண்டுஞ் செய்து கொண்டிருக்கு நாளில். ஒருநாள், சீர்காழியிலே பரமசிவனது திருவருளினால் உமாதேவியார் ஞானப்பாலை ஊட்ட உண்டு வேதார்த்தங்களைத் தமிழிலே தேவாரமாகப் பாடியருளுகின்ற திருஞானசம்பந்தமூர்த்தி நாயநாருடைய மகிமையை அடியார்கள் சொல்லக் கேள்வியுற்று, அவருடைய திருவடிகளை வணங்கல் வேண்டும் என்னும் ஆசை முகுதியினால், சபாநாயகரைத் தொழுது அநுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு, திருவீதியிலே அங்கப் பிரதக்ஷிணஞ் செய்து; அத்திருப்பதியின் எல்லையைக் கடந்து, திருநாரையூரைப் பணிந்து பாடி, சீர்காழிக்குச் சமீபித்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சீர்காழிக்குத் திருநாவுக்கரசு நாயனார் வருதலைக் கேள்வியுற்று, அத்தியந்த ஆசையோடு அடியார்கள் பக்கத்திலே சூழ அவரை எதிர்கொண்டார். திருநாவுக்கரசு நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க, அவர் தம்முடைய திருக்கரங்களினால் இவருடைய திருக்கரங்களைப் பிடித்து எடுத்து, தாமும் அஞ்சலி செய்து, "அப்பரே" என்றார். அதற்குத் திருநாவுக்கரசு நாயனார் "அடியேன்" என்றார். அவ்விருவரும் தாங்கள் ஒருவரை ஒருவர் காணப்பெற்றதனால் மிகமனமகிழ்ந்து ஆலயத்திற் சென்று, சுவாமியை வலங்கொண்டு நமஸ்கரித்து எழுந்தார்கள். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அப்பமூர்த்தியை நோக்கி, "அப்பரே! உம்முடைய சுவாமியைப் பாடும்", என்று சொல்ல, இவர் திருப்பதிகம் பாடி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமடத்திற் சென்று, அவரோடு அளவளாவிப் பலநாள் இருந்தார்.
வெகுநாட்சென்ற பின் அப்பமூர்த்தி திருநல்லூருக்குச் சென்று சிலநாள் அங்கே வசித்து, பின் திருவாரூருக்குப் போகக் கருதி, அதனை நீங்கி, பழையாறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திருநாறையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளமர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு; திருவாரூரை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகங்கள் பாடிக் கொண்டிருந்தார். ஒரு திருப்பதிகத்திலே, நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றினமையைச் சிறப்பித்துப் பாடினார். அந்தத் திருப்பதியில் இருக்கின்ற அரனெறியன்னும் ஆலயத்தையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். அங்கிருக்கும் நாட்களிலே, திருவலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் என்னும் ஸ்தலங்களுக்கும் போய், திருப்பதிகம் பாடிக் கொண்டு, அவ்விடத்திற்குத் திரும்பிவிட்டார். திருவாதிரை நக்ஷத்திரத்திலே வீதிவிடங்கப் பெருமானுடைய திருவிழாவை அடியார்களுடன் சேவித்து, மகிழ்ந்து இருந்தார். அந்நாட்களிலே திருப்புகலூருக்குப் போம்படி கருதி, திருவாரூரினின்றும் நீங்கி, பல தலங்களையும் பணிந்து சென்றார். அந்நாளிலே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்புகலூருக்கு வந்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு முருக நாயனாருடைய திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் அப்பமூர்த்தி திருவாரூரினின்றும் திருப்புகலூரை நோக்கி, எழுந்தருளி வருகின்றார் என்று கேள்வியுற்று, அடியார் கூட்டத்தோடுஞ் சென்று, அவரை எதிர்கொண்டார். அப்பமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, "அப்பரே நீர் வரும் நாளிலே திருவாரூரிலே நடந்த பெருமையைச் சொல்லும்" என்றார். அப்பமூர்த்தி திருவாதிரைச்சிறப்பை "முத்து விதான மணிப் பொற்கவரி" என்னுந் திருப்பதிகத்தினாலே சொல்லியருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு "நான் திருவாரூருக்குப் போய் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு இவ்விடத்திற்கு வருவேன்" என்று சொல்லித் திருவாரூருக்கு எழுந்தருள; அப்பமூர்த்தி திருப்புகலூருக்கு வந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார். திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னுந் தலங்களுக்கும் போய்த் தரிசனஞ் செய்து கொண்டு திருப்புகலூருக்குத் திரும்பினார். சிலநாட் சென்றபின், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவாரூரினின்று நீங்கி, திருப்புகலூருக்கு எழுந்தருளி வந்தார். அப்பமூர்த்தி அவரை எதிகொண்டு அழைத்து வந்து, முருகநாயனாருடைய திருமடத்தில் அவரோடும் எழுந்தருளியிருந்தார். இருக்கு நாளிலே சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்கநாயனாரும் அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு இருந்தார்கள்.
இருக்குநாளிலே, திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டியநாட்டிலே ஆருகதசமயம் பரம்பச் சைவம் குன்றிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, சமணர்களை வென்று சைவஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு, அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப்பொழுது திருநாவுக்கரசுநாயனார் சமணர்களுடைய கொடுமையை நினைந்து, மதுரைக்குப் போகாதிருக்கும் படி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைத் தடுக்க; திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அதற்கு இசையாமல் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினார்.
பின் உத்தரகைலாசத்திலே பரமசிவன் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசிக்க விரும்பி, திருக்காளத்தி மலையினின்று நீங்கி, உத்தரதிசையிலிருக்கின்ற திருப்பருப்பதத்தை அடைந்து வணங்கி, திருப்பதிகம் பாடிச்சென்று, காசியை வணங்கிக்கொண்டு அதற்கு அப்பால் இருக்கின்ற கற்சுரத்திலே சாகமூலபலங்கள் புசித்தலையும் ஒழிந்து, திருக்கைலாசதரிசனஞ் செய்யல் வேண்டுமென்னும் பேராசையால் இராப்பகல் விடாது நடந்தார். அதனால் அவருடைய பாதங்கள் பரடுவரைக்குந் தேய்ந்தன. தேய்ந்தும், ஆசை மேலீட்டினால் தம்முடைய இரண்டு கைகளையும் ஆதராவாகக் கொண்டு தாவிச்சென்றார். அந்தக் கைகளும் மணிக்கட்டு அசைந்து கரந்து சிதைந்தன. பின்னும் ஆசை சிறிதுங் குன்றுதலின்றி மேலிடுதலால் கொடிய நெருப்பையொத்த வெவ்விய பருக்கைக் கற்கள் பொருந்திய மார்க்கத்தில் மார்பினால் நகர்ந்து போயினார். மார்பும் தசை நைந்து சிந்த, எலும்புகளும் முறியலுற்றன. பின் புரண்டு புரண்டு போயினார். அதனால் தேகமுழுதும் அரைய, நாயனார் திருக்கைலாசகிரியினிடத்தே பதிந்த அன்பின் உறுதியினால் மெல்ல நகருதற்கு முயன்றும், கூடாமையால் வழியிலே கிடந்தார். அப்பொழுது பரமசிவன் அப்பமூர்த்தியை மீளவும் தமிழ்நாட்டிற் செலுத்தி அந்நாட்டிலுள்ளோர் உய்யும்பொருட்டுத் தமிழ்வேதமாகிய தேவாரம் பாடுவித்தற்கும், அவ்வப்பமூர்த்தியுடைய கருத்தையும் மாறின்றி முடித்தற்கும், திருவுளங்கொண்டு, அவ்விடத்தில் ஒரு தடாகத்தை உண்டாக்கி, ஒரு முனிவர் வடிவங்கொண்டு, அந்நாயனாருக்கு முன் வந்து நின்று, "நீர் அங்கங்கள் எல்லாம் அழிந்து போக வருத்தத்தோடும் இந்தக்கொடிய காட்டில் எதன் பொருட்டு வந்தீர்" என்று கேட்டார். அப்பமூர்த்தி மரவுரியாடையையும் யஞ்ஞோபவிதத்தையும் சடைமுடியையும் விபூதிதாரணத்தையுமுடைய அந்த முனிவரைக் கண்டபொழுதே பேசுதற்கு அற்பசத்தியுண்டாக, அவரை நோக்கி, "முனிவரே! நமது கடவுளாகிய பரமசிவன் உத்தரகைலாசத்திலே உமாதேவி சமேதராய் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசித்து வணங்கும் பொருட்டு விரும்பி வந்தேன்" என்றார். அதற்கு முனிவர் "தேவர்களாலும் அடையப்படுதற்கு அரிதாகிய திருக்கைலாசகிரி மனிதர்களால் அடையப்படுதற்கு எளிதா! நீர் இந்தக் கொடுஞ் சுரத்திலே வந்து என் செய்தீர்! இனித் திரும்பி விடுதலே உத்தமம்" என்றார். உடனே அப்பமூர்த்தி "திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவபெருமானுடைய திருக்கோலத்தைத் தரிசித்தன்றி அநித்தியமாகிய இந்த தேகத்தைக் கொண்டு திரும்பேன்" என்று மறுத்தார். சுவாமி அவருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி ஆகாயத்தில் அசரீரியாகி நின்று, "நாவுக்கரசனே எழுந்திரு" என்றார். உடனே அப்பமூர்த்தி அழிந்த உறுப்புகளெல்லாம் முன்போல நிரம்பப் பெற்றுச் சிறந்த திருமேனியோடும் எழுந்து, "சுவாமி! தேவரீர் திருக்கைலாசகிரியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோலத்தை அடியேன் தரிசித்து வணங்கும் பொருட்டு அருள் செய்யும்" என்று பிரார்த்தித்து நமஸ்காரம் பண்ணினார். அப்பொழுது பரமசிவன் "நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றை அடைந்து, நம்மைக் கைலாசகிரியில் வீற்றிருந்தபடி அந்த ஸ்தலத்திலே தரிசித்து வணங்கு" என்று பணித்தருளினார்.
அப்பமூர்த்தி அப்பணியைச் சிரமேற்கொண்டு, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதி, தடாகத்திலே முழுகி, திருவையாற்றிலிருக்கின்ற ஓர் வாவியின் மேலே தோன்றிக் கரையிலேறி, வழியிலே அந்தத் திருப்பதியிலுள்ள சராசரங்கள் தங்கள் தங்கள் துணையோடும் பொலிதலைக் கண்டு, அவைகளைச் சிவமும் சக்தியுமாகப் பார்த்து வணங்கிக் கொண்டு, ஆலயத்துக்கு முன்னே சென்றார். அவ்வாலயம் திருக்கைலாசகிரியாக, அதனிடத்தே வேதங்களும் சிவாகமங்களும் இருபக்கத்திலும் வாழ்த்தவும், தும்புரு நாரதரென்னும் இருவரும் யாழ் வாசிக்கவும், பிரம விஷ்ணுக்களிருவரும் வஸ்திரத்தை ஒதுக்கி வாயைக் கையினாலே பொத்திக் கொண்டு ஒதுங்கி நின்று தத்தங்குறைகளைச் சொல்லவும், பூதகணங்கள் கடைதோறும் காக்கவும், தேவர் சித்தர் அசுரர் சாரணர் காந்தருவர் கின்னரர் இயக்கர் விஞ்சையர் முதலாகிய கணத்தவர்கள் துதிக்கவும், திருநந்தி தேவர் கையிலே பிரம்பைத் தரித்துக்கொண்டு பணிசெய்யவும், காருண்ணிய ஸ்வரூபியாகிய சிவபெருமான் ஒரு திவ்வியாசனத்தின் மேலே அநந்தகோடி சூரியபிரகாசத்தோடும் பார்வதி சமேதராய் வீற்றிருந்தருளினார். அப்படியிருத்தலை அப்பமூர்த்தி கண்ட மாத்திரத்திலே விழுந்து நமஸ்கரித்து; உரைதடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, ஆனந்தவருவி சொரிய, கரையிறந்த அருட் பெருங் கடலிலே அன்புநதி ஈர்த்துச் செல்ல, மிதந்து போய், தெவிட்டுதலில்லாத அளவிறந்த சிவானந்தாமிர்தத்தைப் பருகி, சந்நிதானத்திலே ஆனந்தக்கூத்தாடித் திருத்தாண்டகங்கள் பாடினார். திருக்கைலாச பதியாகிய கடவுள் தம்முடைய திருக்கோலத்தை இப்படி அப்பமூர்த்திக்குத் தரிசிப்பித்து, பின் மறைந்தருள; அவ்வப்பமூர்த்தி மனம் வருந்தி, பின் ஒருவாறு தெளிந்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு அந்தத்திருப்பதியில் இருந்தார்.
பின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்" என்னுங்கருத்தால், "பொய் மாயப்பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார். அரம்பையர்கள் தங்கள் கருத்து முற்றாமையால், அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த நிலைமையை சமஸ்தலோகத்தார்களும் அறிந்து துதிக்கலுற்றார்கள்.
வாகீசர், "புகலூரா என்னை இனிச்சேவடிக் கீழிருத்திடும்" என்று எழுகின்ற ஞானத்தினால் திருவிருத்தங்கள் பலவற்றைப் பாடி, ஒரு சித்திரை மாசத்திலே சதய நக்ஷத்திரத்திலே "எண்ணுகே னென்சொல்லி யெண்ணுகேனோ" என்று திருத்தாண்டக மெடுத்துத் திருப்பாட்டிறுதிதோறும் "உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று பாடி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ;, தமிழ் சைவம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக