வியாழன், 30 மார்ச், 2017

நக்கு ( சிரித்து) நிற்பர் அவர் ( இறைவர்)

நக்கு ( சிரித்து) நிற்பர் அவர் ( இறைவர்)



" நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீருங்கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே " ...... அப்பர் சுவாமிகள் தேவாரம் 5

சிவபெருமான் ஏன் சிரிக்கின்றார்? யாரைக் கண்டு சிரிக்கின்றார்? என்பனவற்றை திருநாவுக்கரசர்அருளிய ஐந்தாவது தமிழ் வேதப் பாடலை ஆதாரமாக கொண்டு சிந்திப்போம்.

மனம் நெகிழ்ந்து இறைவரை யார் நினைக்கின்றார்களோ அவர்கள் நெஞ்சினுள்ளே இறைவர் புகுந்து நிற்பார். பொய்மையை உடையவர்கள் அளிக்கும் பூவையும் நீரையும் கண்டு இறைவர் சிரித்து (நக்கு ) நிற்பார் என்பது இப்பாடலின் கருத்து.

இறைவரை வழிபாடு செய்யும் பொழுது மனதில் உருக்கம் அல்லது நெகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அப்படி நெஞ்சம் உருகி வழிபாடு செய்பவர் நெஞ்சினுள்ளே இறைவர் புகுந்து நிற்பார் என்பது அவரது அனுபவ வார்த்தை.

இதே கருத்தை திருஞானசம்பந்தரும் அருளியுள்ளதைக் கண்டு இன்புறலாம். இறை அனுபவம் யாவர்க்கும் ஒன்றுதானே,

" பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில்உடனாவர் " ......... சம்பந்தர் திருமுறை 2

பண்ணிசை பொருந்திய வீணையை உடையவரும் பதினெட்டு தேவர்கணத்தினர் ஆகியோர்உணர முடியாத வகையில் நஞ்சுண்டு விளங்கும் கழுத்தினை உடைய சிவபெருமான் உள்ளம் உருகும்பொழுது நம்மிடத்தே விளங்கி நிற்பார்.

ஆக உள்ளம் உருகுகின்ற வழிபாடுதான் உண்மையான வழிபாடு ஆகும். தற்கால வழிபாடுகளினால் உள்ளம் உருகும் வாய்ப்புக்கள்உள்ளனவா என்று சிந்தித்து பாருங்கள். தற்காலத்தில் உள்ள முறைகளால் உள்ளம் உருக ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை. எனலாம். ஏன்? உள்ளம் உருகினால் தான் இறையருளைப் பெற முடியும்என்பதே நமக்கு தெருயாதல்லவா?

பொருட் செலவு செய்துவிட்டால் இறையருளைப் பெற்று விடலாம் என்றல்லவா நாம்எண்ணியும் செய்தும் வருகிறோம். ஆடம்பரமும் பொருளற்ற சடங்குகளிலும் நாம் மூழ்கி இருக்கின்றோம்,அவைதாம் இறைவழி பாடு என்று சுயநல வாதிகள் கற்பித்து விட்டார்கள். அதை நாம் கைவிடவும தயாராக இல்லை. தமிழ் வேதங்கள் மக்களிடையே பரவாமைதான்.

தமிழ் வேதங்கள் யாவும் கடவுளைக் கண்டவர்கள் அருளியவை உடலோடு முத்தி பெற்ற புண்ணியவான்கள் மூலம் இறையவரே அருளியவை, இங்கு சடங்கு சம்பிராதாயங்களுக்கு இடமே இல்லை. உண்மை நேர்மை அன்பு, ஈகை, ஆகிய நற்பண்புகளைத் கொண்டதுதான் இறைவழிபாடு எனப் பறை சாற்றுபவை நமது தமிழ் வேதங்கள்.

தமிழர்களின் இறைவழிபாடு ஒழுக்கத்தின் அடிப்படையில் அன்பின் அடிப்படையில் கருணையின் அடிப்படையில் அமைந்ததே ஆகும். பிற மொழியினர் திணித்த வழிபாடு கடங்குகள் மட்டுமே அடிப்படையாக கொண்டதாகும். அதனால்தான் தற்காலத்தில் கோயிலுக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தாலும். சமுதாயத்தில் களவு, கொலை, கொள்ளை ஏமாற்றுதல் போன்ற தீமைகளும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

பக்தி அதிகமாகும் பொழுது சமுதாயத்தில் தீமைகள் குறைய வேண்டும், ஆனால் நிலமை எதிர்மாறாகத்தான் உள்ளது. காரணம் இறைவழிபாடு நமது அருளாளர்கள் வாழ்ந்து காட்டிய வகையில் அமையாததே ஆகும். ஆலயங்கள் வியாபாரத்தலங்களாக மாறிக் கொண்டு வருகின்றன. நாமும் இறைவரிடம் வியாபாரம் செய்யவே ஆலயத்திற்கு செல்கிறோம். எனக்கு இந்த நன்மையைச் செய்தால் நான் 108 தேங்காய் உடைக்கிறேன். உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன். என்றெல்லாம் வியாபார நிபந்தனையுடன் இறைவரிடம் வேண்டுகிறோம். நமது உலக ஆசைகளை அல்லது உலகத் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் ஒருவராகத்தான் கடவுளை எண்ணுகிறோம்.

இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழ் வேதங்களான திகழும் பன்னிரு திருமுறைகள் மக்கள் மத்தியில் பரவாமையே ஆகும்.

நம்முடைய செயல்களைக் கண்டுதான் சிவபெருமான் சிரிக்கின்றார். பூசும் நீறு போல நமது உள்ளம் தூய்மையாக அமைய வேண்டும். அப்போதுதான் நமது செயல்களும் உலகத்திற்கு நலம் பயப்பனவாக அமையும்.

இரட்டையாக உள்ள ( இணைந்துள்ள பழம்) வாழைப்பழத்தை பிரிக்கக் கூடாது என்கிறார்கள். நல்லது ஆனால் இரண்டு நண்பர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறார்களே அதுதான் பொய்யான வாழ்க்கை.

குரங்கினைக் கண்டால் கோல் கொண்டு விரட்டி அடிக்கிறார்கள், அதே குரங்கு மின்கம்பியால் இறந்த பிறகு கோயில் கட்டிகும்பிடுகிறார்கள்.

தாய் தந்தையர் உயிருடன் வாழும் பொழுது எவ்வித உதவியும் செய்யாத பலரைக் கண்டதுண்டு. இறந்த பிறகு பெரிய படம் செய்து நடு வீட்டில் வைத்து மாலை போடுகிறார்கள். 

முருகனை வழிபாடு செய்கிறோம். அவருக்கு உரியது சேவல் கொடி, அதை வைத்து வழிபாடு செய்கிறோம் ஆனால் சேவற் கோழியை தின்பதை விடுவதில்லை.

இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் ( பொக்கம்) பொய்மை மிகுந்த வாழ்க்கை என்கிறார் திருநாவுக்கரசர். இப்படிப்பட்ட வாழ்க்கையை உடையவர்கள் அளிக்கும்( பூவையும் ) மலரையும் நீரையும் கண்டு இறைவர் சிரிக்காமல் வேறு என்ன செய்வார்?

அறவழியில் பொருளை சம்பாதிக்க யாவரும் முற்பட வேண்டும். மனதில் கொடுக்கும் குணம் மேலோங்கி நிற்க வேண்டும், மற்றவர்கள் நமக்கு என்ன எண்ணுகிறார்களோ அதனை நாம் மற்றவர்களுக்கு செய்யவே கூடாது.
மற்றவர்கள் நமக்கு எதை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோமோ அதனையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும் இதுவே பொய்மையற்ற வாழ்வாகும். ஆன்மாவைத் தேடி இறைவரே வருகிறார். என்பதுதான் திருமுறை ஆசிரியர்களின் அனுபவம். அதனையே நமக்கு சொல்லிச் சென்றார்கள்.

இறைவர் நம்மிடம் எதையும் வேண்டுவதில்லை. நம்முடைய உள்ளத்தைத்தான் பார்க்கின்றார். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நம்முடைய நல்ல எண்ணம் விளங்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் . ஒரு நாளைக்கு ஒரு நன்மையாவது செய்து வாழ வேண்டும். நான் எனது என்பது விலகி போகும் போது பொய்மையும் நம்மை விட்டு நீங்கும். இறைமை நம்மிடம்குடி கொள்ளும் பிறகு பிறப்பதும் இறப்பதும் இல்லை என்ற நிலை உண்டாகும். பிறவாமை இருந்தாலே நம் வினைப்பயன்கள் அறவே ஒழியும்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக