பக்திக்கோர் வரகுண பாண்டியன்
பட்டிணத்தடிகள் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் வரகுண பாண்டியனுடைய உன்னத இறையன்பினைக் காணலாம். " பெரிய அன்பின் வரகுண தேவர் " என்கிறார் பட்டிணத்தடிகள். வரகுண தேவரின் பக்திக்கு எல்லையே இல்லை என்கிறார். அம்மன்னரது உன்னத பக்தியைக் கூறும் தாமே அதில் மூழ்கி விடுகிறார் நம்மையும் மூழ்க வைக்கிறார் பட்டிணத்தார்.
வரகுண பாண்டிய மன்னர் திருவிடை மருதூரில் வாழ்ந்து வருகிறார். அது சமயம் ஒரு நாள் காவலர்கள் திருடனைக் கொண்டு வந்து அவர் முன்னே நிறுத்துகின்றனர். திருடன் நெற்றியில் திருநீறு அணிந்துள்ளான், அரசனுக்கு அவன் திருடனாகத் தெரியவில்லை. திருநீற்றைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமான் நினைவே மன்னருக்கு வந்தது. உடனே அவனை கட்டவிழ்த்து விடுமாறு உத்தரவிடுகிறார். இந்த இடத்தில் அப்பர் பெருமான் அருளிய பாடலை நினைவில் கொள்வது சாலப் பொருத்தமுடையது ஆகும்..
" எவரேனும் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி
உலராதே அவரவரைக் கண்ட போது
உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே, " த,தி,மு, 6-61-3
இந்த இலக்கணத்திற்கு ஒரு இலக்கியமாய் உள்ளதுதான் பெரிய அன்பின் வரகுண தேவரின் உயர்ந்தபக்தி
இரவில் நரிகள் ஊளையிடுகின்றன. அந்த ஓசையைப் பெருமானை வாழ்த்தும் மங்கல ஓசையாகவே எண்ணுகிறான் மன்னன். உடனே வேலை ஆட்களை அழைத்து " நம் பெருமானை வாழ்ததும் நரிகள் குளிரில் வருந்தாமலிருக்க (படாம்) போர்வைகளைப் போர்ததுங்கள் என்று ஆணையிடுகிறார் மன்னார்.
திருவிடை மருதூரில் குளம் குட்டைகளில் தவளைகள் இரவில் கத்துகின்றன. மன்னனுக்கு ஹர ஹர என்று அரனைப்பாடும் வாழ்த்தொலலியாகவே கேட்கிறதாம். உடனே தவளைகள் வாழும் நீர் நிலைகளில் பொன்னையும் காசையும் கலந்து தூவச் செய்கிறார். இறைவரது திருப் பெயரையும் புகழையும் கேட்டுப் பழகிய அரசனுக்கு நரிகள் ஊளையிடுவதும், தவளைகள் கத்துவதும் இறைவரை வாழ்த்தும் வாழ்த் தொலியாகவே கேட்பதில் தவறுஏதும் இல்லையே !
திருவிடை முருதூர் மேவிய மகாலிங்கப் பெருமானின் திருமுழுக்கிற்காக வேண்டி எள்ளை ஆலத்தினுள் உலர்த்தியுள்ளார்கள், அதனை ஒருவன் தின்று கொண்டிருந்தான். அந்த நேரம் வரகுணத் தேவர் அங்கே வருகிறார். எள்ளைத் தின்பவனிடம் இறைவனுக்கு என்று உலர்த்தப்பட்டுள்ள எள்ள தின்பாதால் ஏற்படும் விளைவு யாதென்று உனக்கு தெரியுமா? என்று கேட்கிறார். அவனும்இதனைத் தின்பதால் தின்பவர்கள் செக்கிழுக்கும் மாடாக பிறக்க நேரிடும். காளைமாடாக பிறந்தும் பெருமானுடைய திரு திருமுழுக்கிற்கு உதவும் எண்ெண்ய் எடுக்கும் செக்கினை இழுக்க வேண்டும் என்று நினைத்துத்தான் இப்படிச் செய்தேன் என்றான்.
உடனே அரசன் அவன் தின்று கொண்டிருந்த எள்ளினை கீழே துப்பும்படி செய்து, தான் அந்த எச்சில் கலந்த எள்ளினைத் தின்றான். இதனைப் பார்த்த அந்த மனிதன் " இப்பொழுது நீங்கள் ஏன் இறைவருக்கு உரிய எள்ளினைத் தின்றீர் என்று கேட்க அதற்கு அன்பின் வரகுண தேவர் சொல்கிறர் " ஐயா செக்கிழுக்க இழுக்க இரண்டு மாடுகள் வேண்டுமல்லவா? ஒன்று நீ மற்றொன்று நான், நானும் மாடாக பிறந்து மகாலிங் பெருமானுக்கு செக்கிழுக்கும்புண்ணியம் பெற வேண்டும் எனும் எண்ணத்தில்தான் தின்றேன் " என்று கூறுகிறார். இதை நினைக்கும் பொழுது நம் கண்ணில் நீர் தானாகவே மல்கிறது நமது பக்தி எங்கே நாம் எங்கே என்று நினைக்க தோன்றுகிறதல்லவா?
தன்னை மறந்து தலைவரை நினைக்கும் உன்னத நிலையே இந்நிலை.
மற்றொரு நாள் ஆலயத்தை வலம் வருகிறார் மன்னர். ஆலய எல்லைக்குள் ஒரு மண்டை ஓடு கிடக்கிறது. இதனைக் கண்ட மன்னர் கீழே விழுந்து அம்மண்டை ஓட்டினை வணங்குகிறார். நீ செய்த புண்ணியம்தான் என்ன? இறந்த பிறகும் உன் தலை பெருமானின் வளாகத்தில் உள்ளதே,இதைப் போல எம் தலையும் கிடத்தல் வேண்டும் பெருமானே என்று வேண்டுகின்றார் மன்னர்.
ஒரு நாள் ஆலயத்தினுள் நாயின் மலம் கிடப்பதைக் காண்கிறார். உடனே ஓடோடி பெருமானுக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று எண்ணி, தானே அம்மலத்தினை அப்புறப்படுத்தி ஆலயத்தை தூய்மைப் படுத்துகிறார்.
ஒரு வேப்ப மரத்தின் அருகில் வருகிறார் மன்னர். வேம்பின் பழங்கள் கிழே உதிர்ந்து பாதி மண்ணிலும் பாதி வெளியிலும் தெரிகின்றன, இப்பழங்கள் யாவும்மன்னருக்கு சிவலிங்களாகவே தெரிகின்றனவாம். உடனே அவற்றுக்கெல்லாம் விதானம் அமைக்கும்படி செய்கிறார் மன்னர்.
அக்கால நியதிப்படி வேற்று நாட்டைக் கைப்பற்றிய மந்திரி அந்நாட்டு மகளைக் கொணர்ந்து வரகுண தேவருக்கு பரிசளிக்கிறார். அப் பெண் மிக அழகாக இருக்கிறாள், இந்த அழகான பெண்ணை நம் பெருமானுக்கு அல்லவா கொடுக்க வேண்டும் என்று எண்ணி மகாலிங்க பெருமானிடம் கொண்டு வந்து விட்டுவிடுகிறார் அந்த அழகியை , வரகுண பாண்டியன்.
இச் செயல்களால் சுகபோகத்தில் வாழ வேண்டிய ஒரு மன்னர் செய்தார் என்றால் அவர் " பெரிய அன்பின் வரகுண தேவரே " தான் அவருடைய பக்திக்கு எல்லைதான் உண்டா? அன்பே வடிவான இறைவரை அடைவதற்கு பெரிய அன்பின் வரகுண தேவரைப் போல நாமும்அன்பின் மயமாவது தான் , இவற்றை யெல்லாம் கூறி நிற்கும் பாடல் வரிகள்:
வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப்
பாடின என்று படாம்பல அளிததும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்
வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளை தின்னக் கண்டு
பிடித்தலும் அவன் இப்பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருதவட்டத் தொருதனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல் எம் இத்தலையும்
கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத் திரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்று நாய்க் கட்டம் எடுத்தும்
காம்பவிழூத்துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரியஅன்பின் வரகுண தேவர் "
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை -
தி,முறை 11.
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி !!
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக