சனி, 2 மார்ச், 2019

சிவராத்திரி

சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

-சிவவாக்கியர்

ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

-சிவவாக்கியர்
விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும்.

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

-சிவவாக்கியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக