சனி, 9 மார்ச், 2019

பக்தி யோகம்











பக்தி யோகம்


யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 
 நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.
 இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

 தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்
1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம்.
நீங்கள் பக்தி மார்க்கத்தில் பயணித்து பக்தியில் உள்ளார்து இறைவனுடன் இரண்டற கலக்க என் ப்ரார்த்தனைகள். 

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக