செவ்வாய், 28 மார்ச், 2023

 சைவ சமயத்தின் தொன்மை



ஒவ்வொரு சமயமும் தோற்றுவிக்கப்டும் போது தோற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே தான் தோன்றி காலமும் பெயரும் அறிய முடியும், சைவ சமயத்திற்கு தொடக்க காலம் கூறுவதானால் அது யாரோ ஒருவரால் ஏதோ ஒரு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அங்ஙனம் அது எவராலேனும் எக்காலத்திலேனும் தோற்குவிக்கப் படாமையால் அதற்கு தொடக்க காலம் இல்லையாம்.
சிவபெருமான் எனறும் உள்ளவர். உயிர்களும் என்றும் உள்ளவை,என்றும் உள்ள சிவபெருமானை என்றும் உள்ள உயிர்கள் அடைந்து பேரின்பம் அனுபவிப்பதற்கான வழியும என்றும் உள்ளது, அந்த வழி சமயம் அதுதான் சிவ சமயம் - சிவத்தை அடைவிக்கும் சமயம்- சைவ சமயம், ஆதலால சைவ சமயம் என்றும் உள்ளது. அநாதி யானது எவராலும் தோற்றுவிக்கப்படாதது என்பது தெளிவாம்.
சிவபெருமான் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு செய்தருளும் சர்வ சங்காரத்தில் எல்லாத் தனு, கரண, புவன, போகுங்களும் அழியும், மாயையிலே ஒடுங்கும், உயிர்கள் இளைப்பாறியபின் ஆணவ மல நீக்கத்ததின் பொருட்டு சிவனருளால் அவைட மீளவும் தோன்றும். இந்த புவனமும் தோன்றும், உயிர்களும்தனு, கரணங்கள் பெற்று தோன்றும், அவ் உயிர்கள் போகங்களை அனுபவிக்கும் போது முன் செய்த தவ விசேடத்தால் நாளடைவில் அவற்றிக்கு சமய உணர்வு தோன்றும், சர்வ சங்கார காலத்திற்கு முன் இருந்த அந்த சைவ சமயம் மீளவம் வந்தது, என்றும் தொடக்க முடையது என்றேனும் சொல்வது பொருந்தாது.
இந்த இயற்கை புவன போகங்களை கொண்டு அவற்றின் அமைப்பு விநோதங்களை நினைந்தும் அவற்றுக்கெல்லாம் மூலகரணமாய் ஏதோ ஒரு பொருள் இருத்தல் வேண்டும் என்று உணர்ந்து அந்த பொருளே பல இனமக்களாலும் பல பெயரிட்டு கூறப்படும் கடவுள் ஆகும். அந்த கடவுளே தமக்கு எவ்வகையிலும் நன்மையே செய்யும் சிவம் ஆவர் என்ற தெளிவும் உண்டான காலமே இப் பூமியிற் சைவ சமயத்தின் தொடக்க காலம் எனலாம். அதன்பின் கடவுளின் செயல்கள் இயல்புகள் பற்றி ஆராய்ந்து சைவத்தின் உண்மைகளை அறிந்து சைவ சமய வாழ்வு வாழ தலைப்பட்டன.
சைவ சமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற் தோன்றிய சமயம் இதுவே மற்ற சமயத்தாருக்கு தோற்றுவித்தவரும் தோற்குவித்த காலமும் தெரியும் உதாரணமாக கிருஷ்து மதம் யேசு கிருஷ்துவால் தோற்றுவிக்கப்பட்டது எனவே யேசு பிறந்த நாளே அச்சமயமும் தோன்றய காலம் எனப்படுகிறது. ஆனால் சைவ சமயத்திற்கு இது பொருந்தாது சைவம் சிவ சம்பந்தமான / சிவமே கடவுள் சிவம் என்றல் அன்பானது, மங்கல கரமானது அதுவே சிவ சைவ சமயம் எனப்படுகிறது.
வேதாகமங்களும் புராணங்களும் சைவத்தின் தொன்மைக்கு சான்றாவன, சிவபுராணங்கள் உலக தோற்றங்களையும், பழைய வரலாறுகளையும் கூறுவன, திருவிளையாடற் புராணம் வரலாற்று செய்திகளால் அறியலாம், பண்டைய சித்தர்களும் முனிவர்களும் சிவ வழிபாட்டை கொண்டதால் சிவ சமயமே சைவ சமயத்தை அறிய செய்கின்றன எனவே சிவ வழிபாடே சைவ சமய நெறியாகும்,
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரும் அவர்பின் வந்த சமய குரவர்களும் சைவத்தின் தொன்மையை தெளிவாக்கியுள்ளனர். முன்னை பழம் பொருட்கும்- முன்னை பழம் பொருளே, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி, என மணி வாசகரும், அப்பாலும் அடிசார்ந்ததார் அடியாருக்கும் அடியேன் என்ற சுந்தரரரின் கூற்றும், சைவ சமயமே சமயம் என்ற தாயுமானவரும், கடவுள் ஒருவர் உண்டு என்ற தெளிவில் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற திருவள்ளுவ பெருமானரும் கூறிய வாக்குகள் எல்லாம் சிவ சைவ சம்பந்தமானவைகளாகும் இன்னும் பல சங்க கால நூல்களிலிலும் சைவ சமய நெறிமுறைகள் மேற்கோள்களாக காணப்படுகின்றன. உதாரணமாக "தீதும் நன்றும் பிறர்தர வார " யாதும் ஊரே யாவரும் கேளீர், எத்தனை எத்தனை பிறப்போ, எத்தனை எத்தனை அப்பனோ, என்ற பட்டினத்தார் வாக்கும் போன்ற மேற்கோள்கள் நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
சைவ சமயம் எவராலும், தோற்றுவிக்கப்படாதது என்பதும், அது சிவ பெருமானைப் போலஅனாதியானது என்பதும், சர்வ சங்கார காலத்தின் பின் உலகம் மீளப் படைக்கப் படும் போது ஆன்மாக்களது அறிவிலே இறைவனருளால் அத தோன்றும் என்பதும் அவ்வாறு தோன்றிய சைவ சமய உணர்வையே சிந்து வெளிப் பழங்குடி மக்களும் சங்க கால மக்களும் பெற்றிருந்தார்கள் என்பதும் அவர்கள் சிவ பெருமானரின் அருள்மூர்த்தங்கள் பலவற்றை வழிபட்டார்களென என்பதும் தெளிவாம்.
சைவ சமயமே சிந்து வெளி நாகரிக கால சிவ வழிபாட்டிற்கும் வித்தாாக அமைந்திருந்தாக ஆராய்ச்சியாளர்களின் தீர்க்கமான முடிவாகும், எனவே சைவ சமயம் அநாதி காலமே என்பது தெளிவு,
திருச்சிற்றம்பலம்

அடியார் இலக்கணம்


 அடியார் இலக்கணம்

இறைவழிபாட்டில் குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை முறைப்படி வணங்குதல் ஆகும், அத்தகைய அடியார்கள் என்பவர் யார் யார்? அவர்களின் இலக்கணம் என்ன? என்பதுபற்றி கண்டறிந்தால் தான் அடியார்கள் வழிபாடு நமக்கு வேண்டிய அருளைத்தரும்.
இறைவன்பால் அன்பு செய்யும் அடியார்கள் எண்ணற்றவர்கள், அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். அடியார்களின் இலக்கணமாக பத்தை குறிப்பிடுகிறார்கள் அருளாளர்கள். அதாவது அக இலக்கணம் பத்து, புற இலக்கணம் பத்து. இதை திருமுறைகளும்பிற நூல்களும் குறிப்பிடுகின்றன, அவர்களின் வாக்கு
" பத்தாம் அடியார்கோர் பாங்கனுமாய் " தி,மு, 6.18.10
"தத்துடையீர் ஈசன் பழவடியீர் " தி,மு, 8 திருவாசக பாடல்
"பத்து கொலாம் அடியார் செய்கை தானே " தி.மு. 4.18.10
அக இலக்கணம் 10 ம், புற இலக்கணம் 10ம் என்று உபதேச காண்டம் என்ற நூல் தெளிவு படுத்துகிறது.
பத்து புற இலக்கணமாவது
1. திரு நீறும் கண்டிகையும் அணிதல்.
2.பெரியோரை வணங்குதல்
3. சிவ பூசை செய்தல்
4.சிவனை புகழ்ந்து பாடுதல்
5. சிவ நாமங்களை அடிக்கடி உச்சரித்தல்
6. சிவ புண்ணியங்களை செய்தல்
7. சிவ புராணங்களை கேட்டல்
8. சிவலாய வழிபாடு செய்தல்
9. சிவனடியாரிடத்தன்று உண்ணாமை
10. சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்
அக இலக்கணங்கள் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் செயல்களின் மாற்றங்கள்
1,. சிவ பெருமானது புகழை கேட்குங்கால் 1, மிடறு( கழுத்து) விம்மல்
2, நாக்கு தழுத்தல், 3, இதழ் துடித்தல். 4. உடல் குலுங்கல்
5. மயிர் சிலிர்த்தல். 6. வியர்த்தல்,. 7. சொல்லொழாமை 8. கண்ணீர் அரும்பல்
9. வாய் விட்டழுதல். 10. மெய்மறத்தல் என்பன பத்தாகும்.
சிவ பெருமானை பற்றி நினைக்கும் போதும் கேட்கும் போதும் தரிசனம் செய்யும் போதும் இவை தானே நிகழும்.
நாயன்மார்களின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்தும், திருமுறைகளை தினம் ஓதியும், சிவபுண்ணிய செயல்களில்ஈடுபாடு கொண்டு செய்தும் வந்தால் அதுவே இறைவன் திருவருளை நமக்கு காட்டும்,
சிவ பூசை செய்வோம்,அடியார்களையும் வணங்கி சங்கம வழிபாடும் செய்து இறை அருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்

பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி

 பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி





சைவ சித்தாந்தத்ததின் படி ஆன்மாக்கள் பிறப்பு இறப்புகளில் சூழன்று கடைத்தேறி இறை அருளை பெற்று பேரின்பமான அந்த பெருமானின் திருவடி சேர்வதற்கு இறைவன் கொடுத்த அருள் வழிநெறிதான் பெரியபுராணத்தின் குரு, லிங்க, சங்கம வழிபாட்டு நெறி.இந்த நெறியை உயிர்கள் உணர்ந்து தெளிந்து அதன்படி ஒழுகி பேரின்பம் பெற வழிகாட்டும் நூலாக அமைந்துள்ளது திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம். உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவனால் நாயன்மார்கள் என்ற அவதார புருஷர்களை இப் பூவலகில் பிறக்கச் செய்து, அவர்களுக்கென்று தனி தனி நெறி முறைகளை வகுத்தும் கொடுத்துஉலகில் சங்கம பக்திக்கு வித்திட்டவர் இறைவனே.
கைலாய மலையில் சுவாமியும்அம்பாளும் தனித்திருக்கும் வேளையில் ஒருநாள் அம்பாள் முக வாட்டத்துடன் கவலையில் இருந்தபோது இறைவர் தன் கவலைக்கு காரணம் யாது என்று வினவ, அதற்கு அம்மை இறைவனிடம் பெருந்தகையீர் வரும் கலியுகத்தில் உயிர்கள் எவ்வாறு பதியை உய்ய முடியும்என்ற கவலையில் உள்ளேன் என தெரிவிக்க இறைவன் அஞ்ச வேண்டாம் அம்மையே அதற்கான வழியை நாம் வழிதொகுத்துள்ளோம் அதன்படி இப்பூவுலகிற்கு உயிர்கள் பாசம்நீக்கம் பெற்று பதியை அடைய அதற்கென அருளாளர்களை நாயன்மார்களாக பிறக்க வைத்து அவர்கள செய்யும் தொண்டு நெறிகளை உயிர்கள் கடைபித்து ஒழுகி அவர்களும் குரு, லிங்க சங்கம வழிபாட்டை பெற்று உயிர்கள் நம்மை வந்து அடைந்து ஒடுங்கும். இதன் பெருட்டு யார் யார் என்ன நெறியில் ஒழுகி இறைப்பேறு அடைவார்கள் என்பதை அங்கு பணி செய்த ஆலவாய் சுந்தரரையும் உடன் வைத்து அம்மையிடம் தெரிவித்தார். இதனை சுந்தரரும் தன் மனத்தில் நிறைத்துக்கொண்டார். இந்த வாக்கே இறைவாக்காக சுந்தரரும் தன் திருத்தொண்ட தொகையில் இறைவன் வகுத்துக் கொடுத்த பட்டியலை பாடலாக பாடியருளினார், இதன் வன்னம் தான் 63 நாயன்மார்கள் 9 தொகையடியார்கள் தனித்தனி தொகுயினராக தெய்வ நெறிகளை ஒழுகி இறைவன் அடியை சேர்ந்தார்கள். இந்த வழி முறையில்தான் சுந்தரரும் இப்பூமியில் தோன்றி திருவாரூரில் திருத்தொண்டத்தொகையினை பாடினார் அதனை சேக்கிழார் பெருமான் விரித்து பெரியபுராணமாக அமைத்து புகழ் சேர்த்தார்.
இவ்வாறு வந்த தனி அடியார்கள் 63 பேர்களும், தனித்தனியே, குரு, லிங்க,சங்கம வழிபாட்டு நெறியில் ஒழுகி பதியை அடைந்தார்கள். இதற்கு உதாரணமாக
தண்டியடிகள் லிங்க வழிபாடும், நேச நாயனார் சங்கம வழிபாடும், கணநாத நாயனார் மற்றும் பெருமழலை குரும்பர் குரு வழிபாடும் , முறையடுவார் நாயனார் சங்கம வழிபாட்டையும் காரைக்கால் அம்மையார் சங்கம வழிபாட்டையும் கடைபிடித்தனர்.
இத்துடன் 9 வகை தொகையடியார்களும் தனித்தொகுதியாக அவர்களுக்கான தனி நெறி முறைகளை கடைபிடித்து கூட்ட அமைப்பான (குழு அல்லது தொகுதி) யாக இறைவன் அடி சேர்ந்தார்கள்.
1, பொய்யடிமை இ்ல்லாத புலவர்கள்
தமிழ் சங்த்திலிருந்த புலவர்கள் கபிலர், நக்கீரர், போன்ற 49 பேர்கள்
2,பக்தராய் பணிவார்கள்
இப் பத்தராய்ப் பணிவார் சிவனடியார்களைக் காணுந் தோறுங் கூசிக் குதுகுதுத்துக் கொண்டாடிக் களிப்படைவர். தாய்ப்பசுவின் பின் இளங்கன்று தொடரும் பாங்கில் அவர்களைத் தொடர்வர். எங்கேனும் ஆரேனுஞ் சிவனை யர்ச்சிக்கக் காணின் தாமாகத் தம்மை அதில் ஈடுபடுத்திக் கொண்டு தம் பாவனா விருத்திப் பண்பும் நோக்குணர்வு நுட்பமும் பிறர்க்குந் துலாம்பரமாகத் தோன்றத்தக்கவகையிற் பகிரங்கமாகப் பலனுணர்வர். சிவனையுஞ் சிவனடியார்களையும் பொங்கியெழும் உணர்ச்சிப் பரிமளிப்புடன் தாமும் சுவாரஸ்யமாக இருந்து பூசிப்பர். தம் உடலுறுப்புகளாற் செய்ய நேரிடுந் தொழிலெதுவுந் தற்சார்பாகிவிடாது சிவார்ப்பணமாகவே செய்து முடிப்பர். சிவகதையை ஆரா அன்புடன் கேட்டலில் ரமித்து மற்றெல்லாம் மறந்திருக்கும் பரவச அன்பினராவர். "நெக்கு நெக்கு நினைந்துள்ளுருகி நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நக்கு மழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்குநிற்பதென்று கொலோ" என மாணிக்கவாசக சுவாமிகள் முன்வைப்பது போன்ற அன்பிய லநுபவமெல்லாந் தம்பால் விளங்கநிற்பர்
சிவ வழிபா்டடினால் உண்டாகும் பயனை உலக மக்கள் பெறும்படி செய்ததுடன் தானும் மகிழ்ந்து பேரின்பம் பெற்றனர்
3. பரமனையே பாடுவார்
பதியாகிய பரம்பொருளை தனக்கு தெரிந்த மொழியில் மெய்யன்புடன் உள்ளம் உருக பாடுவோர்
இவ்வகையிற் சர்வமுக்கியத்துவமும் மேன்மையும் வாய்ந்த அருட் பாடற்பணியே தம் இலட்சியப் பணியாகக் கொண்டு பிறரையும் பிறவற்றையும் பாடும் பராக்கை அறவே விட்டொழித்து மெய்யுணர்வு மகிமையாற் சிவனோ டொற்றித்து நின்று இயல்பாக எழும் உள்ளுருக்கத்துடனே சிவனையே பாடும் நியமத்தில் நிலைநின்றவர்களே பரமனையே பாடுவார் ஆவர்.
4. சித்தத்தை சிவன் பால் வைத்தார்
அட்டாங்க யோக முறையில் தாரணை முறையில் அக வழியில் சித்தத்தை சிவன் பால் செலுத்தி லிங்க வழிபாடு செய்தவர்கள்
குறித்த இவ்விலக்கணப்படியே ஆதார சாதனை மூலம் வாய்க்கும் நிட்டையிற் பயின்று சித்தத்தைச் சிவன்பால் வைக்கும் அநுபவத்தின் முதிர்ந்து அதன்முடிநிலைப் பேறாக நடராஜப் பெருமான் வழியடிமைப் பேறெய்திய திருக்கூட்டத்தடியார்களே சித்தத்தைச் சிவன் பாலே வைத்தோராவர். அவர்கள் சாதனை பற்றிய சகலவிபரங்களும் உள்ளடங்க இரத்தினச் சுருக்கமாக அமையும் அவர் புராணச் செய்யுள், "காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதங்கடத்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத் தாரணையாற் சிவத்தடைந்த தன்மையினார்
5, தில்லை வாழ் அந்தனர்கள்
இவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச் செய்தார்.
6, திருவாரூர் பிறந்தவர்கள்
சிவபெருமான் அங்கு மணிப்புற்றே இலிங்கத் திருமேனியாகக் கொண்டெழுந்தருளியுள்ளமையும், பொன்னாடாண்ட தியாகராஜப் பெருமானின் விடங்கத் தலங்கள் ஆறில் முதன்மை பெற்றுள்ளமையும் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்று முக்கிய நிகழ்வுகட்கெல்லாம் இடமாயிருந்துள்ளமையும், சிவனடியார் திருக்கூட்டம் விளங்கும் தேவாசிரய மண்டபத்துடனாயிருந்து சைவப் பக்திஞானச் செல்வர்களாகிய அடியார் வரலாற்று மூலக்கருவான திருத்தொண்டத் தொகை தோன்ற உதவியுள்ளமையும் ஆதிய இத்திறங்களானும் மேன்மை, நமிநந்தியடிகள் நீரால் திருவிளக்கிடவும் கண்மணியின்றியே தண்டியடிகள் நாயனார் திருக்குளந் தோண்டிச் சமணரைக் கலக்கங் காணவும் வைத்ததுடன் "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாருஞ் சிவகணங்கள்" எனத் தியாகராஜப் பெருமான் நமிநந்தி யடிகள் நாயனார்க்கு வெளிநின்றுணர்த்தியும் அவர் கண்களிக்கக் காட்டியும் வைத்துள்ளமையானும் பெறப்படும்.
7. முப்போதும் திருமேனி தீண்டுவார்
திருக்கோயில் களில் எப்போதும் இறைவனின் திருமேனி தொட்டு திருமஞ்சனம் ஆராதனைகள் செய்பவர்கள்
இவ்வகை உத்தம இயல்பனைத்தும் வாய்த்தவராய்ப் பரார்த்த பூசை புரிதலைக் கடமை மாத்திரத்தானன்றித் திருத்தொண்டாகவே கொண்டு ஒரு காலைக் கொருகால் மிக்கெழும் ஆர்வத்துடனே அன்புப்பணியாக ஆற்றி இம்மையிற் சிறப்புற்றிருந்து அம்மையிலுஞ் சிவலோகத் தெய்திச் சிவசாரூப்பியப் பேறு பெற்றுச் சிறந்தவர்களே முப்போதுந் திருமேனி தீண்டுவார் என்ற திருக்கூட்டத்தடியார்களாம்
8. முழு நீறு பூசிய முனிவர்கள்
உடல் முழுவதும் இறைவனி்ன் திருநீறு அணிந்த முனிவர்கள்
இவ்வகையிலான திருநீற்றைக் குறித்த இம்முறைப்படியே தயாரித்துப் புதிய மட்குடத்திலிட்டுச் சேமித்து வைத்து நியமந்தவறாது அணிந்து அதுவே சிவாராதனையாகப் பேணியொழுகும் நற்குல வான்களும் தத்துவஞான விளக்கமுள்ளவர்களும் மும்மல பந்தமறுத்தவர்களும் தமது திருநீற்றன்புறுதிக் கொள்கையிலிருந்து நழுவாதவர்களுமாயிருந்த ஒரு தொகுதி யடியார்களே முழுநீறு பூசிய முனிவர்களாவர். அவர்கள் திருநீற்றினை இயலுமளவுக்கு உடல் முழுவதுஞ் செறிய அணிந்து பக்திப் பரிமளிப்புறுந் தன்மையால் அப்பெயர் பெற்றிருத்தல் கருதத்தகும்.
9, அப்பாலும் அடிசார்ந்தவர்கள்
ஈசனின் திருவடிகளில் ஒன்றிய மனத்துடன் அப்பாலும் அடிசார்ந்தவர்கள், நாம் போற்றும் தவத்தை உடையவர்கள்.
சைவம் என்பதன் முக்கியார்த்தம் சிவனைச் சார்தல் என்றாகும். அது, "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்னுந் திருமந்திரத்தால் வலுவுறும். ஆன்மா, உலகச் சார்பினின்று முற்றாக நீங்கிச் சிவனைச் சாரும் வாய்ப்பைப் பெறுதற்கு உத்தரவாதமுள்ள அநுசரணை விதி விளக்கங்களைக் கொண்டுள்ளது என்ற பொருளிலேயே சிவனை ஆதரிக்கும் நமது சமயம் சைவ சமயம் எனப் பெயர்பெற்றதுமாம். அது பற்றியே, "சைவ சமயமே சமயம்" எனத் தாயுமான சுவாமிகளும் "சைவத்தின் மேற் சமயம் வேறில்லை" என எல்லப்ப நாவலரும் எடுத்தோதுவாராயினர். எனினும், ஒரோவழி விதிவசத்தாற் சைவமல்லாத பிற சமய மொன்றில் இருக்கையிலும் ஆன்மாவுக்கு அதன் பூர்வ ஜன்மத்துச் சைவப் பயிற்சி வாசனை விட்டகுறை தொட்டகுறையாக வந்து தட்டுதலால் சிவச்சார்பு பெறும் உளவிருத்தியும் உளதாம். பிரசித்தி பெற்ற சாக்கிய நாயனார் வரலாற்றுண்மையால் அது நிறுவப்படும்.
இது போன்றே தனி அடியார்களும் தங்களுக்கென உள்ள தனித்தனி நெறியனை அதாவது குரு, லிங்க, சங்கம வழிபாட்டை கடைபிடித்து சிவப்பேறு பெற்றவரகளாவார்கள்
குருவழிபாடு செய்த நாயன்மார்கள் 12 நாயன்மார்கள்
லிங்க வழிபாடு செய்த நாயன்மார்கள் 32 பேர்
சங்கம வழிபாடு செய்த நாயன்மார்கள் 19 பேர் ஆக மொத்தம் 63 நாயன்மா்கள்
திருச்சிற்றம்பலம்

சனி, 25 மார்ச், 2023

பக்திக்கு இரண்டு பாதைகள். (குரங்கு மற்றும் உடும்பின் உருவங்க)


 பக்திக்கு இரண்டு பாதைகள். இறை நம்பிக்கை என்றவுடன், இறைவன் இருக்கிறார் என்று நம்புவதும், அவரை தொழுவதும் பூஜிப்பதும் தான் இறை நம்பிக்கை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. சைவ சமயத்தின் பக்தி மார்க்கத்தில் இறை நம்பிக்கையை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கிறார்கள்.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமானால் திருப்பெருந்துறை என்று போற்றப்படும் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்றால் இறைவனை (திருவை) அடையக்கூடிய (பெரும்), இறைவனுடன் பயணிக்கக்கூடிய இடம் (துறை) என்று பொருளாகும்.

குருவாக தோன்றி தனக்கு உபதேசம் செய்து, பின் மாயமாய் மறைந்த சிவபெருமானின் (தட்சிணாமூர்த்தி) நினைவாக, மாணிக்கவாசகர் பெருமான் ஆத்மநாதர் திருக்கோயிலை அங்கு அமைத்தார். அந்த கோயில் முழுவதுமாக ஆகம விதிகளுக்குள் அடங்காமல் அமைக்கப்பட்டுள்ளது, மூலவர் சிலை, கொடிமரம் கூடக் கிடையாது என்பது அதன் சிறப்பு.

அந்த சிறிய கோயிலுக்கு அருகே மாணிக்கவாசகர் தனது ஆத்ம குருவான தட்சிணாமூர்த்தியை கண்ட குருந்த மரம் என்று நம்பப்படும் இடமும் அமைந்துள்ளது. அந்த குருந்த மரத்தின் வழித்தோன்றல் என்று நம்பப்படும் மரம் இன்றும் அங்கே உள்ளது. பிற்காலத்தில் ஆண்ட மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்த கோயிலைச் சுற்றி பல வசதிகளை உருவாக்கி கோயிலை விரிவாக்கம் செய்து மதில் சுவரையும் எழுப்பியுள்ளார்கள்.

அந்த கோயிலின் நுழைவாயிலில் மேற்கூரையில் குரங்கு மற்றும் உடும்பின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களுக்கு என்ன பொருள் என்று விளங்காததால் மனிதர்களின் தாவிக்கொண்டே இருக்கும் மனதையும், பிடிவாத குணத்தையும் குறிக்கும் சிற்பங்கள் என்றுதான் முதலில் நினைத்தேன் பின்புதான் அந்த சிற்பங்களின் பொருள் விளங்கின.

சைவ சமயத்தில் மனிதர்கள் இறைவனின் மீது செலுத்த வேண்டிய பக்தியை இரு பெரும் வகைகளாக விளக்க அந்த குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களை வடித்துள்ளார்கள். முதலாவதாக முழுமையாக இறைவனிடம் சரணாகதி அடைதல், இரண்டாவதாக மாணிக்கவாசகர் கூறுவதைப் போன்று “சிக்கெனப் பிடித்தல்”.

பெரியபுராணத்தில் வருகின்ற நாயன்மார்களின் பக்தியைப் போன்று என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறவாமல், இறைவனை விட்டு விலகாமல், சந்தேகம் கொள்ளாமல் முழுமையாக உடல்மனம் மற்றும் உயிரை ஒப்படைத்தல்.

“என் செயலாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்” என்று பட்டினத்தார் பாடியதைப் போன்று உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக இறைவனிடத்திலே ஒப்படைத்து எனக்கு என்ன நேர்ந்தாலும் அது உன் சித்தம் என்று மனமார ஏற்றுக் கொள்வதை குரங்கு சின்னம் குறிக்கிறது.

“கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே” என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடியதைப் போன்று உயிர் பிரியும் நிலையிலும் இறைவனைச் சார்ந்து இருப்பதை உடும்பு சின்னம் குறிக்கிறது.

தன் குட்டியை சுமந்துள்ள தாய் குரங்கு என்ன செய்தாலும், எத்தனை மரத்துக்குத் தாவினாலும் குட்டிக் குரங்கு அமைதியாக தைரியமாக இருக்கும். காரணம், என் தாய் எந்த சூழ்நிலையிலும் என்னைக் கைவிட மாட்டாள் என்று நம்பி குட்டி குரங்கு தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைக்கிறது.

தாய் குரங்கை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைத்த குரங்கின் குட்டியைப் போன்று இறைவன் மீதுள்ள நம்பிக்கையினால் உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக ஒப்படைத்தல் சரணாகதியாகும். எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் இறைவனை விட்டு விலகாமல், இறைவனை மட்டுமே சார்ந்திருப்பதை உடும்பு குறிக்கிறது.

உறுதிக்கும், பிடிவாதத்திற்கும், உடும்புப் பிடி என்று பெயர் பெறும் அளவுக்கு உடும்பின் பிடி உறுதியானது. உடும்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டால் எதற்காகவும் விடாது. ஒரு சிறு துன்பமோ கவலையோ சோதனையோ தோன்றியவுடன் கடவுளே உனக்கு கண்ணில்லையா? மூக்கில்லையா? என்று கதறாமல் இறைவன் எனக்கு எதைக் கொடுத்தாலும் அதன் பின் நிச்சயமாக ஒரு காரணமும் நன்மையும் இருக்கும் என்று முழுமையாக நம்பி, வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வெற்றியோ, மகிழ்ச்சியோ உண்டான உடன் இது என் திறமை என் உழைப்பு என்று கர்வம் கொள்ளாமல் இவை அனைத்தும் இறைவன் இட்ட பிச்சை என்று தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அவநம்பிக்கையோ, கர்வமோ மனதில் குடி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் உடும்பைப் போன்று பக்தியால் இறைவனைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடும்பு சின்னமும். குரங்குக் குட்டியைப் போன்ற முழு மனதாக சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காக குரங்கு சின்னமும் ஆத்மநாதர் திருக்கோயிலின் நுழைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளன

இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி

 இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி




கல்வி அறிவோடு, ஆன்மிக அறிவையும் வளர்த்து வந்தார், பிரகலாதன். பிரகலாதன் சொன்ன 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே பார்ப்போம்.


பிரகலாதன் 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே காண்போம்


1. சிரவணம்:- இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது 'சிரவணம்' என்னும் பக்தி முறையாகும். சொற்பொழிவு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.


2. கீர்த்தனம்:- நம் வாயால் இடைவிடாமல் இறைவனின் புகழைப் பாடுவதையே, 'கீர்த்தனம்' என்கிறோம். இது பாடலால் இறைவனை அடையும் பக்தி முறை.

3. ஸ்மரணம்:- நாவால் சத்தமாக இறை வனின் நாமத்தை உச்சரிப்பது, 'ஸ்மரணம்' என்னும் பக்தி வழிபாடாகும். இதனை தன் வாழ்நாளில் சிறப்பாகச் செய்து, இறைவனின் அருளைப் பெற்றவர், பிரகலாதன்


4. பாதசேவை:- எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் குறையாத பக்தியோடு இறைவனின் பாதங்களுக்குச் செய்யும் சேவையே, 'பாதசேவை' என்னும் பக்தி முறை. இந்த மகத்தான இறை வழிபாட்டை முறையாக, எப்போதும் செய்யும் பெரும் பேறுப் பெற்றவர், லட்சுமிதேவி.


5. அர்ச்சனை:- மனதில் எந்த களங்கமும் இல்லாமல், மலர்களைக் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் பூைஜயே 'அர்ச்சனை' என்னும் பக்தி முறை. இறைவனுக்கு அர்ச்சனை செய்து அதன் வாயிலாக பெரும் பேறுபெற்றவர்கள் ஏராளம்


6. வந்தனம்:- எட்டு அங்கங்களும் நன்றாக நிலத்தில் படும்படி, இறைவனை வணங்குவது 'வந்தனம்' ஆகும்.


7. தாஸ்யம்:- இறைவனுக்கு பணியாளனாக இருந்து நேசத்துடன் தொண்டு செய்வது 'தாஸ்யம்' என்னும் பக்தி முறை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற ரீதியில் இறைவன் மீது பக்தி செலுத்தும் சிறப்பான வழிபாட்டு முறை இது.


8. சக்யம்:- இறைவனை தன்னுடைய பக்தனாக நினைத்து அவருடன் நட்பு கொள்வது 'சக்யம்' என்னும் பக்தி முறை. தன்னுடன் இருப்பது இறைவன் என்று அறிந்திருந்தாலும், அவரைத் தன்னுடைய நண்பனாக பாவித்து, அனைத்து நல்லது கெட்டதுகளையும் பக்தி கொண்டு பாசம் காட்டும் ஒரு வழிபாட்டு முறை. இதனை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவன், அர்ச்சுனன். மற்றும் சுந்தரர்


9. ஆத்மநிவேதனம்:- தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எந்தவித தயக்கமும் இன்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பதே 'ஆத்மநிவேதனம்' என்னும் பக்தி முறை. இதனை 'சரணாகதி' வழிபாடு என்றும் கூட சொல்லலாம்.


இவ்வழி முறைகளில் யாதேனும் ஒன்றையாவது முறையாக பயன்படுத்தி அன்பு செய்தால் இறைவனின் திருவடியை நிச்சயம் அடையலாம்.

திருச்சிற்றம்பலம்


இறை வழிபாடு பற்றிய சிந்தனை

 இறை வழிபாடு பற்றிய சிந்தனை



*ஓம்*

*சிவயநம  யநமசிவ  மசிவயந  வயநமசி  நமசிவய*

*சிவயநம  யநமசிவ   மசிவயந   வயநமசி  நமசிவய*


இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்


இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை, பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்


இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பொரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும்    பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்


இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,


இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்


இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.


இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.


இறை வழிபாடு என்பது ஏழைகளுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்


இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.


இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,


இறைவழிபாடு என்பது எல்லாம் செயல்களும் இறைவன் அருளால் அவன் செயலால் நடக்கிறது என்பதை உணர்த்துவது


இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.


இறை வழிபாட்டின் இரண்டு கண்கள்  நேர்மையும், உண்மையும் ஆகும்.


விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு  உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.


நன்றி : தமிழ் வேதம்

புதன், 22 மார்ச், 2023

பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு

 

பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு


பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.


முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.


இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

  

பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.இதனை அவர் பாடிய பாடல்

இதனைத்தான் அப்பர் அடிகள்

" நிலைபெறுமாறு எண்ணுதியே நெஞ்சே நீவா

நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு

பூமாலை புணர்ந்தேத்தி புகழ்ந்து பாடி

தலையார கும்பிட்டு கூத்தும்ஆடி

சங்கரா செய செய போற்றி  "

  என்று பாடி உழவாரப்பணியில் அவன் தொண்டு பற்றி கூறியுள்ளார்

 இறைவனை அவன் கோயில் சென்று சென்று வழிபடுங்கள் தங்கத்தை மெருகு கூட்டத்தான் மிளிரும், எனவே அவன் அருளை பெற அவன் தாள் வணங்கினால் தான் இறை அருள் மிளிரும். புதையுண்ட தங்கம் மிளிராது. அவனை சென்று சென்று வணங்கினால் தான் அவன் அருள் வெளிப்படும். 

அபிசேகப்பொருட்கள் தருவோர் பூமாலை கொடுப்போர் இறைப்பணி செய்வோர் அருச்சனை செய்வோர் என அடியார்கள் கூடி செய்யும் கூட்டு வழிபாடு அடியாரகள் யாரும் கலந்து அருள் பெற வேண்டும் என்பதே இதன் அடிப்படை நெறி.

 கூட்டு வழிபாடு மிக அவசியமானஒன்றாகும், ஒரு நூல் தேரினைஇழுத்துவிட முடியாது,அந்நூல்பல சேர்ந்து ஒரு பெரிய கயிறாகுமானால் தேரினை மிகச் சுலபமாக இழுத்து விடும். ஒரு மரம் தோப்பாவதில்லை அது போல ஒரு கை ஓசை கேட்பதில்லை,  எங்கும் பரவி இருக்கும் இறைவனின் கருணை வெள்ளத்தை  கூட்டு வழிபாட்டின் மூலம் ஈர்த்து விடலாம் எனவே தான் கூட்டு வழிபாடு செய்ய அழைக்கிறார் அப்பர் பெருமானார்


 " பரவுமின் பணிமின் பணிவா ரொடே 

  விரவுமின் விரவாரை விடுமினே "  திருமு,5 பதி, 43. பாடல் 5


சிவபெருமானாரை அன்புடன் பணிகின்றவர்களுடன் கூடுங்கள் அவரை சிவனாகவே எண்ணி அன்பு காட்டுங்கள் அவ்வாறு இல்லாதவரைக் காணின் அவரை விட்டு விலகிவிடுங்கள். தொ ண்டரோடு கூடுங்கள் உங்களின் வல்வினைகள் யாவும் அழிந்தொழியும், திருஞான சம்பந்தர் பெருமானின் திருமணத்திற்கு வந்தவர்ள் அனைவரும் அவன் அருளால் தானே முக்தி பேறு பெற்றார்கள் எனவே நல்லாரோடு சேர்ந்தால் நாமும் அவர்களுடன் பயன் பெறுவோம். அடியோர்களுடன் கூடி வாழ்வதால்  அவர்கள்மத்தியில் இறைவன்இருப்பான் என்பது மணிவாசகர் வாக்கு 

          பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்

திருச்சிற்றம்பலம்