செவ்வாய், 28 மார்ச், 2023

பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி

 பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி





சைவ சித்தாந்தத்ததின் படி ஆன்மாக்கள் பிறப்பு இறப்புகளில் சூழன்று கடைத்தேறி இறை அருளை பெற்று பேரின்பமான அந்த பெருமானின் திருவடி சேர்வதற்கு இறைவன் கொடுத்த அருள் வழிநெறிதான் பெரியபுராணத்தின் குரு, லிங்க, சங்கம வழிபாட்டு நெறி.இந்த நெறியை உயிர்கள் உணர்ந்து தெளிந்து அதன்படி ஒழுகி பேரின்பம் பெற வழிகாட்டும் நூலாக அமைந்துள்ளது திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம். உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவனால் நாயன்மார்கள் என்ற அவதார புருஷர்களை இப் பூவலகில் பிறக்கச் செய்து, அவர்களுக்கென்று தனி தனி நெறி முறைகளை வகுத்தும் கொடுத்துஉலகில் சங்கம பக்திக்கு வித்திட்டவர் இறைவனே.
கைலாய மலையில் சுவாமியும்அம்பாளும் தனித்திருக்கும் வேளையில் ஒருநாள் அம்பாள் முக வாட்டத்துடன் கவலையில் இருந்தபோது இறைவர் தன் கவலைக்கு காரணம் யாது என்று வினவ, அதற்கு அம்மை இறைவனிடம் பெருந்தகையீர் வரும் கலியுகத்தில் உயிர்கள் எவ்வாறு பதியை உய்ய முடியும்என்ற கவலையில் உள்ளேன் என தெரிவிக்க இறைவன் அஞ்ச வேண்டாம் அம்மையே அதற்கான வழியை நாம் வழிதொகுத்துள்ளோம் அதன்படி இப்பூவுலகிற்கு உயிர்கள் பாசம்நீக்கம் பெற்று பதியை அடைய அதற்கென அருளாளர்களை நாயன்மார்களாக பிறக்க வைத்து அவர்கள செய்யும் தொண்டு நெறிகளை உயிர்கள் கடைபித்து ஒழுகி அவர்களும் குரு, லிங்க சங்கம வழிபாட்டை பெற்று உயிர்கள் நம்மை வந்து அடைந்து ஒடுங்கும். இதன் பெருட்டு யார் யார் என்ன நெறியில் ஒழுகி இறைப்பேறு அடைவார்கள் என்பதை அங்கு பணி செய்த ஆலவாய் சுந்தரரையும் உடன் வைத்து அம்மையிடம் தெரிவித்தார். இதனை சுந்தரரும் தன் மனத்தில் நிறைத்துக்கொண்டார். இந்த வாக்கே இறைவாக்காக சுந்தரரும் தன் திருத்தொண்ட தொகையில் இறைவன் வகுத்துக் கொடுத்த பட்டியலை பாடலாக பாடியருளினார், இதன் வன்னம் தான் 63 நாயன்மார்கள் 9 தொகையடியார்கள் தனித்தனி தொகுயினராக தெய்வ நெறிகளை ஒழுகி இறைவன் அடியை சேர்ந்தார்கள். இந்த வழி முறையில்தான் சுந்தரரும் இப்பூமியில் தோன்றி திருவாரூரில் திருத்தொண்டத்தொகையினை பாடினார் அதனை சேக்கிழார் பெருமான் விரித்து பெரியபுராணமாக அமைத்து புகழ் சேர்த்தார்.
இவ்வாறு வந்த தனி அடியார்கள் 63 பேர்களும், தனித்தனியே, குரு, லிங்க,சங்கம வழிபாட்டு நெறியில் ஒழுகி பதியை அடைந்தார்கள். இதற்கு உதாரணமாக
தண்டியடிகள் லிங்க வழிபாடும், நேச நாயனார் சங்கம வழிபாடும், கணநாத நாயனார் மற்றும் பெருமழலை குரும்பர் குரு வழிபாடும் , முறையடுவார் நாயனார் சங்கம வழிபாட்டையும் காரைக்கால் அம்மையார் சங்கம வழிபாட்டையும் கடைபிடித்தனர்.
இத்துடன் 9 வகை தொகையடியார்களும் தனித்தொகுதியாக அவர்களுக்கான தனி நெறி முறைகளை கடைபிடித்து கூட்ட அமைப்பான (குழு அல்லது தொகுதி) யாக இறைவன் அடி சேர்ந்தார்கள்.
1, பொய்யடிமை இ்ல்லாத புலவர்கள்
தமிழ் சங்த்திலிருந்த புலவர்கள் கபிலர், நக்கீரர், போன்ற 49 பேர்கள்
2,பக்தராய் பணிவார்கள்
இப் பத்தராய்ப் பணிவார் சிவனடியார்களைக் காணுந் தோறுங் கூசிக் குதுகுதுத்துக் கொண்டாடிக் களிப்படைவர். தாய்ப்பசுவின் பின் இளங்கன்று தொடரும் பாங்கில் அவர்களைத் தொடர்வர். எங்கேனும் ஆரேனுஞ் சிவனை யர்ச்சிக்கக் காணின் தாமாகத் தம்மை அதில் ஈடுபடுத்திக் கொண்டு தம் பாவனா விருத்திப் பண்பும் நோக்குணர்வு நுட்பமும் பிறர்க்குந் துலாம்பரமாகத் தோன்றத்தக்கவகையிற் பகிரங்கமாகப் பலனுணர்வர். சிவனையுஞ் சிவனடியார்களையும் பொங்கியெழும் உணர்ச்சிப் பரிமளிப்புடன் தாமும் சுவாரஸ்யமாக இருந்து பூசிப்பர். தம் உடலுறுப்புகளாற் செய்ய நேரிடுந் தொழிலெதுவுந் தற்சார்பாகிவிடாது சிவார்ப்பணமாகவே செய்து முடிப்பர். சிவகதையை ஆரா அன்புடன் கேட்டலில் ரமித்து மற்றெல்லாம் மறந்திருக்கும் பரவச அன்பினராவர். "நெக்கு நெக்கு நினைந்துள்ளுருகி நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நக்கு மழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்குநிற்பதென்று கொலோ" என மாணிக்கவாசக சுவாமிகள் முன்வைப்பது போன்ற அன்பிய லநுபவமெல்லாந் தம்பால் விளங்கநிற்பர்
சிவ வழிபா்டடினால் உண்டாகும் பயனை உலக மக்கள் பெறும்படி செய்ததுடன் தானும் மகிழ்ந்து பேரின்பம் பெற்றனர்
3. பரமனையே பாடுவார்
பதியாகிய பரம்பொருளை தனக்கு தெரிந்த மொழியில் மெய்யன்புடன் உள்ளம் உருக பாடுவோர்
இவ்வகையிற் சர்வமுக்கியத்துவமும் மேன்மையும் வாய்ந்த அருட் பாடற்பணியே தம் இலட்சியப் பணியாகக் கொண்டு பிறரையும் பிறவற்றையும் பாடும் பராக்கை அறவே விட்டொழித்து மெய்யுணர்வு மகிமையாற் சிவனோ டொற்றித்து நின்று இயல்பாக எழும் உள்ளுருக்கத்துடனே சிவனையே பாடும் நியமத்தில் நிலைநின்றவர்களே பரமனையே பாடுவார் ஆவர்.
4. சித்தத்தை சிவன் பால் வைத்தார்
அட்டாங்க யோக முறையில் தாரணை முறையில் அக வழியில் சித்தத்தை சிவன் பால் செலுத்தி லிங்க வழிபாடு செய்தவர்கள்
குறித்த இவ்விலக்கணப்படியே ஆதார சாதனை மூலம் வாய்க்கும் நிட்டையிற் பயின்று சித்தத்தைச் சிவன்பால் வைக்கும் அநுபவத்தின் முதிர்ந்து அதன்முடிநிலைப் பேறாக நடராஜப் பெருமான் வழியடிமைப் பேறெய்திய திருக்கூட்டத்தடியார்களே சித்தத்தைச் சிவன் பாலே வைத்தோராவர். அவர்கள் சாதனை பற்றிய சகலவிபரங்களும் உள்ளடங்க இரத்தினச் சுருக்கமாக அமையும் அவர் புராணச் செய்யுள், "காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதங்கடத்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத் தாரணையாற் சிவத்தடைந்த தன்மையினார்
5, தில்லை வாழ் அந்தனர்கள்
இவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச் செய்தார்.
6, திருவாரூர் பிறந்தவர்கள்
சிவபெருமான் அங்கு மணிப்புற்றே இலிங்கத் திருமேனியாகக் கொண்டெழுந்தருளியுள்ளமையும், பொன்னாடாண்ட தியாகராஜப் பெருமானின் விடங்கத் தலங்கள் ஆறில் முதன்மை பெற்றுள்ளமையும் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்று முக்கிய நிகழ்வுகட்கெல்லாம் இடமாயிருந்துள்ளமையும், சிவனடியார் திருக்கூட்டம் விளங்கும் தேவாசிரய மண்டபத்துடனாயிருந்து சைவப் பக்திஞானச் செல்வர்களாகிய அடியார் வரலாற்று மூலக்கருவான திருத்தொண்டத் தொகை தோன்ற உதவியுள்ளமையும் ஆதிய இத்திறங்களானும் மேன்மை, நமிநந்தியடிகள் நீரால் திருவிளக்கிடவும் கண்மணியின்றியே தண்டியடிகள் நாயனார் திருக்குளந் தோண்டிச் சமணரைக் கலக்கங் காணவும் வைத்ததுடன் "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாருஞ் சிவகணங்கள்" எனத் தியாகராஜப் பெருமான் நமிநந்தி யடிகள் நாயனார்க்கு வெளிநின்றுணர்த்தியும் அவர் கண்களிக்கக் காட்டியும் வைத்துள்ளமையானும் பெறப்படும்.
7. முப்போதும் திருமேனி தீண்டுவார்
திருக்கோயில் களில் எப்போதும் இறைவனின் திருமேனி தொட்டு திருமஞ்சனம் ஆராதனைகள் செய்பவர்கள்
இவ்வகை உத்தம இயல்பனைத்தும் வாய்த்தவராய்ப் பரார்த்த பூசை புரிதலைக் கடமை மாத்திரத்தானன்றித் திருத்தொண்டாகவே கொண்டு ஒரு காலைக் கொருகால் மிக்கெழும் ஆர்வத்துடனே அன்புப்பணியாக ஆற்றி இம்மையிற் சிறப்புற்றிருந்து அம்மையிலுஞ் சிவலோகத் தெய்திச் சிவசாரூப்பியப் பேறு பெற்றுச் சிறந்தவர்களே முப்போதுந் திருமேனி தீண்டுவார் என்ற திருக்கூட்டத்தடியார்களாம்
8. முழு நீறு பூசிய முனிவர்கள்
உடல் முழுவதும் இறைவனி்ன் திருநீறு அணிந்த முனிவர்கள்
இவ்வகையிலான திருநீற்றைக் குறித்த இம்முறைப்படியே தயாரித்துப் புதிய மட்குடத்திலிட்டுச் சேமித்து வைத்து நியமந்தவறாது அணிந்து அதுவே சிவாராதனையாகப் பேணியொழுகும் நற்குல வான்களும் தத்துவஞான விளக்கமுள்ளவர்களும் மும்மல பந்தமறுத்தவர்களும் தமது திருநீற்றன்புறுதிக் கொள்கையிலிருந்து நழுவாதவர்களுமாயிருந்த ஒரு தொகுதி யடியார்களே முழுநீறு பூசிய முனிவர்களாவர். அவர்கள் திருநீற்றினை இயலுமளவுக்கு உடல் முழுவதுஞ் செறிய அணிந்து பக்திப் பரிமளிப்புறுந் தன்மையால் அப்பெயர் பெற்றிருத்தல் கருதத்தகும்.
9, அப்பாலும் அடிசார்ந்தவர்கள்
ஈசனின் திருவடிகளில் ஒன்றிய மனத்துடன் அப்பாலும் அடிசார்ந்தவர்கள், நாம் போற்றும் தவத்தை உடையவர்கள்.
சைவம் என்பதன் முக்கியார்த்தம் சிவனைச் சார்தல் என்றாகும். அது, "சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்னுந் திருமந்திரத்தால் வலுவுறும். ஆன்மா, உலகச் சார்பினின்று முற்றாக நீங்கிச் சிவனைச் சாரும் வாய்ப்பைப் பெறுதற்கு உத்தரவாதமுள்ள அநுசரணை விதி விளக்கங்களைக் கொண்டுள்ளது என்ற பொருளிலேயே சிவனை ஆதரிக்கும் நமது சமயம் சைவ சமயம் எனப் பெயர்பெற்றதுமாம். அது பற்றியே, "சைவ சமயமே சமயம்" எனத் தாயுமான சுவாமிகளும் "சைவத்தின் மேற் சமயம் வேறில்லை" என எல்லப்ப நாவலரும் எடுத்தோதுவாராயினர். எனினும், ஒரோவழி விதிவசத்தாற் சைவமல்லாத பிற சமய மொன்றில் இருக்கையிலும் ஆன்மாவுக்கு அதன் பூர்வ ஜன்மத்துச் சைவப் பயிற்சி வாசனை விட்டகுறை தொட்டகுறையாக வந்து தட்டுதலால் சிவச்சார்பு பெறும் உளவிருத்தியும் உளதாம். பிரசித்தி பெற்ற சாக்கிய நாயனார் வரலாற்றுண்மையால் அது நிறுவப்படும்.
இது போன்றே தனி அடியார்களும் தங்களுக்கென உள்ள தனித்தனி நெறியனை அதாவது குரு, லிங்க, சங்கம வழிபாட்டை கடைபிடித்து சிவப்பேறு பெற்றவரகளாவார்கள்
குருவழிபாடு செய்த நாயன்மார்கள் 12 நாயன்மார்கள்
லிங்க வழிபாடு செய்த நாயன்மார்கள் 32 பேர்
சங்கம வழிபாடு செய்த நாயன்மார்கள் 19 பேர் ஆக மொத்தம் 63 நாயன்மா்கள்
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக