செவ்வாய், 28 மார்ச், 2023

அடியார் இலக்கணம்


 அடியார் இலக்கணம்

இறைவழிபாட்டில் குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை முறைப்படி வணங்குதல் ஆகும், அத்தகைய அடியார்கள் என்பவர் யார் யார்? அவர்களின் இலக்கணம் என்ன? என்பதுபற்றி கண்டறிந்தால் தான் அடியார்கள் வழிபாடு நமக்கு வேண்டிய அருளைத்தரும்.
இறைவன்பால் அன்பு செய்யும் அடியார்கள் எண்ணற்றவர்கள், அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். அடியார்களின் இலக்கணமாக பத்தை குறிப்பிடுகிறார்கள் அருளாளர்கள். அதாவது அக இலக்கணம் பத்து, புற இலக்கணம் பத்து. இதை திருமுறைகளும்பிற நூல்களும் குறிப்பிடுகின்றன, அவர்களின் வாக்கு
" பத்தாம் அடியார்கோர் பாங்கனுமாய் " தி,மு, 6.18.10
"தத்துடையீர் ஈசன் பழவடியீர் " தி,மு, 8 திருவாசக பாடல்
"பத்து கொலாம் அடியார் செய்கை தானே " தி.மு. 4.18.10
அக இலக்கணம் 10 ம், புற இலக்கணம் 10ம் என்று உபதேச காண்டம் என்ற நூல் தெளிவு படுத்துகிறது.
பத்து புற இலக்கணமாவது
1. திரு நீறும் கண்டிகையும் அணிதல்.
2.பெரியோரை வணங்குதல்
3. சிவ பூசை செய்தல்
4.சிவனை புகழ்ந்து பாடுதல்
5. சிவ நாமங்களை அடிக்கடி உச்சரித்தல்
6. சிவ புண்ணியங்களை செய்தல்
7. சிவ புராணங்களை கேட்டல்
8. சிவலாய வழிபாடு செய்தல்
9. சிவனடியாரிடத்தன்று உண்ணாமை
10. சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்
அக இலக்கணங்கள் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் செயல்களின் மாற்றங்கள்
1,. சிவ பெருமானது புகழை கேட்குங்கால் 1, மிடறு( கழுத்து) விம்மல்
2, நாக்கு தழுத்தல், 3, இதழ் துடித்தல். 4. உடல் குலுங்கல்
5. மயிர் சிலிர்த்தல். 6. வியர்த்தல்,. 7. சொல்லொழாமை 8. கண்ணீர் அரும்பல்
9. வாய் விட்டழுதல். 10. மெய்மறத்தல் என்பன பத்தாகும்.
சிவ பெருமானை பற்றி நினைக்கும் போதும் கேட்கும் போதும் தரிசனம் செய்யும் போதும் இவை தானே நிகழும்.
நாயன்மார்களின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்தும், திருமுறைகளை தினம் ஓதியும், சிவபுண்ணிய செயல்களில்ஈடுபாடு கொண்டு செய்தும் வந்தால் அதுவே இறைவன் திருவருளை நமக்கு காட்டும்,
சிவ பூசை செய்வோம்,அடியார்களையும் வணங்கி சங்கம வழிபாடும் செய்து இறை அருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக