" பொருளல்லவற்றை பொருளென்று உணர்தல்"
நிலையில்லாத பொருளை நிலைத்த பொருள் என எண்ணி அதன்பொருட்டு தனது வாழும் நாளில் பல இன்னல்கள் பட்டு வாழ்ந்து வருகின்றோம். " காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்னும் பட்டிணத்தடிகள் கூற்றின்படி எந்த பொருளும் நாம் மானிடராய் வரும்போது வந்ததும் இல்லை, நாம் செல்லும் போது நம்முடன் வருவதுமில்லை. இந்த நிலையற்ற பொருளுக்கு நாம் நம்முள் இருக்கும் இறையையும் மறந்து இல்லாததும் பொல்லாததும் ஆன செயல்கள் செய்து பாவங்களை நம்முடன் சேர்த்துக்கொள்கிறோம். நிலையற்றதென அறிந்து தெளிந்தால் மும்மலங்கள் அற்று பிறாநிலையை பெற்று வீடுபேற்றை அடையலாம்.
நம் தலைமுடி ஒரு பொருளா? அனைவரும் அதனை சீராட்டுகின்றனர். பேணிப் பாராட்டுகின்றனர் விதவிதமான நிறப்பூச்சும் வாசனை திரவியங்களும் பூசுகின்றனர். அது எப்பொழுது வேண்டுமானாலும் உதிரும் இயல்புடையது. நம்முடியே நாம் உண்ணும் உணவில் விழுந்துவிட்டால் அது அருவருக்கத்தக்காகி விடுகிறது. அது ஒரு பொருளே அன்று, " தலையின் இழிந்த மயிரையர் " என்கிறார் வள்ளுவர் தலையை விட்டு நீங்கிய முடிக்கு மதிப்பில்லை. அது நிலையாத பொருள் என இது உணர்த்துகிறது. தலைமுடி மறுபாலரை ஈர்க்கிறது, என்பதால் தலைமுடியை மழித்து விடுகின்றனர் புத்தமதத்துறைவிகள். எனவே இருக்கும் இடத்தில் இருக்கும் வரை மரியாதையுடன் இருக்கும் பொருளே அது இருந்த இடத்தைவிட்டு விலகும்- விழும்போது அதன் மதிப்பு அறுவருக்கத்தக்கதாகிறது. நாம் அழகுக்காக பேணி காக்கும் உடம்பும் அதுபோலத்தானே. அதினின்று உயிர் பிரிந்து விட்டால் அதனை பிணம் - என்றுதானே கூறுகிறோம். எனவே இவையெல்லாமே பொருளற்ற பொருளாகவே கருதுகின்றனர் அறிஞர்கள். இதனையே வள்ளுவரும் " பொருளலலவற்றைப் பொருளென்று உணரும்" என்கிறார். இப்படி பொருள் அல்லாத வற்றை பொருள் என மதித்து நாம் வாழ்கிறோம். நாம் மதிக்கும் உலகப் பொருள் எதுவும் நிலையத்த பொருள் அன்று. ஆயினும் நம்கூட வரவேண்டும் என நாம் விரும்புகிறோம.
எப்பொருளும் நம் வாழ்வில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் அப்பொருளுக்காக நாம் வாழலாகாது, அதனால் தான் துறவிகள் யாசித்து உண்டு, வாழ்ந்தார்கள். உலகப் பொருளுக்காக அவர்கள் வாழவில்லை. அவர்கள் தேடியது மெய்பொருளை, மெய் என்றால் உண்மை. இறை ஒன்றே உண்மையான பொருள். என்றும் நிலைத்த பொருள். அது வேறெங்கும் இல்லை. நம்முடனேயே உள்ளது. அந்த மெய்ப் பொருளை " என்னுளே தேடிக் கண்டு கொண்டேன் " என்கிறார் அப்பர் சுவாமிகள். அந்த ஒன்றே பரம்பொருள் என்று போற்றப்படுகிறது.
ஆகையால் மாணிக்க வாசகரும் அவன் ஒருவனையே பொருள் என்கிறார். " பொருளே தமியேன் புகலிடமே " எனவும் " தேடும் பொருளும் சிவன்கழலே " எனவும் பாடுகிறார். இறை ஒன்றே நிலைத்த பொருள். அதுவே நமக்கு புகலிடம் ஏனைய அனைத்தும் பொருள் அல்ல. இறை சார்ந்தார்க்கு அவை பொருட்டல்ல.
ஓம் நமசிவாயம்
திருசிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக