புதன், 30 ஏப்ரல், 2014

திரு ஐந்தெழுத்தை ஓத நெறி முறை


திரு ஐந்தெழுத்தை ஓத நெறி முறை இந்து சைவ மதத்தின் முக்கிய அடையாளங்களில் , திரு நீறு அணிதல், ருத்திராட்சம் அணிதல், சடாமுடி ,இவற்றுடன் முக்கிய பங்கு வைக்கும் திரு ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல் ஆகும், எல்லாமந்திரங்களும் தோன்றுவதற்கு காரணமாவது திரு ஐந்தெழுத்து மந்திரமே என சமயக்குறவர்கள் ஞான சம்பந்தரும், அப்பர் பெருமானும், சுந்தரர் பெருமானும் இதற்கென தனி பதிகங்களாக நமச்சிவாய பதிகம் ஏற்றி பெருமை சேர்த்துள்ளனர். வேத மறையாளர்கள் ஓதிவரும் மந்திரங்களுக்கெல்லாம் தலையாயது திருஐந்தெழுத்து மந்திரமென்பர், " செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்கிறார், ஞானசம்பந்தர், இபபதிக பாடல்களை பக்தியுடன் உள்ள முருக வேண்டினால் தீவினையும், தீரா பிணியும், நீங்கி வளமும், இன்ப வாழ்வும் அடைவார்கள், என்பது அருளாளர்களின் வாக்கு, நாவுக்கரசர் பெருமானை அமணர்கள் கல்லுடன் பூட்டி கடலில் பாய்ச்சியபோதும், அது, தொப்பமாக மிதந்தது, " கற்றுணைப் பூட்டியோர் கடலின் பாச்சினும், நற்றுணை யாவது நமச்சிவாயவே" என்கிறார் அப்பர் பெருமான், இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பவர்கள் மனங்களில் உறைபவர் இறைவராக இருந்த போதிலும், அதனை ஓதும் மாந்தர்கள் நெறிஉடைவர்களாக இருக்க வேண்டும், இல்லையெனின் இவ்வைந்தெழுத்து மந்திரம் ஓதினாலும் இறைவர் விலகி இருப்பார், என்கிறார் நாவுக்கரசர் சுவாமிகள்.வேதமந்திரங்களுக்கெல்லாம் சிறப்பு வாய்ந்த மந்திரமான திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதற்கு உரிய நெறியின்றி , வஞ்சனையுடைய மாந்தர்கள் " சிவாயநம" நமச்சிவாய " என ஓதினாலும் அவர்களை விட்டு விலகி தொலைவில் இருப்பார் இறைவர், வஞ்சனை மாந்தரை மறந்து விடுவர் அப்பெருமானார், வஞ்சனையும், சூதும் வாதும் உடையவர் மனத்தினில் தங்கார் திருவீழி மிழலையான் (இறைவர்) என்கிறார் அப்பர் சுவாமிகள், " தூயானைச் சுடர்வளச் சோதி யானைத் தோன்றிய எவ்வுயிர்க்குத் துணையாய் நின்ற தாயானைச் சக்கரமாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை மந்திரப்பார் மனத்து ளானை வஞ்சனையால் அஞசெழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே, அதனால் தான் உண்மை அடியார்களுடன் ஆலயவழிபாடு செய்வது, நலம் பயக்கும், தீயவர்களுடன் செல்லும் பொழுது இறைவர் விலகி இருப்பார், எனவே " தூய மனத்துடன் திருஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். தீய குணங்களை விட்டு ஒழிக்க வேண்டும், எல்லா தீமைகளையும்செய்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரம் ஓதுவது நலல்தன்று, தூய்மையான உள்ளம் உடையவர்கள் தூயானை எளிதில்உணர்ந்து விடுகிறார்கள் திருச்சிற்றம்பல் - " ஓம் நமசிவாய ஓம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக