வியாழன், 17 ஏப்ரல், 2014


வினை - கர்மா " காவலர் மகன் திருடனாக பிறப்பான். ஆசிரியர் மகன் மக்காக பிறப்பான்", எல்லாம் வினை " என்பர். வினை என்பது வடமொழியில் கன்மம் , கரமம், ( செயல்) எனப்படும். நாம் செய்த வினையின் பயனை நாம்தானே அனுபவிக்க வேண்டும். அனுபவித்தே முன்வினையைக் கழிக்க வேண்டும். அதனால் தான் " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்றார் கணியன் பூங்குன்றனார். " நீயான சுகதுக்கம் " என்கிறது உண்மை விளக்கம். நாம் செய்த தீவினையின் பயனை மட்டும் " கர்மம், கர்மம், என்கிறோம். நம்முடைய பிறவியே நாம் செய்த வினை (கர்மா) தானே. நாம் இப்பொழுது அனுபவிப்பன ( நன்மையும் தீமையும் ) ஏற்கனவே நாம் விதைத்தன. பிறர் வெறும் கருவிகள் தான். நாம் ஏற்கனவே செய்த வினையின் பயனை பிறர்வழி இறைவன் ஊட்டுகிறான். ஆகவே பிறர் நமக்கு நன்மையும் தீமையும் செய்யவில்லை. அவர்களை பாராட்டுவதாலும் நோவதாலும் பயனில்லை. நாம் வஞ்சமாக ஒருவரை அழித்திட எண்ணலாம். அதற்காக அடுத்தடுத்து நாம் செய்யும் தீவினை அவரைப் பக்குவப்படுத்திவிடும். அதன்வழி அவரது நல்வினை வளர அது வழிவகுக்கும். மாறாக நாம் பிறருக்கு செய்யும் நல்வினை அவரகது ஆணவத்தை கூட்டும். அதன்வழி அவரது தீவினை புகுந்து விளையாடும். ஆகவே அவரவர் வினைப்பயனை அவரவரே அனுபவிக்கின்றனர். இறைவன் நம்வழி அதனை ஊட்டுகிறான். ஆக நம்மை ஒரு கருவியாக அவன் பயன்படுத்துகிறான். ஒரு நாய்மீது கல் எறிந்தால் நாய் நம்மைப பார்த்து குரைக்கும் கல்லை பார்த்து குரைக்காது. எறிந்தது நாம்தானே. கல் ஒரு கருவிதான் அதுபோல பாவபுண்ணியம் செய்தது நாம், பிறர் வழி இறைவன் அதன் பயனை ஊட்டுகிறான். பிறர் வெறும் கருவிதான். வினைகள் நல்வினை, தீவினை எனும் இரண்டு. நல்வினை நல்லூழ், புண்ணியம் எனவும், தீவினை தீயுழ் பாவம் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவனை உயர்த்துவதும் அழிப்பதும் நம்மால் இயலாது. அதற்கு அவனது ஊழ் துணைநிற்க வேண்டும். ஆனால் எண்ணம் நமது தானே, ஒருவனை உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் எண்ணலாம் அல்லவா? ஆக நம் எண்ணமே முதல்வினை ஆகிறது. ஒரு பெண்ணை பார்க்கிறோம். அவளை தாயாகவோ, மகளாகவோ, அன்றி தமக்கையாகவோ எண்ணலாம். தவறாகவும் எண்ணலாம், நம் எண்ணமே நாம் செய்யும் முதல்வினை. இதனை வள்ளுவரும் " உள்ளத்தால் உள்ளலும் தீதே" என்றும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்" என்றும், கூறுகிறார். அதுமட்டுமல்ல " வினைப்பகை வீயாது பின்சென்று அடும்" என்கிறார். நாம் எங்கு ஓடிச் சென்றாலும் நாம் செய்த வினையின் பயன் நம்மை நிழல்போல பின் தொடர்ந்து வந்து தாக்கும் " என்கிறார் அவர். ஒருவன் மற்றெருவனை கொல்ல முயல்கிறான். இருவருக்கும் அதுவே ஊழென்றால் அது நிறைவேறும். இல்லையேல் எண்ணமும் முயற்சியும் முன்னவனது தீவினைதானே? அது அவனது புத்திதத்துவத்தில் சூக்குமமாகப் பதிகின்றது. இதுபோல நாம் செய்த பாவ, புண்ணிய செயல்கள் அனைத்தும், நம் புத்தி தத்துவத்தில் பதிகின்றன, அதனால் நம் புத்திவழியில் ஒரு செயலைச் சரியாகவும் தவறாகவும் அவசரமாகவும் , பிடிவாதமாகவும் செயல்படுத்துகிறோம், ஆகவே ஒரே செயல் ஒருவருக்கு வெற்றி தருகிறது, ஒருவருக்கு தோல்வி தருகிறது. " கெடுவான் கேடு நினைப்பான் " என்கிறோம். அல்லவா? கெடப்போகிறவன் புத்தி பிறருக்கு கெடுதல் நினைக்கும். அவன் தன் முன்வினையின் ( தீவனை ) வழி பிறருக்கு கேடு எண்ணுகிறான். நாம் முன் செய்த வினையின் பயன் நம் பெற்றோர் வழியிலும் மனைவி மக்கள் ,உறவு நட்பு, பகை, எனும் வழியிலும் ஊட்டப்படுகிறது. ஆக அவர்கள் அனைவரும் வெறும் கருவிதான், விதைத்தது நாம் தானே. நாம் செய்த நல்வினை தீவினை கூடித் தொகுப்பு வினை ( சஞ்சிதம்) என உள்ளது. அதில் ஒரு பகுதிமட்டும் தற்போது நிகழ்வுக்கு வருகிறது. அது நிகழ்வினை, வருவினை ( பிராப்தம், பிராரத்தம் ) என்படுகிறது. நிகழ்வினையை நாம் கழிக்கும் போதே ஆணவப்பட்டு புது வினையை ஈட்டிக் கொள்கிறோம். அது ஏறுவினை ஈட்டுவினை ( ஆகாமமியம் ) எனப் பழைய தொகுப்பு வினையோடு கூடிக்கொள்கிறது. இப்படியே நம் வாழ்நாள் கழிகிறது. நல்ல எண்ணமே நல்வினையைத்தரும். நல்வினையே நிம்மதி தரும். நிம்மதி மட்டுமே நிறைவைத் தரும். ஆக நல்லதையே நாம் எண்ணுவோம், நல்லதையே செய்வோம். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக