சனி, 1 ஏப்ரல், 2017

நினை மின் மனமே நினைமின்!

நினை மின் மனமே நினைமின்!

" நினைமின் மனமே நினைமின் மனமே
சிவபெருமானைச்செம்பொன் அம்பலவனை
நினைமின் மனமே ! நினைமின் மனமே!!
         பட்டிணத்து அடிகள்  / திருக்குற்றாலம்

காலன் வருமுன்னே கண் பஞ்சடையுமுன்னே
 பாலுண் கடைவாய் படுமுன்னே .. மேல் விழுந்தே
யுற்றார் அழுமுன்னே யூரார் சுடுமுன்னே
குற்றாலத்தானேயே கூறு, ....... பட்டிணத்தடிகள்

பொருள் ; எமன் நெருங்குவதற்கு முந்தியே கண் பஞ்சடைவதற்கு முந்தியே பாலுண்ட கடைவாய்ப் பல் விழுவதற்கு முந்தியே உறவினர்கள் விழுந்து அழுவதற்கு முந்தியே ஊரிலுள்ளவர்கள் மயானத்திற்கு கொண்டு போய் சுடுவதற்கு முந்தியே திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபொருமானை துய்ப்பாயக / மனதில் எண்ணி வணங்குவாயாக.

  மரணத்தருவாயில் இந்திரியங்கள் கலங்கி விடுமாதலின் அச்சமயத்தில் நினைப்பதற்கு ஏதுவாகிய காரணங்களும் மங்குவிடுமாதலால் அறிவானது தெளிவாக இருக்கும் காலத்திலேயே சிவபெருமானை நினைத்து தியானம் பண்ணுதல் வேண்டும். தன்னை நினைவிழந்தபின் எமபயம் தான் உண்டாகும். காலத்தே நினையாமை பயனற்றதாகிவிடுமல்லவா? இதைத்தான் கிராமத்தில் வேண்டும் போது வேண்டாமல் முடியாத பட்சத்தில் வேண்டினால் அவை நமக்கு கிடைத்தாலும் பயனற்றதாகிவிடுமல்லவா ? எனவே சாகப்போகும் போது சங்கரா? சங்கரா என்றால் நம் உயிர் நிற்குமா? எனவே நினைவுள்ள போதே நினை மனமே என்பதே  " நினைமின் மனமே நினைமின் "

இதனையே இன்னுமொரு பாடலில்

" விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உடலைச் 
சுட்டுவிடப் போகின்றனர் சுற்றத்தார் .. பட்டதுபட்
டெந்நேரமு் சிவனையே ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னே னதுவே சுகம்.   

பொருள் ; ஜகத்தீரே உயிரானது உடலைவிட்டு நீங்ப்போகிறது விட்டவுடன் சரீரத்தினை உறவினர் சுட்டுவிடப் போகிறார்கள்.ஆகையால் என்னபாடு பட்டாயினும் எப்போதும் சிவபொருமானை துதியுங்கள் வணங்குங்கள், சொல்லிவிட்டேன் அதுவே சுகம்,

 உலகத்திலேயே ஒருவன் நற்கதியினை அடைய வேண்டியதற்கு ஏற்ற சாதனங்கள் உடலுடன் உயிர் கூடியிருக்கும் காலத்திலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். காலம் தவறி செய்யும் காரியங்கள் பாழ். உடலோடு உயிர் ஒட்டியிருக்கும் காலம் எல்லாம் ஒவ்வொரு கணம்தோறும் சிவசிந்தனை யுடன் இருக்க வேண்டும் என்பர் எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் என்றனர்.


பாவிஎன நாமம் கொள்ளாதே

செத்தாரைப்போல திரி

ஆவியோடு காய மழிந்தாலும் மேதினியிற்
பாவியென்ற நாமம் படையாதே /  மேவிய சீர்
வித்தாரமுங் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போல திரி.

அறியாமை வாய்ந்த மனமே உயிருடன் கூடிய சரீரமானது அழிந்து போனலும் உலகத்திலே பாவியென்ற பேரினைப் படைக்காதே. பொருந்திய சிறப்பு வாய்ந்த விஸ்தார வாதத்தையும் உலக உறவும் உனக்கு வே்ண்டாம்,மாண்டவர் போல திரிவாயாக.

உலகத்தில் விகார முள்ளவரையில் நன்மை தீமைகளுக்கு ஏதுவாகிய விஷயங்களுள் சிக்குண்ண வரும். அங்ஙனம் சிக்கவே எவ்வழியாலாவது பாவி என்ற பெயர் உண்டாகப் பெறும். ஆதலால் மவுனம் பூண்டு நடைபிணம் போல இருந்து கொண்டிருத்தலே உத்தமம் என்றனர் பெரியோர்

"பாவியென்ற பேர் படைத்துப்
பாழ் நரகில் விழாமல்
ஆவி நின்ற சூத்திரத்தை
அறிவதினி  எக்காலம் "  .....  பத்திரகிரியார்

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக