திங்கள், 24 ஏப்ரல், 2017

மரணத்தை வெல்லும் யோகம்

அர்த்தமுள்ள இந்துமதம் - மரணத்தை வெல்லும் யோகம்

எப்பொழுதுமே தன்னை உணர்ந்து கொண்டு விட்ட மனிதன், மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.

அவன் செத்துவிட்டான் என்று சொன்னால், `அவன் உடம்பு தான் செத்துவிட்டது, ஆன்மா சாகவில்லை’ என்பது பொருள்.

`என்னையே எனக்குக் கொடு’ என்னும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.

துயரங்கள் தோன்றாமல் சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது, அவன் உடம்பு அழிந்து விடுகிறது.

இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.

இமய மலையில் குடி புகுந்தவன், மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?

ஆன்மாவை உணர்ந்து கொண்டவன், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?

இப்போது நான் சொல்லப் போவது, மரணத்தை வெல்லும் யோகம் பற்றிய `கடோப நிஷதம்’ ஆகும்.

கவுதமரின் குமாரர் வசிஸ்ரவர்; அவரது குமாரன் நசிகேதன்.

அவர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள் களையும் தானம் செய்தார்.

அவரது குமாரன் நசிகேதனுக்கும், `தன்னை, தந்தை யாருக்குத் தானம் செய்வார்?’ என்ற கேள்வி எழுந்தது.

`தனக்கு வயதான பின் தானம் செய்வதில் பொருளிருக்க முடியாது. கடைசி முறையாகத் தண்ணீர் குடித்துப் புல்லைத் தின்று மலடாகி விட்ட கிழட்டுப் பசுக்களைத் தானம் செய்வதில் என்ன யோகம் இருக்க முடியும்? இந்த ஒன்பது வயதிலேயே, தானும் தானம் செய்யப்பட வேண்டும்!’ என்று நசிகேதன் கருதுகிறான்.

`தந்தையே! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்?’ – தந்தையைக் கேட்கிறான்.

அவர் பேசாமல் இருக்கிறார்.

அவன் மீண்டும், மீண்டும் கேட்கிறான்.

அவர் கோபத்தோடு, `உன்னை யமனுக்குத் தானம் செய்யப் போகிறேன்’ என்கிறார்.

நசிகேதன் யோசிக்கிறான்:

`தன்னைப் பெற்றுக் கொள்வதால் யமனுக்கு என்ன லாபம்? நான் யமனிடம் போவதென்றால், பலருக்கு முன்னால் போகப் போகிறேன். அல்லது சிலருக்கு நடுவில் செல்லப் போகிறேன். என்னை அடைவதன் மூலம் யமன் செய்யப் போவது என்ன இருக்கிறது?’

அவன் ஏதேதோ யோசிக்கிறான்.

`தந்தையே! நம் முன்னோர்கள் நடந்து வந்த விதத்தைக் கவனியுங்கள். தானியங்களைப் போல மனிதன் அழிகிறான்; தானியங்களைப் போலவே மீண்டும் பிறக்கிறான். நானும் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்படுகிறான்.

நசிகேதன் ஸ்தூலத்துடனேயே யம தர்மனைப் பார்க்கப் புறப்படுகிறான்.

தானியங்களை உதாரணம் காட்டியதில், அவன் ஒரு அர்த்தத்தைக் குறிப்பிடுகிறான்.

`ஒரு தானியத்தின் ஆயுள் காலம் எவ்வளவோ, அவ்வளவுதான் மனிதனின் ஆயுட்காலம்’ என்பது அவனது நம்பிக்கை.

வாழ்வு இவ்வளவு சிறியதாக இருக்கும் போது, அதில் ஆசை வைப்பானேன்?

காம, குரோத, லோபங்களில் சிக்குவானேன்?

தந்தையிடம் சொல்லுகிறான், தன் புறப்பாட்டை.

தந்தையும், அவன் யமனைப் பார்க்கப் போவதை அனுமதிக்கிறார்.

யமனைத் தேடி நசிகேதன் சென்ற போது, யம தர்மன் வீட்டில் இல்லை. அதனால் மூன்று நாட்கள் அவன் அங்கே தங்க நேரிடுகிறது.

மூன்று நாளும் நசிகேதன் உண்ணாவிரதம் இருக்கிறான்.

மூன்றாவது நாள், யம தர்மன் வருகிறான்.

ஒரு பிராமணச் சீடன் தனக்காக மூன்று நாட்கள் விரதம் இருப்பதைப் பார்த்து, யமன் சொன்னான்:

`ஏ அதிதியே! பிராமணா! என் வீட்டில் நீர் மூன்று இரவுகள் உணவருந்தாமல் கழித்து விட்டீர். அதற்குப் பதிலாக மூன்று வரங்களை உங்களுக்குத் தருகிறேன். என்னென்ன தேவை என்று நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் வணக்கம். உமக்கு நன்மை உண்டாகட்டும்.’

உடனே நசிகேதன் மூன்று வரங்களைக் கேட்கிறான்.

முதல் இரண்டு வரங்களும், நசிகேதனின் தந்தையைப் பற்றியதும், சொர்க்கத்தைப் பற்றியதுமாகும். அதில் ஒன்று, அக்னி யாகம். அதற்காகக் கற்கள் பதித்த ஒரு தங்கச் சங்கிலியை யமன் தருகிறான்.

அது யம தர்மனின் முத்திரை.

மூன்றாவது கேள்வி தான் சிக்கலானது.

`யமதர்ம ராஜரே! ஒரு மனிதன் இறந்த பிறகு, `அவன் இருக்கிறான்’ என்று சிலர் சொல்லுகிறார்கள்; `இல்லை’ என்று சிலர் கூறுகிறார்கள். `உண்மை எது?’. அவன் இருக்கிறானா இல்லையா? இந்தச் சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. இதை எனக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.’

இந்த இருபதாவது ஸ்லோகத்துக்கு விளக்கம் சொல்லும்போது, சுவாமி சின்மயானந்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்:

`உபநிஷத ரிஷிகள் பெருமையே பெருமை! கதாநாயகனுடைய சித்திரத்தைச் சொல்லாத வார்த்தைகளிலேயே எவ்வளவு திறமையாக அமைக்கிறார்கள்! இது ஷேக்ஸ்பியரின் கற்பனைகூடச் செய்ய முடியாத ஒன்றாகும்! அந்த அமர ரிஷிகளுக்கு நம் வணக்கம் நிறைந்த வாழ்த்துக்கள் உரியனவாகுக.’

`நாம் முன்னால் பார்த்தோம்; இலட்சிய (ஆன்ம வித்தை) மாணவனாக நசிகேதன் மனவமைதியையும் இன்பத்தையும் வேண்டி, முதல் வரத்தைத் தீர்த்தான். இரண்டாவது வரத்தை மனித சமுதாயம் ஆசி பெற அர்ப்பணித்தான்; இப்பொழுது கடைசி வரம் என்ற பொழுது தான் தன் நலத்தைப் பற்றி நினைக்கிறான். தன் பெரிய சந்தேகங்கள் ஒன்றைத் தீர்த்து வைக்குமாறு கேட்கிறான்.

தியாகம் வேண்டும். தனக்குரியவர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவருக்கு நன்மை புரிந்து, அவர்கள் நன்மையைத் தன் ஆன்ம விடுதலையை விட முதலில் எண்ணுமளவுக்குத் தன்னுள்ளே, `தயை’ வேண்டும். உண்மையான ஆன்ம முன்னேற்றம் தேடுபவன், உண்மையைத் தேடிச் செல்லும் யாத்திரையில் முழு வெற்றியையும் பெற வேண்டும் என்றால், அவனுக்கு இன்றியமையாத முக்கிய குணம் வேண்டும். இது, இன்று பக்தர்கள் வர்க்கத்தில் மெதுவாக வந்து செறிந்து நிற்கின்ற நம்பிக்கைக்கு நேர்மாறானது தான். தப்பிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அந்தத் தப்பான அர்த்தத்தில் தான் அவர்கள் சங்கடங்கள் தங்கும் குளவிக் கூடும் அமைகிறது.’

`மதத்தைப் பின்பற்றுவது நன்மைக்கமைந்த, சமுதாய அல்லது சமூக வாழ்க்கைக்கு இடையூறு அல்ல; இடையூறாக இருக்கவும் முடியாது. ஆன்மீக வாழ்வு விழைபவன் ஊமையாகவும், செவிடாகவும் இருத்தல் வேண்டும் என்பதில்லை.

அவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் உலகின் தேவைகளும், துயர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் தேடித் தன்னுள்ளே ஓர் அன்பையும், பிறர் துயருக்கு அழுது கரைகின்ற உள்ளப் பொறையையும் பெற வேண்டும். தன் உறவினர், தன் தலைமுறை மக்கள் இவர்களுடைய உள்ளங்களுடன் தன் உள்ளத்தைப் பொருத்தி அறியும் ஆற்றல் இல்லாத ஒருவனுக்கு உண்மையின் கோயிலுக்குள் தூய்மையுள் தூய்மையான அந்த நிலையை அடையத் தகுதி கிடையாது.’

`இந்தச் சுலோகத்திலிருந்து உபநிஷதம் என்பது ஆரம்பிக்கிறது. இதுவரை செய்ததெல்லாம், ஒரு பக்குவமடைந்த ஜீவனைப் பூரண தகுதி வாய்ந்த ஆசாரியரின் எதிரே கொண்டு வருவதற்கான நாடக இயல் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தைக் காட்டி அமைப்பதற்கான முயற்சிதான்.’

`அந்த பிராமணச் சிறுவன் எழுப்பிய சந்தேகம், அவன் `சாஸ்திரப் பண்பாட்டை’யும் அவனது `தன் வளர்ச்சி’யையும் காட்டித் தருகிறது. எப்பொழுதும் இந்திரியங்கங்களையே தேடித் திரியும் மிருக மனிதன், வாழ்க்கையைப் பற்றி முழுதாக எண்ணி, ஆழ்ந்த ஒரு முனைப்பட்ட இவ்விதமான சந்தேகத்தைக் கொள்ள முடியாது. அவன் அதற்காகவும் சமநிலையும், புத்தித் திறனும் கொண்டிருப்பது மிகவும் அபூர்வமே!’

`ஆகா! வாழ்க்கையில் கண்ணீர் வரவழைக்கும் இச்சம்பவம் இருக்கிறதே, சாவு என்ற ஒன்று, அதனுடைய பயங்கர அழகின் சுழலில் விழுந்து தத்தளிக்கிற சிந்தனையாளர்கள் எவ்வளவோ; இன்றும் கூடச் சாவு எல்லா நிலைகளிலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், தத்துவவாதிகள் எல்லோரையுமே தன்பால் ஈர்க்கும் ஓர் அழகிய கருத்துத்தான். ஆனால் இந்தக் கம்பீரமான பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்கள் வருவது மிகவும் குறைவே என்றும் நாம் பார்க்கிறோம்.


ஆனால், முனிவர்கள் தம் அமைதியில் அவர்கள் அறியவும் உணரவுமாகத் தம் கருவிகளை நன்கு தயார் செய்து கொண்டார்கள். பரநிலையான அந்த மேலேயுள்ள உத்தம நிலைக்கு உயர்ந்தார்கள். அமைதியாகக் கவனித்து, விஞ்ஞான முறையில் அலசி ஆராய்ந்து, இந்த அற்புதமான சாவு எப்படி ஏன் என்கின்ற கேள்விக்கு முடிவையும் உண்மையாகக் கண்டுபிடித்தார் கள்.’

`இந்தியத் தத்துவ விசாரணையாளர்களையே எடுத்துக் கொண்டாலும், அவர்களிடையே சாதாரணமாக நிகழக்கூடியதாக இருந்தாலும், விசித்திரமான சாவைப் பற்றி முரணானதும், தம்மையே தாம் மீறுகின்றதுமான முடிவுகளைக் காண்கிறோம். நசிகேதனே இந்தச் சுலோகத்தில் அதைத்தான் சொல்லுகிறான்.

சாவே முடிவு; அதற்கப்பால் சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிலைநாட்டிய விசாரணையாளர்களில் சில வர்க்கங்கள் இருக்கின்றன. மாறுபட்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள், `அது உண்மையல்ல. சாவுக் குழிக்குப் பின்னும் வாழ்வு இருக்கிறது,’ என்று வாதம் புரிந்து நிலை நிறுத்தவும் செய்கிறார்கள்’.

`சாவுக்குப் பின் வாழ்வு உண்டா? இல்லையா?’ என்ற கேள்வி, மனதும் புத்தியும் புகழக்கூடிய பிரதேசத்திற்குரிய ஒன்றன்று. நம் எல்லைக்கு அப்பால் ஒரு ஞான உலகம் பரவியிருக்கிறது என்பது உண்மை. உணர்ச்சி தரும் மனதும், சிந்தனை புரியும் புத்தியும் மிக மிக முயன்றாலும், அந்த உலகத்தைக் குறித்துக் கையை நீட்டி விரலைக் காட்டித் தெளிவற்ற சில வழிகளை மட்டுமே காட்ட முடியும். அந்தச் சுத்த அறிவின் தேசத்துக்குப் போக வேண்டுமே! சாதாரண மனிதனிடம் அதற்குத் தக்க வாகனம் கிடையாது! அவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சரி; உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாலும் சரியே. துறவு, ஞானம் இவ்விரண்டின் சீமான்கள் தான் அந்த சகஜ ஆற்றல் பெற்றிருப்பார்கள். அவர்கள் தம் விருப்பப்படி ஒருவனை அந்த `அப்பாலுள்ள’ தேசத்துக்கு அழைத்துச் செல்ல முடியும்.

`சுருங்கக் கூறினால், இப்படிப்பட்ட அப்பாலுக்கு அப்பாலைப் பற்றிய கேள்விகள், வார்த்தைகளாலே விளக்கப்பட முடியாதவை. நமக்குத் தெரிந்த சாதாரணமான நேர் அறிவு, அனுமானம், ஒத்திட்டு அறிதல் முதலிய எந்த அறிவும் நிரூபணத்தின் மூலமும் காட்டி நிலை நாட்டிவிட முடியாதவை. அவற்றை அணுகித் தீர்க்க ஒரே முறைதான் உண்டு. `ஆகமம்’ மூலம் தான் அது முடியும். ஆன்ம அறிவு கைவந்த மகான்கள் தந்த ஞானச் சொற்களைத்தான் `ஆகமம்’ என்கிறோம். அந்த ஞான சீலர்களைச் `சாது’க்கள் என்றும் `முனிவர்கள்’ என்றும் சொல்கிறோம்.’

`ஆகவே தான் நசிகேதன் யமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர் தர்மங்களுக்கெல்லாம் அரசரல்லவா! அதனால் தான் அவரிடம் இந்தக்கேள்வியைக் கேட்டதில் நியாயம் இருக் கிறது.’

`முக்கியமாகப் புத்தரைப் பின்பற்றும் சூனியவாதிகளும், இந்துக்களிடையே உலகாயதவாதிகளான சர்வாகர்களுமே, `முடிவு ஒரு சூனியமே’ என்று முடிவு செய்கிறவர்கள்.’

உலகாயதவாதிகள் வாதம் இதுதான்: `உடல்தான் எல்லாம். உயிர் என்பதை கை, கால்கள் முதலிய அங்கங்களைச் சேர்ப்பதால், தானே ஏற்படும் ஓர் அற்புதமே!’

`அவர்கள் வாதத்தில், உயிர்க்கும் இந்த உயிரின் இனிய வெம்மை, உடலின் இன்ப துன்பங்களுக்கு இறைவனாக நிற்கும் அந்தத் தெய்வ சக்தியல்ல. ஆனால், அது தானாகச் சேர்க்கையின் பொழுது ஏற்பட்ட ஒரு சினைப் பொருள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்றால் ஒரு செந்நிறம் தனித்துத் தானாக நேர்கிறதல்லவா? அந்த மாதிரி அந்த நிறம், இந்தத் தனித்தனி ஒன்றிலுமே இல்லையே! அதேபோல அவர்கள் கட்சி, உடலின் அங்கங்களைச் சேர்த்தால், அதாவது இயற்கை அவ்விதம் சேர்க்கும் பொழுது உயிர் தோன்றுகிறது! அப்படிப் பேசுகிற குழுவினருக்குச் சாவு என்பது உடல் மறைவு; உயிரின் சூன்யம் அவ்வளவுதான். சூனியத்திலிருந்து உயிர் வெளியாகிறது; கொஞ்ச நேரத்திற்கு நிச்சயமற்ற சில ஆட்டங்கள் போடுகிறது; பிறகு சூனியத்திலே மறைந்து விடுகிறது.’

`பகுத்துச் சிந்திக்கும் ஒருவனுக்கு அந்தத் தத்துவம் தகர டப்பாச் சத்தம் என்று தெரியும். சூனியத்திலிருந்து ஒன்றும் ஆகாது. அதற்குள் ஒன்றும் மறையவும் முடியாது – மீண்டும் சூனியமாக!’

`புத்த மதத்தைச் சேர்ந்த சூனியவாதிகளின் கட்சி வாதங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் சொல்வதையே அவர்கள் வாதம் கண்டிக்கிறது. இதை நாம் வெகு சுலபத்தில் புரிந்து கொள்ளலாம். பரம உண்மை என்பது நிர்வாணம் அல்லது இல்லாதிருக்கும் தன்மை என்று நிலைநாட்ட அவர்கள் வாதம் புரிகின்றார்கள். அதுவே, முன்னுக்குப் பின் முரணான வாதம். சங்கர பகவத் பாதாள், அதே வார்த்தையையே எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள். வாதக் களத்திலிருந்தே அவர் களை விரட்டி விடுகிறார்கள்.’

`அவர்கள் சொல்லுகிறதை அப்படியே ஒப்புக் கொள்வோம் என்றால் என்ன முடிவு ஏற்படும்? அவர்கள், இல்லாதிருக்கும் இருப்பை அறிந்தவர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சங்கராசாரியார் மற்றும் வேதாந்திகள் கருத்துப்படி, `இல்லாதிருக்கும் நிலை’யை அறிகிறவன் அல்லது அந்த அறிவாகிய ஞானம்தான் பரம தத்துவம். நம்முன் இருக்கும் இந்த ஞானம் அல்லது அறிகின்ற அந்தப் பொருள் தேய்வதில்லை. சாய்வதில்லை.’

`ஆகவே, வெறும் ஏட்டுப் படிப்பெல்லாம் ஞானம் விழைபவனைக் குழப்பப்படுத்தும். பலதரப்பட்ட சிந்தனையாளர்கள் தங்கள் முறையில் தங்கள் மனப்பாங்கு, பண்பாட்டுக்கு ஏற்றவாறு தனித்தனியே எண்ணி வாதம் புரிந்து முடிவு காணுகிறார்கள். அந்த முடிவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாயிருக்கின்றன. உண்மையான தீர்ப்பைத் தருவதுதான் யார்? எந்தத் தர்மபுத்திரன் நமக்கு உண்மையைச் சொல்வார்? அந்த உண்மையை உள்ளபடி அனுபவித்துணர்ந்த ஆத்ம ஞானிதான் செய்ய முடியும். ஆகவே, நசிகேதன், யம தர்மனைப் பார்த்து இந்த ஆத்யாத்மிகக் கேள்வியைக் கேட்டது முற்றிலும் சரியே!’

இந்தக் கேள்வியால் யம தர்மனுக்குப் பயம் வந்து விடுகிறது.

`நசிகேதா! இந்த விஷயத்தில் தெய்வங்களே சந்தேகம் கொண்டிருக்கின்றன. உண்மையில் அதைப் புரிந்து கொள்வது சுலபமில்லை தான். தயவு செய்து என் பொருட்டு நீ இதைக் கேட்காதே!’

நசிகேதன் சொல்லுகிறான்:

`மரணத்தின் தந்தையே! இறைவனுக்குக் கூட இதில் சந்தேகம் உண்டு என்று நீ சொல்கிறாய். இதை அறிய முடியாது என்கிறாய். ஆகவே எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது; இதற்குப் பதில் சொல்லக் கூடியவன் நீ ஒருவனே! எனது இந்த மூன்றாவது வேண்டுகோள் மிக முக்கியமானது.’

நசிகேதன் விடவில்லை; மரண ரகசியத்தை வெளியிட யம தர்மனும் தயாராக இல்லை.

`உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், மக்கள், பேரர்கள், நூறு வயது, தங்கம், பசுக்கள், ராஜாங்கம் எல்லாம் தருகிறேன். அழகான பெண்களைத் தருகிறேன்; சேவகர்களைத் தருகிறேன். அனுபவி. மரணத்தின் ரகசியத்தை மட்டும் கேட்காதே!’ என்றான் யம தர்மன்.

`யம தர்மா, மரணத்தை மடியில் கட்டிக் கொண்டு இவற்றை அனுபவிப்பது எப்படி? ஆகவே, அந்த ரகசியத்தை நீ சொல்லியே ஆக வேண்டும்’ என்கிறான் நசிகேதன்.

யம தர்மன் வேறு வழியின்றிச் சொல்லத் துவங்குகிறான்…

`நசிகேதனுடைய வாதம் மிகவும் ஆணித்தரமானது. கடோபநிஷத்தின் முக்கியமான பகுதி அதுதான். ஆனால், அவன் நின்ற இடம், மரணத்தின் ரகசியத்தைத் தவிர வேறு ஒன்றும் கேட்க மாட்டேன் என்பதே. ஒரு இலட்சியப் பிடிப்பை இதில் காண்கிறோம்.’

`ஒரு ஏழை, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். லட்ச ரூபாய் தருகிறேன், என் பெண்ணை மறந்து விடு’ என்று சொன்னால், சிலர் மறந்து விடுவார்கள்.

ஆனால், நசிகேதனோ, பூலோகம் தெரிந்து கொள்ள விரும்பும், `மரண ரகசிய’த்திலேயே நிற்கிறான்.

யமன் சொல்லும் ரகசியமோ, திடுக்கிடத் தக்கதாக இல்லை. அது, பகவத்கீதையின் மற்றொரு பதிப்பாக நின்று ஆன்மாவையும், பற்றற்ற தன்மையையும் அதிகம் பேசுகிறது.

நித்தியம், அநித்தியம் இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைக் கூறுகிறது.

மேலும் `அர்த்தமுள்ள இந்துமதம்’ வாசகர் களுக்குப் பிடிபட முடியாத கடினமான தத்துவங்களை விளக்குகிறது.

ஆனால், சுருக்கம் இதுதான்.

ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்தவன், மரணமடைந்தாலும் அவன் செத்ததாக அர்த்தமில்லை. அது அல்லாதவன் மட்டுமே இறந்தவனாகக் கருதப்படுகிறான்.

`கடோபநிஷத்தைப் படித்ததில் இருந்து ஒன்று எனக்குப் புரிகிறது. பகவான் கீதையில் சொல்வது போல், `எதிலும் சம நோக்கு உள்ளவனே மரணமற்ற நிலையை எய்துகிறான்,’ என்பதே அது.

கிட்டத்தட்ட ஒரு மரம், அல்லது மலையின் நிலை தான்.

வெயிலடித்தாலும் பனி விழுந்தாலும் எல்லாவற்றையும் அவை ஒரே சீராகத் தாங்கிக் கொள்கின்றன.

இது ஒரு பக்குவ நிலை.

மனிதன் விலங்காக இருந்தால், அந்த விலங்கிற்கும் குறிப்பிட்ட சில உணர்ச்சிகள் இருக்கின்றன. தெய்வமாக இருந்து விட்டால் கேள்வியே

இல்லை.ஆனால், அவன் மனிதனாகவே இருக்க வேண்டும். இருட்டையும் வெளிச்சத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.

`இந்த யோக நிலையை எய்தியவன், இறந்தும் வாழ்கிறான்’ என்கிறான், யம தர்மன்.

`அவன் உயிரை நான் கொண்டு போகவில்லை! வெறும் சக்கையையே கொண்டு போகிறேன்!’ என்பது யம தர்மன் வாதம்.

மானிட ஜாதி முழுவதும் இந்தப் பக்குவ நிலையை எய்திவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடும்.

வீட்டுக்குக் கதவும், பூட்டும் தேவைப்படாது.

கோர்ட்டிலே சத்தியப் பிரமாணம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒருவன் மனைவி, இன்னொருவன் பக்கத்திலே தூங்கலாம்; அவர்கள் இருவரும் தொட மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறுக்கே போடப்பட்டுள்ள திரைகள் விலகிவிடும்.

ஆசை என்ற வார்த்தை இல்லாமற் போய்விடும்.

`எல்லாம் அநித்தியம்’ என்பது உணரப்பட்டு விடும்.

`காமம் என்பது ஒரு குழந்தையின் ஜனனத்துக்காவே’ என்ற உணர்ச்சி வந்து விடும்.

`பொருள் என்பது உயிர் வாழ்வதற்கு மட்டுமே’ என்ற நிலை தோன்றிவிடும்.

ஏமாற்றுதல், கலகம் செய்தல், பதவிப் போட்டிகள் நீங்கி விடும்.

கட்சிகள் இருக்கமாட்டா.

அப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தான் பதவிக்கு வரவேண்டும் என்று கருதமாட்டார்.

அடுத்தக் கட்சிக்காரனைப் பார்த்து, `நீங்களே வரவேண்டும்’ என்று ஆசைப்படுவான்.

`நான், என்னுடையது’ என்ற எண்ணம் அடங்கி விடும்.

பங்கீடு செய்து வாழத் தோன்றும்.

`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்ற காந்திஜியின் ஆசை கைகூடும்.

சொல்லப் போனால், துயரங்களுக்கெல்லாம் எவை எவை காரணமோ, அவையெல்லாம் அடிபட்டுப் போகும்.

இப்படிப் பக்குவம் பெற்று விட்ட மனிதன் மரணமடைந்தாலும், மரணமடைவதில்லை.

`துன்பத்திற்குரிய மரணம்’ என்ற நிலையில் இருந்து விடுபட்டு விடுகிறான்.

இதுவே யோகங்களில் எல்லாம் கர்ம யோகம்.

நூற்றுக்கு நூறு ஜனங்களுக்கு இது வருமா?

வருவது கடினம்.

வந்துவிட்டால் மத்திய சர்க்காரும் கிடையாது. மாநில சர்க்காரும் கிடையாது!

சோஷலிச, கம்யூனிஸம், முதலாளித்துவம் எதுவும் கிடையாது.

மனிதத் தன்மை என்ற ஒன்றே நிலைபெற்று விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக