திங்கள், 3 ஏப்ரல், 2017

எம்பிரான் செய்யும் நாடகம்

நம்மில் பலருக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. நமது பூஜையையோ அல்லது கோரிக்கைகளையோ இறைவன் ஏற்றுக்கொண்டு  செவி சாய்க்கிறானா என்பதே அது. " செய்யாத பூஜையோ பரிகாரமோ , ஏறாத கோவில்களோ இல்லை,இருந்தும்  என் பிரார்த்தனை இறைவனின் செவிகளில் விழவில்லையே "  என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்கிறோம். சற்று அமைதியாக யோசித்தால் ஒரு உண்மை தெரியக் கூடும். நாம் உண்மையிலேயே பூஜையில் லயித்து விடுகிறோமா என்று கேட்டுப் பார்த்துக் கொண்டால் , உள் மனது இல்லை என்றே சொல்கிறது. அதேபோல் கோயில் கோயிலாகச் சென்றாலும் ஆனந்த  நீர் அருவி பெருக இறைவனைத் தரிசிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கோயில் வாசலில் விட்டு வந்த செருப்புக்களும் அடுத்த பஸ் போய் விடக்கூடாதே என்ற கவலையும் முன்னே வந்து நிற்கின்றன. 

திரை போடப்பட்டிருந்தால் எப்பொழுது இந்தத் திரை விலகி சுவாமி பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. ( கவனிக்கவும்: தரிசித்துவிட்டு என்பதற்குப் பதில், பார்த்துவிட்டு என்று எழுத வேண்டியிருக்கிறது) இந்த அவசர  வழிபாடும் பிரார் த்தனையும் நமக்கு வசதியாகச் சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் சிறப்புக் கட்டணம் செலுத்தி விட்டு எல்லோரையும் முந்திக் கொண்டு உள்ளே செல்லவும் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட நமக்கோ வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டும் என்ற பேராசை! கால தாமதமானால் கடவுளுக்குக் கண் இல்லை , காது இல்லை என்று அங்கலாய்க்க மட்டும் தெரிகிறது. நாம் கூப்பிட்ட குரலுக்கு சுவாமி ஓடி வர வேண்டும் என்றால் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? அப்படித் தகுதி உள்ளவர்களோடு பழகினால் நமக்கும் அத்தகுதி பெறுவது சற்று எளிதாகி விடும் அல்லவா? அதற்குத் தான் நாம் தயாராக இல்லையே!!!

மாணிக்க வாசகர் அருளுவதை இப்போது கருத்து உணர்ந்து  பார்ப்போம். " உன்னுடைய அடியார்களோடு இணங்குவதற்கு அடியேனுக்குத் தகுதி இல்லை. அப்படி இருந்தும் இத் தகுதி இல்லாதவனைத்  திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டருளினாய். ( " சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்.." - திருவாசகம் )  நீயோ நிர்மல மணி . மாசிலா மணி. நானோ பொல்லாக் குரம்பையில் ஐந்து புலன்களால் அலைக்கப்படுபவன் . உன் அருள் பெறும் நாள் என்று என்று ஏங்குகிறேன். நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன். அவ்வடியார்களுக்கு வீடு பேறு  கிடைக்கும் என்பதால் எனக்கும் அப்பேறு கிடைக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டு , மிகப் பெரிதும் விரைகின்றேன். நானோ உனது கழலடிகளை நினைந்து உருகி அப் பாத மலர்களுக்கு நல்ல மலர் புனையாதவன் . நாக்குத் தழும்பு ஏற அகம் குழைந்து, அன்பு உருகிச்  சொல் மலர்களாலும் தோத்திரங்களாலும் துதிக்கவில்லை. நின் திருக்கோயிலைத் தூகேன்,மெழுகேன், கூத்து ஆடேன். அலறிடேன்.உலறிடேன். ஆவி சோரேன். வியந்து அலற மாட்டேன். வல்வினைப்பட்டு ஆழ்கின்றேன். யாவரினும் கடையவனாக இருந்தும் உனக்கு அன்பன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

உன் நாமங்களைக் கேட்ட அளவில் பதைத்து உருகும் அடியார்கள் எத்தனையோ பேர். அப்படிப்பட்ட அடியார்கள் இருக்கும்போது என்னுடைய தகுதி இன்மையைப் பொருட் படுத்தாமல் நீ ஆட்கொண்ட கருணையைக் கண்ட பிறகாவது என் நெஞ்சம் உருகி இருக்க வேண்டும். உடம்பெல்லாம் கண்களாகி ஆனத்தக் கண்ணீர் சொரிந்திருக்க வேண்டும். ஆனால் நானோ தீ வினையேன். எனது நெஞ்சம் கல்லாகி நிற்கிறது. கண் இணைகள் மரம் போல விளங்குகின்றன. மாக் கருணை வெள்ளமாக  நீ அருளியதை நோக்கும் போது அடியேனுக்கு நகைப்பு வருகிறது. ஏன் தெரியுமா? அல்லும்  பகலும்  தேவர்களும் முனிவர்களும் பிறரும் உனது அருள் பெறக் கடும் தவம் செய்தும் அவர்களை விடுத்துப்  புன்மையான இந்த எளியவனை மிகவும் உயர்த்தியுள்ளாய் அல்லவா? அதை நினைக்கும் போது நகைப்புத்தான் வருகிறது. இதுவும் உனது நாடகம் (திருவிளையாடல்)என்றே எண்ணத் தோன்றுகிறது.
    
"புகவே தகேன் உனக்கு அன்பருள் 

யான் என் பொல்லா மணியே 

தகவே எனை உனக்கு ஆட்கொண்ட 

தன்மை எப்புன்மையரை 

மிகவே உயர்த்தி விண்ணோரைப் 

பணித்தி அண்ணா அமுதே 

நகவே தகும் எம்பிரான் என்னை 

நீ செய்த நாடகமே. "

நாத் தழும்பு ஏற நாமங்களால் துதித்திலேன் என்று மணிவாசகர் கூறினும் இந்த ஒரு பாடலில் பெருமானை, " பொல்லா மணியே என்றும் அண்ணா என்றும் அமுதே என்றும் எம்பிரான் என்றும் பலவாறு பரவியிருப்பதைக் காணலாம். எனவே அவர் கூறிய புன்மைத் தன்மை அவருக்கு ஒருபோதும் பொருந்தாது. நம் போன்றவர்களுக்கே சாலப் பொருந்தும். 

இறையருள் பெறுவதற்கு உரியவர்களாக நம்மை நாம்  தயார் படுத்திக் கொண்டால்  இன்றைக்கும் பெருமான் பல்வேறு நிலைகளில் நமக்கு அருள் புரிகிறான் என்பது பெரியோர்கள் அனுபவத்தால் கண்ட உண்மை. அதற்கு அடுத்த நிலையாவது, அடியார்களோடு இணங்குவது. அதுவும் இறையருளால் மட்டுமே நடை பெறுவது.அந்த அனுபவம் நமக்கும் கிடைக்குமாறு பெருமான் கருணை புரிய வேண்டும்.

திருசிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக