சைவ சமயத்தின் தொன்மை
செவ்வாய், 28 மார்ச், 2023
அடியார் இலக்கணம்
அடியார் இலக்கணம்
பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி
பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி
சனி, 25 மார்ச், 2023
பக்திக்கு இரண்டு பாதைகள். (குரங்கு மற்றும் உடும்பின் உருவங்க)
பக்திக்கு இரண்டு பாதைகள். இறை நம்பிக்கை என்றவுடன், இறைவன் இருக்கிறார் என்று நம்புவதும், அவரை தொழுவதும் பூஜிப்பதும் தான் இறை நம்பிக்கை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. சைவ சமயத்தின் பக்தி மார்க்கத்தில் இறை நம்பிக்கையை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கிறார்கள்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமானால் திருப்பெருந்துறை என்று போற்றப்படும் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்றால் இறைவனை (திருவை) அடையக்கூடிய (பெரும்), இறைவனுடன் பயணிக்கக்கூடிய இடம் (துறை) என்று பொருளாகும்.
குருவாக தோன்றி தனக்கு உபதேசம் செய்து, பின் மாயமாய் மறைந்த சிவபெருமானின் (தட்சிணாமூர்த்தி) நினைவாக, மாணிக்கவாசகர் பெருமான் ஆத்மநாதர் திருக்கோயிலை அங்கு அமைத்தார். அந்த கோயில் முழுவதுமாக ஆகம விதிகளுக்குள் அடங்காமல் அமைக்கப்பட்டுள்ளது, மூலவர் சிலை, கொடிமரம் கூடக் கிடையாது என்பது அதன் சிறப்பு.
அந்த சிறிய கோயிலுக்கு அருகே மாணிக்கவாசகர் தனது ஆத்ம குருவான தட்சிணாமூர்த்தியை கண்ட குருந்த மரம் என்று நம்பப்படும் இடமும் அமைந்துள்ளது. அந்த குருந்த மரத்தின் வழித்தோன்றல் என்று நம்பப்படும் மரம் இன்றும் அங்கே உள்ளது. பிற்காலத்தில் ஆண்ட மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்த கோயிலைச் சுற்றி பல வசதிகளை உருவாக்கி கோயிலை விரிவாக்கம் செய்து மதில் சுவரையும் எழுப்பியுள்ளார்கள்.
அந்த கோயிலின் நுழைவாயிலில் மேற்கூரையில் குரங்கு மற்றும் உடும்பின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களுக்கு என்ன பொருள் என்று விளங்காததால் மனிதர்களின் தாவிக்கொண்டே இருக்கும் மனதையும், பிடிவாத குணத்தையும் குறிக்கும் சிற்பங்கள் என்றுதான் முதலில் நினைத்தேன் பின்புதான் அந்த சிற்பங்களின் பொருள் விளங்கின.
சைவ சமயத்தில் மனிதர்கள் இறைவனின் மீது செலுத்த வேண்டிய பக்தியை இரு பெரும் வகைகளாக விளக்க அந்த குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களை வடித்துள்ளார்கள். முதலாவதாக முழுமையாக இறைவனிடம் சரணாகதி அடைதல், இரண்டாவதாக மாணிக்கவாசகர் கூறுவதைப் போன்று “சிக்கெனப் பிடித்தல்”.
பெரியபுராணத்தில் வருகின்ற நாயன்மார்களின் பக்தியைப் போன்று என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறவாமல், இறைவனை விட்டு விலகாமல், சந்தேகம் கொள்ளாமல் முழுமையாக உடல், மனம் மற்றும் உயிரை ஒப்படைத்தல்.
“என் செயலாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்” என்று பட்டினத்தார் பாடியதைப் போன்று உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக இறைவனிடத்திலே ஒப்படைத்து எனக்கு என்ன நேர்ந்தாலும் அது உன் சித்தம் என்று மனமார ஏற்றுக் கொள்வதை குரங்கு சின்னம் குறிக்கிறது.
“கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே” என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடியதைப் போன்று உயிர் பிரியும் நிலையிலும் இறைவனைச் சார்ந்து இருப்பதை உடும்பு சின்னம் குறிக்கிறது.
தன் குட்டியை சுமந்துள்ள தாய் குரங்கு என்ன செய்தாலும், எத்தனை மரத்துக்குத் தாவினாலும் குட்டிக் குரங்கு அமைதியாக தைரியமாக இருக்கும். காரணம், என் தாய் எந்த சூழ்நிலையிலும் என்னைக் கைவிட மாட்டாள் என்று நம்பி குட்டி குரங்கு தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைக்கிறது.
தாய் குரங்கை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைத்த குரங்கின் குட்டியைப் போன்று இறைவன் மீதுள்ள நம்பிக்கையினால் உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக ஒப்படைத்தல் சரணாகதியாகும். எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் இறைவனை விட்டு விலகாமல், இறைவனை மட்டுமே சார்ந்திருப்பதை உடும்பு குறிக்கிறது.
உறுதிக்கும், பிடிவாதத்திற்கும், உடும்புப் பிடி என்று பெயர் பெறும் அளவுக்கு உடும்பின் பிடி உறுதியானது. உடும்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டால் எதற்காகவும் விடாது. ஒரு சிறு துன்பமோ கவலையோ சோதனையோ தோன்றியவுடன் கடவுளே உனக்கு கண்ணில்லையா? மூக்கில்லையா? என்று கதறாமல் இறைவன் எனக்கு எதைக் கொடுத்தாலும் அதன் பின் நிச்சயமாக ஒரு காரணமும் நன்மையும் இருக்கும் என்று முழுமையாக நம்பி, வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெற்றியோ, மகிழ்ச்சியோ உண்டான உடன் இது என் திறமை என் உழைப்பு என்று கர்வம் கொள்ளாமல் இவை அனைத்தும் இறைவன் இட்ட பிச்சை என்று தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அவநம்பிக்கையோ, கர்வமோ மனதில் குடி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் உடும்பைப் போன்று பக்தியால் இறைவனைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடும்பு சின்னமும். குரங்குக் குட்டியைப் போன்ற முழு மனதாக சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காக குரங்கு சின்னமும் ஆத்மநாதர் திருக்கோயிலின் நுழைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளன
இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி
இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி
கல்வி அறிவோடு, ஆன்மிக அறிவையும் வளர்த்து வந்தார், பிரகலாதன். பிரகலாதன் சொன்ன 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பிரகலாதன் 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே காண்போம்
1. சிரவணம்:- இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது 'சிரவணம்' என்னும் பக்தி முறையாகும். சொற்பொழிவு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
2. கீர்த்தனம்:- நம் வாயால் இடைவிடாமல் இறைவனின் புகழைப் பாடுவதையே, 'கீர்த்தனம்' என்கிறோம். இது பாடலால் இறைவனை அடையும் பக்தி முறை.
3. ஸ்மரணம்:- நாவால் சத்தமாக இறை வனின் நாமத்தை உச்சரிப்பது, 'ஸ்மரணம்' என்னும் பக்தி வழிபாடாகும். இதனை தன் வாழ்நாளில் சிறப்பாகச் செய்து, இறைவனின் அருளைப் பெற்றவர், பிரகலாதன்
4. பாதசேவை:- எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் குறையாத பக்தியோடு இறைவனின் பாதங்களுக்குச் செய்யும் சேவையே, 'பாதசேவை' என்னும் பக்தி முறை. இந்த மகத்தான இறை வழிபாட்டை முறையாக, எப்போதும் செய்யும் பெரும் பேறுப் பெற்றவர், லட்சுமிதேவி.
5. அர்ச்சனை:- மனதில் எந்த களங்கமும் இல்லாமல், மலர்களைக் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் பூைஜயே 'அர்ச்சனை' என்னும் பக்தி முறை. இறைவனுக்கு அர்ச்சனை செய்து அதன் வாயிலாக பெரும் பேறுபெற்றவர்கள் ஏராளம்
6. வந்தனம்:- எட்டு அங்கங்களும் நன்றாக நிலத்தில் படும்படி, இறைவனை வணங்குவது 'வந்தனம்' ஆகும்.
7. தாஸ்யம்:- இறைவனுக்கு பணியாளனாக இருந்து நேசத்துடன் தொண்டு செய்வது 'தாஸ்யம்' என்னும் பக்தி முறை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற ரீதியில் இறைவன் மீது பக்தி செலுத்தும் சிறப்பான வழிபாட்டு முறை இது.
8. சக்யம்:- இறைவனை தன்னுடைய பக்தனாக நினைத்து அவருடன் நட்பு கொள்வது 'சக்யம்' என்னும் பக்தி முறை. தன்னுடன் இருப்பது இறைவன் என்று அறிந்திருந்தாலும், அவரைத் தன்னுடைய நண்பனாக பாவித்து, அனைத்து நல்லது கெட்டதுகளையும் பக்தி கொண்டு பாசம் காட்டும் ஒரு வழிபாட்டு முறை. இதனை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவன், அர்ச்சுனன். மற்றும் சுந்தரர்
9. ஆத்மநிவேதனம்:- தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எந்தவித தயக்கமும் இன்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பதே 'ஆத்மநிவேதனம்' என்னும் பக்தி முறை. இதனை 'சரணாகதி' வழிபாடு என்றும் கூட சொல்லலாம்.
இவ்வழி முறைகளில் யாதேனும் ஒன்றையாவது முறையாக பயன்படுத்தி அன்பு செய்தால் இறைவனின் திருவடியை நிச்சயம் அடையலாம்.
திருச்சிற்றம்பலம்
இறை வழிபாடு பற்றிய சிந்தனை
இறை வழிபாடு பற்றிய சிந்தனை
*ஓம்*
*சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய*
*சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய*
இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்
இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை, பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்
இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பொரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும் பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்
இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,
இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்
இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.
இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.
இறை வழிபாடு என்பது ஏழைகளுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்
இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.
இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,
இறைவழிபாடு என்பது எல்லாம் செயல்களும் இறைவன் அருளால் அவன் செயலால் நடக்கிறது என்பதை உணர்த்துவது
இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.
இறை வழிபாட்டின் இரண்டு கண்கள் நேர்மையும், உண்மையும் ஆகும்.
விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.
நன்றி : தமிழ் வேதம்
புதன், 22 மார்ச், 2023
பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு
பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு
பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.
பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும் குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.
முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.
பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.
இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.
இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.
பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.இதனை அவர் பாடிய பாடல்
இதனைத்தான் அப்பர் அடிகள்
" நிலைபெறுமாறு எண்ணுதியே நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
பூமாலை புணர்ந்தேத்தி புகழ்ந்து பாடி
தலையார கும்பிட்டு கூத்தும்ஆடி
சங்கரா செய செய போற்றி "
என்று பாடி உழவாரப்பணியில் அவன் தொண்டு பற்றி கூறியுள்ளார்
இறைவனை அவன் கோயில் சென்று சென்று வழிபடுங்கள் தங்கத்தை மெருகு கூட்டத்தான் மிளிரும், எனவே அவன் அருளை பெற அவன் தாள் வணங்கினால் தான் இறை அருள் மிளிரும். புதையுண்ட தங்கம் மிளிராது. அவனை சென்று சென்று வணங்கினால் தான் அவன் அருள் வெளிப்படும்.
அபிசேகப்பொருட்கள் தருவோர் பூமாலை கொடுப்போர் இறைப்பணி செய்வோர் அருச்சனை செய்வோர் என அடியார்கள் கூடி செய்யும் கூட்டு வழிபாடு அடியாரகள் யாரும் கலந்து அருள் பெற வேண்டும் என்பதே இதன் அடிப்படை நெறி.
கூட்டு வழிபாடு மிக அவசியமானஒன்றாகும், ஒரு நூல் தேரினைஇழுத்துவிட முடியாது,அந்நூல்பல சேர்ந்து ஒரு பெரிய கயிறாகுமானால் தேரினை மிகச் சுலபமாக இழுத்து விடும். ஒரு மரம் தோப்பாவதில்லை அது போல ஒரு கை ஓசை கேட்பதில்லை, எங்கும் பரவி இருக்கும் இறைவனின் கருணை வெள்ளத்தை கூட்டு வழிபாட்டின் மூலம் ஈர்த்து விடலாம் எனவே தான் கூட்டு வழிபாடு செய்ய அழைக்கிறார் அப்பர் பெருமானார்
" பரவுமின் பணிமின் பணிவா ரொடே
விரவுமின் விரவாரை விடுமினே " திருமு,5 பதி, 43. பாடல் 5
சிவபெருமானாரை அன்புடன் பணிகின்றவர்களுடன் கூடுங்கள் அவரை சிவனாகவே எண்ணி அன்பு காட்டுங்கள் அவ்வாறு இல்லாதவரைக் காணின் அவரை விட்டு விலகிவிடுங்கள். தொ ண்டரோடு கூடுங்கள் உங்களின் வல்வினைகள் யாவும் அழிந்தொழியும், திருஞான சம்பந்தர் பெருமானின் திருமணத்திற்கு வந்தவர்ள் அனைவரும் அவன் அருளால் தானே முக்தி பேறு பெற்றார்கள் எனவே நல்லாரோடு சேர்ந்தால் நாமும் அவர்களுடன் பயன் பெறுவோம். அடியோர்களுடன் கூடி வாழ்வதால் அவர்கள்மத்தியில் இறைவன்இருப்பான் என்பது மணிவாசகர் வாக்கு
பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்
திருச்சிற்றம்பலம்
செவ்வாய், 21 மார்ச், 2023
சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமாவாசை பூசை
சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் 21.03.2023 செவ்வாய் கிழமை காலை சுமார் 9.00 மணி அளவில் சுந்தரபாண்டியம் அருள்மிகு சக்தி பீட உபாசகர்கள் மற்றும் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக பங்குனி மாத அமாவாசை, சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும், அருள்மிகு கைலாய நாதருக்கும், அமாவாசை பூசை , தேவாரப் பாடல்களுடன், தமிழ் அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும், அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற்றது, திருச்சிற்றம்பலம்
வெள்ளி, 17 மார்ச், 2023
மானிடப்பிறப்பின் மான்பு
மானிடப்பிறப்பின் மான்பு
சைவ சித்தாந்தத்தின் அடிப்படையும், முக்கிய பொருள்களாக கருதப்படும் முப்பொருளுமான,அனாதி பொருளுமான பதி,பசு, பாசம் என்றவற்றில் பசுவாகிய உயிர் பொருள் பாசத்தை சார்ந்தும், பின் இதனை விட்டு விலகி, பதியினை சாரவும் வழி முறைகளை உயிர்க்கு உணர்த்துவதே சைவ சித்தாந்தம் , இந்த மூன்று முக்கிய பொருள்களில் பசுவாகிய ஆன்மா தன்னுடைய வினைக்கு ஈடாக இறைவனால் தனு கரண, புவன, போகங்களை பெற்று,பாவ புண்ணிய வினைகளை செய்தும், நீக்கியும் பிறப்பற்ற நிலைக்கு உந்தி இறைவனை அடைய பலபிறப்புக்களுக்கு ஆளாகிறது. மாணிக்கவாசகர் கூற்றுப்படி, அது, " புல்லாகி பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாய், பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய் கணங்களாய், வல்லசுர ராகி, முனிவாய், தேவராய், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" ,,, என்றபடி உயிர்கள் நான்கு வகை தோற்றம், எழுவகை பிறப்பு, எண்பத்து நாக்கு நூறாயிரம் என்னும் யோனி பேதங்களை உடையதாய் அறிவுக்கறிவாய் நின்று பரிந்து வளர்ந்து பரிிமாணிக்கிறது,
இவ்வுயிர் இனங்களுக்குள்ளே மானிட பிறவியானது முதன்மை வாய்ந்து விளங்குகிறது. மானிப்பிறப்பில் மட்டுமே உயிர்கள் தவம் செய்து பக்குவம் பெற்று பாசம் நீங்கி பதியை சேர்ந்து, மறு பிறப்பு இன்மையை பெறுகிறது. பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு இதுவே வேண்டப்படுகிறது. இதனாலேயே பெறுதற்கரிய பிறவியாகிறது. இதனை தாயுமான சுவாமிகள்..
" எண்ணரிய பிறவிதனில் யாதினும் அரிதரிது காண்
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, ஏது வருமோ அறிகிலேன்" என்கிறார்.
சுவாமிகளின் வழித்தோன்றல்களாய் பெறற்கரிய மானிடப் பிறவியை பெற்ற நாம் இப்பிறவியின் பரமப் பிரயோசனத்தை அடைய முயனுவதே மாண்புடையதாகும். இந் நன் முயற்சிக்கு எம்மாட்டு சில சிறப்புக்கள் வேண்டப்படுகின்றன. சைவ சமயத்தில் வேத சிவாகமங்கள் பயிலப்டும் நாட்டில் தவஞ் செய்தற்குரிய சாதியில் பிறத்தல் வேண்டும். பல பிறவிகளில் செய்த பெரும் புண்ணியப் பயனால் இந்நிலையை எய்திய போதும், சிறப்புடைய அருட் பேறு பெற விரும்புவோர் உலக வாழ்க்கையில் உயர்ந்ததாக கருதப்படும் கல்விப்பேறு, காணிபூமிப்பேறு, பெரும்பதவி பேறு, பிற பொருட்கள் பேறு, முதலியவற்றால் மயங்காதிருத்தல் வேண்டும்.
வறுமையாம் சிறுமை வந்தடடையாதிருத்தல் வேண்டும்
சிவபெருமானையும் சிவனடியார்களையும் அன்போடு வணங்கும் பண்பினராய் இருத்தல் வேண்டும்
இச் சிறப்புடையோர் ஞானத்தாலே சிவபெருமானை போற்றி வழிபட்டு பேரின்ப பெருவாழ்வு பெறுவர், இச்சிவப்பேறு அடைய தவம் செய்வதற்குரிய நெறிகள் இரண்டு உளன,
அவை அன்பு நெறி, அறிவு நெறி என்பன, சமயாசாரிய மூர்த்திகள் அன்பு நெறியையும் சந்தானாசரியார் மூர்த்திகள் அறிவு நெறியையும் விளக்கி அருளினர். இவை முறையே தேவார திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆக காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்து இணைபிரியாது விளங்குபவை. திருமுறைகள் இலக்கியமாகவும், சாத்திரங்கள் அவற்றின் இலக்கணமாகவும் கருதப்படுகின்றன. எனவே இலக்கியமாகிய திருமுறை பொருள்களை உள்ளவாறு உணர்வதற்கு இலக்கண மாகிய சாத்திர அறிவு இன்றியமையாததாகும்.
இந்த சிவாகம திருமுறைகளும், சித்தாந்த சாத்திரங்களும் தான் கிடைத்தறகரிய மானிட பிறவி பெற்ற உயிர்கள் சிவபேறு அடைய நெறிகளைட கூறி உயிர்கள் முக்தி பேறு பெற உதவும் பாெக்கிசங்கள்.
திருச்சிற்றம்பலம்
வியாழன், 16 மார்ச், 2023
பழங்காலத்தில் கோவில் வழிபாடு
பழங்காலத்தில் கோவில் வழிபாடு
இப்பொழுது சில கோவில்களுக்குள் சென்று இறைதரிசனம் செய்து வழிபடுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காசு கொடுத்தால், முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். இல்லாவிடில், வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம். சில விநாடிகள்கூட தமது உள்ளக்கிடக்கையைக் கொட்டி, தெய்வத்தின் திவ்ய தரிசனத்தைக் கண்குளிரக் காணமுடிவதில்லை. மின்னல் மின்னி மறைவதுபோல தெய்வத்தின் காட்சி நமது கண்ணைவிட்டு நீங்கிவிடுகிறது. ஏக்கத்துடன்தான் வெளிவருகிறோம்.
அர்ச்சனை செய்யக்கூட முடியாது. அர்ச்சகர் நம் கண்ணில் தெய்வத்தைப்போல ஓரிரு விநாடிகள்தான் தென்படுவார்.
இருந்தாலும், அக்கோவில்களில் கூட்டத்திற்கு என்றுமே குறைவில்லை. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே போகிறது.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால் – செல்ல மனமிருந்து – அங்கும் இறைவன்/இறைவி குடிகொண்டுள்ளனர் என்ற நினைப்பு வந்து அங்கு சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது. நாம் முன்பு விவரித்த கோவில்களில் இருக்கும் ஜே ஜே என்ற கூட்டத்தில் நூற்றிலென்ன, ஆயிரத்தில் ஒரு பங்கு கூட்டம்கூட அங்கு இல்லை.
கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகளும் அங்கில்லை. எங்கோ மூலையில் ஒரு மங்கலான விளக்கு மினுக், மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கிறது. நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் மக்களும் இல்லை, ‘போ, போ’ என்று விரட்டும் கோவில் காவலரும் இல்லை.
இறைவன்/இறைவி – நாம் மட்டுமே அக்கோவிலில். வேண்டும் அளவுக்கு நமது உள்ளக் கிடக்கையை மனம்விட்டு உரக்கச் சொன்னாலும் அது அத்தெய்வங்களின் காதில் மட்டுமே விழும். மற்றவர் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற ஐயப்பாடும் தேவையில்லை. யாராவது அங்கிருந்தால்தானே, நாம் சொல்வது அவர்கள் காதில் விழுவதற்கு?
அர்ச்சகர்கூட சில கோவில்களில் காணப்படுவதில்லை. நாம் தேடிக்கொண்டு சென்றால், அகப்படுவார். அருச்சனை செய்யவேண்டுமென்றால் நம்மை வியப்பு-கலந்த மகிழ்வுடன் பார்ப்பார். பக்தி சிரத்தையுடன் அருச்சனை செய்வார். நாம் கொடுக்கும் காணிக்கையை மிகவும் நன்றியுடன் பெற்றுக்கொள்வார்.
மேலே விவரித்த இருவிதக் கோவில்களைத்தான் நம்மால் காணமுடியும்.
பழங்காலத்தில் கோவில்கள் இப்படித்தான் இருந்தனவா? வழிபாடுகள் கோவில்களில் இப்படித்தான் நடந்தனவா?
எப்படி நடந்தன என்பதை நமக்குத் தமது தோத்திரங்கள், பாசுரங்கள் வாயிலாக சைவ, வைணவக் குருமார்களும், ஆள்வார்களும் நமக்கு எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள். கோவில்கள் இப்படித்தான் அன்று இயங்கின என்று நாம் அறிந்துகொள்ள அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
தமது சொல்வன்மையால் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்ட திருவாதவூரார் நம்மை அவர் காலத்துக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கிறார். முதலில் அவருடன் செல்வோமா? தமக்கே உரிய மாணிக்கச் சொற்களாக, இறைவழிபாட்டை மாலையாகத் தொகுத்து நமக்கு விளக்குகிறார்.
“கோவிலை நெருங்கும்போது, யாழ், வீணை போன்ற இசைக் கருவிகளிலிருந்து எழும் இன்னிசை நம்மைப் பரவசப்படுத்தி அழைக்கிறது. இந்த இசையின்ப வெள்ளத்தில் நீந்தி நாம் உள்ளே செல்கிறோம். அங்கு பாணர்கள் இசைக்கருவிகளை மீட்டி, இறைவன்மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி ஆனந்தவெள்ளத்தில் ஆழ்வதையும், நம்மை ஆழ்த்துவதையும் காணலாம்.
. “ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்களுடன், பலவிதமான தோத்திரங்களுடன் இறைவன்முன் ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு வேதம் மட்டுமல்ல, நான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவர்கள் பிழையின்றி அதை ஓதுகின்றனர். அவர்கள் இப்படி ஓதிக்கொண்டிருக்கையில், இன்னும் சிலர் இறைவன்மீது துதிப்பாடல்களைப் பாடுகின்றனர். இந்த வேதகோஷத்திலும், தோத்திரப்பாடல் ஒலிகளுடனும், வீணை, யாழ் இவற்றின் நாத வெள்ளமும் நம்மை இறைவனைத் தரிசித்து இறையருள்பெற அழைக்கிறது
“இன்னொரு பக்கத்தில், இறைவன் திருமேனியை அலங்கரிக்க நெருக்கமாக மலர்களைத் தொடுத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர். தமது கைகளையே மலர்மாலையாக எண்ணி, அதைப் பின்னலாகப் பின்னி இறைவனை அந்த மாலைக்குள் அடக்க முயல்கின்றனர், வேறுசிலர்.
“சிலர் இறைவனைத் கைகூப்பித் தொழுது நிற்கின்றனர். இன்னும் சிலர் தமது குறைகளைச் சொல்லி அழுது, அதைப் போக்கி அருளுமாறு புலம்புகின்றனர். வேறுசிலர் தம்மை வருத்திக்கொண்டு, கோவில் தரையில் புரண்டு, அவனது கோவில் பிரகாரத்தைச் சுற்றிவந்து, தம் மனவிருப்பத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகின்றனர்.
“மற்றும் சிலர், தலைக்குமேல் கைகளை உயர்த்திக்கூப்பி, இறைவனுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக நிற்கின்றனர்.
“திருப்பெருந்துறை என்னும் புண்ணியத் தலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! நீ எனக்கு இறைவனாகத் தலைவனாகத் தந்தையாகத் தாயாகத் தடுத்தாட்கொண்டு உனது இனிய அருளை வாரிவழங்குகிறாய்! இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், உன் அருளைவேண்டி இத்தனை பேர் பலவிதமாக உன்னைத் துதித்து நிற்கிறார்களே! இவர்களுடைய குறையை நீக்க மாட்டாயா? ஏன் கண்ணை மூடிக்கொண்டு உறங்குவது போல நடிக்கிறாய்? நீ தூங்கியது போதும். என் பெருமானே! உனது போலி உறக்கம் போதும்! எழுந்திருந்து உன் அடியவர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கு!”
இதுதான் அன்றையக் கோவில்களில் நிகழ்ந்த வழிபாடு. திருவாசகத்திற்கு உருகாதார் எவருமேயில்லை, அப்படி உருகாதவர் எப்படிச் எடுத்துரைத்தாலும் உருகமாட்டார் என்று தன் சொல்வன்மையால், பக்திப்பெருக்கால் மாணிக்கவாசகர் இயம்பிய திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில் ஒரு செய்யுள்தான் பழங்கால் வழிபாட்டை விவரித்து இன்றும் மார்கழி மாதந்தோறும் பாடப்படுகிறது.
இன்னிசை வீணையர் யாழின ரொருபால்
இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்
துண்ணிய பிணைமலர்க் கையின ரொருபால்
தொழுகைய ரழுகையர் துவள்கய ரொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி யெழுந் தருளாயே!
ஆனால், மாணிக்கவாசகர் விவரித்த கோவில் வழிபாட்டை நாம் என்று காண்போமோ, அது அந்த உமையொருபங்கன், சிவபெருமானுக்குத்தான் தெரியும்போலிருக்கிறது
திருச்சிற்றம்பலம்
கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை
கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை
சோழவள நாட்டில் திருவெண்காடு என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பிறந்ததால் இவருக்கு இப்பெயர் வாய்த்ததா அல்லது இவருடைய பெயரே இதுதானா என்று தெரியவில்லை. சிலருக்கு குறிப்பிட்ட ஊரில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரையே வைத்து அழைப்பார்கள். உதாரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வைகுண்டம் என்று பெயரிட்டு அழைப்பார்கள். அதேபோல ஸ்ரீரங்கம் என்ற பெயரும். தென்திருப்பேரையில் பிறந்தவர்களுக்கு திருப்பேரை நாச்சியார் என்று பெயரிடுவ தும் உண்டு. அப்படியே இந்தப் பெண்மணிக்கும் இப்பெயர் வந்திருக்கலாம்.
எப்படியோ இப்பேரால் இவர் பெரிய புராணத்தில் இடம் பெற்று அந்த ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இவர் செய்த தியாகம் தான் கொஞ்சமா?
காவிரியால் வளம் கொழிக்கும் திருச்செங்காட்டாங்குடியில் காவல்தொழில் செய்து வந்தார்கள் மாமாத்திரர்கள். அக்குலத்தில் பரஞ்சோதியார் என்பவர் மன்னனிடம் தளபதியாகப் பணிபுரிந்து வந்தார். ஆயுள்வேதக் கலையும், அளவில்லாத வடநூற்கலையும், படைக்கலத் தொழிலும் நிரம்பப் பயின்று அவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.
மன்னனுக்காக வடதிசை சென்று வாதாபி நகரை வென்று அங்கிருந்து பொன்னும் மணிகளும் நிதிக்குவையும், ஏராளமான யானைகள் குதிரைகள் இவற்றைக் கவர்ந்து வந்தார். ஆனால் பரஞ்சோதியாருடைய மனம் மேலும் போரில் ஈடுபட விரும்பவில்லை. இதையறிந்த மன்னன், ‘பரஞ்சோதியாரே, உம்முடைய மனநிலை அறியா மல் தவறு செய்து விட்டேன். இனிமேல் தாங்கள் செம்மைநெறித் தொண்டு செய்யும்” என்று விடைகொடுத்து அனுப்பினான்.
மன்னனிடமிருந்து விடைபெற்று வந்த பரஞ்சோதியார் தமது ஊரில் வந்து இறைத்தொண்டு செய்து வந்தார். இவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, இவர் கருத்தை அறிந்து அவருக்கு உதவியாக இருந் தார்.
சிவனடியார்களை நாளும் வரவேற்று முறையாக உபசரித்து அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கத்தை நியமமாகக் கொண்டிருந்தார் சிறுத்தொண் டர். இப்படி சிவனடியார்களை வழிபட்டு, அவர்கள் முன்பு தம்மை மிகச் சிறியவராக நினைத்துக் கொண்டதால் இவரை ‘சிறுத்தொண்டர்’ என்றே அழைத்தார்கள். காலப்போக்கில் இவர்களுக்கு சீராளன் என்றொரு மகனும் பிறந்தான்.
அருமை மகன் பிறந்தபொழுது மங்கல வாத்தியங்களை முழக்கினார்கள். சிறுத்தொண்டர் அடியவர்களுக்கு அளவில்லாத தான தருமங்கள் செய்தார்.
சீராளன் கிண்கிணி அசையத் தளர்நடை நடக்க ஆரம்பித்தான். நெற்றியில் சுட்டி அசைய, மார்பினில் ஐம்படைத்தாலி புரள விளையாட்டில் ஈடுபட்டான். மூன்று வயதில் வயதில் குடுமி வைத்துப் பின் பள்ளியில் சேர்த்தார்கள்.
இப்படி சிறுத்தொண்டர் புகழ் பரவி வரும்போது, இவருடைய புகழையும் இவருக்கு அடியவர் பால் உள்ள நேசத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டவும் விடையேறும் பெருமான் எண்ணங் கொண்டார். உடனே தனது கறை படிந்த கழுத்தை மறைத்து கையில் கபாலம் ஏந்தி, தோளில் திரிசூலம் சார்த்தி, வலக்கையில் டமருகம் தரித்து பைரவராக வேடம் பூண்டு திருச்செங்காட்டாங்குடி வந்து சேர்ந்தார். தாங்க முடியாத பசியால் வருந்துபவர் போல சிறுத்தொண்டர் வீட்டை அடைந்தார்.
“தொண்டர்களுக்கு என்றும் அன்னமளிக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா?” என்று உரத்த குரலில் கேட்டார். இவர் குரலைக் கேட்ட திருவெண்காட்டு நங்கை பைரவரை வணங்கினாள். “சிவனடியாரைத் தேடி அவர் வெளியே சென்றிருக்கிறார். எந்தமை ஆளுடையவரே! உள்ளே எழுந்தருளுங்கள்” என்று உபசரித்தாள்.
இதைக் கேட்ட பைரவர் ”பெண்கள் தனியே இருக்கும் இடத்தில் புக மாட்டோம்” என்று வெளியே செல்லப் புறப்பட்டார். உடனே நங்கை “தாங்கள் செல்ல வேண்டாம். இன்று அடியவர் ஒருவரும் காணக் கிடக்காததால் அவர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். தாங்கள் எழுந்தருளி யிருப்பதை அறிந்தால் பெரிய பாக்கியம் என்று மிகவும் மகிழ்வார். இதோ வந்து விடுவார். அதனால் தாங்கள் உள்ளே வந்து அமரலாம்” என்று கூறினாள். வலிய வந்த அடியவரை விட்டுவிட அப்பெண்மணிக்கு மனமில்லை.
ஆனால் பைரவரோ, “சிறந்த மனையறம் புரக்கும் பெண்ணே! யாம் வடநாட்டைச் சேர்ந்தவன். சிறுத் தொண்டரைக் காணவே வந்தோம். அவர் இல்லாமல் இங்கிருக்க மாட்டோம். கணபதீச்சரத்தில் இருப்போம். அவரை அங்கு வரச்சொல்” என்று வெளியே சென்றார்.
சிவனடியார் எவரும் தென்படாததால் மிக்க வருத்தத்துடன் வீடு வந்த சிறுத்தொண்டர் தன் கவலையை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். பைரவர் ஒருவர் வீடு தேடி வந்ததை மனைவி சொல்லக் கேட்ட சிறுத்தொண்டர், “அடியேன் உய்ந்தேன்! அவர் எங்கிருக்கி றார்?” என்றார். நங்கை, ‘வடிசேர் சூல கபாலத்தார், பைரவர். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், கணபதீச்சரத்து ஆத்தியின் கீழிருப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்” என்று சொன்னாள்.
மனைவி சொன்ன அடையாளங்களைக் கேட்ட சிறுத்தொண்டர் விரைந்து சென்று பைரவ ரைக் கண்டு வணங்கினார். பைரவர் அவரை நோக்கி, “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?’ என்று வினவ சிறுத்தொண்டர் , “இன்று அமுது செய்விப்பதற்கு ஒருவரையும் காணவில்லையே என்று தவித்தேன். நான் செய்த தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்” என்று அடிபணிந்தார்.
பைரவரோ, “உமைக் காணும் பொருட்டு வந்தோம். யாம் வடதேசத்தைச் சேர்ந்தவன். எம்மை உபசரிக்க உம்மால் முடியாது” என்று மறுத்தார். இதைக் கேட்ட சிறுத்தொண்டர், அடியவரே! நீர் அமுது செய்யும் இயல்பை அருளிச் செய்யுங்கள். சிவபெருமான் அடியார் முயன்றால் தேட முடியாததும் கிடைக்கும். அருமை இல்லை” என்றார்.
“பசு வீழ்த்திட யாம் உண்பது வழக்கம். இன்று அதற்குரிய நாள். ஆனால் அது உமக்கு ஆகாத செயல்” என்றார் பைரவர். “மிகவும் நல்லது, என்னிடம் ஏராளமான பசுக்கள் இருக்கின்றன. உமக்கு வேண்டியதைக் காட்டினால் நான் போய் விரைவில் அமுதாக்கி வருவேன்”என்றார் சிறுத்தொண்டர்.
“அப்படியா! நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். நாம் உண்ணும் பசு நரப்பசு. ஐந்து வயதாயிருக்க வேண்டும். உறுப்புக்கள் ஒன்றும் குறைவில்லாமல் இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார் பைரவர். “இதுவும் முடியாத காரியமில்லை. தாங்கள் என்னோடு எழுந்தருள வேண்டும்” என்றார். “சரி மேலும் சொல்கிறேன் நன்கு கவனித்துக் கேளும்…”
ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்
தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில்
தம்மில் மனமுவந்தே ஏதம் இன்றி அமைத்த
கறியே யாம் இட்டுண்பது”
-என்றார் பைரவர்.
இப்பொழுதும் மனம் தளரவில்லை சிறுத்தொண்டர். “தாங்கள் அமுது செய்யப் பெற்றால், அடியேனுக்கு இதுவும் அரியசெயல் இல்லை. என்று கூறிவிட்டு வீடு நோக்கி விரைந்து வந்தார். கணவர் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த திருவெண்காட்டு நங்கை கணவர் முகத்தை ஆவலோடு நோக்கி, “பைரவர் அமுது செய்ய வருகிறாரா? என்ன சொன்னார்? என்று வினவினாள்.
“பைரவர் இசைந்தார். ஆனால் சில நிபந்தனைகளை விதித்திருக் கிறார். ஒரு குடிக்கு ஒரு மகனாய், ஐந்து வயதுள்ளவனாக இருக்க வேண்டுமாம். உறுப்புக்கள் ஒன்று குறைவில்லாமல் நல்ல லக்ஷணம் பொருந்தியவனாக இருக்க வேண்டுமாம். தாய் பிள்ளையைப் பிடிக்கத் தந்தை மனமுவந்து அரிந்து சமைக்க வேண்டுமாம். இந்த நிபந்தனைகள் சரியாக இருந்தால் மட்டுமே பைரவர் அமுதுண்ண வருவாராம்” என்றார்.
இவை அனைத்தையும் கேட்ட நங்கை, “நீங்கள் சொல்வதைப் போலவே அமுதளிப்போம். ஆனால் ஒரு குடிக்கு ஒரு மகனைப் பெறுவது எப்படி?” என்று வணங்கினாள். மனைவியின் முகத்தைப் பார்த்த கணவர், அப்படிப்பட்ட மகனையும் தாய் தந்தையரையும் தேடினால் காலம் வீணாகும். அடியவர் பசியோடு காத்திருப்பார். அதனால் “என்னை இங்கு உய்ய, நீ பயந்தான் தன்னை அழைப்போம்” என்றார்.
“நாம் பெற்ற மகனையே பைரவருக்கு அமுதாக்குவோம்!” என்றார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கை என்ன சொன்னாள்? அலறினாளா? துடித்தாளா? ஆத்திரமடைந்தாளா?
அவளே சொல்லக் கேட்போம். “வந்த பைரவரை நேரம் கடத்தாமல் அமுது செய்வித்து அவர் பசியாறி முகமலர்ந்தால் அதுவே நம் பேறு!” என்றாள். மேலும் “நம்மைக் காக்க வருமணியைச் சென்று பள்ளியினில் கொண்டு வாரும்” என்றாள்.
எந்தத் தாயால் இப்படிச் சொல்ல முடியும்? ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் சிறுத்தொண்டருடைய உணர்வைப் புரிந்து கொண்டு அனுசரணையாகப் பதில் சொல்கிறாள்! நங்கை சொன்னதைக் கேட்ட சிறுத்தொண்டர், மகன் சீராளன் படிக்கும் பள்ளியை நோக்கி விரைகிறார்.
தந்தையைக் கண்டதும் சீராளன் பாதச்சதங்கை மணியொலிக்க ஓடோடி வந்தான். அவனை வாரியெடுத்துத் தழுவி அணைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். கணவர் மகனோடு வருவதைக் கண்ட திருவெண்காட்டு நங்கை எதிர்சென்று மைந்தனை வாங்கினாள். வாங்கிய பின் என்ன செய்தாள்? சேக்கிழார் சொல்வதைப் பார்ப்போம்…
குஞ்சி திருத்தி, முகம் துடைத்துக் கொட்டை
அரைநாண் துகள் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி, மையும்
கண்ணின் மருங்கொதுங்கிப்
பஞ்சி அஞ்சும் மெல்லடியார் பரிந்து
திருமஞ்சனமாட்டி
எஞ்சல் இல்லாக் கோலம் செய்தெடுத்துக்
கணவர் கைக் கொடுத்தார்.
மகனைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து கணவரின் கையில் கொடுத்தாள், கைகொடுத்த அக்காரிகை. சிறுவனின் அழகைக் கண்டதும் முத்தமிட வேண்டும் என்று எழுந்த ஆசையையும் அடக்கிக் கொண்டார்களாம், அடியவருக்குப் படைக்கப் போகும் அமுதில் தம் எச்சில் பட்டுவிடக் கூடாதே என்று!
இருவர் மனமும் ஒன்றுபட்டு பைரவர் சொன்னபடியே பிள்ளைக்கறி தயார் செய்தார்கள். திருவெண்காட்டு நங்கை, அமுது தயாரான செய்தியை அறிவிக்க சிறுத்தொண்டர் விரைந்து சென்று ஆத்தியின் கீழிருந்த பைரவரிடம் சென்று, “ஐயனே! நேரமாகி விட்டதைப் பொறுத்தருள வேண்டும். அடியேன் பால் நண்ணி நீர் இங்கு அமுது செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.
சிறுத்தொண்டர் உடன்வர, வந்த பைரவரை திருவெண்காட்டு நங்கை எதிர்சென்று அடி வணங்கி வரவேற்றாள். கந்த மலர் ஆசனம் காட்டி அமர உபசரித்தாள். தூய நீரால் சிறுத்தொண்டர், பைரவரின் கால்களை அலம்பி அந்த நீரைத் தங்கள் தலைமேல் தெளித்துக் கொண்டார்கள். மென் மலர், சந்தனம், தூபம் தீபம் என முறைப்படி பூஜை செய்தார். அதன் பின் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் முறைப்படி பரிமாறினாள்.
“யாம் சொன்னபடி எல்லாவற்றையும் பக்குவம் செய்தீரோ?’ என்று பைரவர் கேட்க, நங்கையார் “தலையிறைச்சி அமுதுக்கு ஆகாதெனக் கழித்தோம்” என்று சொல்ல, “அதுவும் கூட நாம் உண்போம்” என்றார் பைரவர். நங்கை ஒருகணம் திகைக்க, சந்தனத்தார் என்னும் பணிப்பெண் தக்க சமயத்தில் கை கொடுக்கிறாள். “அதுவும் தயார் செய்து வைத்திருக்கிறேன்” என்றாள்.
இதைக் கேட்டு மகிழ்ந்த பைரவர், “நான் மட்டும் தனியாக உண்ணும் வழக்கமில்லை. எனவே என்னுடன் சேர்ந்து அமுது செய்ய யாரையாவது அழைத்து வாரும்” என்றார். சிறுத்தொண்டர், ‘இது என்ன சோதனை? அடியவர் அமுது செய்ய இடையூறு வந்ததே?’ என மனம் தளர்ந்தார். என்றாலும் வெளியே சென்று எங்கும் தேடினார். ஆனால் ஒருவரும் கிடைக்கவில்லை என்ற தகவலைச் சொன்னார்
உடனே, பைரவர் “உம்மைப் போல் நீறிட்டார் உளரோ?அதனால் நீரே எம்மோடு உண்பீர்” என்றார். திருவெண்காட்டு நங்கையிடம் “கலந்திருத்தி வெம்மை இறைச்சிச் சோற்றை மீண்டும் பரிமாறும்” என்றார்.
இன்னும் இவர் என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ என்று எண்ணி கலத்தில் கைவைக்கப் போன சிறுத்தொண்டரை மறித்தார் பைரவர். “உமக்கு மகன் இருந்தால் நம்முடன் உண்ண அவனையும் அழையும்” என்றார். சிறுத்தொண்டர் என்ன சொல்லியிருப்பார்? அந்த மகனைத் தான் கறியாக்கிச் சமைத்தேன் என்று சொல்ல முடியுமா? “இப்போது உதவான் அவன்” என்று மட்டும் கூறினார்.
“அவன் வந்தால் தான் நாம் உண்போம். அவனை அழையும்” என்று திட்டவட்டமாகக் கட்டளையிட்டார் பைரவர். வேறு வழியில்லாமல் திருவெண்காட்டு நங்கையோடு வெளியே சென்று, “மைந்தா வருவாய்” என அழைத்தார்.
அம்மையும் “செய்ய மணியே! சீராளா! வாராய்! சிவனார் அடியார், யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கிறார்” என்று உரத்த குரலில் அழைத்தார்.
பரமன் அருளால் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பள்ளியிலிருந்து ஓடிவரும் சிறுவன் போல சீராளன் ஓடிவந்தான். ஓடிவந்த பாலனை வாரியெடுத்துக் கணவன் கையில் கொடுத்தாள். ‘அப்பாடா, இனிமேல் பைரவர் உண்ணத் தடையேதுமில்லை’ என்று நிம்மதி யடைந்து உள்ளே சென்று பைரவரிடம் பையனை அழைத்து வந்ததைச் சொல்ல விரைந்தார்கள். உள்ளே பைரவரையும் பரிமாறி வைத்திருந்த கலங்களையும் காணவில்லை. இருவரும் திகைத்தார்கள்.
சிறுத்தொண்டருக்கு சிவபதம் அளிக்கும் ஈசன்
சிறுத்தொண்டருக்கு சிவபதம் அளிக்கும் ஈசன்
வெள்ளை ரிஷப வாகனத்தில் சிவபெருமான் மலைமகளோடும் முருகனோடும் காட்சி அளித்தார். பூதகணங்களும் தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிந்தார்கள். சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், பணிப்பெண் இவர்கள் எல்லோரும் என்றும் பிரியாமல் தம்முடனே இருக்க அருள் செய்தார் பெருமான்.
இப்படி யாருமே செய்யத் துணியாத செயலைத் துணிந்து செய்த சிறுத்தொண்டர் உண்மையில் பெரிய தொண்டர். அதனால் தான் பட்டிணத்தாரும் இவர் செயலை வியந்து போற்றி, “வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேனல்லேன்” என்று சிறுத்தொண்டர் புகழ் பாடுகிறார்.
ஆனால் சிறுத்தொண்டர் இவ்வளவு புகழ் பெற்றது எப்படி? திருவெண்காட்டு நங்கை கைகொடுத்ததால் தானே?
அப்பூதி அடிகளின் மனைவிகூட இறந்து போன மகனை மறைத்து வைத்துவிட்டு அடியாரை உபசரித்தாள். ஆனால் திருவெண்காட்டு நங்கையோ, உயிரோடு இருந்த மகனையே அரிந்து அமு தாக்கி அடியவரை உபசரித்தார் என்பதைப் பார்க்கும் போது இவர் செய்த தியாகம் எவ்வளவு பெரியது?
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! இப்படிக் கூட நமது பெண்கள் கைகொடுத்த காரிகையாக விளங்குகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்
புதன், 15 மார்ச், 2023
சைவ சித்தாந்தம் பற்றிய சிறு தெளிவு
சைவ சித்தாந்தம் பற்றிய சிறு தெளிவு
சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்த்தை விளக்குவதே சைவ சித்தாந்தம்.
சைவம் என்றால் அன்பு , அன்பு என்றால் சிவம், சிவம் என்றால் மங்கலமானது,மங்கலமானது என்றால் பாசமலம் நீங்கப்பெற்றது, இதனால்தான் திருமூலர் அன்பே சிவம் என்கிறார். எனவே சைவம் சிவ சம்பந்தமுடையது என்பது தெளிவு.
சித்தாந்தம் என்றால் முடிந்த முடிவு முடிந்த முடிவு என்றால் அதாவது மாற்றமில்லாத இறுதியான உறுதியான உண்மையான முடிந்த முடிவு என்று பொருள்படும்.
இந்த முடிந்த முடிவு எதைப்பற்றிய முடிந்த முடிவ? என்ற கேள்வி எழும்.
சைவத்தின் சிறப்பு நூலான சிவாகம் கூறும் சாரமான உண்மையை பிழிந்து, எடுத்து கூறுவதே - சித்தாந்தம்,
இதில் கூறப்படும் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்கையும், அதாவது உள் பொருள்கள் அதாவது உண்மை பொருள்கள் என நிலை நாட்டி அவற்றின் இயல்புகளை "முடிந்த முடிவாக " விளக்குவதே இந்த முடிந்த முடிவு அதுவே சித்தாந்தம்.
சித்தாந்தம் என்பது எல்லா சமயங்களிலும் கூறினாலும், இது சைவ சமய சித்தாந்தத்தையே குறிக்கும். அது எதுபோல எனில் மலர் என்றால் தாமரையை குறிப்து போலாகும்.
சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கி, சிவன் சீவனுக்கு உபகரிக்கும் வகைகளையும், அவற்றை அடைய சீவன் மேற்காெள்ள வேண்டிய நடைமுறை களையும்,விரிவாகவும் தெளிவாகவும், விளக்குவதே இந்த சைவ சிந்தாந்தம். இந்த மானிட பிறப்பு நமக்கு கிடைத்ததே சிவனை சீவன் உய்யும் பொருட்டே,
உய்வார்கள் உய்யும் வகை:
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?
சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.
இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.
இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.
“இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து,
இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின்
பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன்
அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.” - யசுர் வேதம்.
இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.
கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
உலகம் முழுமையும் பரவியிருந்த - காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.
இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். அத்தகு உண்மைகளை சைவ சித்தாந்த நூல்கள் 14 வாய்லாக நாம் தெளிந்து ஆன்மா பெற வேண்டிய முத்தி பேற்றை பெற்று உய்வோம். உயிர் தன்னையும்உணர்ந்து, உலக இன்பங்களையும்நுகர்ந்து, இறைவனை அறிகிறது. இதனால் உயிர் இறைவன்பால் பற்று கொண்டு அவனை அடைய வழிதேடுகிறது. இந்த தேடலுக்கு உதவுவதே சைவ சித்தாந்தம், இதன் வாயிலாக இறைவனை அடையும் மார்க்கங்களான சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும்நெறிகளால் உயிர் சிவ முத்தி அடைய செய்கிறது.
திருச்சிற்றம்பலம்
வியாழன், 2 மார்ச், 2023
திருக்கோயில் வழிபாடு
திருக்கோயில் வழிபாடு
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று ஔவை பிராட்டி குறிப்பிடுவார். “மாலற நேயமும் மலிந்தவர் வேடமும், ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் தலைமணி நூலான, மெய்கண்டாரின் சிவஞான போதம் குறிப்பிடும். மெய்யன்பு உடைய அடியார்களின் திருவேடத்தையும் சிவனின் திருக்கோயிலையும் பரம்பொருளின் வடிவாகவே கண்டு வணங்க வேண்டும் என்று சிவஞானபோதம் குறிப்பிடுகின்றது.
“நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்,
தேடித் திரிந்து சிவபெருமான் என்று,
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்,
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே”
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருக்கோயில்களைத் தேடிச் சென்று, திருமுறைகளை ஓதி வழிபட்டால் நம் உள்ளம் ஒன்று படும். ஒன்று பட்ட உள்ளத்தைப் பெருமான் அவன் வாழும் கோயிலாக் கொள்வான் என்று திருமூலர் குறிப்பிடுவார்.
திருஞானசம்பந்தப் பெருமானும்,
“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்,
நாடிவந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்,
ஆடிப்பாடி அண்ணாமலை கைத்தொழ,
ஓடிப்போம் நமது உள்ள வினைகளே”
என்று குறிப்பிடுவார். திருக்கோயில்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நம்மையும் ஒரு பொருட்டாக எண்ணிப் பெருமான் அருள் செய்வான். ஆடியும் பாடியும் அப்பெருமானை வழிபட்டால் நம் உள்ளத்தில் அறியாமை நீங்கிப் பெருமானின் அருள் ஒளி சிறக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
உண்மையான சமய நெறியைப் பின்பற்றி, இறைவனை அடைந்து காட்டிய நாயன்மார்களும் அருளாளர்களும் திருக்கோயில் வழிபாட்டைத் தவறாது மேற்கொண்டுள்ளனர். மூன்று அகவையே அடைந்த திருஞானசம்பந்தர் முதல் எண்பத்தொரு அகவையை எட்டிய திருநாவுக்கரசர் வரை நடந்தே திருக்கோயில்தொரும் சென்று வழிபட்டனர். சைவ அடியார்களின் வரலாற்றினைக் குறிப்பிடும் தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில், திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் சுந்தரரையும் திருக்கோயிலுக்கு வரச் சொல்லியே பெருமான் வெளிப்பட்டு அருளியிருக்கின்றான். திருக்கோயில்களிலேயே பெரும்பாலான அருள் நிகழ்ச்சிகள் அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. திருமுறை ஆசிரியர்கள் திருக்கோயில்களிலேயே திருமுறைகளை அருளியிருக்கின்றனர். இதனால் திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை புலப்படுகின்றது.
உயிர் முற்றப் பெற்ற நாயன்மார்களும் (சீவன் முத்தர்கள்), திருமூலர், தாயுமானவர், கருவூர்த்தேவர் போன்ற சித்தர்களும் தவறாமல் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்று திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுதல் அறுகி வருகின்றது. திருக்கோயில்களுக்குச் செல்லத் தேவையில்லை என்ற கருத்து பெருகி வருகின்றது. திருக்கோயில்களுக்குச் செல்பவர்கள் சமயநெறியில் பிந்தங்கியவர்கள் அல்லது முதிர்ச்சிப் பெறாதவர்கள் என்று எண்ணப்படுகிறது. சிலர் திருக்கோயில்களுக்குச் செல்லாமல் தத்தம் குருமார்களுக்குக் கோயில் அமைத்து அங்கு அவர்களின் குருமார்களை வழிபடுகின்றனர். இன்னும் சிலர் திருக்கோயில்களுக்குச் செல்லாமல் பலவாறான பயிற்சி மையங்களிலேயே தங்களின் வாழ்நாளைக் கழித்து விடுகின்றனர்.
பசுவின் உடலில் உள்ள குருதிதான் பாலாக மாறினாலும் பசுவின் மடியில் கறந்தால்தான் அது பாலாகக் கிடைப்பதுபோல் பரம்பொருள் எங்கும் எதிலும் விரவி இருப்பினும் அப்பரம்பொருளின் திருவருள் வெளிப்பட்டு விளங்கும் அருள்மையமாகத் திருக்கோயிலை அறிவியல் ஆராய்ச்சியுடனும் அருள் விளக்கத்துடனும் நம் முன்னோர் அமைத்துள்ளனர்.
உயிரை ஒருமுகப்படுத்தும் நிலையமாக (ஆ+லயம்) விளங்க வேண்டியத் திருக்கோயில்கள், அந்நோக்கத்தில் இருந்து தவறி, மன அமைதிக்கும் ஆறுதலுக்கும் இறை அன்பினைச் செலுத்துவதற்கும் வழிவிடாமல் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆரவாரத்திற்கும் பகட்டிற்கும் வணிகத்திற்கும் துணைபோகின்ற கூடாரமாக மாறிவிட்டச் சூழலும் இன்று பலர் திருக்கோயில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்து விட்டதற்குக் கரணியமாய் அமைந்து விடுகிறது.
எனினும் திருக்கோயில் வழிபாடு இன்றியமையாதது என்று சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சிவ ஆகமங்களும் அடியார்களின் வரலாறுகளும் குறிப்பிடுவதால் எக்கரணியத்தையும் முன்வைக்காமல் திருக்கோயில் வழிபாட்டினைச் செய்வதற்குக் கடப்பாடு உடையவர்கள் ஆகின்றோம். குடும்பத்தோடு திருக்கோயில்களுக்குச் செல்வோம், அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாய் அமைவோம்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!
புதன், 1 மார்ச், 2023
ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை
ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை
அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.
அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.
இதனால் பெறும் பயன் வருமாறு :-
கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.
இதற்குப் பிரமாணம் :- சிவஞானசித்தியார் (300) மற்றும் (301)
ஒரு ஆன்மாவானது தன் உலக வாழ்வை முடித்து வீடு பேறு அடைய தவம் அதாவது சரியை, கிரியை, யோகம் ெசய்து பின் அதன் ஞானம் அடைந்து வீடுபேறு அடைய புறபூசை செய்வதும், அதனால் குருவே ஞானாசிிரியராக வந்து முத்தி பேறு அருள்வதும் உண்டு, இத்துடன் அவ்வான்மா அகப்பூசையும் செய்து நிட்டைகூடி சிவப்பேறு பெறுவதும் உண்டு. புறப்பூசையால் இறைவனை அடைய சாதா வண்டியில் சென்றால் அகப்பூசையும் செய்தால் விரைவு வண்டியில் செல்வதுபோல் நிச்சிய முத்தி பேறு கிடைக்கும்.அகப்பூசை செ்ய்து முத்தியடைந்த நாயனார் பூசலார்
அகப்பூசை என்பது உள் முகமாய் செய்யும் வழிபாடு, அந்தரியாகம் என்றும் வழங்கப்படும்.
அகப்பூசையின் போது அபிசேகம், அலங்காரம், தூபம், தீபம் நைவேத்திியம் திருவமுது முதலிய பூசா திரவியங்களை மனத்தால் செய்து, ஆன்மாவின் இடத்ததில் சிவபெருமானை ஞானத்தால்அர்ச்சித்தல், ஓமித்தல், தியானித்தல் ஆகியவற்றை செய்தல், அவ்வாறு செய்யும் போது கண்ணாடிக்கு பொடியிட்டு துலக்கும் போது மாசு நீங்கி ஒளி மேலிடுவது போல அச்சிவம் உள்ளத்தில் மேலிட்டு விளங்கித் தோன்றி மலப்பற்று கழியும். அவ்வாறு கழிவது ஆன்ம சுத்திக்கு ஏதுவாகும். மலம் கழிவது ஆகிய ஆன்ம சுத்திக்கு அந்த அந்தரியாக பூசை அவசியம் இந்த பூசையை முத்திக்கு சிறந்த சாதனம் என அநுபவம் உடைய அருளாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளார்கள்.
இதனேயே திருமூல நாயனாரும்
காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீரமையவாட்டிப்
பூசனைஈசனார்க்கு போற்றிவிக் காட்டினோமே. திருமந்திரப்பாடல்
இவ்வுடம்பை கோயலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு வாய்மையை தூய்மையாகவும், வைத்து மனத்திறகுள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாக பாவித்து அன்பை நெய்யும் பாலுமாக நிறைய வைத்து பூசித்து இறைவனை போற்றினேன். என்கிறார் அகப்பூசையை பற்றி.
இதில் கோயில் மனம், விளக்கு மெய்ஞானம் சிவதான் என்ற உணர்வு, திருமஞ்சன நீராட்டு மாறிலா இன்பம், திருஅமுது அன்பு, அர்ச்சனை ஐந்தெழுத்து,
அகப்பூசை செய்யவது மூன்று திறத்தது,
1, நாபி ( உந்தி) இதுவே வேள்வி செய்யும் இடம்,
நாேக்கம்; ஈசனாடு பிரிப்பின்றி ஒன்றாய் இருத்தி, சிவஞானத்தீயினை உணர்வால் எழுப்புதல்
2, இதயம்
உணர்வார் பூவும் நீரும் கொண்டு அர்ச்சனை செய்யும் இடம்
நோக்கம் ;ஈசனை ஆண்டானாவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வேண்டுதல்
இதயத்தில் தில்லை கூத்தரை காண முயலுதல்
3, நெற்றி நடு, தியானம் செய்யும் இடம் திருவருளோடு உடனாய் இருப்பதன் பாவனை
நாேக்கம் ; ஞானபரம ஆச்சாரியார் திருஉரு காணும் உண்மை பாவனை குரு கருடன் உருவம் கருதும் பாவனை கொண்டு திரிமலம் தீர்ந்தது என செய்தல்
இதன் பொருட்டு பூசை பொருட்கள்
மறாவாத நினைப்பு, பிறழாத செய்கை, இறவாத இன்ப அன்பு
பூசா மந்திரம் - திருவைந்தெழுத்து
பூசா பலன் ஆன்மபோதம் அற்று உயிர் சிவமாதல்
அகபூசையால் உயிராகிய தன்னை சிவமாகவே காண முற்படும் சாதனமே மலமாகி நின்ற உயிரைச் சிவமாக்கி, பிறப்பிலிருந்து விடுபட செய்யும்் முயற்சி
சிவனாருக்குரிய எட்டு குணங்களும் உயிரின மாட்டு வந்து படிவதால் பசுத்துவத்தோடு கூடி பசுவாய் நின்ற உயிர் சிவத்தோடு கூடி சிவம் என நிற்கும்.
அகபூசையின் மேன்மை
புறபூசை செய்யாமலே அகபூசை கொண்டே இறவனை தான் கட்டிய கோயிலுக்கு வரச்செய்தவர் பூசலார் என்ற நாயனார் என்பதை நாம் அறிவோம். எனவே புறபூசையுடன் அகபூசையும் மேற்கொண்டால் முக்தி பேறு அடைய துரித வழியாகும் என்பதை அருளாளர்கள் நமக்கு விளக்கியுள்ளனர்.
திருச்சிற்றம்பலம்