வியாழன், 16 மார்ச், 2023

பழங்காலத்தில் கோவில் வழிபாடு

 


பழங்காலத்தில் கோவில் வழிபாடு


இப்பொழுது சில கோவில்களுக்குள் சென்று இறைதரிசனம் செய்து வழிபடுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காசு கொடுத்தால், முன்னால் சென்று தரிசனம்செய்யலாம்.  இல்லாவிடில், வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.  சில விநாடிகள்கூட தமது உள்ளக்கிடக்கையைக் கொட்டி, தெய்வத்தின் திவ்ய தரிசனத்தைக் கண்குளிரக் காணமுடிவதில்லை.  மின்னல் மின்னி மறைவதுபோல தெய்வத்தின் காட்சி நமது கண்ணைவிட்டு நீங்கிவிடுகிறது.  ஏக்கத்துடன்தான் வெளிவருகிறோம்.


அர்ச்சனை செய்யக்கூட முடியாது. அர்ச்சகர் நம் கண்ணில் தெய்வத்தைப்போல ஓரிரு விநாடிகள்தான் தென்படுவார். 


இருந்தாலும், அக்கோவில்களில் கூட்டத்திற்கு என்றுமே குறைவில்லை.  நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே போகிறது.


இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால் – செல்ல மனமிருந்து – அங்கும் இறைவன்/இறைவி குடிகொண்டுள்ளனர் என்ற நினைப்பு வந்து அங்கு சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது.  கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.  நாம் முன்பு விவரித்த கோவில்களில் இருக்கும் ஜே ஜே என்ற கூட்டத்தில் நூற்றிலென்ன, ஆயிரத்தில் ஒரு பங்கு கூட்டம்கூட அங்கு இல்லை.



கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகளும் அங்கில்லை.  எங்கோ மூலையில் ஒரு மங்கலான விளக்கு மினுக், மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கிறது.  நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் மக்களும் இல்லை, ‘போ, போ’ என்று விரட்டும் கோவில் காவலரும் இல்லை.


இறைவன்/இறைவி – நாம் மட்டுமே அக்கோவிலில்.  வேண்டும் அளவுக்கு நமது உள்ளக் கிடக்கையை மனம்விட்டு உரக்கச் சொன்னாலும் அது அத்தெய்வங்களின் காதில் மட்டுமே விழும்.  மற்றவர் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற ஐயப்பாடும் தேவையில்லை.  யாராவது அங்கிருந்தால்தானே, நாம் சொல்வது அவர்கள் காதில் விழுவதற்கு?


அர்ச்சகர்கூட சில கோவில்களில் காணப்படுவதில்லை.  நாம் தேடிக்கொண்டு சென்றால், அகப்படுவார்.  அருச்சனை செய்யவேண்டுமென்றால் நம்மை வியப்பு-கலந்த மகிழ்வுடன் பார்ப்பார்.  பக்தி சிரத்தையுடன் அருச்சனை செய்வார்.  நாம் கொடுக்கும் காணிக்கையை மிகவும் நன்றியுடன் பெற்றுக்கொள்வார்.


மேலே விவரித்த இருவிதக் கோவில்களைத்தான் நம்மால் காணமுடியும். 


பழங்காலத்தில் கோவில்கள் இப்படித்தான் இருந்தனவா?  வழிபாடுகள் கோவில்களில் இப்படித்தான் நடந்தனவா?


எப்படி நடந்தன என்பதை நமக்குத் தமது தோத்திரங்கள், பாசுரங்கள் வாயிலாக சைவ, வைணவக் குருமார்களும், ஆள்வார்களும் நமக்கு எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.  கோவில்கள் இப்படித்தான் அன்று இயங்கின என்று நாம் அறிந்துகொள்ள அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.


தமது சொல்வன்மையால் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்ட திருவாதவூரார் நம்மை அவர் காலத்துக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கிறார்.  முதலில் அவருடன் செல்வோமா?  தமக்கே உரிய மாணிக்கச் சொற்களாக, இறைவழிபாட்டை மாலையாகத் தொகுத்து நமக்கு விளக்குகிறார்.


“கோவிலை நெருங்கும்போது, யாழ், வீணை போன்ற இசைக் கருவிகளிலிருந்து எழும் இன்னிசை நம்மைப் பரவசப்படுத்தி அழைக்கிறது.  இந்த இசையின்ப வெள்ளத்தில் நீந்தி நாம் உள்ளே செல்கிறோம். அங்கு பாணர்கள் இசைக்கருவிகளை மீட்டி, இறைவன்மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி ஆனந்தவெள்ளத்தில் ஆழ்வதையும், நம்மை ஆழ்த்துவதையும் காணலாம்.


.  “ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்களுடன், பலவிதமான தோத்திரங்களுடன் இறைவன்முன் ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு வேதம் மட்டுமல்ல, நான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவர்கள் பிழையின்றி அதை ஓதுகின்றனர்.  அவர்கள் இப்படி ஓதிக்கொண்டிருக்கையில், இன்னும் சிலர் இறைவன்மீது துதிப்பாடல்களைப் பாடுகின்றனர்.  இந்த வேதகோஷத்திலும், தோத்திரப்பாடல் ஒலிகளுடனும், வீணை, யாழ் இவற்றின் நாத வெள்ளமும் நம்மை இறைவனைத் தரிசித்து இறையருள்பெற அழைக்கிறது


“இன்னொரு பக்கத்தில், இறைவன் திருமேனியை அலங்கரிக்க நெருக்கமாக மலர்களைத் தொடுத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.  தமது கைகளையே மலர்மாலையாக எண்ணி, அதைப் பின்னலாகப் பின்னி இறைவனை அந்த மாலைக்குள் அடக்க முயல்கின்றனர், வேறுசிலர்.


“சிலர் இறைவனைத் கைகூப்பித் தொழுது நிற்கின்றனர்.  இன்னும் சிலர் தமது குறைகளைச் சொல்லி அழுது, அதைப் போக்கி அருளுமாறு புலம்புகின்றனர். வேறுசிலர் தம்மை வருத்திக்கொண்டு, கோவில் தரையில் புரண்டு, அவனது கோவில் பிரகாரத்தைச் சுற்றிவந்து, தம் மனவிருப்பத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகின்றனர்.


“மற்றும் சிலர், தலைக்குமேல் கைகளை உயர்த்திக்கூப்பி, இறைவனுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக நிற்கின்றனர்.  


“திருப்பெருந்துறை என்னும் புண்ணியத் தலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!  நீ எனக்கு இறைவனாகத் தலைவனாகத் தந்தையாகத் தாயாகத் தடுத்தாட்கொண்டு உனது இனிய அருளை வாரிவழங்குகிறாய்!  இல்லையென்று சொல்லவில்லை.  ஆனால், உன் அருளைவேண்டி இத்தனை பேர் பலவிதமாக உன்னைத் துதித்து நிற்கிறார்களே! இவர்களுடைய குறையை நீக்க மாட்டாயா?  ஏன் கண்ணை மூடிக்கொண்டு உறங்குவது போல நடிக்கிறாய்?  நீ தூங்கியது போதும்.  என் பெருமானே!  உனது போலி உறக்கம் போதும்!  எழுந்திருந்து உன் அடியவர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கு!”


இதுதான் அன்றையக் கோவில்களில் நிகழ்ந்த வழிபாடு.  திருவாசகத்திற்கு உருகாதார் எவருமேயில்லை, அப்படி உருகாதவர் எப்படிச் எடுத்துரைத்தாலும் உருகமாட்டார் என்று தன் சொல்வன்மையால், பக்திப்பெருக்கால் மாணிக்கவாசகர் இயம்பிய திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில் ஒரு செய்யுள்தான் பழங்கால் வழிபாட்டை விவரித்து இன்றும் மார்கழி மாதந்தோறும் பாடப்படுகிறது.


இன்னிசை வீணையர் யாழின ரொருபால்

இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்

துண்ணிய பிணைமலர்க் கையின ரொருபால்

தொழுகைய ரழுகையர் துவள்கய ரொருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி யெழுந் தருளாயே!


ஆனால், மாணிக்கவாசகர் விவரித்த கோவில் வழிபாட்டை நாம் என்று காண்போமோ, அது அந்த உமையொருபங்கன், சிவபெருமானுக்குத்தான் தெரியும்போலிருக்கிறது

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக