புதன், 15 மார்ச், 2023

சைவ சித்தாந்தம் பற்றிய சிறு தெளிவு

 சைவ சித்தாந்தம் பற்றிய சிறு தெளிவு



  சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்த்தை விளக்குவதே சைவ சித்தாந்தம்.

சைவம் என்றால் அன்பு , அன்பு என்றால் சிவம், சிவம் என்றால் மங்கலமானது,மங்கலமானது என்றால் பாசமலம் நீங்கப்பெற்றது, இதனால்தான் திருமூலர் அன்பே சிவம் என்கிறார். எனவே சைவம் சிவ சம்பந்தமுடையது என்பது தெளிவு.


 சித்தாந்தம் என்றால் முடிந்த முடிவு முடிந்த முடிவு என்றால் அதாவது மாற்றமில்லாத இறுதியான உறுதியான உண்மையான முடிந்த முடிவு என்று பொருள்படும்.

  இந்த முடிந்த முடிவு எதைப்பற்றிய முடிந்த முடிவ? என்ற கேள்வி எழும்.

     சைவத்தின் சிறப்பு நூலான சிவாகம் கூறும் சாரமான உண்மையை பிழிந்து, எடுத்து கூறுவதே - சித்தாந்தம்,

  இதில் கூறப்படும் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்கையும், அதாவது உள் பொருள்கள் அதாவது உண்மை பொருள்கள் என நிலை நாட்டி அவற்றின் இயல்புகளை "முடிந்த முடிவாக " விளக்குவதே இந்த முடிந்த முடிவு அதுவே சித்தாந்தம்.

   சித்தாந்தம் என்பது எல்லா சமயங்களிலும் கூறினாலும், இது சைவ சமய சித்தாந்தத்தையே குறிக்கும். அது எதுபோல எனில் மலர் என்றால் தாமரையை குறிப்து போலாகும்.

 சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கி, சிவன் சீவனுக்கு உபகரிக்கும் வகைகளையும், அவற்றை அடைய சீவன் மேற்காெள்ள வேண்டிய நடைமுறை களையும்,விரிவாகவும் தெளிவாகவும், விளக்குவதே இந்த சைவ சிந்தாந்தம். இந்த மானிட பிறப்பு நமக்கு கிடைத்ததே சிவனை சீவன் உய்யும் பொருட்டே,

   உய்வார்கள் உய்யும் வகை:


“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.


இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?


சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.


இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.


இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.

“இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து,


        இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின்


        பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன்


        அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.”        - யசுர் வேதம்.


     இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.

கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.


        தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்


        விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்


        பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்


        மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.


உலகம் முழுமையும் பரவியிருந்த - காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.


இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். அத்தகு உண்மைகளை சைவ சித்தாந்த நூல்கள் 14 வாய்லாக நாம் தெளிந்து ஆன்மா பெற வேண்டிய முத்தி பேற்றை பெற்று உய்வோம். உயிர் தன்னையும்உணர்ந்து, உலக இன்பங்களையும்நுகர்ந்து, இறைவனை அறிகிறது. இதனால் உயிர் இறைவன்பால் பற்று கொண்டு அவனை அடைய வழிதேடுகிறது. இந்த தேடலுக்கு உதவுவதே சைவ சித்தாந்தம், இதன் வாயிலாக இறைவனை அடையும் மார்க்கங்களான சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும்நெறிகளால் உயிர் சிவ முத்தி அடைய செய்கிறது. 

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக