திருஐந்தெழுத்தின் பெருமை
தமிழ் வேதங்களான திருமுறைகள் கூறும் திருஐந்தெழுத்தின் பெருமையினை தேவாரப்பதியங்களில் தனித்தனி பதியங்களாகக் கண்டாலும் நம் மனத்தில் சிறப்பு பெறும் இடங்கள்
திருமந்திரத்தில் திருமூலர் கூறும் பெருமை:
"உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி நமஎன்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகனாகுமே. திருமந்திரம்
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை, உச்சிப் பொழுது, மற்றும் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் சிவாயநம என்னும் ஆதி மந்திரத்தை சொல்லி சிவபெருமானாரை வழிபட வேண்டும்.
காலை - சூரியன், உச்சி - நெருப்பு, மாலை - சந்திரன் என்றவாறு இந்த மூன்று வேளைகளிலும் மூன்று கண்களாக சூரியன், நெருப்பு, சந்திரன் நினைந்து வழிபட்டால் இந்த மூவரையும் சேர்த்து வணங்குவதே ஆகும்,
திரு ஐந்தெழுத்தின் சொல்லும் வகையும பயனும்:
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஓதி சிவாயநம என்னும்
குளிகை இட்டுப் பொன்னாக்குவன் இக்கூட்டையே. திருமந்திரம்
வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு அஞ்ஞான இருளை நீக்கும் ஞான ஒளியாகிய ( அறிவுமயமான) சிவபெருமானாரை மனத்தில் நினைந்து உருகும் மனத்துடன் ஐந்தெழுத்தை கணிக்க வேண்டும் (செபித்தல்)
நாமாவளியைச் சிந்திக்கும் பொழுது மனதில் வேறு நினைவுகள் இருக்கக் கூடாது. சிவாயநம என்னும் மந்திரத்திற்குரிய சிவபெருமானாரையே நினைத்து உருகிய உள்ளத்துடன் செபித்தல் வேண்டும்.
இதனால் ஆணவம் நீங்கும், ஆணவம் நீங்கிய உயிர் சிவமாய் விளங்கும், இரசகுளிகையால் செம்பில் உள்ள களிம்பு நீங்கி செம்பு பொன்னாவது போல என்று உணர்க. உயிர் சிவமானால் உடம்பும் சிவகாயமேயாகும்.
தேவாரப்பதிகத்தில் திருநாவுக்கரசர்:
"சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்றிருக்கின் அல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே" - திருமறை 4 - பதிகம் 94 பாடல் 5
உனதருளால் திருவாய்ப் பொலியச்
சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர்அரனே, பாடல் 6
செலவில்லாத எளிய வழி இதுவாகும் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளையாவது செபித்தல் வேண்டும்.
மந்திரமும் நான்கு வேதங்களும் திருஐந்தெழுத்தே ஆகும்
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே, - திருமறை 3 பதி 22, பாடல் 2
மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று, அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருஐந்தெழுத்தே ஆகும்.
செந்தீ வளர்த்திச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் சிவாயநம என்னும் ஐந்தெழுத்தே.
சுந்தரர் பெருமான்
" நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லுமு நா நமச்சிவாயவே - சுந்தரர்
நாம் மறந்தாலும் நம்முடைய நாவில் ஐந்தெழுத்தே வெளிப்ட வேண்டும், இடரினும் தளரினும்,தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும், திருஐந்தெழுத்தே நம் வாயில் வெளிப்பட வேண்டும், இதனால் பிறவியில்லாமல் போகும்,
திருச்சிற்றம்பலம்
நன்றி: தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக