மஹா சிவராத்திரி!!! (17-02-2015)
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகின்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவபெருமான் ஆனந்த தாண்டவக் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மகா சிவராத்திரியன்று கோயில் நாள் முழுவதும் திறந்திருக்கும். அன்று நடராஜருக்கு தினமும் நடக்கும் ஆறுகால பூஜைகளுடன் இரவில் 4 கால சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜைக்கு முன்னால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து வேதபாராயணங்கள், திருமுறை பாராயணங்கள் பாடப்படும். காலை முதல் ருத்ரயாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. சிவராத்திரியன்று காலை 6 மணிக்கு திறக்கப்படும் இக்கோயில் மறுநாள் மதியம் உச்சிக்காலம் வரை திறந்திருக்கும். மாலையில் பாட்டும், பரதமும் கோயிலில் களைகட்டும். சிவராத்திரியன்று தான் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. விடிய விடிய ஆடல் கலைஞர்கள் நாட்டியமாடி தங்களது நாட்டிய கலையை இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர்.
இரவில் கோயில் இரண்டாவது வெளி பிரகாரத்தில் விவேகானந்தர் பேரவை சார்பில் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீபங்களை ஏற்றுவார்கள். லட்ச தீபங்களின் ஒளியில் நடராஜர் கோயில் வளாகம் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இரவு முழுவதும் நடக்கும் 4 கால பூஜையின் போது ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் பக்தர்கள் 4 வீதிகளிலும் வலம் வருவார்கள். சிவதரிசனத்திற்கு லிங்கோத்பவ காலம் மிக மிக உகந்தது. மகா சிவராத்திரியன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை உள்ள நேரமே லிங்கோத்பவ காலமாக கூறப்படுகிறது.
ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்தால் நல்லது. மகாசிவராத்திரியன்று கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் காண்பது சிறப்பு. அதில் 3வது காலமான லிங்கோத்பவர் காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு.
மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என்பது முன்னோர்கள் கூற்று. சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடங்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதில் ஐயமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக