திங்கள், 9 பிப்ரவரி, 2015

அணிகலன்களின் தத்துவங்கள்


அணிகலன்களின் தத்துவங்கள் சாதாரணமாக நாம் அணியும் "அணிகலன்" களில் ஆண்டவனை அறியும் - அடையும் வழிகளைச் சொன்னவர்கள் நமது ஆன்றோர்கள். அணிகளும், அணி கலன்களும் ஆடைகளும் புருசனாம் ஸ்ரீ பகவானை நினைக்க வைக்கும் நினைவு முத்திரைகள் ஆகும். அணிகலன்கள் கூறும் அர்த்தமுள்ள தத்துவங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து அறிவோமானால் அது பல தத்துவங்களை நமக்கு புலப்படுத்தும். மலர்கள்: மலர்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துதான் பிறகு நாம் அணியவேண்டும், மலர்களைப் போல மானிடனும் பலப் பருவங்களை கடந்து இளமைப் பருவம் அடைகிறான், முடி நரைப்பது என்ற செயல் மானிடர்களக்கு மட்டுமே உண்டு, நரை வந்து விட்டால் துன்பமும் வரத்தொடங்கிவிடும். ஆகவே மலர் வாடும் முன் சமர்ப்பணம் செய்து விடுவது போலவே, இளமை முடிந்து முதுமைத் துவக்கத்தின் முத்திரையாம் நரை, நரை வரும் முன்பே மாந்தர்களே உள்ளம் என்ற மலரைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் என மலர்த் தத்துவம் கூறுகிறது. திலகம்: நமது பாரத தேசத்து பெண்களின் அணிகலன்களுக்கு எல்லாம் அழகுகூட்டுவது குங்குமம் ஆகும், அதனால்தான் குழந்தைப் பருவத்தில் நெற்றியில் அஞ்சனத் திலகமும், பின் பருவம் மடைந்தபின் சாந்துப் பொட்டும், திருமணம் ஆனதும் மஞ்சள் குங்குமத் திலகமும் அணியப்படுகிறது. திலகம் இட்டுக் கொள்வதால் நெற்றியில் வசிப்பதாக வேதங்கள் சொன்ன அலட்சுமியினால் ஏற்படக்கூடிய தீமைகள் விலகி நீண்ட ஆயுளும் சகல பாக்யங்களும் பெருகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமத்திலகமிட்டுப் பின்னர் தலையில் வகிடு தொடங்கும் பகுதியில் திலகம் அணிகின்றனர் அதுவே உச்சித் திலகம்.பிரமதேவனின் எழுத்தை அழிக்கும் திறன் கற்புத்தீயின் வடிவமான குங்குமத் திலகத்திற்கு உண்டு. சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் குங்குமத் திலகம் அணிய வேண்டும். திருமண்: ஸ்ரீ வைணவர்கள் அணியும் திருமண்ணை சரீரத்தின் பன்னிரு உறுப்புகளில் அணியும் போது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரு திருநாமங்களைக் கூறியவாறு அணிவதனால் திருமண் அணிந்த நிலையை திருநாமம் என்றே அன்புடன் மனித குலம் அழைக்கிறது. திரு என்றால் ஸ்ரீமகா விஷ்ணுவையும் மண் என்றால் பூமியில் சேரப் போகும் சரீரத்தையும் குறிக்கும், நாம் ஜீவன் அந்தர்யாமியான ஸ்ரீ பகவானின் ஒர்அம்சம். தினமும் ஸ்ரீ பகவானின் திருநாமங்களைக் கூறியவாறு திருமண் அணிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அரிதான மானிடப்பிறவி வீணாகும் எனபதை கூறுகிறது திருமண் தத்துவம். திரு நீறு: சரீரத்தின் பதினான்கு இடங்களில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும், திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் அணியும் போதும் சிவபொருமானுடைய ஐந்தெழுத்தை "நமசிவாய" என்னும் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அதனால் திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயரும் அமைந்தது. சிவனின் உருவமான ஜோதியின் மறு உருவமே திருநீறு, திருநீற்றை நெற்றியில் இட்டால் விஞ்ஞான, அஞ்ஞான மருத்துவ ரீதியாகவும் பற்பல பலன்கள் கூறப்படுகின்றன. " மனிதா உன் சரீரம் வாக்கு மனம் இம்மூன்றும் நிர்மலமாக , வெண்மையாக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருநீறு அணிந்து கொள் என்கிறது திருநீற்றுத் தத்துவம். சந்தனம்: சந்தனம் இயற்கையான தாவரத்திலிருந்து கிடைப்பது. அதன் நறுமனம் மிக ரம்மியமானது. சந்தனம் போல் நறுமணம் போன்று நற்குணங்களைக் கொண்டவனாக இரு என்பதை விளக்கிறது சந்தனத்தத்துவம். தோடு: மாதர்கள் அணியும் ஆபரங்களுள் முக்கியமானது தோடு. " தோடுடைய செவியன்" என்று 1ஆம் திருமுறையில் திரு ஞானசம்பந்தர் தோடு அணியும் சக்தியையும், சக்தியை இடப்பாகமாக கொண்ட சிவனையும் சேர்த்துப் பாடியுள்ளது தோடு மாந்தர்களின் கூற்றுக்கு உதாரணமாக தத்துவத்தை காட்டுகிறது. " தேவா ரென்பர்தம் பாவையர்க் கன்று காதோலைப் பாவித்த தயவாளர்" - மதுரை கலம்பகம் 29ம் பாடல் சிவபொருமான் விஷத்தை உண்டு தேவமகளிரின் மாங்கல்யத்தை போன்ற காதோலையை காப்பாற்றிய தயாபரன் ஆனான் என்று குமரகுருபரர் கூறினார், பதிவிரதைகள் ஒருபோதும் தோடின்றி இருக்கக் கூடாது என்கிறது அருணா மோதினீ.எல்லா செல்வங்களைவிட சிறந்த செல்வம்செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர், அந்த செவிச் செல்வத்தை உணரும் உறுப்பணியும் அணிகலமே தோடு என்பதாகும், குருநாதனின் ஞான மொழிகளுடன் ஸ்ரீ பகவானின் திரு நாமங்களும் ஒன்றிணைந்து நம் செவியில் என்றென்றும் ஒலிக்க வேண்டும் , அப்போது சாதாரண செவி திருமகள் வீற்றிருக்கும் செல்வச் செவி ஆகும். மூக்குத்தி: மூக்குத்தியதிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி விசேஷச் சக்தி வாய்ந்தது. காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சானூர் அலமேலு, கன்னியகுமரி வாலையம்மன் இவ்வாறு எந்தத் தேவியரைத் தரிசனம் செய்தாலும் மூக்குத்தி இல்லாத அன்னையாக பார்க்கவே முடியாது. காரணம் தெய்வீக சுமங்கல ஆபரணங்களில் மூக்குத்தியும் மங்கல பொருள்களில் ஒன்று. சுவாசத்துடன் கலப்பது போல எல்லா நறுமணத்தையும் சுவாசம் செய்யும் போது ஸ்ரீபகவானுக்கு அர்ப்பணம் செய்வது போல நினைத்து விடு. இரு விழிப்பார்வைகளை நாசியில் செலுத்தி விடு. மனம் வாக்கு காயம் இம்மூன்றும் ஒருநிலைப்படுத்தி யோகம் செய் என்று மூக்குத்தி தத்துவம் கூறுகிறது. இக் கருத்தையே உட்கருத்துடன் கொண்டு செளந்தர்யலஹரி 61ஆம சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியுள்ளார். கண் மை: " குரு க்ரு பாஞ்சல பாயோ மேரே பாயி" என்ற பாடலில் சகோதரா குருதேவரின் அருள் நோக்கு என்ற கண் மை யை நீ அணிந்து கொண்டால்தான் பிறவி பூரணம் ஆகும் , எல்லா இடங்களிலும்ஸ்ரீ ராமனின் வடிவம் தெரியும் என்கிறார் கபீர்தாசர். "கருப்பு வண்ணனாயினும் அஞ்ஞான இருளை போக்கும் சிறந்த ஞான தீபம் ஸ்ரீ கிருஷ்ணபிரான் என்கிறது ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். பக்தி என்ற கண்மையை அணிந்த பின் அஞ்ஞானம் என்ற இருள் அகன்று நீக்கமற எங்கும் கண்ணனின் வடிவமே தெரியும் என்பதை " கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்கவே" என்கிறார் நம்மாழ்வார். கண்மை கூறும் அரிய தத்துவம் " என்னை அணியும் போது இறைவனின் கருமை நீலத்திரு மேனியையும், அவர் தெய்வீக லீலைகளையும் நினைத்துக் கொண்டு அணிந்து கொள் அப்போதுதான் நமக்கு பிறவிப் பயன் கிட்டும். திருமாங்கல்ய நாண்: திருமணத்தில் முக்கியமானது திருமாங்கல்ய நாண் கட்டுவதுதான். அதைத்தான் மங்களசூத்திரம் தாலி, மாங்கல்ய சரடு என்று பலவகையான அழைப்பார்கள். திரு என்றால் திருமகளை நினைவுபடுத்தும், மாங்கல்யம் என்பது ஆத்மாவின் நாயகனான இறைவனை நினைவு படுத்தும். மா- என்றால் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆத்மா என்று பொருள் கலயம் என்றால் கலசம் - பாதுகாப்பு என்று பொருள். வடமொழியில் புருசன் என்றால் ஆத்மா என்று பொருள் , கணவன் தான் மனைவியினுடைய ஆத்மா என்பதால் தான் கணவனை புருசன் என்று அழைத்தார்கள். மாங்கல்யம் தந்த நாநே, மாங்கல்ய மந்திரத்தின் கருத்து - இதை உன் கழுத்தில் கட்டுகிறேன், செளபாக்கியவதியே நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக வாழ்ந்திருப்பாயாக என்பது தான் அதன் கருத்து. மூன்று முடிச்சு என்பது மூன்று குணங்களையும் கடந்து விடச் சொல்கிறது. மற்றொரு தத்துவம் " பெண்ணே உன் உடல் பொருள், ஆவி மூன்றுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்" என்று கணவன் கூறுவதாகக் கருத்து. பிறிதொரு தத்துவம் கணவன் பெரியோர்கள், தெய்வம் ஆகிய மூன்றுக்கும் கட்டுபட்டவன் ஆகஇருப்பான் என்பதற்கு நான் பொறுப்பு என்று கணவனே மூன்று முடிச்சு போட்டு உறுதி கூறுவதாக கருத்து. திருமாங்கல்ய சரடின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டியதன் தத்துவம் - மஞ்சள் நிறம் தெய்வீக நிறம், மஞ்சள் கிழங்கு மாங்கல்ய சரடு உடன் இணைத்து திருமணம் செய்விப்பதும் உண்டு. தீவினை என்கிற கிருமிகளை அழிக்கம் சக்தியின் வடிவம் தான் மஞ்சள். ஆடைகள்: முடிவில்லாத சிவபிரானுக்கு திசைகளே ஆடைகள் ஆகும் என்கிறார் திருமூலர்,சிவபிரானார் திகம்பரமாக உள்ளார் என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொல்கிறது. திக் - அம்பரம் - திசையாகிய ஆடை என்று பொருள் அத்திசைகள் பகலில் வெண்ணிறமாகவும், இரவில் கருநிறம் உடையதாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் சிவபெருானுக்கு அமைகிறது. என்கிறார் நான் மணிமாலையில் குமரகுருபரர் "ஆத்மாவிற்கு சரீரம் என்பது ஆடையைப் போன்றது என்றும் அவை நைந்து போன பின் ஆத்மா பதிய சரீரத்தை அடையும் என்றும் பகவத் கீதை அருளிகிறது. வளைகாப்புத் தத்துவம்: வளை என்றால் வட்டத்தையும் பாசம், பக்தி, சங்கு,அன்பு சக்கரம், சங்கம் போன்றவற்றையும் குறிக்கும், திருமணம் நடந்ததும், மணமக்களுக்கு கையில் காப்பு கட்டுவார்கள் பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும், அவளைக் காப்பேன் என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது. காப்பேன் என்ற உறுதியுடன் காப்புக் கட்டப்பெற்ற கணவன் அன்புடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அடையாளமாக அம்மங்கை தாய்மை அடைந்து விட்டால் ஒரு குறித்த காலத்தில் சுமங்கலிப் பெண்கள் பலரும் கூடி வளையல்களை அணிவிப்பார்கள், இந்த செயலில் ஒரு மிகப் பெரிய தத்துவக் கருத்தே அடங்கி இருக்கிறது. " பெண்ணே கணவனிடம் காட்டிய பாசத்தினால் உன்னை சுற்றி ஒரு வட்டம் நீயே இட்டுக் கொண்டாய், அதுவே தாய்மை ஆகும், வளைந்த நிலையில் உள்ள சங்கு சக்கர வடிவம் கொண்ட இந்த வளையல்களை தீர்க்க சுமங்கலியாக நாங்கள் உனக்கு வளையல் அணிவித்தல் என்ற காப்புச் செய்கிறோம். அந்த வளைகாப்புக்கு காரணமான ஸ்ரீமன் நாராயணனே உனக்கு பாதுகாப்பு என்று சுமங்கலிகள் வாழ்த்துவதைப் போலும் - பிறக்கப் போகும் குழந்தை ஆதியந்தம் இல்லா வளையல் வட்டம் போல் உனக்கு ஆதியந்தமில்லா பெரும் வழியைக் காட்ட ட்டும், என்று வளைகாப்புத் தத்துவம் சொல்கிறது. உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் கூறியுள்ளதை போல பெண்ணே உன் கையில் அடைக்கலமான வளையல் உனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா? உன்னை நம்பிப் பிறக்கப் போகம் குழந்தையைக் காப்பாற்றுவாய் அது போல் வட்டமான இந்த புவியை இறைவன் காப்பாறகிறான், என்கிறது. வளைகாப்பு வளையல் உலகம் பூஜ்ய வடிவம் அதைப் படைத்த இறைவனும் பூஜ்ய வடிவம், பூஜ்யம் என்பது ஆதியந்தமற்றது. வளையல் பூஜ்யத்தின் வடிவம் அதுபோல தாய்மையானது இன்பமும் பற்றும் இல்லாத பரிபூரண அன்பு நிலையான பூஜ்ய ரூபமாகும், வளை - காப்பு - அன்பினால் கிடைத்த மேலான ஐஸ்வர்யம் - அன்புக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் வலது கை விரல்களிலும் அடங்கிவிடும் என்பது கருத்து. ஒட்டியாணம்: குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்டும், ஞானம் கிடைத்தால்தான் பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய முடியும், யோகத்தின் முதல் படி அளவாக நடப்பது ஆகும். உணவில் உறக்கத்தில் உறவில் நடப்பதில் பேசுவதில் இப்படி எல்லா செயல்களிலும் அளவாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத் கீதை அருளுகிறது. அறை என்றால் பாதி இடை, வயிறு என்று பொருள் தராசு முள்ளைப் போன்றது அரைஞாண் , சரீரம் பெருக்காது, மெலிந்து இருக்க வேண்டும் என்பதை அரைஞான் நினைவு படுத்தும் அளவுகோல் ஆகிறது. யோகப்பயிற்சி செய், சரீரத்தை பாதுகாத்திடு, மீண்டும் மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்கிறது இந்த அரைஞாண். கொலுசு: இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாடியுள்ளதைக் காணலாம், " கீதம் தெய்வீக வடிவம்" நடை கூட தெய்வீகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமகள் அவர்களிடம் குடியிருப்பாள், நிதானமாக நடந்தால் கொலுசிலிருந்து தெய்வீக ஓசை வரும், அந்த ஓசையை கேட்டதும், கணபதி, கந்தன், கண்ணன், ராமன், ஐயப்பன் போன்றவர்கள் குழந்தையாக இருந்து நடந்தால் வரும் கொலசின் ஓசையை போலவே உள்ளதே என்று சிந்தனை தெய்வீகமாக மாறிவிட வேண்டும், அப்போது நம் மனக் கண்ணில் அந்த தெய்வீக வடிவங்கள் தெரிய வேண்டும், என்பதே கொலுசு கூறும் கோபுரத்தத்துவம். மெட்டி: திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம்உள்ளன. மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. திருசிற்றம்பலம் நன்றி: அமைதி தரும் ஆன்மீகம் என்ற நூல் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக