தீபாராதனை
உலகம் முழுவதும் நிறைந்த இறைவனை ஆவாஹனம் செய்து வழிபடும் இடம் ஆலயம். ஆன்மா என்பது ஜோதி வடிவம் ஆகும், இதை எளிமையாக உணர்த்துவதுதான் ஆலங்களில் தீபாராதனை வழிபாடு நடக்கிறது. தீபாவளித் திருநாள், கருத்திகைத் திருநாள் என்று துவங்கி இல்லத்தில் தினமும் நாம் செய்யும் தீபாராதனை வரையில் தினமும் பூசை மற்றும் பண்டிகைகள் என்று அனைத்துமே தீபாராதனையில் சமர்ப்பணம் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பாக ஆலய தீபாராதனைகளில் ஒரு நீண்ட தத்துவமே அடங்கி உள்ளது. ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு முன்பு திரையிடப் படுகிறது. இறைவனின் உள்ளத்தில் உலக சிருஷ்டிசெய்யும் எண்ணத்தை இது தெரிவிக்கிறது. திரைக்கு உள்ளே முதலில் குருக்கள் பூஜையைத் தொடங்க மணியை அடிக்கிறார். எல்லையில்லா பிரம்மத்திடம் முதலில் ஒலி (ஓம்) பிறக்கிறது. மணி நாதத் தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. இது ஒரு காரணம் ,மற்றொன்று, உலகாயத வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசை கேட்டு தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மணி அடிக்கப் படுகிறது. பின்னர் திரை விலக்கி ஒரு தீபம் காட்டப்படுகிது, தமஸோமா ஜ்யோதிர்கமய"என்பது வேதவாக்கியம், இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல் என்பது இதன் பொருள்.
நம்மை மாயை என்ற அஞ்ஞான இருள் விலக்கி, ஞான ஒளி பிரகாசிக்க செய்ய வேண்டும் என்பதே தீபாராதனையின் தத்துவத்தின் முதல்படி, ஒரே பரம்பொருள் பல மூர்த்திகளாக விளங்கின்றன. அதைத்தான் "ஏகம் சத் - விப்ராபஹூதா வதந்தி " என்று வேதத்தில் கூறப்படுகிறது. எனவே ஈசனை எந்த உருவில் வணங்கினாலும் அது இறுதியில் ஒரு பரம்பொருளையே போய் சேரும் என்பதும் இதன் தத்துவக் கருத்தாகும்.
"ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க" - திருவாசகம்
ஒன்றே! பல உருவே! அருவே! - அபிராமி அந்தாதி
" ஏக நானேனெவ்வுயிர்களுந்தானே
யென்பதும் அன்பினுக்கெளியவன்" - திரு விளையாடல் புராணம்
பின்னர் ஐந்து தட்டுகள் உள்ள தீபம் காட்டப்படுகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்ச பூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன.
" பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் திகழந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி! - திருவாசகம்
திட விசும்பு, எரி ,வளி, நீர், நிலம், இவை மிகைப்படா பொருள் முழுவதுமாய் அவை அவைதோறும் உடல் மிசை உயிரேனக் காத்து எங்கும் பரந்துளன் - நம்மாழ்வார் (திருவாய்மொழி)
முதன் முதல் பிரம்ம ஒசையாகி ஓங்காரமாய் இருந்து பிறகு ஒளியாக பல தீபமாகி ஆத்மாக்களாக மாறி புல்-பூண்டு ெசெடி - தாவரம் முதல் தேவர்கள் வரையில் பலவாக மாறியது, ஒரே பரம் பொருளிலிருந்து அனைத்தும் தோன்றியது என்பதையே அடுக்கு ஆரத்தியில்தீபங்கள் பல தட்டுக்களில் இருந்தாலும் அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தை குறிப்பிடுகிறது.
அடுத்து கும்ப ஆர்த்தி கும்பம் உலகத்தையும் அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் சக்தியையும் குறிக்கிறது.
"(அண்டம்) சிறியவாகப் பெரியோன்" - திருவாசகம்
"அண்டம் ஒர் அணுவும் பெருமை கொண்டு" - திருவிசைப்பா
அண்டங்கள் எல்லாம் அணுவாக
அணுக்களெல்லாம் அண்டங்களாகப்
பெரிதாய் சிறிதாயினானும் " திருவிளையாடல் புராணம்
" வெளிப்படையாக இல்லாத உருவம் கொண்ட நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன் , சகல ஜீவ கோடிகளும் என்னுள் அடங்கியுள்ளன " - கீதை
" உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே " - கம்பராமாயணம்
உலகம் முழுவதையும் படைத்து காத்து அழிக்கும் விளையாட்டே என்று செய்யும் தலைவரின் திருவடிகளுக்கே நாங்கள் அடைக்கலம் என்கிறது.
அடுத்தபடி நாக தீபம் ஊர்வனவற்றையும் , மயுர தீபம், பறவை இனத்தையும், குக்குட தீபம் ரிஷப தீபம், கஜ தீபம் கால்நடை இனத்தையும், புருஷா மிருக தீபம் மிருகம் கலந்த நரசிம்ம ரூபத்தையும் நினைபடுத்தவும், பருஷதீபம் பிறவியின் பெருமையை:
"உடம்பினை பெற்றப் பயனாவது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்" - ஒளவை குறள்
புல்லாகி பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதாராய் பேயாய் கணங்களாய்
வல் அசுராகி முனிவாராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் " - திருவாசகம்
உயிரின் வளர்ச்சிக்கு இறைவன் அடிப்படை என்பதை எல்லா உயிர்களிலும் ஆத்மா சுடர் உள்ளது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவைகள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் பஞ்ச பூதங்களுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பதை உணர்த்தும் வகையில் அவற்றின் மீது பிரடையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.
காற்றில் பெருவலி இருவராகி மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர், தீயதனில் மூவர், விண்ணகத்தில் ஒருவர் - அப்பர்
இப்படியாக ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றி ஆத்மா பல நிலைகளைக் கடந்து சிந்தனையால் இறைவனை அறிந்து கொள்கிறது.
" சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" - திருவாசகம்
இந்த ஆன்மா ஒரே ஆர்த்தியாக காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அத்ன மீது விபூதி தெளிக்கப்படுகிறது. " ஈறிலாதவன் ஈசன் ஒருவனே" - அப்பர் , விபூதி என்பது நமது நிலையை உயர்த்தும் நிலையை சுந்தரமாவது நீறு என்று சம்பந்தர் கூற்றை அறியலாம்
அடுத்தபடியாக ஏழு கிளைகளையுடைய கற்பூர ஆர்த்தி காட்டப்படுகிறது, மனிதன் ஏழு நிலையைக் கடந்தவன் என்பதை எடுத்துக் காட்டுகிறது, இறை அருள் என்ற விபூதி கைவர பெற்ற உயிர் பத்து வித குணங்களைக் கொள்கிது.
இவை : 1, தத்துவ ரூபம், 2,த்ததுதரிசனம், 3,தத்துவ சக்தி, 4. ஆன்மா ரூபம், 5. ஆம்மதரிசனம், 6. ஆன்சுத்தி, 7. சிவரூபம், 8.சிவதரிசனம் 9. சிவயோகம், 10. சிவபோகம், என்பன
இதைக் குறிக்கும் வகையில் இரண்டு மூன்று நான்கு, ஐந்து ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து , பதினொன்று என்று வரிசையாக தீபங்களாக காட்டப்படுகின்றன.
" எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்" குதம்பை சித்தர்
பக்குவம் அடைந்த ஜீவன் இறைவன் சொரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது.
எட்டுத்திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப் படுகிறது.
" எல்லாம் உனக்கே" என்று இறைவனிடம் கூறி தன்னையே இறைவனிடம் அர்ப்பணிப்பதன் சின்னமே பூசையின் முடிவில் காட்டப்படும் கற்பூர தீபம்.
பூசை முறையில் இந்த தியான பாவனை உச்சகட்டமாகும். தியானத்தின் சின்னமாக மற்ற வழிபாடுகளில் ஏதாவது ஒன்று பிரசாதமாக மிஞ்சும், ஆனால் கற்பூரமம் எரிந்து தீர்ந்தால் அதில் ஒன்றும் மிஞ்சாது. எல்லாவற்றையும் சமர்ப்பித்துக் கொள்வதையும், மேலான தியாகத்தையும் விளக்குகின்ற சிறந்த எடுத்துக் காடடாக விளங்குகிறது. " தீதனையாக் கற்பூர தீபமென நான் அகண்ட சோதியுடன் ஒன்றித்துத் துரிசறுப்ப தெந்நாளோ" தாயுமானவர் ,
ஆகவே ஆலய தீபாராதனையில் இத்தனை தத்துவங்கள் அடங்கியுள்ளன, என்பதை அறிவோம்,
திருச்சிற்றம்பலம்
நன்றி: அமைதிதரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக