ஞானம்
பலவற்றை அறிந்து கொள்வது அறிவு. அறிந்து கொண்டதை நடைமுறையில் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அறிவும், புத்திசாலித்தனமும் எங்கு தோன்றுகிறதோ, அங்கு ஞானம் பிறக்கிறது.
மனிதப் புலன்களுக்கு உட்படாத, மனிதனால் உணரமுடியாத, கேட்டு உணரமுடியாத, நுகர்ந்து உணர முடியாத, தொட்டு உணர முடியாத, விசயங்களை புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு, அதனை நோக்கி செல்லுதலே ஞானம், அதுவே தெய்வீக ஞானம்.
அடுத்து மனித உடலோடு, இருந்தாலும் உடல் சார்ந்த இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், உள்ளத்தை இறையை நோக்கி வைத்துக் கொண்டு பற்றற்று, தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்ந்து இந்த உடல் கூட ஒரு பாரம் போல் எண்ணி, தன்னையே மூன்றாம் மனிதனைப்போல் பார்த்து , நல்லதை மட்டும் எண்ணி, நல்லதையே செய்து, நல்லதையே உரைத்து வாழ்வதே உண்மையான தெய்வீக ஞானம்.
இதை நோக்கி செல்வதே சித்த மார்க்கம் ஆனால் இதனை உங்கள் வேகத்தை தடுப்பதே உங்கள் கர்ம வினையின் பயன். இதனை மீறி செல்வதற்குத்தான் யோக நிலை . இதற்கும் பற்றா பற்றி வாழ முனைதல் இறை அருளும், ஞானசக்தியும் கிடைக்கும்.
கடமை ஆற்றுவது என்பது வேறு, கவலை கொள்ளுவது என்பது வேறு.
இல்லிற்கும், ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றியே ஆக வேண்டும்.
கடமையை தட்டிக் கழிக்க கூடாது.
கடமையை சுமையாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. வாழ்வை எளிமையாக மாற்றிக் கொளல் வேண்டும்.
இன்பம், துன்பம் என்ற நிலை தாண்டி வாழ முயல்வதே மெய்ஞானமாகும்.
ஞானத்தைப்பற்றி திருமந்திரத்தில் உள்ள கருத்து
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நல்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரிமிக் காரே."
பொருள்: உண்மை ஞானத்தை விட, அதாவது இறைஞானத்தை விட மிக்க தர்ம நெறி உலகில் வேறு எதுவும் இல்லை. அதைவிட சிறந்த சமயமும் இல்லை. இந்த பரஞானத்தை விட மிக்கவை என்று சொல்லப்படுபவை , எவையாயினும் நல்ல மோட்ச இன்பத்தை தரமாட்டா. ஆகவே மெய் ஞானத்தில் மிக்கவர் மண்ணுலக மக்களே ஆயினும் உயர்ந்தவரகளே ஆவர். என்கிறது திருமந்திரம்
ஞானம்அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய், தந்தை உற்றார் , உறவினர், சூழல் எதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய்,தந்தை சிரமப்படுகிறார்கள் என்று எண்ணும் பொழுதே மீண்டும் மனிதன் மாயை வலைக்குள் சிக்கி விடுகிறான். எனவே எல்லாம் அவரரவர் கர்ம வினைகளின் படி வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் , இன்ப, துன்பங்களும் அமைகின்றன. எனவே துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும.
இவற்றுக்கெல்லாம் ஒரே வழி பிராத்தனை,
மனிதனின் துன்பத்திற்கு காரணம் முன்வினை - முன்வினை குறைய குறைய துன்பம் குறையும்.
வினைப்பயனை அனுபவித்து தீர்ப்பது என்பது ஒருவகை.
வினைப்பயனை தர்மத்தால் தீர்ப்பது என்பது மற்றொரு வகை
வினைப்பயனை இறைவழிபாட்டால் தீர்ப்பது என்பது இன்னொரு வகை,
எனவே தத்தம் வினைப்பயனை நீக்க இப்பிறவியிலே இவற்றில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து முன் வினைப்பயன்
நீக்கி ஞான ஒளி பெற வேண்டும்.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக