திருநாவுக்கரசு நாயனார்
குருபூசை நாள் 22,04,2017
திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புலழனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கின்ற புத்திரியார் பிறந்தார். அவர் பிறந்து சிலவருஷஞ் சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணீக்கியார் என்கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார் உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். மருணீக்கியார், தந்தையாருக்குப் பெருமகிழ்ச்சியுண்டாகும்படி, பலகலைகளையும் கிரமமாகக் கற்று வல்லவராயினார்.
திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயசு ஆனபொழுது, அப்புகழனார் மரபிற்கு ஒத்த மரபினையுடையவரும், சிவபத்தியிலே சிறந்தவரும், இராஜாவிடத்தில் சேனாதிபதியாயுள்ளவருமாகிய கலிப்பகையார் என்பவர், அப்புகழனார் இடத்திலே சில முதியோர்களை அனுப்பி, திலகவதியாருக்குந் தமக்கும் மணம் பேசுவித்தார். புகழனார் அதற்கு இசைந்தமை கண்டு, அம்முதியோர்கள் மீண்டும் சென்று, கலிப்பகையாருக்குத் தெரிவித்தார்கள். கலிப்பகையார் தாம் விவாகஞ்செய்தற்கு முன் தம்முடைய அரசனது ஆஞ்ஞையினாலே சேனைகளோடும் சில நாளிலே அவன் பகைஞராகிய வடதேசத்தரசரிருக்குமிடத்தைச் சேர்ந்து அவர்களோடு நெடுநாள் யுத்தஞ் செய்தார். அங்கே அப்படி நிகழுங்காலத்திலே இங்கே புகழனார் தேகவியோகம் அடைந்தார். அப்பொழுது அவர் மனைவியராகிய மாதினியார் சககமனஞ் செய்தார். அவர்கள் பிள்ளையாகிய திலகவதியாரும் மருணீக்கியாரும் சுற்றத்தார்களோடு மிக மனக் கவலையுற்று, சுற்றத்தாருள் அறிவால் அமைந்த பெரியோர்கள் ஒருவாறு தேற்றத்தேறி, தந்தை தாயர்களுக்குச் செய்ய வேண்டும் அந்தியகருமங்களை முடித்தார்கள்.
இங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்தகளத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம்பைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சமாசாரந் திலகவதியாருக்குச் செவிப்புலப்பட அவர் "என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்" என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணீக்கையார் வந்து, அத்திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது, "அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்தபின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்றோ உயிர்வைத்துக் கொண்டிருக்கின்றேன்; அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின், அடியேன் உமக்கு முன்னமே இறந்துவிடுவேன்" என்றார். திலகவதியார் அதைக் கேட்டு தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும், என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேறொருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.
மருணீக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அமைத்தார். சோலைகளை வைப்பித்தார்; குளங்களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புலவர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். பிரபஞ்சவாழ்வினது அநித்யத்துவத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார்.
தம்முடைய தம்பியாராகிய மருணீக்கியார் கபடமார்க்கமாகிய ஆருகதத்திலே பிரவேசித்தமையை நினைந்து துக்கசாகரத்தில் அமிழ்ந்தி, வீரட்டானேசுரரை வணங்கி "சர்வாபீஷ்டவரதரே! தேவரீர் அடியேனை ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின் தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைப் பறித்தெறிந்து விட்டு நின்று கொண்டே உண்கின்ற சமணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழியிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதினின்றும் தூக்கிக் காப்பாற்றியருளல் வேண்டும்" என்று பலமுறை விண்ணப்பஞ் செய்தார். பரமசிவன் திலகவதியார்க்குச் சொப்பனத்திலே தோன்றி "தபோதனியே! நீ உன் மனக்கவலையை ஒழி; உன்னுடைய தம்பி துறவியாகி நம்மை அடையும் பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ் செய்திருக்கின்றான். அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதினாலே அந்நியமதத்திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொள்வோம்" என்று சொல்லி மறைந்தருளினார்.
பரமசிவன் திருவாய்மலர்ந்தருளியபடியே, அவருடைய திருவருளினாலே, தருமசேனருடைய வயிற்றிலே கொடிய சூலைநோய் உண்டாகிக் குடலைக் குடைதலுற்றது. அதனால் அவர் வருந்தி நடுக்கமுற்றுச் சமண்பாழியறையில் விழுந்தார். தமக்குக்கைவந்த சமணசமய மந்திரோச்சாரணத்தால் தடுக்கவும், அச்சூலை நோய் தடைப்படாமல் மேற்கொண்டது. மேற்கொள்ளவே, சர்ப்பவிஷந் தலைக்கொண்டாற் போல மயங்கி மூர்ச்சை அடைந்தார். அது கண்ட சமணர் பலர் வந்து கூடி, "இந்தச் சூலைநோய் போலக் கொடிய நோய் முன்னொரு போதும் கண்டறியோம் இதற்கு யாது செய்வோம்." என்று துக்கமுற்று, பின் கமண்டலத்தில் இருக்குன்ற ஜலத்தை அபிமந்திரித்துக் குடிப்பித்தார்கள். அதனாலே தணியாமையால் மயிற்பீலிகொண்டு காலளவுந் தடவினார்கள். அதினாலுந் தணியாமல், சூலைநோய், முன்னிலும் அதிகப்பட; தருமசேனர் அதைச் சகிக்கலாற்றாதவராய்த் துன்பப்பட்டார். சமணர்கள் அதுகண்டு "ஐயோ! இதற்கு நாம் யாது செய்வோம்" என்று மனங்கலங்கி, "இந்நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்" என்று சொல்லிக்கொண்டு, அவரைக் கைவிட்டுப் போயினார்கள். பின் தருமசேனர் தம்முடைய சகோதரியாராகிய திலகவதியாரை நினைந்து, அவரே தமக்கு உதவிசெய்ய வல்லார் எனத் துணிந்து, தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, தம்முடைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்பினார். அப்பாகுகன் திருவதிகையிற் சென்று, அத்திலகவதியாரை ஒரு திருநந்தவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, "நான் உம்முடைய தம்பியார் ஏவலினால் இவ்விடத்துக்கு வந்தேன்" என்று சொல்ல; திலகவதியார் "தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா" என்றார்.
திலகவதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச் செய்தபடி முடித்ததை நினைந்து, மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலி செய்துகொண்டு "அறியாமையினாலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே! எழுந்திரும்" என்றார். தம்பியார் சூலைநோயுடன் நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலி செய்தார். திலகவதியார் "இது பரமசிவனுடைய திருவருளே; தம்முடைய திருவடிகளையடைந்த மெய்யன்பர்களுக்கு இன்னருள்புரியும் அக்கடவுளயே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்" என உபதேசித்தார். உடனே மருணீக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக்கொண்டு, வணங்கி நிற்க; திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொடுத்தார். மருணீக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி, அவ்விபூதியை வாங்கி, சரீரமுழுதிலும் அணிந்துகொண்டார்.
திலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்குத் தோண்டியும் எடுத்துக் கொண்டு, திருக்கோயிலுக்குத் தம்பியாரை அழைத்துக் கொண்டு போனார். மருணீக்கியார் வீரட்டானேசுரரைப் பிரதக்ஷிணஞ்செய்து சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அவருடைய திருவருளினாலே தமிழ்ச் செய்யுள் பாடுஞ்சத்தி உண்டாகப் பெற்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட்டும், பிற்காலத்திலே அன்போடு ஓதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும் பொருட்டும், சிவபெருமான் மேல் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கிற்று, அப்பொழுது மருணீக்கியார் தமக்கு உயிரையுந்தந்து முத்தி நெறியையுந்தந்த சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் அமிழ்ந்தி, திருமேனி முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, நிலத்திலே விழுந்து புரண்டு, "சமண சமயப் படுகுழியிலே விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய பாவியேன் சிவபெருமானுடைய திருவடியை அடைதலாகிய இந்தப் பேரின்பவாழ்வைப் பெறும்படி செய்த சூலைநோய்க்கு என்ன பிரதியுபகாரஞ் செய்வேன்" என்றார்.
சிவபெருமான் இத்தனை நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்த சிறியேனுக்கு இந்தப் பெரு வாழ்வைத் தந்தருளினாரே" என்று களிகூர்ந்து அத்தன்மையனாகிய இராவணனுக்கு அருளிய கருணையின் மெய்த்தன்மையை அறிந்து துதிப்பதையே மேற்கொண்டு, வணங்கினார்
சமணர்கள் "நீற்றறையில் இடல் வேண்டும்" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, "இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, "சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ" என்று அக்கடவுளைத் தியானித்து "மாசில் வீணையு மாலை மதியமும்" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது.
இதன் பின்பும் இறவாத இவனை நஞ்சு கலந்த உணவளித்து கொடுமைப் படுத்தினர் துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனாருக்கு எதிரே யானையைக் கொண்டு வந்து விட்டார்கள். நாயனார் சிறிதும் பயமின்றி சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி தோறும் "கொடிலப் புனலு முடையாரொருவர் தமர்நா, மஞ்சுவதியாதொன்று மில்லையஞ்ச வருவது மில்லை" என்று பாடியருளினார். யானையானது அந்நாயனாரை வலஞ்செய்து, எதிராக நிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக; அதன் மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினாலே குத்தித்திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பை காட்டினார்கள்
அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினால் அவர்களை எடுத்து வீசிக்கொன்றுவிட்டு, வெவ்வேறிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித்தேடி ஓடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந்நகரத்தில் உள்ளவர்களெல்லாரும் கலங்கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது.
அதன்பின் மேலும் பல கொடுமையாக அரசன் கொலைத்தொழில் செய்வோரை நோக்கி, "தருமசேனனைக் காவலோடு கொண்டுபோய், ஒரு கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டி ஒரு படகில் ஏற்றி, சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான். கொலைத் தொழில் செய்வோர் அதைக்கேட்டு, சமணர்களும் உடன் செல்ல, அச்சஞ் சிறுது மில்லாத திருநாவுக்கரசுநாயனாரைக் கொண்டு போய், அரசன் சொல்லியபடியே கடலிலே தள்ளிவிட்டுத் திரும்பினார்கள்.
சமுத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசுநாயனார் "அடியேனுக்கு, யாது நிகழினும் நிகழுக; அடியேன் எம்பெருமானைத் தோத்திரம் பண்ணுவேன்" என்று நினைந்து, "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட; சமுத்திரத்திலே கல்லானது நாயனார்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட்டிய கயிறோ அறுந்து போயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனாரைத் தாங்கிக் கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான்
நாயனார் வீரட்டானேசுரர் மேலே பின்னும் பல திருப்பதிகங்களைப் பாடிப் பணிசெய்து கொண்டிருக்கு நாளிலே சமணர்களுடைய துர்போதனைக்கு இசைந்து தீங்கு செய்துகொண்டிருந்த பல்லவராஜன் அத்திருவதிகையிலே வந்து, நாயனாரை வணங்கி, சைவசமயத்திலே பிரவேசித்தான். சமணசமயம் பொய்யென்றும் சைவசமயமே மெய்யென்றும் அறிந்துகொண்ட காடவனென்பவனும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணருடைய பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அவைகளின் கற்களைத் திருவதிகையிலே கொண்டுவந்து, பரமசிவனுக்கு குணபரவீச்சரம் என்னுங்கோயிலைக் கட்டினான்.
ஒருநாள் திருநாவுக்கரசுநாயனார் சோழமண்டலத்திலுள்ள சிவஸ்தலங்களெல்லாவற்றையும் வணங்கவேண்டும் என்று தமது திருவுள்ளத்தே தோன்றிய ஆசையைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு விண்ணப்பஞ் செய்து, அவரோடும் திருக்கோலக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் பண்ணினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவ்விடத்தினின்றும் மீண்டருளினார்.
பாம்பு தீண்டிய பிள்ளையை பிழைக்கச் செய்தது
சிலநாட் சென்றபின், அப்பமூர்த்தி திருநல்லூரினின்றும் நீங்கி, திருப்பழனத்தை வணங்கிக் கொண்டு, திங்களூரின் வழியாகச் சென்றார். செல்லும்பொழுது, அவ்வூரிலே அப்பூதியடிகணாயனார் என்பவர் தம்முடைய புத்திரர்களுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைத் தரித்தும் தம்முடைய அன்னசத்திரம், கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றிலும் தனித்தனியே "இது திருநாவுக்கரசுநாயனாருடையது" என்று தீட்டியுமிருத்தலைக் கேள்வியுற்று, அவருடைய வீட்டுக்கு எழுந்தருளினார். அப்பூதிநாயனார் அப்பமூர்த்தியைத் தம்முடைய மனைவியார் புத்திரர் முதலாயினரோடும் வணங்கி, அங்கே திருவமுது செய்யும்படி பிரார்த்தித்து, அதற்கு அந்நாயனார் உடன்பட்டது கண்டு, அமுது சமைப்பித்து, தமது புத்திரராகிய மூத்த திருநாவுக்கரசை நோக்கி, "தோட்டத்திற் சென்று வாழைக்குருத்து அரிந்து கொண்டுவா" என்று சொல்லியனுப்பினார். அவர் விரைந்து வாழைக்குருத்து அரியப் புகுந்தபொழுது; ஒரு பாம்பு அவரைத் தீண்டிற்று. அதை அவர் பேணாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யும்படி குருத்தை அரிந்து கொண்டு, விரைவிலே திரும்பிவந்து, விஷந்தலைக்கொள்கையால் மயக்கமடைந்து, வாழைக்குருத்தைத் தம்முடைய தாயார்கையிலே கொடுத்துவிட்டு, கீழேவிழுந்து இறந்தார். அது கண்டு அப்பூதிநாயனாரும், அவர் மனைவியாரும், "ஐயோ! இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை மறைத்துவைத்துச் சிறிதுந் தடுமாற்றமின்றி அப்ப மூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி! எழுந்து வந்து திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். அப்பமூர்த்தி அங்கு நிகழ்ந்த உண்மையைத் திருவருளினால் அறிந்துகொண்டு, அவர்களுடைய அன்பை நினைந்து திருவருள் சுரந்து, சவத்தைச் சிவாலயத்தின் முன் கொணர்வித்து "ஒன்று கொலாமவர் சிந்தை" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே அப்புத்திரர் உணர்வு பெற்று எழுந்தார்
சிலநாளாயினபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் அப்பமூர்த்தியும் திருப்புகலூரினின்றும் நீங்கி, திருநீலநக்க நாயனாரும் சிறுதொண்டநாயனாரும் முருகநாயனாரும் மற்றையடியார்களும் அநுமதிபெற்றுக்கொண்டு போய்விட, திருவம்பர் என்னுந்தலத்தை அடைந்து வணங்கி, திருக்கடவூரிற் சென்று வீரட்டானேசுரரைப் பணிந்து, குங்குலியக்கலய நாயனாரால் அவருடைய திருமடத்திலே திருவமுது செய்விக்கப்பட்டு; திருக்கடவூர்மயானத்தையும் வணங்கி, திருவாக்கூர் முதலிய திருப்பதிகளைத்தரித்து, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள்.
சில நாட்கள் சென்ற பின் இருவரும் திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள். சிலநாட் சென்ற பின், மழையின்மையாலும் காவேரிப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனால் உயிர்களெல்லாம் வருத்தமுற்றன. அக்காலத்திலே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கும் திருநாவுக்கரசுநாயனாருக்குந் தோன்றி, "காலபேதத்தினாலே நீங்கள் மனவாட்டம் அடையீர்களாயினும், உங்களை வழிபடுகின்ற அடியார்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, நாம் உங்களுக்குப் படிக்காசு தருகின்றோம்" என்று திருவாய்மலர்ந்து, திருக்கோயிலின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப்பீடத்திலும், தினந்தோறும் படிக்காசு வைத்தருளினார். அவ்வடியார்களிருவரும் தாங்கள் பெற்ற படிக்காசுகளை அனுப்பிப் பண்டங்கள் வாங்குவித்து, அமுது சமைப்பித்து, "சிவனடியார்கள் எல்லாரும் வந்து போசனம் பண்ணக்கடவர்கள்" என்று இரண்டு காலங்களினும் பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் பரமசிவனுக்குக் குமாரராகையாலும் பாடற்றொண்டுமாத்திரஞ் செய்கையாலும் தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடுத்து மாற்றப்பெற்றார்.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டியநாட்டிலே ஆருகதசமயம் பரம்பச் சைவம் குன்றிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, சமணர்களை வென்று சைவஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு, அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப்பொழுது திருநாவுக்கரசுநாயனார் சமணர்களுடைய கொடுமையை நினைந்து, மதுரைக்குப் போகாதிருக்கும் படி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைத் தடுக்க; திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அதற்கு இசையாமல் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினார்.
பின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்" என்னுங்கருத்தால், "பொய் மாயப்பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார்.
பின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்" என்னுங்கருத்தால், "பொய் மாயப்பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார்.
திருச்சிற்றம்பலம்.