திங்கள், 14 செப்டம்பர், 2015

திருமுறை கூறும் இறையன்பு


திருமுறை கூறும் இறையன்பு தற்காலத்தில் பக்தி அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அவ்வாறு அதிகமான பக்தி எத்தகைத்தது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இறைவன் பால் கொள்ளும் இறையன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நம் மூதாதையர்கள் மற்றும் ஞானிகள், சித்தர்கள் கூறிய நெறி என்ன? அவ் நெறி தற்போது கடைபிடிக்கப்பட்டு இறையன்பு உள்ளதா ? என்றால் அதுவும் வியக்கத்தக்கதாகவே உள்ளது. இவ்வுலகத் தேவைகளை நிறைவேற்றித் தருபவராக இறைவரை எண்ணுவதை இறைவர் விரும்பவில்லை என்பது திருமுறைகள் கூறும் உண்மை. நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் இறைவரைத் தொழகிறோம். பொன் வேண்டி, பொருள் வேண்டி, மற்றும் இம்மைப் போகங்கள் வேண்டி இறைவரை வழிபடுகிறோம். உலக பொருள்களை விரும்பி இறைவரிடம் வேண்டும் நாம் இறைவரை விரும்பி வேண்டி வழிபடுவதில்லை. கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் போலிகள் முதற்கொண்டு சாதாரண மனிதர் வரை அழிக்கூடிய பொன் பொருளைத்தான் விரும்புகிறார்கள். பக்தி என்பது இம்மையின் இன்பமாய் வாழ்வதற்குரிய பொருள்களை இறைவரிடம் கேட்பது இல்லை. அந்தப் பரம்பொருளையே விரும்பிக் கேட்பதுதான் பக்தி என்கின்றனர் உண்மை ஞானிகள். பரம் பொருளைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பாமையே பக்தியாகும். சிலர் இவ்வுலக வாழ்விற்குப் பின் சுவர்க்கம் பெற வேண்டும் என்று வழிபடுகிறார்கள். இவ்வுலக இன்பத்தைப் போல பலமடங்கு அதிகமான இன்பத்தை தரும் இடமாக சுவர்க்கத்தை நாம் கருதுகிறோம. இது நம்முடைய அறியாமையே ஆகும். உண்மை ஞானிகள் எப்படி பக்தி செய்து காட்டினார்கள் என்பதை மணிவாசகர் ஒரு பாடலைக் கொண்ட காண்போம். "யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து இரேன் தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே ! எம்பெருமான் எம் மானே ! உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே." திரு வாசகம் இப்பாடலின் கருத்து: இந்த உலகில் பிறப்பதற்கோ, இறப்பதற்கோ நான் அஞ்சவில்லை. வானுலக இன்பம் பெறினும் அதனை நான் விரும்ப மாட்டேன். இம்மண்ணுலகை ஆள்வதையும் ஒரு பொருளாக எண்ணுவது இல்லை. தேன் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சிவபெருமானாரே ! தங்களின் திருவருள் என்று கிடைக்கும் என்று ஏங்கி நிற்கின்றேன். வானுலக இன்பத்தையும் வேண்டாம், என்பவர்கள் உண்மை ஞானிகள். திருநாவுக்கரசு சுவாமிகள்இறைவரிடம் கேட்டுள்ள வரம் யாது எனக் காண்போம். "புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்" ................. எந்தப் பிறப்பு எடுத்தாலும் சரி, தேவதேவா! தங்களின் திருவடியை மறவாதிருக்க வரம் மட்டுமே தாருங்கள் என்று வேண்டியுள்ளதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். " கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அது வேண்டேன் "............. காரைக்கால் அம்மையார் திருவந்தாதி அண்டம் ஆளும் பேற்றினை அளித்தால்கூட அதை நாம் விரும்ப மாட்டேன் என்று சொல்லும் காரைக்கால் அம்மையாரின் உன்னதமான பக்தியை நாம் மனத்தில் இறத்தல் வேண்டும். இறையருள் ஒன்றை மட்டுமே விரும்பும்அடியார் பெருமக்களுக்கு இந்திர பதவி, வானுலகம் சுவர்க்கம், நரகம், குபேர பதவி ஆகியவற்றைப் பற்றி சிறிதும் அக்கறை இருப்பதில்லை. அவை யாவும் அற்பமாகி விடுகின்றன அத்தூயவர்கட்கு. சிவபெருமானார் மீது அன்பு செலுத்துவது ஒன்றே பிறவிப்பயன் என்று வாழ்ந்து காட்டியவர்கள் அருளாளர்கள். வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுபவன் கரையை நாடுவது போலவும், கோடை வெயிலில் நடப்பவன் மரநிழலை நாடுவது போலவும், மழைக்கு அஞ்சியவன் வீட்டை நாடுவது போலவும், ஏழை செல்வந்தனை நாடுவது போலவும், அடர்ந்த இருளிலே தவிப்பவன் விளக்கை நாடுவது போலவும், குளிரிலே நடுங்குபவன் நெருப்பை நாடுவது போலவும், இறைவருடைய திருவருளை நாடுவது தான் பக்தியாகும். இதை விடுத்து பலப்பல சடங்குகள் செய்வதுதான் பக்தி என்று எண்ணி வாழ்நாளை வீழ்நாளாக்கி வருகிறோம் நாம். மூவாயிரம் ஆண்டு தவம் இருந்த திருமூலர் கூறும் கருத்து, "என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடுஉருகிஅகம் குழைவார்க்குஅன்றி என்போல் மணியினை எய்த வொண்ணாதே" திருமந்திரம் கருத்து: நம் எலும்புகளையே விறகாக ஆக்கி, நெருப்பு மூட்டி, அதில்நம் உடல் சதைகளை இட்டு வறுத்து எடுத்துக் கடுந்தவம் செய்தால் இறையை உணர்ந்திட முடியாது. உடலை எவ்வளவு வருத்தினாலும் பயன் இல்லை. இதனை நன்கு மனதில் நாம் கொள்ள வேண்டும். உள்ளத்தில்உண்டாகும் அன்பின் மிகுதியினால் அகம் குழைய வேண்டும். அன்பு என்பது தன்னலம் இல்லாத தன்மை ஆகும். தன்னலப்பற்றை நீக்கி, கருணை மிகும் பொழுது உள்ளம் மென்மையாகிவிடுகிறது, இத்தன்மையே உருகிய நிலை என்பர். வெண்ணெய் உருகினால் நறுமணம் வெளிப்படும் தங்கம் உருகினால் கல் பதியும், உள்ளம் உருகினால் இறையருள் பதியும். தீய குணங்கள் யாவும் நீங்கி நற்குணங்கள் மட்டுமே நிறைந்த உள்ளம் மென்மையான - உருகிய உள்ளம் எனலாம். " என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள நண்பலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்பச் சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி!! .......... திருவாசகம் கருத்து: இறைவரைக் காண வேண்டும் என்ற மிகுதியான ஏக்கத்தால் உள்ளம் உருகுகிறது. அதன் பயனாய் உடலும் உருகுகின்றது. இறைவர் மீது உண்டாகும் அன்பு கரை பரண்டு ஓடும் ஆற்று வெள்ளம் போல் பெருகுகின்றது. ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்து " பெருமானாரே ! " என்று புலம்பும்பொழுது சொற்கள் தடுமாறுகின்றன, உரோமங்கள் சிலிர்க்கின்றன. கைகள் பூவின் மொட்டுப்போல் குவிகின்றன. இதயம் மலர்ந்து விரிகின்றது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகின்றது. இத்தகைய சாயா அன்பினை (இடையறா அன்பினை) நாள்தோறும் வளர்க்கும் பக்தர்களின் தாயாக நின்று அருளுகிறார் இறைவர். "ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை ஈரம் உடையவர் காண்பர்இணையடி" .......... திருமந்திரம் ஈரம் மெய்மையாக இருந்து இரண்டு பொருட்களை ஒட்டுவதற்கு எவ்வாறு உதவுகிறதோ, அதுபோல அன்பு மென்மையாக இருந்து நம்மை இறைவருடன் இணைக்கத் துணைபுரிகின்றது. எனவே அன்பிற்கு ஈரம் என்று பெயர். இத்தகைய அன்பினைத் தளராமல் செலுத்துவோர்க்கு தாயாக இருந்து அருள்புரிவார் இறைவர். நாம் இறைவரிடம் கேட்க வேண்டியது " புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தாருங்கள்" என்பது தான். உலகப் பொன் பொருள் போகங்கள் அல்ல என்பதை உணர்ந்து பக்தி நெறி நின்று பிறவியை ஒழிப்போமாக. திருச்சிற்றம்பலம் -- ஓம் நமசிவாய ! மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக