சனி, 12 செப்டம்பர், 2015

யோக வாழ்வு


யோக வாழ்வு யோகம் என்பது முற்றிலும் அனுஷ்டானத்திற்குரியது. நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க கூடியது. இந்து சமயத்தின் முதல் யோகி சிவபெருமானாரே ஆவார். யோகியின் பெருமை கடல் போன்று அளவற்றது. ஐம்புலன்களை அவற்றின் வழியில் செல்ல விடாமல் தடுத்து அவற்றை இறை வழிக்கு திருப்புதலே யோகமாகும். இதைச் செய்பவரே யோகியாவார். எளிய மனிதர்கள் போகிகள் மட்டுமே. அதாவது இன்பங்களை அனுபவிக்க மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர்களை பொறுத்தவரை சிற்றின்பமே பேரின்பமாகும். ஆனால், உண்மையான இன்பம், பேரின்பமாவது எப்பொழுதும் இறைவனோடு தொடர்பு கொண்டிருப்பதே ஆகும். இந்த பேரின்பத்தை பெற யோகம் உதவுகிறது. பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் ஞானயோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்ற தலைப்பில் யோகத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இந்த யோகம் என்பது அதிர்ஷ்டமாக யாருக்கு கிடைப்பதல்ல, அதுவல்ல யோகம், அவர் யோகக் காரர் அவருக்கு எல்லாம் கிடைக்கும் என்பதல்ல, மனிதன் வெற்றியாளனாக செயல்பட இந்த யோகம் உதவுகிறது. யோகம் என்பது கடவுளுடையது மட்டுமல்ல, அது நம்முடையதும் தான். இந்து சமய கடவுள்கள் எல்லாம் யோகத்தில் இருக்கிறார்கள். உடல் ஒரு வழியில் , மனம் வேறு வழியில் பயனிக்கின்ற மனிதனை ஒன்றிணைக்கும் முறை இது. மனிதர்களிடம் இருக்கின்ற முரண்பாடுகளை நீக்குகின்ற அற்புதமான முறை யோகம்தான். யோகம் என்பது உயர்ந்த ஒன்று, அதனை இலட்சியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை கீழ் நிலைக்கு பயன்படுத்துவது அபத்தமானது. யோகத்தை யார் வேண்டுமானாலும் பயிலாம். எளிய மனிதனை மட்டமான சாதாரண வாழ்க்கையிலிருந்து உயர்ந்த இலட்சிய வாழ்க்கைக்கு உயர்த்துகிறது. ஆனால் உயர்ந்த ஒன்றை கீழான ஒன்றினுள் பயன்படுத்துவது தவறான செயலாகும். இதனையே அநேகர் செய்கிறார்கள். இந்த உயர்ந்த சாதனங்களான யோகமும், ஆன்மிகமும் இந்த நாகரிக உலகில் கீழ்நிலைக்கு பயன்படுத்தப் படுகின்றது.இதனை மாந்திர தந்திர காரணங்களுக்காக பயன்படுத்தி விளம்பரமும் சுய கெளர உயர்வும் பெற அநேகர் பயன்படுத்துகின்றனர். இச் செயல் ஆனது பன்றிகளுக்கு முத்துக்களின் மதிப்பு தெரியாது என்று இறைமகன் யேசு குறிப்பிடுவது போன்று குரங்கின்கையில் மாணிக்க கல் கிடைத்தது போன்று ஆகும். பலஹீனமானவர்கள் யோகத்தை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். அவன் தன்னையே அளவீடாக வைத்து தன்னளவிலேயே சிந்தித்து, தானே எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொண்டு, தன்னால் எது கடைபிடிக்க முடியுமோ அதுதான் யோகம் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அவனுக்கு எது உண்மை? எது பொய் என்பதெல்லாம் தெரியாது , தன்னளவில் சிந்தித்து சுயமுடிவு எடுத்து செயல் படுகின்றனர். அப்படி என்றால் , அவன் எதுவாக இருக்கின்றானோ அதுவாகவே இன்னும் அதனை திறம்பட செய்கிறான். அவன் திருடனாக இருந்தால், அச்செயலை இன்னும் அழகாக செய்கிறான். அவனுடைய திருட்டு எண்ணம் மேன்மேலும் ஓங்கி வளர்கிறது. அவன் எதை நினைக்கிறானோ, அதைச் செய்கிறான். அதுதான் அவனளவில் யோகமாகிறது. இந்த அஞ்ஞான முடிவே மெய்ஞானமானது என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகிறது. மனதளவில் பலஹீனமான யாவருக்கும் பொருந்துவதாகும்.எனவே, யோகத்தின் மூலம் மனதை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உண்மையான யோகம் என்பது உண்மையான குருவின் மூலம் மட்டுமே கற்றுக் கொள்ளப்படுவதாகும், சுவாமி விவேகானந்தர் சிறந்த ஞானி என்பதையும், ஆன்மிக குரு இராமகிருஸ்ண பரமஹம்சர் என்பவரின் சீடர் என்பதும் யாவரும் அறிந்ததே. அவர் ஒரு கதை சொன்னாராம். மனிதர்கள் உயர் இலட்சியம், நோக்கம் கொண்டு இறைத்தேடலில் இறங்கித் தேடினால், அதில் ஒருவன் அசுரன், மற்றொருவன் தேவன், இருவரும் ஒரு ஞானியிடம் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள், அவரும் "தத்வமஸி" நீயே அது என்றார். முதலாமவன் தான் இறைவன் என்ற முடிவை எடுத்துக் கொண்டு ,தன்னளவிலேயே அனைத்தையும் செய்து கொண்டான். இரண்டாமவனோ, (இவன் தேவன்) மறுபடியும் அந்த ஞானியிடம் சென்று அவரைச் சரணடைந்து, அதன் அறுதி உண்மையை அறிந்தான். அனைத்து முடிவுகளையும் தன்னளவில் எடுத்துக் கொண்டு தன்னைத்தானே எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொள்வது, ஒரு உயர்ந்த நோக்காக எண்ணுவது அறிவிலித்தனம் , இது அசுரனுக்குரியது குணாம்சம் அவ்வாறு செய்வதைக் கைவிட வேண்டும் என உணர்ந்தான். எனவே அவனவன் நினைக்கின்ற அளவிலேயே அவன் யோகியாகிறான். யோகியர் இயல்புகள் பற்றி திருமூலர் கூறும் கருத்து. "அணங்கற்றும் ஆதல் அருஞ்சனம் நீவல் வணங்குற்ற கல்விமா ஞானம் மிகுத்தல் சிணங்குற்ற வாயர் சித்திதாம் கேட்டல் நுணங்கற்று இருத்தல்கால் வேகத்து நுந்தலே." ஆசை இல்லாமல், அருமையான மனைவி மக்கள் முதலான சுற்றம் நீக்கி இருத்தல், கல்வி அறிவால் அடங்கி இருத்தல், ஞானத்தில் மிக்க விளங்குதல்,இறைவனது மகா மந்திரத்தை முணு முணுத்துக் கொண்டிருத்தல், யோக சித்திகளை பற்றி தம்மினும் ஆராச்சியுடையவர்களிடம் கேட்டல், உள்ளம் சலியாது ஒரே நிலையில் இருத்தல் ஆகிய குணங்கள் சுத்த யோகியின் குணங்கள் என்கிறார். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக