செவ்வாய், 29 செப்டம்பர், 2015

இறைவனுடைனான நமது நட்பு


இறைவனுடைனான நமது நட்பு நட்பு என்பது என்ன? எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்காமல் நம் நண்பருக்கு உதவுவதும், அவர் துன்பத்தில் இருக்கும் போது ஓடி வந்து அவருக்கு ஆறுதல் கூறுவதும் அவர் வளர்ச்சி கண்டு நாம் பேரின்பம் கொள்வதுமே நட்பு எனப்படும். இறைவனுடன் நாம் நட்பு கொண்டால் தான் இத்தகைய நன்மைகள் கிடைக்கும். இறைவன் நமக்கு மிகச் சிறந்த நண்பன். இத்தகைய பெரிய உலகத்தையே நாம் அனுபவிக்க வழங்கிய அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை. மாறாக அவன் நமக்கு வழங்குவது ஏராளம். இறைவன் நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டால் நமது வாழ்க்கை வளமாக மாறும். அர்ச்சுனன் கண்ணன் நட்பு : அர்ச்சுனன் கண்ணனை தனக்காக நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். கண்ணன்நல்ல நண்பன். நல்ல நண்பன் என்ன செய்வான்? தன்னுடைய நண்பன் செருக்குக் கொள்ளும்போது அவனைக் கண்டித்து திருத்துவான். கண்ணன் அர்ச்சுனனை அப்படித் திருத்தினான். பாரதப் போரில் அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கு போர் மும்முரமாக நடக்கிறது, அர்ச்சுனன் பாணத்தால் கர்ணன் எங்கோ போய் விழுந்தான், அர்ச்சுணனுக்கு உடனே செருக்கு தலைக்கேறி விட்டது. அவன் உடனே கண்ணனைப் பார்த்து " பார்த்தாயா கண்ணா நான் அடித்த பாணத்தில் கர்ணன் எங்கு போய் விழுந்தான் " என்று எக்காளத்தோடு கேட்டான். கண்ணன் தேரில் மேல் பார்த்தான். ஆஞ்சநேயர் கொடியிலிருந்து சிரித்தார். அர்ச்சுனா ! சென்ற யுகத்தில் ஆஞ்சநேயரிடம் பேச வேண்டிய விசயம் பாக்கி இருக்கிறது. இதை பேசிவிட்டு வந்து விடுகிறோம் என்று தானும் தேரை விடடு இறங்கி, ஆஞ்சநேயரையும் அழைத்து சென்றான். திரும்பி வந்து பார்க்கும் போது அர்ச்சுனன் ஒருபுறம் தேர்ஒருபுறம் சாய்ந்து கிடக்கிறான். அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. அது அவன் சாமர்த்தியம் அல்ல , தனக்கு சாரதியாய் அமர்ந்திருக்கும் கண்ணன் அருளே என்று அவன் உணர்ந்தான். அர்ச்சுணன் மனம் தளரும் போதெல்லாம் அவனுக்கு நல்ல ஆறுதல் வழங்கியவன் கண்ணன். இறைவனாகிய கண்ணனை நண்பனாக பெற்றதால் அர்ச்சுனன் பெற்ற நன்மைகள் கணக்கற்றவை. இறைவனாகிய கண்ணனுடைய நட்பு அவனுக்கு கிடைத்ததால் கெளரவர்களின் தீய செயல்களிலிருந்து பாண்டவர்களை காத்தான். நல்லவர்களுக்கு எப்பொழுதுமே ஆண்டவனுடையநட்பும் ஆசியும் உண்டு. இதனால் மிகப் பெரிய லட்சியம் என்ற வெற்றி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதைச் சாதித்தாலும் இதை நான் சாதித்தேன் என்று கூறாமல் இறைவனுடைய அருளால் இச்செயல் வெற்றியாக முடிந்து என்று கூறுங்கள். தொடர்ந்து வெற்றிகள் உங்களை வந்தடையும்.எல்லாம் இறைவனால் நடைபெறுகிறது என்று நினைக்கும் போது நம் மனதில் ஆணவம் எழுவதில்லை. ஆணவம் எழாததால் அழிவும் ஆபத்தும் நமக்கில்லை. சுந்தரர் சிவபெருமான் நட்பு: அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானை தன் தோழராகவே எண்ணினார். அதனால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டார். அவர் பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சுந்தரர் தன் மனைவி பரவையார் மீது கொண்ட ஊடல் காரணத்தால், தன் நண்பனுக்காக பரவையாரிடமே தன் ஊடலை தீர்க்க தூதுவனாக அனுப்பினார், நண்பனுக்காக இறைவனே பரவையாரிடம் தூதுவனாகச் சென்று ஊடலை தீர்த்து வைத்தார். இத்துடன் இல்லாது சுந்தரர் வேண்டும் போதெல்லாம் பொன்னும் பொருளும் கொடுத்து இடர்களைந்தார். இந்து சைவ சமய மார்க்கத்தில் அவர் இறைவனிடம் கொண்டது சகமார்க்கம் என்பதாகும். நண்பன் என்பவன் நிஜத்தைத் தொடரும்நிழலைப் போன்றவன். நட்புக்கு கரும்பை உவமையாக சொல்கிறது நாலடியார்என்னும் நீதி நூல், கரும்பை நுனியிலிருந்து தின்றுபடிப்படியாக அதன் அடிப்பகுதியை சுவைப்பது போன்றதாகும். இது போனறுதான் பெரியோர்களின் நட்பு. இறைவனிடம் நாம் கொள்ளும் அன்பு என்னும் நட்பு அளவிடர்கரியது. நாம் வழங்கும் அன்பையே உணர்வான். இறைவன் அன்பே வடிவானவன். இதனால் வள்ளலார், இறைவனை " அன்பெனும் பிடிக்குள் அகப்படும்மலையே என்றார். திருமந்திரம் தந்த திருமூலரும் " அன்பே சிவம் " என்றார். ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட நட்பு : ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட காதல் எனும் நட்பு. ஆண்டாள் இறைவனுக்கு அனுதினமும் முதலில் தான் அணிந்து அழகு பார்த் பின்புதான் இறைவனுக்கு சார்த்தினார். ஆண்டாள் அவ்வாறு தான் அணிந்த பின்பு இறைவனுக்கு அணித்த மலர்மாலையில் முடி இருப்பதை அவருடைய தந்தையார் கண்டார். மனம் கலங்கினார், உடனே அந்த மாலையை மாற்றி புதிதாக ஒரு மலர்மாலையை பெருமானுக்கு சார்த்தினார். அம்மாலையை இறைவன் ஏற்க வில்லை. அவர் ஆண்டாள் தனக்கு அணிவித்த மாலையில முடி இருந்தாலும்அவளுடைய அன்பின் திறம் கருதி அதனையே தான் அணிந்து கொண்டார். இதனால் ஆண்டாள் " சூடிக்கொடுத்த சுடர்க் கொடி"என அழைக்கப் பட்டாள். கண்ணப்ப நாயனார் காளத்தி நாதர் நட்பு: கல்லும் கரையுமாறு கனி தமிழில் திருவாசம் பாடிய மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனாரை வியந்த பாராட்டுகிறார், அவர் இறைவர்பால் நட்புக்கு ஈடு இணை இல்லை அவர் அளவிற்கு அன்பு செலுத்துவர் யாரும் இல்லை என்கிறார். அன்பில் உச்சியில் கண்ணப்பர் நிற்கின்றார், இதனை அவர் " கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் " என்ற வரியில் பாராட்டுகின்றார். கண்ணப்ப நாயனாரை சமயக்குரவர் நால்வரும் நக்கீரர் முதலிய பெரும் புலவர்களும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கண்ணப்பர் தான் வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை முதலில் தான் உண்டு, அது சுவையாக இருந்தால் மட்டுமே அதனை இறைவனுக்கு படைப்பார், தன்கு என்ன சாப்பிடப் பிடிக்குமோ அதனையே இறைவனுக்கு நிவேதனம் செய்தார் கண்ணப்பர், இவர் அன்புருவாகி இறைவன் மீது எல்லையற்ற அன்பைச் செலுத்தி ஆறு நாள் தொண்டு செய்து முக்தி பெற்றார். குகன் இராமபிரான் நட்பு : கங்கைக் கரையில் வாழ்ந்தவன் குகன். உயர்ந்த அன்புக் கருவூலமாக விளங்கினான். இராமபிரானிடம் அன்பு செலுத்தியவர்கள் பலர். அனுமன், சுக்ரீவன், விபிஷணன், ஜடாயு,சபரி, சரபங்கர் பாரத்துவாசர் முதலியோர் ஸ்ரீராமரை நேசித்தார்கள். ஆனால் சிறுபயன்கூட கருதாமல் நேசித்தவன் குகன், நிஷ்காம்ய பக்தி செய்தவன், நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன். என்று குகனை சுக்ரீவன் வியந்து பாராட்டுமளவுக்கு சிறந்தவன் குகன். இராமனுக்கு சிறந்த நண்பனாக குகன் விளங்கினான். ஆசாரம், கல்வி, தகுதி முதலியஒன்றினாலும் உயர்வு இல்லாத வேடர் தலைவன் குகன். எனினும், அவனை தன் தம்பி என்று கூறி தழுவிக் கொண்டார் ஸ்ரீராமர். இவர்களுடைய நட்பை கம்பர் தன் பாடலில் " பொய்யில் உள்ளத்தன்" என்றும், இலட்சுமணன் இராமபிரானிடம் குகனைப் பற்றி கூறுங்கால், " சுற்றமுந் தானும் உள்ளந் தூயவன் தாயின்நல்லான் " என்று குறிப்பிடுகின்றார். இத்தகைவர்களிடமெல்லாம் அன்பு கொள்ள ஒரு தகுதி வேண்டும். இங்கே நட்பு என்பது மேலானது. பொருத்தமானது, அவசியமானதும் கூட, வாழ்க்கையில் எத்தனையோ உறவு முறைகள் இருந்தும், அத்தனையும் கடந்து நிற்பது நட்பு மட்டுமே. ஒருவர் தன் தாயிடம் சில விஷயங்களையும் தன் சகோதரிகளிடம் சில விஷயங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களிடம் தனிப்பட்ட சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவர் நண்பரிடத்தில் மட்டும் தான் அனைத்து விசயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் இது நட்பின் தனிச் சிறப்பாகும். ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்னும பழமொழி கூட நட்பின் சிறப்பை விளக்க எழுந்ததேயாகும். "நல்ல நண்பனைப் பெறாதவன் அந்தஇடத்தை காலியாகவே வைத்திருக்கிறான் என்பது பெரியோர்களின் ஆழமான கருத்து" இங்கே நீங்கள் கூர்ந்து சிந்திக்க வேண்டும். இந்தக் காலியான வெறுமையே அவனுடைய வாழ்க்கையில் ஒரு விரக்தியையும் வறட்சியையும் உண்டாக்கி விடும். வாழ்க்கையில் விரக்தியும் வறட்சியும் வந்து விட்டால் வாழ்வே வெறுத்து விடும். உள்ளன்போடு வாழப் பிடிக்காமல் ஏதோ பூமிக்கு பாரமாக வாழ வேண்டியது வரும். வரலாற்றில் கொடுமையானவர்கள் என்று சித்தரிக்கப் பட்டவர்கள் கூட ( ஹிட்லர், முசோலினி போன்றோர்) நண்பர்கள் தான், உண்மையான நட்புறவு இல்லாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நட்பு என்பது எல்லாவற்றையும் கடந்தது. எந்தவித பிணைப்பும் இல்லாதது. இணைப்பது. நட்பு, நிர்ப்பந்தத்திற்குள் உங்களைத் தள்ளாது. கம்பனும் சடையப்ப வள்ளலும்கொண்டதும் நட்புதான். கண்ணன் எல்லோரிடமும் அன்பு பூண்டொழிகினான். ஆனால் அர்ச்சுனனையும் குசேலரையும் மட்டுமே நண்பர்கள் என்றான். இதற்கு என்ன காரணம்? நாம் அனைவரிடமும் பழக முடியும். பேச முடியும், ஆனால் ஓரிருவரை மட்டுமே நண்பராக கொள்ளமுடியும். அதுவும் தன்மேல் அளவு கடந்த அன்பு கொண்டோரிடம் மட்டுமே நாம் நட்பு கொள்ள முடியும். வள்ளலார் இறைவனிடம் வேண்டும் போது, நண்பர்கள் எப்படி இருக்க வேண்டு மென்பதற்கு " உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலாவாமை வேண்டும் " என்கிறார். கண்ணன் மேல் அளவு கடந்த பக்தியும நட்பும் கொண்டவன் அர்ச்சுனன். கண்ணனிடம் ஆலோசனை கேட்காமல் எந்த செயலையும் செய்வதில்லை. அர்ச்சுனன் மனம் தளர்ந்தபோதெல்லாம் அவனுக்கு ஆறுதல் கூறி, அவனை மீண்டும் நல்ல நிலைக்கு உயர்த்தினான் கண்ணன். மகாபாரதம் இதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துரைக்கின்றது. குசேலர் கண்ணன் நட்பு: குசேலர் ஓர் ஏழைப் பிராமணர். கண்ணன் அவருடைய பாலிய இளம் உயிர் தோழன். இருவரும் ஒரு சாலை மாணவரகள். கண்ணன் குசேலரை அளவு கடந்து நேசித்தான். குசேலரும் அப்படியே. குசேலர் கண்ணனை காண ஆடம்பர பொருள்கள் ஏதும் கொண்டு வரவில்லை. பாவம் ஏழை பிராமணரிடம் அதெல்லாம் ஏது? அவரே வறுமையின் கொடுமையால் வாடியவர் ஆயிற்றே. வறுமையின் கொடுமை தங்காமல் அவருடைய மனைவி அவருடைய பால்ய நண்பனான கண்ணனைக் கண்டு வரும்படி ஏதாவது பொருள் பெற்று வரும்படி அவலை மட்டுமே அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். தன்னுடைய நீண்டநாள் நண்பரான கண்ணனை பார்க்க வெறும் அவலை மட்டுமே கொண்டு போகிறோமே என்று கலங்கினார் குசேலர். எனினும் தன்னுடைய நண்பன் கண்ணன் தான் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என்று பார்க்காமல், தன்னுடைய நட்பை மிகவும் போற்றுவான் என்ற மனவுறுதியில் குசேலர் கண்ணனைக் காணச் சென்றார். குசேலரைக் கண்ட கண்ணன் தாய் பசுவைக் கண்ட கன்றுபோல துள்ளினான். தன் இருக்கையை விட்டு எழுந்து விரைந்து சென்று குசேலரை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். குசேலரிடம் நலம் விசாரித்தான் கண்ணன். அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான்.குசேலர் உறங்கும் போது இந்த கால்கள் எத்தனை மலைகளைக் கடந்து வந்தனவோ என்று மனம் உருகி அந்தக் கால்களை இதமாக பிடித்து விடுகிறான் கண்ணன். எத்தனை ஆழமான நட்பு கண்ணனுக்கும் குசேலருக்கும் இருந்த நட்பு!. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? தகுதியை எதிர்பார்த்து வருவது அல்ல நட்பு தன்மையை எதிர்பார்த்து வருவதே நட்பு " முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு " என்கிறார் வள்ளுவர் இந்த நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் தான் கண்ணனும் அர்ச்சுனனும், கண்ணனும் குசேலரும். அனைத்து உறவுகளின் கதாபாத்திர்தையும் நிறைவு செய்தான் கண்ணன். நண்பன் என்ற சொல் அன்பனாக மாறுகிறது. எல்லா உறவுகளுமே பின் விளைவை ஏற்படுத்தும், ஆனால் நட்பு அப்படியன்று. மனித வாழ்க்கையில் உள்ள உறவுகள் அனைத்தும் இறுதியில் கடனாக மாறும் நட்பு அப்படியல்ல. என்றுமே இளமை குன்றாமல் இருக்கும். நெல்லின் உமியானது நீக்கி விட்டு, மீண்டும் அரிசியை அந்த உமியில் போட்டால் முன்பிருந்த உறுதி அந்த நெல்லுக்கு இருக்காது. அது போல்,, நெருங்கி பழகிய இருவர், ஒரு நாளும் பிரியக் கூடாது. பிரிந்து மீண்டும் இணைந்தால் பழைய நட்பின் உறுதி இருக்காது. நட்பாக இருப்பதற்கு வயதும் இனமும் பொருளாதாரமும் கல்வியறிவும் ஜாதியும் மதமும் ஓத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. இவை ஒன்று கூட இல்லாமல் இருந்தால் தான் நட்பு, அப்பர் பெருமான் வயதென்ன? ஞான சமபந்தர் வயதென்ன? ஒருவர் முதியவர், இன்னொருவர் இளையவர், இவர்களுடைய நட்புக்கு வயது ஒரு தடையாக இருந்ததில்லை. இருவரும் இணைந்தே பல சிவத்தலங்கள் சென்று பதிகங்கள் பாடினர். நட்பு வட்டம் மயமானது. ஆன்மிகத்தில் கண்ணன் கடவுள். அர்ச்சுனன் மனிதன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவருடைய நட்புத்தான் எல்லா புராண இதிகாச, வேத, உபநிடத, சாஸ்திர சம்பிரதாய உறவுகளின்உயர்வாக ஆழமாக போற்றப்படுகிறது. கண்ணன் பரமாத்மா அர்ச்சுனன் ஜீவாத்மா இது குரு சிஷ்ய உறவு அல்ல, குரு சிஷ்ய உறவுக்குக்கூட ஒரு இடைவெளி இருக்க் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது, "யாரும் யாரைவிடவும் குறைந்தவர்கள் அல்ல " என்று குர்ரான் கூறுகிறது. ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் காலில் விழ வேண்டியதில்லை என்கிறது இஸ்லாம் சமம் என்பது பொன்னைக் கொண்டோ, பொருளைக் கொண்டோ நிர்ணயிப்பது இல்லை. ஆன்ம அன்பைக் கொண்டு நிர்ணயிப்பது, பரமாத்மாவாகிய இறைவன், ஜீவாத்மாவாகிய மனிதனைப் படைக்கிறான். ஜீவாத்மாவானது எல்லா உயிர்களையும் தன்னைப் போன்றே எண்ணி, யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாமல், மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும் போது மகாத்மாவாக உயர்கிறது. அண்ணல் காந்தியடிகள் அப்படி உயர்ந்தவர்கள் தான்.அவர் தன்னைப் போன்றே பிற உயிர்களையும் எண்ணியவர். பரமாத்மா, ஜீவர்மா இந்த இரண்டு ஆன்மாவுமே தெய்விக வல்லமையி நிரம்பியவைதான். இரண்டும் தராசின் இரண்டு தட்டுகள் என்றால், ஒன்று உயர வேண்டும் என்றால் மற்றொன்று தாழ வேண்டும். அப்படி தாழ்கின்ற தட்டில் ஏதாவது ஒரு சுமை ( கனம்) இருக்க வேண்டும். மேலே இருக்கின்ற தட்டுகாலியாக இருக்க வேண்டும். நிர்வாணம் என்கிற தட்டு மேலே இருக்கிறது. அகங்காரம் என்கிற காலித்தட்டு கீழே இறங்குகிறது. கீழே ஒரு தட்டு இறங்காது போனால் மேலே ஒரு தட்டு செல்லாது. இறைவன் என்ற தட்டு உங்கள் சுமைகளை வாங்கி கொண்டு உங்களை மேலே உயர்த்துகிறது. தன்னை எளிமையாக தாழ்த்திக் கொள்கிறது. இறைவன் தன்னை அனபர்களுக்கு முன் எளிமையாக்கிக் கொள்ள பெரிதும் விரும்புகிறான். இறைவனை நோக்கி பக்தன் ஓர் அடி எடுத்து வைத்தால் பக்தனை நோக்கி இறைவன் பத்தடி எடுத்து வைப்பான். தன்னுடையஅன்பர்கள் செய்யும் செயலை இறைவன் பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறான். அன்புதான் அவனுக்கு முக்கியம். சாக்கிய நாயனார் மனதில் அன்பு கொண்டு சிவபெருமானுக்கு கல்லால் அர்ச்சனை செய்தார். அது சிவபெருமானுக்கு பூ மாலையாக ஆனது. மன்மதன் மனதில் அன்பில்லாமல் மலரையே அம்பாக சிவபெருமான் மேல் எய்தான். அந்த மலர் சிவபெருமானை எரிச்சலூட்டியது. உடனே அவர் தன் நெற்றிக் கண்ணால் எரித்தார். சிவலிங்கத்தில் இரத்தம் வடிவதைக் கண்ட கண்ணப்பர் தன்னுடைய காலை சிவலிங்கத்தின் மீது வைத்து தன்னுடைய கண்ணை தோண்டி அந்த சிவலிங்கத்தில் பொருத்தினார். கண்ணப்பர் அன்பினால் செய்த இச்செயல் சிவபெருமான் விரும்பி ஏற்புடையதாயிற்று தன் மனைவி பரவையார் தன்னிடம்கொண்ட ஊடலை தவிர்ப்பதற்கு சிவபெருமானையே தூதாக அனுப்பினார் சுந்தரர். சிவபெருமானும் பரவையாரிடம் நண்பனுக்காக தூது சென்று பிணக்கை நீக்கினார். எனவே, அன்பர்களுக்கு எளிமையானவன் இறைவன். மகாபாரதப் போரில் கண்ணன்அர்ச்சுனனுக்கு தேர்ஓட்டும் சாரதியாக பணி செய்தான். இது அர்ச்சுனின் மேல் கொண்ட நட்பின் சிறப்பு, நட்பு மட்டுமே இது போன்று பணியாளராக இதைச் செய்யும். கடவுளை நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் " உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரும் ". தகவல் : ஆன்மீகம் அறிவோம் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக