செவ்வாய், 14 ஜூன், 2016

சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும் ஆவாரை

பாட்டி வைத்தியம்
சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும் ஆவாரை

கோடைகாலத்தில் எளிதில் கிடைக்க கூடியது ஆவாரை. இதன் பூக்கள், இலைகள், வேர்கள் ஆகியவை அற்புதமான மருந்தாகி பயன்தருகிறது. நோய்களை தடுக்க கூடிய தன்மை கொண்ட ஆவாரை பூவை பயன்படுத்தி நீர் இழப்பை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி ஆவாரம் பூவுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கோடைகாலத்தில் ஏற்படும் நீர் இழப்பு தடுக்கப்படுகிறது.

சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகிறது. நீர்சத்தை தருவதாக விளங்குகிறது. கல்லீரலை பலப்படுத்துகிறது. வைரசால் ஏற்படும் வியாதிகளை தடுக்கிறது. புற ஊதா கதிர்களை எதிர்க்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆவாரை பஞ்சாங்கத்தை கொண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நீர் இழப்பு, மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஆவாரை பஞ்சாங்கம் என்பது ஆவாரையின் பூ,  இலைகள், விதை, பட்டை உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் காயவைத்து பதப்படுத்தி வைத்திருப்பார்கள். இதை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு சேர்க்கவும், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வெள்ளைப்போக்கு, பால்வினை நோயை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கிறது.  கோடைகாலத்தில் அதிக வெயிலால் தோலில் ஏற்படும் கருமை நிறத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம். ஆவாரை பூ பசையுடன் பச்சை பயிறு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் கருமை மாறும்.  ஆவாரை இலையை பயன்படுத்தி மூட்டு வீக்கம், எலும்பு முறிவுக்கான மருந்து தயாரிக்கலாம்.

எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கான கட்டு பிரித்த பின்னர் எலும்புகள் கூடுவதற்காக ஆவாரை இலைகளை பயன்படுத்தலாம். ஆவாரம் இலையை பசையாக எடுக்கவும். உளுந்தை தண்ணீரில் ஊறவைத்த பின் ஆவாரம் இலை பசையுடன் சேர்த்து அரைக்கவும். இதை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பற்றாக போடவும். துணி வைத்து இரவு முழுவதும் கட்டி வைக்கவும். காலையில் வெந்நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவர எலும்பு முறிவு விரைவில் குணமாகும்

நன்றி ; தினகரன் / இயற்கை வைத்தியம் www.dinakaran.com/Medical
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக