சனி, 18 ஜூன், 2016

அடியார் பெருமை

அடியார் பெருமை 
      

சிவனடியார்கள் சிறப்பு பற்றி திருத்தொண்டத் தொகை புனையவே சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரம் புரிந்தார்.அதுவே  மிகப்பெரிய அடியார்களுக்குப் பெருமை நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி 
அதை மூலமாக வைத்தே தெய்வ சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நமக்களித்தார் 

நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தமக்கென வாழாமல் சிவத்தையே சிந்தித்தும் அடியார் தொண்டும் சிவாலய கைங்கரியமும் வாழ்க்கையின் உன்னத இலட்சியம் என வாழ்ந்து காட்டியவர்கள் 


உலக அறம் பற்றி கவலை கொள்ளாமல் சிவ புண்ணியத்தையே சிந்தித்தனர் அதனால் தான் பிள்ளைக்கறி சமைக்கவும் ,தன் மனைவியையே அடியாருக்கு கொடுக்கவும் மகன் பிணத்தை மூடி வைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கவும் ,திருமணம் அன்று மகள் கூந்தல் அரிந்து கொடுக்கவும் , கண்ணையே பெயர்த்து வைக்கவும்,தனக்கு இல்லாவிட்டாலும் கிடைத்த ஒரு மீனையும் இறைவனுக்கு கொடுக்கவும் ,சிவவேடத்துக் காக உயிர் கொடுக்கவும் தந்தையே ஆனாலும் சிவபூசைக்கு தடை நேர்ந்தால் காலை வெட்டவும் கூடிய செயற்கரிய செயல்கள் அவர்களால் செய்ய முடிந்தது 

உலக அறம் மாறுபடும் நாம் பார்த்து மாற்றிக் கொள்ளலாம் உதாரணமாக 15 வருடங்க ளுக்கு முன் மிதிவண்டியில் இரண்டு பேர் பயணம் செய்தால் முன்பகுதியில் விளக்கு இல்லையென்றால் அபராதம் போடுவார்கள் இப்பொழுது இல்லை 20 வருடங்களுக்குமுன் வானொலி பெட்டிக்கு உரிமம் பெற வேண்டும் இப்பொழுது இல்லை .இன்னொன்று நாம் யாரையாவது கொலை செய்யலாம் என்று நினைத்தால் குற்றமாகாது ஆனால் அப்படி நாம் எண்ணிவிட்டாலே அந்த செயல் முடிந்ததாக கடவுளிடம் நமக்கு தண்டனை கிடைக்கும் அது தான் உலக அறத்துக்கும் சிவ அறத்துக்கும் உள்ள வேறுபாடாகும் மனைவி தவிர மற்ற பெண்களை தவறான 
கண்ணோட்டத்தில் நோக்கல் அடுத்தவர் களின் துன்பம் கண்டு இன்புறுவது என இன்ன பிற செயல்களைப் பட்டியலிடலாம்.

செயற்கரிய செய்தோர் பெரியோர் என்பது பெரியோர் வாக்கு அப்படிப்பட்ட உயர்ந்த அடியவர் பெருமையை உலகுக்கு கூற 
இறைவனே தன் நிழலாகவே உள்ள சுந்தர மூர்த்திசுவாமிகளை அனுப்பினார் என்றால் எவ்வளவு பெருமைக்கும் வணங்குதலுக்கும் உரியவர்கள் .

நமது அவ்வை பிராட்டியார் அவர்கள் பாடல் மூலம் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் திருவிளையாடல் திரைப்படத்தில்  இடம் பெற்ற பாடலைக் காண்போம்

பெரியதுகேட்கின் எரிதவழ் வேலோய்! 
பெரிதுபெரிது புவனம் பெரிது 
புவனமோ நான்முகன் படைப்பு 
நான்முகன்கரிய மால் உந்திவந்தோன் 
கரியமாலோ அலைகடல் துயின்றோன் 
அலைகடல் குறுமுனி கையில் அடக்கம் 
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன் 
கலசமோ புவியிற்சிறுமண் 
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம் 
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் 
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம் 
இறைவரோ தொண்டர் உள்ளத்தொடுக்கம் 
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! 

  
பாடலின் பொருள் பெரியது எது ? என்று முருகப்பெருமான் கேட்க அவ்வைப் பிராட்டியார் கூறுவதாக கேள்விபதிலாக

இந்த உலகம் மிகப் பெரியது அப்போ இந்த உலகம் தான் பெரிதா? இல்லையில்லை அதை பிரமன் படைத்தான் அப்போ பிரமன் தான் பெரியவனா? இல்லையில்லை பிரமன் திருமாலின் உந்தியில் (தொப்புள்) வந்தவன் அப்போ திருமால் பெரியவனா? இல்லையில்லை திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவன் அப்போ கடல் தான் பெரிதா? இல்லையில்லை அந்த அலைகடலும் குறுமுனி அகத்தியர் கையில் அடக்கம் அப்போ அகத்தியர் தான் பெரியவரா? இல்லையில்லை அகத்திய முனி கும்பம் எனும் மண் பானையில் பிறந்தவன் அப்போ மண்ணாகிய பூமி தான் பெரிதா ? இல்லையில்லை இந்த பூமி ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடனுக்கு ஒரு தலைதாங்கற அளவு தான் அப்போ ஆதிசேடன்கிற பாம்பு தான் பெரிய ஆளா? இல்லையில்லை அந்த பாம்பு உமை யம்மையின் சுண்டுவிரல் மோதிரமாக இருக்கிறது அப்போ உமையம்மை தான் பெரியவரா? இல்லையில்லை உமையம்மை இறைவன் சிவபெருமானின் இடப்பக்கத்தில் ஒடுக்கம் அப்போ சிவபெருமான் தான் பெரியவரா? இல்லையில்லை பெருமானே அடியார் பெருமக்களின் உள்ளங்களில் அவர்களின் அன்பில் கட்டுண்டு கிடக்கிறார் என்றால் அவ்வளவு மகிமை வாய்ந்த அடியவர்கள் நாயன்மார்கள் பெருமையை என்ன வென்பது என்பது தான் பாடலின் பொருள் 

சூரியனின் வெய்யில் வெப்பம் நம் மீது பட்டால் நாம் தாங்கிக்கொள்ளுவோம் ஆனால் சூரிய ஒளி பட்டு சூடேறியுள்ள சுடுமணல் மீது நாம் காலூன்றி நிற்க இயலுமா? அப்பொழுது சூரியனைவிட மணல் உயர்ந்ததா என்றால் இல்லை அது போல இறைவனின் அருள்பெற்ற இறை அடியார்கள் உயர்ந்தவர்கள் அவர்களை குருவாக ஏற்று அவர்களை வணங்கி போற்றினால் இறைவன் குரு மூலம் நமக்கு அருளுவான்
      
எனவே இறை அடியார்களாகிய நாயன்மார் களின் குரு பூசை நாளில் நாமும் அவர்கள் தாள் பணிந்து இறைவன் அருளுக்கு உகந்தவர்களாவோம்                        

                   போற்றி ஓம் நமசிவாய
             திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக