வெள்ளி, 24 ஜூன், 2016

புத்திரன் என்றால்… (ஆன்மிகம்)

புத்திரன் என்றால்… (ஆன்மிகம்)
மனித வாழ்க்கை சில நற்காரியங்களுக்காக ஏற்பட்டது. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட நியம, அனுஷ்டானங்களை சரிவர செய்ய வேண்டியது கடமை.
கணவனும், மனைவியும் குடும்பம் நடத்தி, சமைத்து, சாப்பிட்டு, ஏதோ மனம் போன படி குதூகலமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தால் அது இல்லறம் அல்ல. குடும்ப வாழ்க்கையில் பல தேவ பூஜை, அதிதி பூஜை, பந்துக்களுக்கு உதவு வது, நல்ல காரியங்களுக்கு உதவி செய்வது என பல விஷயங்கள், “தர்மம்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
இதில், “சந்ததி விருத்தி’ என்பதும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. கணவன்- மனைவி என்றால், அவர்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டும். அதிலும், ஒரு புத்திரன் உண்டாக வேண்டும். “புத்திர பாக்கியம்’ என்று உயர்வாகச் சொல்வர். அப்படிப் பிறக்கும் புத்திரனால் பித்ருக்கள், பித்ருலோகம் போவதாக நம்பிக்கை. வாழை யடி, வாழையாக வம்சம் விருத்தியாகிக் கொண்டே போனால் தான் பித்ருக்களுக்குப் புண்ணியலோகம் கிடைக்கும்.
அதனால், புத்திரனில்லாதவர்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று வருவதும், விரதங்கள் அனுஷ்டிப்பதும் வழக்கம். எவ்வளவு செல்வமிருந்தாலும், எவ்வளவு போகமிருந்தாலும் ஒரு மழ லைச் செல்வத்துக்காக ஏங்கு பவர்கள், கடவுள் அருளால் ஒரு குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவர். இதில், மற்றொரு விஷயமும் உள்ளது. அப்படி பிறக்கும் புத்திரன், “சத்புத்திர’னாக இருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம். அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பஞ்ச பாண்டவர்களைப் போன்ற சத்புத்திரர்களும் உண்டு; துரியோதனாதியர்களைப் போன்ற துஷ்ட பிள்ளைகளும் உண்டு. சத்புத்திரர்களை அடைந்தால் அதுவே பெரிய பாக்கியம்.
புத்திரனை வேண்டி பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்தார் மிருகண்டு முனிவர். அவர் முன் தோன்றி, “பதினாறு வயதுடைய சத்புத்திரன் வேண்டுமா, நூறு வயதுடைய துஷ்ட புத்திரன் வேண்டுமா?’ என்று கேட்டார் பரமேஸ்வரன். முனிவர், “நூறு வயதுடைய துஷ்ட புத்திரன் வேண்டாம்; பதினாறு வயதுள்ள சத்புத்திரனை அனுக்கிரகம் செய்யுங்கள்…’ என்று வேண்டினார். அதன்படி மார்க்கண்டேயன் என்ற சத்புத்திரன் உண்டானான்.
அவன், பதினாறு வயது வந்ததும், தன் பெற்றோர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, கவலைக்கான காரணத்தை அறிந்து, பரமேஸ்வரனை ஆராதித்து, அவனருளால் காலனை வென்று, என்றும் பதினாறு வயதுடையவனாக விளங்கும்படி வரம் பெற்றான். பிறகு, மார்க்கண்டேய மகரிஷி என்று பிரகாசித்தான்.

புத்திரன் என்றால், சத்புத் திரனாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களால் தனக்கும், பெற்றோருக்கும், குடும்பத்துக்கும், கீர்த்தியும், கவுரவமும் ஏற்படும். குடிகாரப் பிள்ளையையும், திருட்டுப் பிள்ளையையும் பெற்று வாழ்நாள் முழுவதும் வேதனைப் படும் பெற்றோருக்கு அவனால் என்ன பயன்? தாயாரின் மண்டையை உடைக்கிறவனையும், தந்தை மீது வழக்கு போடுகிறவனையும் நாம் பார்க்கிறோமல்லவா!
இவர்களெல்லாம் பிள்ளையாகப் பிறந்த கடன்காரர்கள். கடனை வசூல் செய்து கொண்டு போக வந்தவர்கள் என்று தான் விவரித்துள்ளனர் பெரியோர்.

இல்லறம் நடத்த வேண்டும். நற்பண்புகள் வாய்ந்த மனைவி கிடைக்க வேண்டும். சத்புத்திரன் உண்டாக வேண்டும் இதுதான் ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய பெரிய பாக்கியம். இப்படி கிடைத்தவன் புண்ணியவான்; கிடைக்காதவன் பாவம் செய்தவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக