திங்கள், 6 பிப்ரவரி, 2017

சிவார்ச்சனா சந்திரிகை

சிவார்ச்சனா சந்திரிகை
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியது

  நமது இல்லங்களில் சிவ ஆகம முறைப்படி சிவ பூசை செய்யும் சிவனடியார்கள் சைவ ஆகம முறைப்படி சிவார்ச்சனா செய்யும் முறைகளை ஸ்ரீ அப்பைய தீட்சர் அவர்கள் எழுதிய நுாலிலிருந்து ஒவ்வொரு அங்கமாக வெளியிட விரும்புகிறேன், தமிழில் கிடைப்பது அரிதிலும் அரிது, இதனை அனுதினமும் வாசித்து சைவ ஆகம விதிப்படி சிவார்ச்சனை செய்து ஈசன் அருள் பெற்று உய்ய அன்புடன் ேவண்டுகிறேன்,
நூல்
சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் சிரேஷ்டமானது. அந்தச் சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய சிவபூஜையானது போக மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச் சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்.
ஒவ்வொரு திவ்வியாகமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்து இவ்விடத்தில் திரட்டிக் கூறுதலால் பலவாகமஙகளின் கலப்பென்று சொல்லக்ககூடிய கலப்புத் தோஷம் நேரிடாதோவெனின், பலதிவ்யாகமங்களினுடைய பொருளின் கலப்பு இருப்பினும், ஒரே சிவசாத்திரமென்ற ஒற்றுமைபற்றிக் கலப்புத் தோஷம் நேரிடாதென்க. பாசுபதாகமத்தின் பொருள்களைத் திவ்வியாகமங்களின் பொருள்களுடன் கலந்தாற்றான் அத்தோஷம் நேரும். வேண்டிய விடங்களில் ஒரு திவ்வியாகமத்தைச் சார்ந்து பல திவ்யாகமங்களின் பொருள்களையும் கொள்ளலாமென்னுங் கூற்றும் மனிதரால் பிரதிட்டை செய்யப்பட்ட இலிங்கங்களில் பொருந்துமேயல்லது சுயம்பு முதலிய லிங்கங்களிற்பொருந்தாது.
ஈசுவரனும் ஒரு ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டு அந்த ஆகமத்தின் பொருள்கள் சுருக்கமாக இருப்பின் விரிவான பாகத்தை வேறு ஆகமங்களினின்றும் எடுத்துக்கொள்ளலாமென்று கூறியுள்ளார். ஒரு திவ்வியாகமப்பொருளும் பிறிதொரு திவ்வியாகமப் பொருளும் ஈசுவரன் கூறினமைபற்றிச் சமமாகவிருப்பினும், பூஜைக்கு அங்கமாக எந்த ஆகமத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதுதான் கொள்ளத்தகுமல்லது பிறிதொரு திவ்வியாகமம் கொள்ளத்தக்கதன்று. ஆதலால் எல்லாத் திவ்வியாமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்துச் “சிவார்ச்சனா சந்திரிகை” என்னும் நூலைச் செய்யத் தொடங்குகின்றேன்.


நூலின் சுருக்கம்
முன்னர் ஆசமனஞ்செய்து, விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பெற்ற சரீரத்துடன் சகளீகரணஞ்செய்து, கிரமப்படி சாமான்னிய அருக்கியத்தை அமைத்துகொள்ளல் வேண்டிடும். பின்னர்ச் சிவபூஜைக்குரியவிடத்தைச் சுத்த வித்தியாசொரூபமாகத் தியானஞ்செய்து அந்த இடத்தின் தெற்கு வாயிலில் துவாரபாலர்களை முறைப்படி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர் பூமி, ஆகாசம், சுவர்க்கம் என்னும்மிடங்களிலுண்டான மூன்று விக்கினங்களையும் அந்தந்த முறையில் விலக்கிக்கொண்டு உள்ளே சென்று அஸ்திரம் முதலியவற்றின் பூஜையைச் செய்து சிவபூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையுந் சேகரித்து சமீபத்தில் வைத்துக்கொள்ளல்வேண்டும். பின்னர் ஈசுவரனுக்கு வலது பாகத்திலாவது அக்கினிதிக்கிலாவது வடக்கு முகமாக விதிக்கப்பட்ட ஆசனத்திலமர்ந்து ஐந்து சுத்திகளையுஞ் செய்தல் வேண்டும். இவ்வாறு இந்நூலின் சுருக்கத்தை அறிந்து கொள்க.

திருச்சிற்றம்பலம்
நன்றி ; சைவம் டாட்காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக