புதன், 22 பிப்ரவரி, 2017

அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதாபிமானம்

அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதாபிமானம்

சக்தியும் சிவனும், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் பாதியாக இருக்கிறார்களே, அவர்களது மீதிப் பாதி எங்கே போயிற்று’ என்று விநாயகப் பெருமானை யாரோ கேட்டார்களாம்.

அதற்கு விநாயகர் `சிவத்தின் பாதிதான் உலகத்தில் ஆண்களாகவும், சக்தியின் பாதிதான் உலகத்தில் பெண்களாகவும் அவதரிக்கிறார்கள்’ என்றாராம்.

இப்படி ஒரு கதை நான் படித்தேன்.

`தெய்வம் மனுஷ ரூபயனா’ என்பது வடமொழி சுலோகம்.

ஒவ்வொரு மனிதனும் பரமனின் அணுவில் தோன்றியவனே!

ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் அணுவில் பிறந்தவளே!

அதனாலேதான், பிறக்கும்போது குழந்தை வஞ்சகம், சூது, கள்ளம், கபடு அறியாததாக இருக்கிறது.

தெய்வீக அணுவின் அடையாளச் சின்னமே குழந்தை.

ஒவ்வொரு குழந்தையும் தெய்வமாகவே அவதரிக்கிறது!

பிறகு ஏன், சில குழந்தைகள் திருடர்களாகவும், சில குழந்தைகள் அறிஞர்களாகவும், வளர்கின்றன.

இறைவன் உலகத்தில் உணர்ச்சிக்களத்தை உருவாக்க விரும்புகிறான்; உலகத்தை இயக்க விரும்புகிறான்.

எல்லாக் குழந்தைகளும் பிறந்தபோது இருந்தது போலவே வளரும்போதும் இருந்துவிட்டால், உலக வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமற் போய்விடும்.

மாறுபட்ட உணர்ச்சி இல்லை என்றால், மோதல்கள் இல்லாமற் போய்விடும்.

மோதல்கள் இல்லை என்றால், உண்மை என்ற ஒன்று
அறியப்படாமற் போய்விடும்.

`நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்’ என்றார்கள்.

நிழலை உணர வெயில் தேவை.

மழையை உணர வறட்சி தேவை.

மனிதாபிமானத்தை உணர மிருகத்தனம் தேவை.

தெய்வீகத்தை உணர மனிதர்கள் தேவை.

உமையும் மகேஸ்வரனும் படைத்த ஆண் பெண்கள் மூன்று வகையாக உருப்பெறுகிறார்கள்.

மிருகம்;

மனிதன்;

தெய்வம்.

கேவலமான உணர்வுக்கும், உயர்ந்த உணர்வுக்கும் நடுவே சராசரி மனிதன் நிற்கிறான்.

மிருகத்தைப் பார்க்கும்போது, மனிதாபிமானத்தின் மீது பற்று வருகிறது.

மனிதனைப் பார்க்கும்போது, தெய்வம் தேவைப்படுகிறது.

எல்லோருமே தெய்வங்களாகி விட்டால், தெய்வத் தத்துவம் செத்துப்போகும்.

எல்லோருமே மிருகங்களாகி விட்டால், தெய்வமே பயனற்றுப் போகும்.

நடுவே நிற்கும் மனிதனே, உலக இயக்கத்தின் பிதாவாகிறான்.

அவனைப் பார்த்தே தெய்வங்களும், மிருகங்களும் உணரப்படுகின்றன.

அதனால்தான் மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் நடுவே உள்ள மனிதனிடம் ஒரு அபிமானத்தை வளர்க்க இந்துமதம் முயற்சி எடுத்தது.

இதன் பெயரே மனிதாபிமானம்!

இதிகாசங்களில் வருகிறவர்கள் மனிதர்கள் தான். ராமன் என்ற மனிதன் தன் நடத்தையால் தெய்வமானான்.

இராவணன் என்ற மனிதன் தன் நடத்தையால் மிருகமானான்.

பாண்டவர்கள் தெய்வமானார்கள்.

கெளரவர்கள் மிருகமானார்கள்.

மனிதனுக்கு மனிதன் அபிமானத்தை வளர்த்தால் மனிதன் உள்ளத்திற்குள்ளேயே தெய்வம் தோன்றிவிடுகிறது.

மனத்தைக் `கோயில்’ என்கிறார்கள்; அதில் அமர்த்தப்படும் தெய்வமே மனிதாபிமானம்.

ஞானிகள் வானத்திலிருக்கும் தெய்வத்தைக் காண முயலவில்லை; மனிதனுக்குள்ளே தெய்வத்தைக் காண முயன்றார்கள்.

தர்மம்’ என்ற வார்த்தையின் மூலம், கோவிலிலிருக்கும் தெய்வத்தை மனிதனுடைய இதயத்திற்குள் கொண்டுவர முயன்றார்கள்.

அன்புள்ளவன் தெய்வம்.

கருணையுள்ளவன் தெய்வம்.

கற்புள்ளவள் தெய்வம்.

`பண்புள்ளவள் தெய்வம்’ என்று மனித நிலையின் மேம்பாடுகளைத் தெய்வ நிலைகளாகக் குறித்தார்கள்.

அதனால்தான், கீழ்த்தர உணர்வுகளிலிருந்து மனிதனை மேல்நோக்கிக் கொண்டு வருவதற்கு `மதம்’ என்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டது.

அந்த வகையில், முதலில் தோன்றிய மதம் இந்துமதமே.

சராசரிக் கடமைகளில் இருந்து மனிதனை அப்புறப்படுத்தாமல், அவன் இருக்கும் இடத்தையே கோவில் ஆக்க முடியும் என்று காட்டியது இந்து மதம்.

மழையை வரவழைப்பவளும், வாழை மட்டையை எரியச் செய்பவளும் மட்டுமே பத்தினியல்ல.

கணவன் கண்களில் மழை வராமலும், அவன் உள்ளத்தில் கனல் எரியாமலும் பார்த்துக் கொள்பவளே பத்தினி.

அத்தகைய பத்தினி இருக்குமிடம் குடிசையாயினும் அது கோயிலாகி விடுகிறது.

வெறும் கையில் விபூதியை வரவழைப்பவன் ஞானியல்ல; வெறும் உள்ளத்தில் விவேகத்தை வளர்த்துக் கொள்பவனே ஞானி.

வளர்த்த விவேகத்தைப் பயனுள்ள வகையில் விநியோகிப்பவனே விஞ்ஞானி.

இவர்கள் ஆண்டவன் வகுத்த சாலையையே அறியக் கூடியவர்கள்; எந்தப் பயணத்தையும் நிர்ணயிக்கக் கூடியவர்கள்.

அதனால்தான், மற்ற ஆத்மாக்களைவிட அவர்கள் மகாத்மாக்களாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஆகவே, இருக்கும் இடத்தைக் கோயிலாக்குவது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தை உருவாக்குவது மதாபிமானம்.

அந்த வகையில், மற்ற மதத்திற்கு இல்லாத தனித் தன்மை இந்து மதத்திற்கு உண்டு.

`இத்தனை தடவை கோயிலுக்குப் போய், இத்தனை முறை நீராடினால்தான் புண்ணியம்’ என்று எந்தத் தத்துவமும் சொல்லவில்லை.

அவை நம்முடைய ஆத்ம திருப்திக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை.

குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள்.

மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள்.

அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள்.

தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது.

குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.

எல்லோரும் சங்கராசாரிய சுவாமிகளாகி விட்டால், உபதேசத்திற்கு என்ன மரியாதை?

ஆனால், வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம்.

மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம்.

உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம்.

ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.

எறும்பைக்கூட மிதிக்காத அளவுக்குக் கொல்லாமை; இருப்பதைப் பகிர்ந்து கொடுக்குமளவுக்கு வள்ளல் தன்மை; மனிதாபிமானத்தை இப்படி வளர்க்கிறது இந்து மதம்.

இயலாமையிலும் திருடாமையைப் போதிக்கிறது இந்துமதம்.

மந்திரிக்குப் பதவி போனால் வீட்டைக் காலி செய்கிறான்.

மனிதன் பதவி போனால் உலகைக் காலி செய்கிறான்.

ஆனால், உயிருள்ளவரை ஒவ்வொரு மனிதனும் மனிதப் பதவியில் இருக்கிறான்.

மந்திரிப் பதவி தவறு செய்தால் விசாரணைக் கமிஷன் போடலாம்; மனிதப் பதவி தவறு செய்தால் மகேஸ்வரன்தான் விசாரிக்க வேண்டும்.

அந்த நீதிமன்றத்தில் மனிதன் கைகட்டி நிற்காமல் இருக்க, இகலோகத்திலேயே அவனது தஸ்தாவேஜுகளைச் சரி செய்து கொடுப்பதே இந்துமதம்.

அது சொல்லும் மனிதாபிமானத்தின் சுருக்கம் என்ன?

நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு; தீமை செய்தவனை மறந்துவிடு.

நீ முடிந்தால் நன்மை செய், தீமை செய்யாதே. ஒவ்வொரு மனிதனும் இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் பகையும் நோயும் இல்லாத சமுதாயம் உருவாகும்.

அந்தச் சமுதாயத்தை உருவாக்குவதே இந்துமதத்தின் நோக்கம்.

இன்று வரையிலே நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு உண்மை `ஒரு நல்ல இந்து நல்ல மனிதனாகத்தான் இருப்பான்’ என்பதே.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவய
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக