செவ்வாய், 21 அக்டோபர், 2014

நம் உடலே ஆலயம்


நம் உடலே ஆலயம் " உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம் பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தோர்க்கச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் கான மணிவிளக்கே. " திருமூலர் திருமந்திரம், ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம்உடலிலேயே உள என்பது இம்மந்திரக் கருத்து. இறைவன் ஆன்மாக்களின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான். களை என்னும் சொல்லுக்கு அழகு எனபது பொருள் அச்சொல் காள என ஈண்டு திரிந்தது, நமது மனமே கோவில் அக் கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு , இறைவருக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்குஆன்மாவே சிவலிங்கம், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலன்களும் அழகிய விளக்காகும். பக்தியின் பெருக்கு பேரின்ப நிலை அந்த பேரின்பத்தை அடைந்த மகான்கள், தான் காண்பவைகளையெல்லாம் சிவ வடிவமாகவே காண்பார்கள். சேரமான் அரசர், தன் பரிவாரங்களுடன் யானை மீது ஏறி நகர்வலம் வரும்போது, சிவனடியார்களை காண நேரிடும்போது உடனே கீழே இறங்கி ஓடோடி சென்று வணங்கி வரவேற்பார், அப்படிப் பட்ட அரசர் தான் ஒரு மன்னன் என்பதையும் மறந்து உவர்மண் சுமந்து வரும் வண்ணான், மழையினால் நனைந்த , அவன் தலையிலிருந்து உவர்மண் மழைக்கு கரைந்து, தேகம் முழுவதும் விபூதி பூசியது போன்ற தோற்றம் கண்டு, யானை மீது வந்த அரசர், அடியார் தான் வருகின்றார் என்று யானையை விட்டு இறங்கி ஓடோடி சென்று அவரை வணங்கினார், அவ் வண்ணான் " ஐயா நான் ஒரு அடி வண்ணான் நீங்களே மன்னர் " என்று அலறி கூனிக் குறுகி நின்கின்றான், அம்மன்னன் தேவரீர் திரு நீற்று வடிவத்தை அடியேனுக்கு நினைப்பித்தீர்களே, " அடியேன் அடி சேரன் என்றார் அரசர். அவரின் பக்தியின் பேரின்பத்தை கண்ட பரிவாரங்களும் மந்திரிகளும் பேருவகை கொண்டார்கள். என்று பெரிய புராண வரலாறு கூறுகிறது. எந்த நிலையிலும் இறைவனை காணும் நிலைதான் பக்தி நிலையாகும்,அருணகிரியார் திருப்புகழில் தன்னை உருக்கி பாடுகின்றார், பக்தியால்யான் உன்னை பலகாலும் பற்றியே மா திருப்புகழைப் பாடியே உனைக் காண வேண்டும் என்கிறார். அந்த பக்தியே, முக்தி எனும் பிறவா நிலைகக்கு கொண்டு செல்லும், பிறவா நிலையினை அடைய சாதனை தத்துவம் தேவை, இந்த உடலையேஆலயமாக பரிமளிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கிராமப்படி, இந்த திரேகத்தையும், அதனுள் ஒளிரும் ஆத்மாவையும் போற்ற வேண்டும் . எனவே தான் நம்முடன் வாழ்ந்த சித்தர்கள் அவ்வகையில் தன் மெய் அறிவினால் கற்பங்களை உண்டு பல்லாயிரக்கணக்கான, ஆண்டுகள் வாழ்ந்து இந் பிரபஞ்ச்ததுக்கும் வருங்கால சந்ததியார்க்கும் அரும்பெரும்அறிவு களஞ்சியங்களை பரம்பரையாக குரு சீடர் மூலமாகவோ பனை ஓலைகள் மூலமாகவோ தந்துவிட்டு போய் உள்ளார்கள். அவற்றின் உட்பொருளை அறிவின் திறன் கொண்டு ஆராய்ந்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தும், அறிவின் உட்பொருளை அறிய செய்ய வேண்டுமென்றும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறி வழிவகுத்து சென்றுள்ளார்கள். நம் உடம்பில் ஐம் புலங்களில் எது மூலசத்தியாக விளங்குகிறதோ அதுதான் ஆத்மா, ஒருவன் இறந்து விட்டால் இவை இயங்குவது இல்லை. எனவே சரீரத்தை போற்றி காத்து இந்த சரீரத்தின் மூலம்பல அரிய பெரிய சாதனைகள் புரிய வேண்டும், எனவே உடல் எந்தவிதமான உபாதைகளின்றம் பிணிகளிலிருந்தும்பாதுகாத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில் " உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம்சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் " என்று உடலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளர். உடம்பும், உயிரும் மிகமிக இன்றியமையாதன ஆதலின் அவற்றின் சிறப்பு நோக்கி உடம்பையும் வளர்த்தேன் உயிரையும் வளர்த்தேன் என்கிறார். தேகத்திலுள்ள ஆத்மா வானது அழிவற்ற பொருள், தேகத்தோடு பிறந்த தேகம் நீங்கியவுடன் மறுபடியும் பஞ்ச பூத சக்திகளில் சம்பந்தப்பட வேண்டியுள்ளது. அதை தேகத்தோடு கலப்பிக்க வேண்டும். இது வித்தை போதிக்கும் தந்திரமாகும், அந்த கர்மத்தை செய்வதினால் தேகம் அழியாது, செத்தால் பிறக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும். உலக வழக்கத்தை சொற்கள் அறிந்து பிறந்த தேகத்தை, காப்பாற்ற வேண்டிய தந்திரங்கள் அறிவதே, ஆத்மாவை அறிந்து தேகத்தை லயிக்க செய்யும் கர்மமாகும்.அது முடியாவிட்டால் சாவது நிச்சயம், செத்தால் பிறக்க வேண்டும், அதை தடுப்பதற்கு தேகத்திலிருந்துதான் அந்த கர்மத்தை செய்யமுடியும், புழு , பூண்டு வடிவத்தில் இருந்தால் இந்த கர்ம வினைகளை செய்ய இயலாதல்லவா? அப்படி சாதனையால் செய்து இந்த சூச்சும தேககத்தை பிரிக்கும் தந்திரத்தை அறிய வேண்டும்.சித்தர்களும் ஞானிகளும் இதை கண்டு கொண்டு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் உடலையும் உள்ளத்தையும் கட்டுபாடுகளுடன் உட்படுத்தி தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற வேண்டும், சிந்தையிலும் சொல்லிலும், செயலிலும் கோணல் இல்லாத தன்மையே நேர்மை அடைய வழிபிறக்கும், தேக சுகத்திற்கு வசப்பட்டு புற இச்சைகளையும் சாஸ்திரத்தின் ஆணை மீறி நடப்பவனுக்கும் ஏது மேன்மை? அவன் சுகம் பெற முடியாது, முக்தி என்னும் பேரின்பம் அடையமுடியாது. " உடம்பினை பெற்ற பயனாவதெல்லா முடம்பினிலுத்தமனைக் காண் " என்கிறார் அவ்வையார். தேகம் எடுத்ததின் பயன், புற இச்சைகளையும் மனை, மக்கள், காசு பணம், போன்ற சொத்துக்களை சம்பாதித்து அவற்றிலே மூழ்கி வயதான காலத்தில தள்ளாமையாலும், வியாதியினாலும் பிடிக்கப்பட்டு உழல்வதற்கல்ல, உன்னிலே ஒருவன் உள்ளான், அவனை நீ கண்டால் அறிவு சுடர் விட்டு, மூப்பு பிணி, சாக்காடு என்ற அவத்தை நீக்கி ஆணவம் கன்மை, மாயை நீக்கி பேரின்ப பெருவாழ்வு வாழலாம், என்கிறார், இந்த ஊன் உடம்பே ஆலயம் என்றாலும், அச்சரீரம் தன் அளவில் தேவ ஆலயம் ஆகிவிடாது, இந்த சரீரத்தை எப்படி மனிதன்பயன்படுத்துகின்றானோ அதை அனுசரித்து உடல் தேவ ஆலயமாக ஆகிறது. எனவே தான் உடம்புக்கு ஊறு வராது நேர்மைக்கு பங்கம் இலாது வாழ வேண்டும், எனவே உண்ணும்உணவு குடிக்கும்பானம் இவைகளை நெறிப்படுத்த வேண்டும். இந்த உடம்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே யொழிய இந்த உடம்பை நினைக்க கூடாது. உடலில் உள்ள அபூர்வ செயல்கள், செயல் இழந்துவிட்டால் இந்த உடல் பயனற்றதாகிவிடும். ஆகவேதான் இந்த உடலை கொண்டே நாம் மேலான நிலையை அடைய வேண்டும். என்ற குறிக்கோளினைக் கொண்டு நல்ல சிந்தனையுடன் இந்த உடம்பை இயற்கை விதிகளுக்கு புறம்பாக ஓம்ப வேண்டும், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் திருசிற்றம்பலம் ஒம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக