புதன், 8 அக்டோபர், 2014

திருவைந்தெழுத்து மந்திர பெருமை


திருவைந்தெழுத்து மந்திர பெருமை பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக