ஞாயிறு, 13 மார்ச், 2016

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு
(கணவரின் ஆயுள் காக்கும் காரடையான் நோன்பு )
    (Karadaiyan Nombu On 14th March 2016 (Monday))



இவ்வாண்டுக்கான காரடையான் நோன்பு நாளை (மார்ச் 14/ பங்குனி 1 திங்கள்)காலை சரியாக 06.35 முதல் 11.27 வரை உள்ள காலம், இந் நோன்பு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாசி மாத கடைசிநாளும், பங்குனி முதல் நாளும் இந்நோன்பாக கொண்டாடப்படுகிறது.

காரடை என்பது இந்நோன்புக்கு தயார் செய்யப்படும் நெய்வேதியம் ஆகும்.





இந் நோன்பு சத்தியவான் சாவித்திரி நினைவாக கொண்டப்படும் இந்து பண்டிகை

கணவரின் ஆயுள் பலத்தை காக்க வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்து பெண்கள் காரடையான் நோன்பு என்கிற விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நோன்பில் திருமணமான பெண்கள் தங்களின் கணவர் ஆயுள் கூடவும், நோய் நொடியின்றி வாழவும், திருமணமாகாத கன்னியர்கள் விரைவில் திருமணம் நடக்கவும், நல்ல கணவர்மார்களை அடையவும் மஞ்சள் சரடு அணிந்து கொள்வது வழக்கம்.


 பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜிக்க வேண்டும். இந்த பூஜையை மேற்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நாளும் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும் என்கின்றனர் முன்னோர்கள். கார அடை பலகாரம் விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் அதோடு இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். இதனை தயாரித்து இறைவனுக்கு படைத்து விரதம் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும் பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர் சத்தியவான், சாவித்திரி சத்தியவானின் ஆயுள் ஒரு ஆண்டுதான் என்று அறிந்தும் மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி அவனையே விரும்பி திருமணம் முடித்தாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் பணிவிடை செய்தாள். சத்தியவானின் உயிர் பிரியும் நாள் வந்தது. அன்றைய தினம் கணவனை விட்டு சாவித்திரி பிரியவே இல்லை. இருப்பினும் அவன் திடீரென மயங்கி உயிரிழந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றதைக் கண்ட சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், அவளுக்கு காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். ஆனால் அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவிக்கவே, கணவரின் உயிரைத் தவிர வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாக வாக்களித்தார். சமயோசித புத்தி உடனே சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். பெண்களுக்கு எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப்பிறவியாக அவள் திகழ்ந்தாள். அதனால்தான் கணவரின் ஆயுள் நீடித்திருக்க வேண்டி இன்றைக்கும் பெண்கள் மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு கடைபிடிக்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

1 கருத்து: