செவ்வாய், 22 மார்ச், 2016

எங்கே சந்தோசம் ?

மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்...

எது சந்தோஷம் ?

அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம்தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான்.
சந்தோஷம் கிடைக்கவில்லை. மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்... மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.

‘துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்‘ என்று யாரோ சொல்ல... அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான். தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம்
என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு...

“ஸ்வாமி  இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன்.  இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை.  நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே“ என்று யோகியிடம் சரணடைந்தான்.

அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி  ‘அடடா  இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே’ என்ற துக்கம்... ஆத்திரமாக மாற... அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.

யோகியின் ஓட்டத்துக்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார். மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக்கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி,

“என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் “ என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம்.

அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்.

“இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன.

ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது “

இதிலிருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.

சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை;  மனதில்தான் இருக்கிறது.


இந்த உண்மை, செல்வத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த செல்வந்தனைப் போலவே நம்மில் பலருக்கும்கூடத் தெரியவில்லை. அதனால்தான் நாம் பல சமயங்களில் நமது சந்தோஷத்துக்காகப் பிறரைச் சார்ந்து இருக்கிறோம்.


மேலதிகாரி, “சபாஷ், நீ நன்றாக வேலை செய்கிறாய் “ என்று பாராட்டினால் நாம் சந்தோஷத்தில் மிதப்போம். அதே மேலதிகாரி, நம்மை ஒரு வார்த்தை திட்டிவிட்டால் சந்தோஷம் ஒட்டுமொத்தமாகப் போய்விடும்.

போதை தலைக்கேறும் வரை குடித்துவிட்டு வீதியிலே விழுந்து கிடந்த ஒருவனிடம் அவனது குறும்புக்கார நண்பன்,

“டேய்  உன் வீட்டுக்குப் போயிருந்தேன். இன்று சாயங்காலம் உன் மனைவி விதவையாகிவிட்டாள். அதனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் உன் மனைவிக்கு ஆறுதல் சொல்“ என்று பொய்யாகப் பதறினான்.

இதைக்கேட்டு “ஐயையோ... என்மனைவி விதவையாகிவிட்டாளாமே “ என்று அந்தக் குடிகாரன் அழ ஆரம்பித்தான். நம்முடைய அறியாமை இந்தக் குடிகாரனின் அறியாமை போன்றதுதான்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி ஒரு குடிகாரன் இருக்கின்றான். உண்மை இல்லாத பல விஷயங்கள்தான் நம்மைப் பல சமயங்கள் சோகத்தில் பிடித்துத் தள்ளுகின்றன. வேறு பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாசாரங்கள் நம் சந்தோஷத்தைப் பறித்துவிடுகின்றன.



இளம் பெண்மணி ஒருத்தி தன் குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள். கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் திடீரென்று ஓர் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

“ஐயையோ... என் குழந்தை போய்விட்டதே“ என்று அந்தப் பெண் கண்ணீர்விட்டு அழுதாள்.

அந்தப் பெண்ணின் அழுகை உருக்கமாக இருந்ததால் கடல் தெய்வம், குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது  தன் குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாள். குழந்தையின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் இட்டவள் எதேச்சையாக குழந்தையின் காலை கவனித்தான். குழந்தையின் ஒரு காலில்தான் செருப்பு இருந்தது.
இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை.  உடனே அந்தப் பெண்ணின் மிகிழ்ச்சி பறந்துவிட்டது. ஐயையோ  செருப்பு போய்விட்டதே என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

 


இதற்கும் ஒரு படி மேலே ஒரு ரகம் உண்டு. சந்தோஷமான விஷயம்கூடச் சிலருக்குக் கவலையைக் கொடுத்துவிடும். அந்த அளவுக்கு எதிலுமே திருப்தியடையாத மனிதர்களாக இருப்பார்கள்.

அவன் ஒரு விவசாயி. ஒரு பருவத்தில் அவனது தோட்டத்தில் அமோகமாகத் தக்காளி விளைந்திருந்தது. 

ஆனால், விவசாயி கவலையோடுதான் உட்கார்ந்திருந்தான்.

“ஏன் கவலையாக இருக்கிறாய்  உன் தோட்டத்தில்தான் இந்த வருடம் நல்ல விளைச்சலாயிற்றே...“ என்று ஊர்க்காரர்கள் அவனைக் கேட்க, அதற்கு அவன், “நான் என் தோட்டத்தில் விளையும் தக்காளிகளில் சொத்தைத் தக்காளிகளை எடுத்து என் பன்றிகளுக்குப் போட்டுவிடுவது வழக்கம். இந்த முறை எல்லா தக்காளிகளுமே நன்றாக இருக்கின்றன. ஒரே ஒரு சொத்தைத் தக்காளிகூட இல்லை. பன்றிகளுக்கு எதைப்போடுவேன் ? அதுதான் கவலையோடு இருக்கிறேன்“ என்றானாம்.

எளிமையாகக் சொல்லவேண்டும் என்றால், சந்தோஷம் என்பது ஒரு பூட்டு மாதிரி. அறிவு என்பது சாவியைப் போல. அறிவுச் சாவியை எதிர்ப்பக்கம் திருப்பினால் அது சந்தோஷத்தைப் பூட்டிவிடும். அதே சாவியைச் சரியான பக்கம் திருப்பினால் சந்தோஷக் கதவுகளைத் திறந்துவிடும்.



தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ;மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்       சுவாமி சுகபோதானந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக