வியாழன், 17 மார்ச், 2016

குங்குலியக் கலய நாயனார் ..

குங்குலியக் கலய நாயனார் ....
குருபூசை: ஆவணி - மூலம்

நாள் தோறும் சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.

சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத் திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற அமிர்த கடேஷ்வரர் என்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத் தூபம் இட்டுவந்தார். இவ்வாறு இட்டு வருங் காலத்திலே, இவரின் பக்தியை அறிய இறைவர் கலயர் நாயனாருக்கு  கொடிய வறுமையை உண்டாக்கி அவரின் பக்தியின் ஆழத்தை பரிசீலித்தார், பரமனார், பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமை யுண்டாயிற்று.இவ்வறுமை உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், உடமைகளை விற்றும், செலவழித்தார். இடைவிடாது குங்குலிய தூபம் ஏற்ற மட்டும் விட்டதில்லை, தன்னை மறந்தாலும் அனுதினமும் இறைவருக்கு தூபமிடுவது குறைவதில்லை, இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள்.கலயர் நாயனாருக்கும் இறைவருக்கு செய்ய வேண்டிய குங்குலிய  தூபம் போடுவதற்கும் வகையின்றி தவித்தார்.இவ்வாறான வேளையில் ,

 ஒருநாள் அவர் மனைவியார், குழந்தைகளின் பசியை போக்க வழியறியாது  என்ன செய்வதென்றுஅறியாத நிலையில் தன் மாங்கல்யத்தை விற்றாவது குடும்பத்தின் வறுமையை பசியை தீர்க்க எண்ணி, அரிசி முதலியன வாங்குதற்கும் ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய மாங்கல்யத்தை அக்கணவர் கையிலே கொடுத்து, "இதற்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வாரும்" என்றார். குங்குலியக் கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, பசியாற்றிட உணவு தயார் செய்ய மனவியின் வேண்டுகோளின்படி பொருட்கள் வாங்கப் போனார். போம்பொழுது வழியிலே ஒரு வணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து "சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ" என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் தன் நிலையை மறந்து வறுமையை மறந்து, மனைவி மக்கள் சுற்றம் கொண்டுள்ள பசியையும் மறந்து, இறைவனிடம் ஐயக்கி மாகி, அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிற வளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக் கலயநாயனாருக்குத் திருவமுது பாகம் பண்ணப் பிரயத்தனஞ் செய்தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக் கலயநாயனாருக்குத் தோன்றி, "நீ மிகப் பசி கொண்டிருக்கின்றாய். உன்வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி" என்று திருவாய் மலர்ந்தருளினார். குங்குலியக் கலயநாயனார் அதைக் கேட்டுக் கைகூப்பி வணங்கி அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அஞ்சி, அதனைச் சிரசின் மேலே வகித்து திருக்கோயிலினின்றும் நீங்கிப் போய்த் தம்முடைய வீடு இருக்கும் பகுதிக்கு சென்றார், அங்கு அவர் இருந்த வீடு அடையாளம் தெரியாது தவித்தார், அவர் இருந்த வீடு பெரிய அரண்மனை போல் அலங்கார அமைப்புடன் செல்வ செழிப்புடன் வீட்டைக் கண்டாா், வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி "இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன" என்று கேட்க; அவர் "எம்பெருமானுடைய திருவருளினால் வந்தன" என்றார். அதுகேட்ட நாயனார் "ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் ஆட்கொள்ளும் பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ" என்று கடவுளை வணங்கினார். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடியார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலயநாயனார் பரமசிவனுடைய திருவருளினாலே பெருஞ்செல்வமுடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார்.சிவனார் தனக்கு தொண்டு செய்யும் கலயர் நாயனாருக்கு முதலில் காட்சி கொடுக்காது, இத்தொண்டுக்கு அடிக்கோள் இட்ட, குங்குலியத்திற்காக தன் மாங்கல்யத்தையே தந்த மனைவிக்கே முதலில் காட்சி கொடுத்து அருள் பாலித்தார் என்பது விளங்குகிறது. கொடிய வறுமையிலும், தன் நிலையை அறிந்தும், தன் தொண்டு ஒன்றே பிரதானம் என்று எண்ணி வறுமையிலும் குங்குலியமிட்ட நாயனார் தன் பெருமையை அறியவும் கூறவும் முடியுமாே? பக்தியின் சிறப்பே வறுமையிலும் பக்தியையே சிறக்க செய்தார் இவ் நாயனார்.

அன்பால் நிமிர்த்திய கலயனார்.
(யானையின் பலத்திற்கு நிமிராத லிங்கம் அன்பெனும் கயிற்கு நிமிர்ந்தது)

     இப்படி நடக்குங்காலத்திலே, திருப்பனந்தாளென்னும் பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் தன்மேல் பக்தி கொண்ட தாடகை என்ற இளம் பெண் ஒருத்தி அனுதினமும் மலர் கொய்து இறைவனுக்கு சூட்டிவந்தாள். ஒரு நாள் இவளுடைய மாலை சூட குனிந்த போது தனது மேலாடை சற்று விலக, இதனால் அம்மாலையை இறைவன் கழுத்தில் போட இவள் சிரமப்படுவது கண்ட இறைவர், தானே தன்னை சாய்த்து மாலையை சூடச் செய்தார், இதன் பொருட்டு, இறைவர் சாய்ந்திருக்கின்றமையால், அதனை நிமிரப் பண்ணிக் கும்பிடுதற்கு விரும்பி, மக்கள் எல்லாம் தங்களால் முயன்ற முயற்சிகள் எல்லாம் ெசய்து பலன் அளிக்காத பட்சத்தில் மன்னனிடம் வேண்டினா். இராசாவானவர் தம்முடைய யானைகள்  எல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற்றிருந்தார். குங்குலியக்கலய நாயனார் அந்தச் சமாசாரத்தைக் கேள்வியுற்று சுவாமி தரிசனஞ்செய்யும் பொருட்டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை நிமிரப்பண்ண வேண்டுமென்கின்ற ஆசையாய் இராஜாவருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங்கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்றாமையால் பூமியின் மேலே வலி குறைந்து விழுந்து இளைத்தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, "அடியேனும் இளைப்பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண்டும்" என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்து அக்கயிற்றினாலே அன்று; அகத்திலே கட்டியிழுத்த அன்புக்கயிற்றினால் அல்லவோ சிவனார் நிமிர்ந்தார். அது கண்டு இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பை யடைந்தார்கள். இராஜா குங்குலியக்கலய நாயனாரை நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார்.

குங்குலியக்கலயநாயனார் சிலநாள் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே இருந்து, பின் தமது வாசஸ்தானமாகிய திருக்கடவூருக்குப் போய், தாஞ்செய்யுந் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தார். இருக்குநாளிலே, அந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளிவந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசநாயனாரையும் எதிர்கொண்டு, தமது வீட்டுக்கு, அழைத்துக்கொண்டுபோய், திருவமுது செய்வித்து அவர்களுடைய திருவருளையும், பரமசிவனுடைய திருவருளையும் பெற்றார். பின்னுஞ் சில காலம் அன்பு மேன்மேலும் பெருகப் பல திருப்பணிகளையும் செய்து கொண்டிருந்து சிவபதமடைந்தார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக