ஞாயிறு, 20 மார்ச், 2016

பஞ்சாட்சர மந்திரம்,

பஞ்சாட்சர மந்திரம்

இந்து சைவ சமயத்தின் அடையாளங்களான, ருத்திராட்சம், திருவெண்ணீறு, சடாமுடி, பஞ்சாட்சர மந்திரம், ஆகியன அடங்கும். அவற்றுள் பஞ்சாட்சர மந்திரமான " நமசிவாய " என்னும் திருஐந்தெழுத்து மந்திரமானது சைவரின் வாழ்வில் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. இறைவனை தொழ, துதிக்க, அந்தியுள் மந்திரமான நமசிவாய என்னும் மூல மந்திரமாகும். மந்திரங்களில் சிறந்ததாகக் கூறப்படும் கயத்திரி மந்திரத்திற்கு ஒப்பனாதாகும், இந்த பஞ்சாட்சர மந்திரம். கல்வி கேள்வியில் சிறக்க, நாவுக்கரசரும், நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் என்கிறார், கல்வியின் பயன் இறைவனின் திருவடிகளை வணங்குவதே. இறைவனது திருவடியை உணரப் பயன்படும் ஐந்தெழுத்து மந்திரமே உண்மைக் கல்வியாகும். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் அறியாமலே நமது வாய் அனுச்சைச் செயலாகவே ஒவ்வொரு உணர்விலும் உணர்த்தி உச்சரித்துக் காட்ட வேண்டும். சுந்தர மூர்த்தி நாயனார் கூறியது போன்று " நற்றவா உனை நான் மறக்கினும்  சொல்லும் நா நமச்சிவாயவே "  என்று நாம் எதை மறந்தாலும் நம்மை அறியாமலே நமது வாய் நமச்சிவாயத்தை சொல்லிக் கொண்டே இருக்க பழக வேண்டும்.
  மந்திரமும் நான்கு வேதங்களும் ஆகி ; திருவைந் தெழுத்தே வேதம் என்றது . மறையிற்கூறும் அனைத்தும் ஐந்தெழுத்தில் அடங்கும் என்பதுபற்றி ` அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் ` செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்தும் - அழல் ஓம்பிச் செந்நெறி நிற்கும் வேதியருக்கும் மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்கத்தக்க மந்திரம் திரு ஐந்தெழுத்தேயாம்.
      இந்த ஐந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரரர் ஆகியோர் பாடியுள்ள பாடல்களின் கருத்துக்களை காணலாம், நமசிவாய மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் தத்துவத்தை காணலாம்,இதன் நடு எழுத்தை மாற்றி மாற்றி உண்டாகும் மந்திரமே பஞ்சாட்சர மநதிரமாகும். இது ஒரு அதி சூட்சமா மந்திரமாகும். நமசிவய, சிவயநம, யநமசிவ, சிவயநம,மசிவயந,என்று பஞ்சாட்சரம் ஐந்து மந்திரங்கள் ஆகும்/ இதன் விளக்கம் (படம்)



சம்பந்தர் வாக்கு ;
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.

தும்மல் , இருமல் தொடர்ந்து வந்த பொழுதும் , கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும் , முற்பிறப்புக்களில் செய்த வினை இப் பிறவியில் வந்து வருத்தும் பொழுதும் , இப்பிறவியில் நாள்தோறும் ஓதி வந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தே யாகும் .
   தூங்கும்பொழுதும் , விழித்திருக்கும் பொழுதும் , மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள் . பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே .

   மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.

அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந் தெழுத்தேயாகும் .

புண்ணியர் , பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும் .

வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை , அசோகு , மா , முல்லை , கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும் . இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐந்தாகும் . சோலைகள் அரிசந்தனம் , கற்பகம் , சந்தானம் , பாரிசாதம் , மந்தாரம் என ஐந்தாகும் . பாம்பின் படம் ஐந்து ஆகும் . செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும் . இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப , மந்திரமும் திருவைந்தெழுத்தே யாகும்

  இறப்பு , பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன . தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன . நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும் .
  உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்

திருமாலும் , பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந் தெழுத்தாகும்
திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள் .

" காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும்.

  உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து , தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும்

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால் , உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர் . அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .

இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல , சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும் , கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி , நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது `நமச்சிவாய` என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

  பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமை நாவுக்கரசர், மற்றும் சுந்தரரர் கூற்று தொடரும்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்














     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக